Tuesday, April 24, 2012

அபிஷேக் மனு சிங்வி

அபிஷேக் மனு சிங்வி தில்லியின் டாப் நாட்ச் வக்கீல். எப்போதும் முகத்தில் சிரிப்பு இருக்கும். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர். நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளைச் சமாளிக்க தொலைக்காட்சி சானல்களுக்குப் பேட்டி அளித்தபடி இருப்பார். தன் வாதத் திறமையால் 1=0 என்று எப்போதும் நிரூபித்தபடியே இருப்பார்.

சென்ற வாரம் இவர் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு குறுந்தகடு பல ஊடக நிறுவனங்களுக்குச் சென்றதாக ட்விட்டரில் முதலில் தகவல் கசிந்தது. உடனடியாக தில்லி உயர் நீதிமன்றம் சென்ற சிங்வி, அந்த சிடியை எந்த ஊடகமும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை வாங்கினார். அடுத்து, இந்த சிடியை மறைமுகமாக வெளியே கசியவிட்டவர் சிங்வியின் டிரைவர் என்பது தெரியவந்தது. அடுத்த இரு நாள்களுக்குள் சிங்விக்கும் டிரைவருக்கும் ஏதோ டீல் வொர்க் அவுட் ஆக, டிரைவர் நீதிமன்றம் சென்று தான் தவறான வழியில் சிடியைப் பெற்றதாகவும் அதில் சில மார்பிங் வேலைகளைச் செய்ததாகவும், இப்போது தனக்கும் சிங்விக்கும் இடையிலான பிரச்னை தீர்ந்துவிட்டது என்பதால் அந்த சிடியைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.

ஏதாவது அவல் என்றால் மெல்லக் காத்திருக்கும் அனைத்து ஊடகங்களும் மௌனம் காத்தன. நீதிமன்ற ஆணை வருவதற்கு முன்பாகவே சிடி கையில் கிடைத்த சில தொலைக்காட்சி நிலையங்களும் அமைதியாகவே இருந்தன.

இந்த விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது இது குறித்து கிசுகிசுக்கள் தொடர்ந்து நடந்தது ட்விட்டரில் மட்டும்தான். அந்த சிடி, தனி நபர்கள் பலருக்கும் கிடைத்து, அவர்கள் நீதிமன்ற ஆணை பற்றிய கவலையின்றி, அனானிமஸாக விடியோவை யூட்யூப் மூலம் கசியவிட்டனர். அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டிலீட் செய்ய முயன்றும் அவை மீண்டும் மீண்டும் முளைத்தபடியே இருந்தன.

நேற்று இந்த விடியோவை மிக எளிதாக யூட்யூபில் பார்க்க முடிந்தது. நேற்றுதான் அபிஷேக் மனு சிங்வி தன் கட்சிப் பதவியையும் மாநிலங்கள் அவையின் ஒரு நிலைக்குழுவின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதே நேரம் தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றும் வாதிட்டார்.

***

அந்த சிடியில் என்ன இருந்தது, அதில் காணப்படும் நபர் மனு சிங்விதானா, அது மார்ஃபிங் செய்யப்பட்ட விடியோவா போன்ற கேள்விகள் ஒரு பக்கம். இரு நபர்கள் தனி அறைக்குள், மனம் ஒப்பிச் செய்யும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தப் பிறருக்கு உரிமை உள்ளதா, அது அவர்களுடைய அந்தரங்கத்தைப் பாதிக்காதா போன்ற கேள்விகள் மறு பக்கம். இடையில் இன்னொரு விஷயம் உள்ளது. அந்த சிடியில் பேசப்படும் ஒரு விஷயம்தான் அது. அதுதான் இந்த சிடியை முக்கியமானதாக்குகிறது. அந்த விஷயம் காரணமாகத்தான் சிங்வி பதவி விலகவேண்டியிருக்கிறது.

அந்த சிடியில் ஒரு பெண் வழக்கறிஞரும் சிங்வி போல் தோற்றம் அளிக்கும் ஒருவரும் சிறிது நேரம் பேசுகிறார்கள். பின்னர் சில காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அந்தப் பெண்ணை நீதிபதி ஆக்குவது பற்றிப் பேசுகிறார்கள்.

