Friday, October 29, 2010

தேசியமும் பிளவும்

(அருந்ததி ராய்க்கு ஆதரவாக...)

இந்தியா என்ற நாட்டுக்கு இன்று ஒரு குறிப்பிட்ட பௌதீக எல்லை உள்ளது. ஆனால் இந்த எல்லைக்குள் இருக்கும் மக்கள் ஒரு சிலர் இந்திய தேசம் என்ற கட்டமைப்புக்குள் வர மறுக்கிறார்கள். உதாரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பலர், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலர், இப்படி. ஒரு காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலராவது இந்திய தேசியம் என்ற வரையறைக்கு வெளியே இருப்பதையே விரும்பினார்கள். ஆனால் பின்னர் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டார்கள்.

இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். ஜம்மு, லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு - இவை மட்டும்தான் இந்த மாநிலத்தில் இப்போது உள்ளன. முஸாஃபராபாத்தைத் தலைநகராகக் கொண்ட, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் என்று நாமும் விடுதலையடைந்த காஷ்மீர் என்று பாகிஸ்தானிகளும் சொல்லும் பகுதி, பாகிஸ்தான் வசம் உள்ளது. இன்று பிரச்னையின் அடிநாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் உள்ளது. அங்குள்ள பலர் இந்தியாவை அந்நிய நாடாகவே கருதுகிறார்கள். இந்திய தேசியம் என்ற கருத்து அவர்களை இதுவரை எட்டவில்லை. ஒன்றுபட்ட இந்தியா என்ற நாட்டில் வசிப்பதால் தங்களுக்கு ஏதும் பெரிய நன்மை இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, ஒன்றுபட்ட இந்தியா என்பதைக் கட்டிக்காக்க, இந்தியா அனுப்பும் எண்ணற்ற ராணுவ வீரர்கள்தான் அவர்கள் கண்ணில் படுகிறார்கள். கல்லால் அடித்தால் திரும்ப புல்லட்டால் தாக்கும் வீரர்கள். வேறு பல அட்டூழியங்களில் ஈடுபடும் வீரர்கள். இந்திய வீரர்கள். எனவே ஆக்ரமிப்புப் படையினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம்கள் இவ்வாறு தாங்கள் ஏதோவிதத்தில் முற்றுகை இடப்பட்டுள்ளதாக உணரும்போது அவர்களை இழுத்துவைத்து அவர்கள்மீது புகட்டும் தேசியம் தேவைதானா? அப்படிப்பட்ட வலுக்கட்டாய, பலாத்கார தேசியத்தால் நாம் எதனைச் சாதித்துவிடப் போகிறோம்? இந்தியா என்ற தேசத்துடன் கலாசாரத்தோடு ஒன்றாமல், பொருளாதாரத்தோடு ஒன்றாமல், தனியாகப் போகிறேன் என்று ஒருவர் சொன்னால், போ என்று ஏன் நம்மால் சொல்லமுடியவில்லை?

அப்படிச் சொல்வதால் நாம் எதை இழக்கப்போகிறோம்?

இதனை அகண்ட பாரதம், பாரத மாதாவை ‘விவிசெக்ட்’ பண்ணுகிறான் துரோகி... என்ற கோட்சேயிய வார்த்தைகளைக் கொண்டு விளக்காமல், இன்றைய 21-ம் நூற்றாண்டு பாஷையில் பேசினால் உபயோகமாக இருக்கும்.

சில கேள்விகளை முன்வைக்கலாம்.

(1) காஷ்மீர் என்றால் எந்தக் காஷ்மீர்? காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டுமா? ஜம்மு, லடாக் சேராத பகுதிகள்தானே?
(2) காஷ்மீர் பள்ளத்தாக்கு என்றாலுமே, அங்குள்ள சிலர் தாங்கள் பிரிந்துசெல்ல விரும்பவில்லை என்றால் அப்போது என்ன செய்வது?
(3) காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, பின்னர் அடித்து விரட்டப்பட்ட காஷ்மீர பண்டிட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்?
(4) பாகிஸ்தான் நாளை இந்த ‘சுதந்தர’ காஷ்மீரை கபளீகரம் செய்தால் அதனால் நமக்குப் பிரச்னைகள்தானே?
(5) காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் இந்து வழிபாட்டுத் தலங்கள், அவற்றின் பாதுகாவல், அங்கு செல்லும் உரிமை ஆகியவை பற்றி என்ன செய்வது?

(தொடரும்)

15 comments:

  1. I think the seperatist demand has to be seen based on overall framework they are presenting.

    They have to explain what Azadi is. If they want democratic rights and liberty it is already available in the indian state.

    If they want to have an islamist state then it is a moral duty of secular indian state to fight them

    I think Azadi is just a ruse so that Pak can rule kashmir through the puppet seperatists.

    Arundathi Roy is a hopeless pseudo-intelectual irritainer out there to make most of the focussed cameras. We need not take her seriously.

    ReplyDelete
  2. நாட்டில் எத்தனையோ நல்லவர்கள் ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள். எத்தனையோ நல்ல விசயங்களுக்காகப் போராடுபவர்கள் ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டு ஏன் இந்த ஒண்ணா நம்பர் தில்லாலங்கடி பெண்மணிக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள் என்றே தெரியவில்லை.

    கஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருப்பதிலேயே இந்தியர்களுக்கு நன்மை உள்ளது.
    சுதந்திர காஷ்மீர் இன்னொரு பங்களாதேஷ், பாகிஸ்தான் மாதிரி தீவிரவாத போக்கைக் கடைபிடிக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய நாடு ஆவதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளது.

    வீணாக விட்டுக்கொடுப்பானேன். விட்டுவிட்டு பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதத்தினால் குண்டு வெடிப்புகளைச் சந்திப்பானேன் ?

    இன்று காஷ்மீர் தனிநாடு கேட்ப்பார்கள் நாளை பெரும்பானமை இஸ்லாமியர்கள் இருக்கும் பஞ்சாப் பகுதியை கஷ்மீருடன் இணைக்க ஜிஹாத் துவங்குவார்கள். இப்படியே விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை கூட மிஞ்சாது.

    ReplyDelete
  3. //(அருந்ததி ராய்க்கு ஆதரவாக...)//

    இதற்கும் நீங்கள் பதிவில் முன் வைத்திருக்கும் கேள்விகளுக்கும் பொருத்தம் இல்லையே.

    அருந்ததி ராய் ‘இந்தியாவிற்கு நல்லது’ என்ற நிலைப்பாட்டையே ஒருதலைபட்சமானது, அடக்குமுறைக்கு துணைபோவது என்றுதானே சொல்கிறார். நீங்கள் ”இந்தியாவிற்கு பிரச்னைகள் இருக்குமா?” என்ற பார்வையில் அருந்ததி ராயின் கருத்துகளை அணுக முடியாது.

    அவர் முன்வைப்பது காஷ்மீரிகளுக்கான நல்லது என்று அவருக்கு தோன்றுவதை. இதில் அவர் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகள் கடைபிடிக்கும் ‘மறைமுக இந்திய வெறுப்பு’ உணர்வை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

    உதாரணத்திற்கு - ‘பாகிஸ்தான் நாளை இந்த ‘சுதந்தர’ காஷ்மீரை கபளீகரம் செய்தால்’ என்று ஒரு சந்தேகத்தை முன்வைக்கிறீர்கள். இன்றைய ‘சுதந்திர காஷ்மீர்’ என்பதே பாகிஸ்தான் ஆளுமைகுட்பட்டதுதானே? பாகிஸ்தான் கான்ஸ்டிடியூஷனுக்கு உட்படாத ஆனால் அதன் ஆளுகைக்கு உட்பட்ட சுயாட்சி மாநிலம்தான் அது. நாளை பாகிஸ்தான் நினைத்தால் ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதா மூலமாக அப்பகுதியை ஒருங்கிணைந்த பாகிஸ்தானாக மாற்றிக் கொள்ள முடியும்.

    பங்களாதேஷ் உருவானதற்கு இந்தியா காரணமாக இருந்தது என்பதால் பாகிஸ்தான் காஷ்மீரை ஆறாத புண்ணாக வைத்திருக்க பகீரத பிரயத்தனம் செய்கிறது. இந்தப் பின்னணிகள் அருந்ததி ராயின் சுதந்திர போராட்ட ஆதரவிற்கு தேவையில்லை. ஆனால் இந்திய அரசாங்கம் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

    இந்திய இறையாண்மை, தேசாபிமானம் எல்லாம் தாண்டி நிதர்சனமாக தெரிவது என்ன?

    //காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம்கள் இவ்வாறு தாங்கள் ஏதோவிதத்தில் முற்றுகை இடப்பட்டுள்ளதாக உணரும்போது அவர்களை இழுத்துவைத்து அவர்கள்மீது புகட்டும் தேசியம் தேவைதானா? அப்படிப்பட்ட வலுக்கட்டாய, பலாத்கார தேசியத்தால் நாம் எதனைச் சாதித்துவிடப் போகிறோம்? இந்தியா என்ற தேசத்துடன் கலாசாரத்தோடு ஒன்றாமல், பொருளாதாரத்தோடு ஒன்றாமல், தனியாகப் போகிறேன் என்று ஒருவர் சொன்னால், போ என்று ஏன் நம்மால் சொல்லமுடியவில்லை?//

    ஏன் அப்படி சொல்லவேண்டும்? ‘பலாத்கார தேசியம்’ தாண்டி முன்னேற்ற பாதை என்று ஒன்று இருக்கிறது. தனியாகவோ, பாகிஸ்தானின் பாகமாகவோ இருப்பதைவிட இந்தியாவின் பகுதியாக இருப்பதில் காஷ்மீருக்கான லாபங்கள் அதிகம் என்பதை இந்தியா உணர்த்த வேண்டும். அதற்கான தகுதியும் தேவையும் இந்தியாவிற்கு உண்டு. அதற்கான புதுமையான வழிகள் கண்டறிவதும் முக்கியம்.

    ReplyDelete
  4. I partly support Vajra and would also like to think of reasons why kashmir did join india and did not with other nation when it had option to do so.

    Apart, on my personal opinion separate nation of kashmir would become working ground for anti india activities not only from current threat but also from known upcoming threat nation.

    And hope it is part of great wall for india from that guards from middle east and asian activities.

    ReplyDelete
  5. ஸ்ரீதர்: இந்தப் பதிவின் ஒவ்வொரு கருத்தும் அருந்ததி ராய்க்கு ஆதரவாக என்று நான் சொல்லவில்லை. இந்த டாபிக் - இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்து என்று வைத்துக்கொள்வோமே, அதைப் பற்றிப் பேசுவதே ஒருவிதத்தில் அருந்ததி ராய்க்கு ஆதரவானது என்று கருதுகிறேன். உங்கள் பிற கேள்விகளுக்கு பின்னர் விரிவாக பதில் தருகிறேன்.

    ReplyDelete
  6. அப்படிச் சொல்வதால் நாம் எதை இழக்கப்போகிறோம்?

    ஒன்றும் இழக்கப்போவதில்லை.

    ஆனால் இது மாதிரியே மதுரை வரைக்கும் எங்களுக்கும் பிரிச்சு கொடுப்பான்னு துண்டை போட்டுக்கிட்டு காத்துக் கொண்டுருப்பார்களே பரவாயில்லையா?

    முதலில் இந்திய உள்துறை உளவுத்துறை நடத்தும் மானாட மயிலாட நாட்டிய உள்ளடி வேலைகளை நிறுத்த ஒரு பதிவு எழுதுங்க.

    இவர்கள் நடத்தும் நாடகமும், உள் அரசியலினால் பாதிக்கப்படுவது முழுக்க அப்பாவிகளே.

    ReplyDelete
  7. இன்று காஷ்மீ​ரை ​கேட்பவர்கள் நா​ளை இமாச்சல பிர​தேசம் ​தொட்டு கன்னியாகுமரி வ​ரை நாங்கள் ஆட்சி ​செய்த பகுதி என்று ​கேட்பார்கள் தூக்கி ​கொடுத்துவிடுவீர்களா? நீங்கள் ​சொல்வது ​​போல் ​போகட்டும் என விட்டுவிட்டால் இப்​போது இருக்கும் தமிழ்நா​டு கூட சுமார் 100 நாடுகளாகப் பிரியும். உங்களுக்கு ​சொந்தமான ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் ஒரு ​சென்ட் இடம் உங்கள் பக்கத்து நிலத்துக்காரரிடம் ​போனால் ​​போகட்டும் என்று ​​கொடுப்பீர்களா? இந்தியா​வை ஒருங்கி​​ணைத்த சர்தார் வல்லபாய் பட்​டேல் இருந்தால் பத்ரி என்ன ஆகியிருப்பார் என்று நான் ​சொல்லி ​தெரிய​வேண்டியதில்​லை. உங்கள் வாதம் தவறு நண்ப​ரே.

    ReplyDelete
  8. பல நூறு தேசங்களை உள்ளடக்கிய நிலத்தினை இந்தியா என்று mapல் ஒன்றாக்கியவன் britishகாரன்தான். நாம் வசித்தது எல்லாம் சோழனும், பல்லவனும், சாளுக்கியனும், தில்லி ராஜாக்களும் ஆட்சி செய்த பகுதிகளே. சிலரை நட்பால் கவிழ்த்தும், பலரை வஞ்சித்தும் எல்லா தேசங்களையும் ஒரு countryஆக்கியவன் britishகாரன். சுதந்திரம் அடைந்தபிறகும் சிலரை மிரட்டிதான் இந்தியாவில் இணைத்தனர் நம் முன்னோர். அதை மறந்துவிட்டு .....

    ReplyDelete
  9. வாழ்க united states of india !!!

    ReplyDelete
  10. கஷ்மீருக்கு விடுதலை கொடுப்பதால் பின்வருகின்ற விஷயங்களில் என்னவிதமான விளைவுகள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

    1. கஷ்மீரை சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் வளம்.

    2. இந்தியாவின் வலிமை.

    3. இந்தியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள்.

    4. தனிநாடான கஷ்மீரின் வளம் மற்றும் பாதுகாப்பு.

    ReplyDelete
  11. //
    சுதந்திரம் அடைந்தபிறகும் சிலரை மிரட்டிதான் இந்தியாவில் இணைத்தனர் நம் முன்னோர். அதை மறந்துவிட்டு .....
    //

    யாரும் அதை மறக்கவில்லை. மறுக்கவும் இல்லை.
    இந்தியராக இருப்பதில் கிடைக்கும் மேன்மை, வாழ்வுரிமை, சுதந்திரம்.. ஹைதராபாத் நாடாகவோ, பாண்டிச்சேரி நாடாகவோ, கோவா என்ற நாடாகவோ இருப்பதில் கிடைக்காது என்பதனால் தான் அனைவரும் இந்தியராக உள்ளனர்.

    இந்திய கஷ்மீரில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த எவருமே ஒரு இஞ்சு நிலம் கூட வாங்கமுடியாது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் கஷ்மீர் மக்களா வாழ்கிறார்கள் ?

    கஷ்மீரை இன்னொரு பாகிஸ்தான் ஆக்க விரும்பும் சக்திகளுக்கு துணைபோவது தான் அறிவுஜீவித்தனம் என்கிறாறர்கள் இந்துத்வாவாதிகள்.

    ReplyDelete
  12. பத்ரி,

    நீங்கள் சொல்லும் காரணங்கள் அருந்ததி ராய்க்கு ஆதரவாக இல்லை. சும்மா 'அவல் வாய் ஜாபாலி'க்கு தியரி சேர்க்கிறாற்ப் போல இருக்கு. அருந்ததி ராய் சுட்டு விரலை விட்டு விட்டு நீங்களா உங்கள் வாதங்களை வைத்தால், உருப்படியா விவாதம் செய்யலாம்!

    அருந்ததி ராய் பற்றிய பொதுமக்கள் பார்வை: இதையும் படியுங்களேன்: http://www.hindustantimes.com/No-damage-to-India-from-Arundhati-Roy-s-remarks/H1-Article1-620074.aspx

    ReplyDelete
  13. ”ஆனால் பின்னர் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டார்கள்."

    பிரிவினை என்பது நடக்க முடியாத ஒன்று என நினைத்ததால் மாற்றி கொண்டனர்..

    ஓர் இடத்தில் பிரிவினை ஏற்பட்டால், இங்கும் பிரிவினை கோரிக்கை மீண்டும் எழும்..

    வரலாறு தெரியாதவர்கள்தான், காஷ்மீர் மட்டும் இந்தியாவில் செயற்கையாக இணைக்கப்பட்டதாக நினைக்கிறார்கள்..

    எல்லா மா நிலங்களுமே செயற்கையாக இணைக்கப்படதுதான்..
    இந்தியா என்ற அமைப்பு இருப்பதால்தான், அந்த அம்மையார் நாடு முழுதும் பிரபலம் ஆக முடிகிறது..
    அவர் பேசுவது, மரத்தின் மீது அமர்ந்து கொண்டு , வேர் பகுதியை வெட்டுவது போன்றது..

    ”தனியாகப் போகிறேன் என்று ஒருவர் சொன்னால், போ என்று ஏன் நம்மால் சொல்லமுடியவில்லை?”

    ஏன் என்றால் , பிரிவது என்றால் எல்லா மா நிலங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி , பிரிந்து செல்பவர் பிரிந்து செல்லலாம் என அறிவித்தால் ஏற்கலாம்... இதை வட நாட்டவரான அருந்ததி ராய் உள்ளிட்ட யாரும் ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் இந்தியா என்ற அமைப்பால் அதிக பலன் அவர்கலுக்குத்தான்..
    வன்முறை காரணமாக பிரிக்காதீர்கள் என சொல்வது, இது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதற்காகத்தான்... அதன் பின் இந்தியா தினந்தோறும் வன்முறைகளை சந்திக்கும் நாடாக மாறிவிடும்..

    சும்மா பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் ஒருவருக்கு ஆதரவாக நீங்கள் களத்தில் இறங்குவது வருந்ததக்கது..

    ReplyDelete
  14. Sir,
    the people of kashmir could have been in disillusioned mindset.
    so, the media houses must assit the govt to reach out to people to

    1. request them to stop violence
    2.come forward for talks.
    3.guide the people about all benifits of remaining with india.
    4.remain as constructive bridge between people and govt/military forces
    5.may even setup localised broadcasts for each area/district of the valley to attain the above benifits.

    also, the media houses must refrain from "sansani" and refrain from making small incidents to big incidents.

    ReplyDelete
  15. Arundhati Roy is a dissenter. Beyond that, she deserves no respect.

    ReplyDelete