அதிகார அடுக்கில் உயரத்தில் இருக்கும் ஒருவர், தன் ஆசைக்கு இணங்கும் ஒரு பெண்ணை நீதிபதி ஆக்க வாக்களிக்கிறார் என்றால் நீதித்துறை பற்றிய பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கும்? நீதித்துறையும் ஊழல்மயமானதே என்ற எண்ணம் நமக்கு இருந்துவருவதுதான். இந்த விடியோவில் இதற்கான தெளிவான ஒரு சாட்சியம் கிடைக்கிறது. சிங்வி அல்லது அவர் போன்றவர்கள் இதற்கு முந்தைய நீதிபதி நியமனங்களில் எவ்வாறு ஈடுபட்டனர் என்பதை ஆழமாக விசாரிக்கவேண்டிய நேரம் இது.

எல்லாவிதமான ஸ்டிங் விடியோக்களுமே யாரோ ஒருவருடைய அந்தரங்கத்தை ஊடுருவி எடுக்கப்படுவதுதான். எது ஏற்புடையது, எது ஏற்புடையதன்று என்பது அந்த விடியோவில் காணப்படும் விஷயத்தைப் பொருத்தது. நித்யானந்தா விவகாரத்தில் மாய்ந்து மாய்ந்து விடியோவை வெளியிட்டுப் பேசிய ஊடகங்கள், ‘தம்மைப் போல ஒருவர்’ என்ற காரணத்தால் சிங்வியைக் காக்க முற்பட்டார்கள்.

இறுதியில் மைய நீரோட்ட ஊடகங்களை மீறி ட்விட்டரில் தொடர்ந்து நடந்த கேம்பெய்ன் காரணமாகவே சிங்வி பதவி விலக நேர்ந்துள்ளது. அதன்பிறகுதான் எதிர்க்கட்சிகளே இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கச் சம்மதிக்கிறார்கள். அதன்பிறகுதான் மைய நீரோட்ட ஊடகங்கள் இதுபற்றிப் பேச ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இனியும்கூட ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் இந்திய அரசியலில் மிக முக்கியப் பங்கை ஆற்றப்போகின்றன. மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லாம் இனி இரண்டாம் பட்சம்தான்.

10 comments:

  1. மிகவும் அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். அதனால்தான் இவர்கள் ட்விட்டர், முகநூல் போன்றவற்றை எந்த விதத்திலாவது தடை செய்ய வேண்டும் என்று அலைவதன் காரணம். டெல்லியின் ஊடக ஜாம்பவான்களின் ஊழல்கள் இமாலயத்தை ஒத்தவை. பல அரசியல்வாதிகளின் மாதாந்திர ஊதியப் பட்டியலில் பல காட்சி ஊடக நிருபர்கள் இருக்கிறார்கள் என்று என் நண்பர் சொல்வார். காட்சி ஊடகங்களில் சமூக அவலங்களை மூக்கு விடைக்கப் பேசும் ஒரு அம்மணிக்கு மாதம் லட்சங்களில் வணிகம் செய்யும் அளவில் கிரெடிட் கார்டு ஒன்றை அந்த அம்மணிக் ஒரு நிறுவனம் அளித்து வந்தது என்றும் அந்த நண்பர் சொன்னார்.

    ReplyDelete
  2. It appears that the clip is rather genuine. The identity of the lady has since been revealed as one Anusuya Salwan, a reputed lawyer. There is another clip posted by Bagga of BSKS running for abt 4 mins ( in addition to the first 12 min one) which reveals the identity of the woman.

    ReplyDelete
  3. அந்த சிடியில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கே போக வேண்டாம். ஆனால் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பர சமமதத்துடன் செய்கின்ற காரியத்தைப் பற்றிப் பேச யாருக்கும் உரிமை கிடையாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. தவிர, நீதிபதி பதவி பற்றி ஏதோ சுப்பனும் சுப்பியும் பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. //பின்னர் சில காரியங்களைச் செய்கிறார்கள்.// :-)

    ReplyDelete
  5. மேம்போக்காக நானும் சொல்லுவேன் கருத்து என்று அலையும் கருத்து கந்தசாமிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ? அலசி ஆராயாமல் பதிவு எழுதுவதன் நோக்கமென்ன ?

    ReplyDelete
  6. //இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இனியும்கூட ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் இந்திய அரசியலில் மிக முக்கியப் பங்கை ஆற்றப்போகின்றன. மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லாம் இனி இரண்டாம் பட்சம்தான்.//

    Very true....

    ReplyDelete
  7. but its late in India, IN US UK Twitter Facebook have effects 4 years back itself.

    Still In Tamilnadu in the tier2 cities one in 100 houses have internet connection and one in 1000 have the mobile internet connection

    ReplyDelete
  8. மைய நீரோட்ட ஊடகங்கள் அமைதி காத்து இருந்ததற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கலாம்

    நாளையே இந்த வீடியோ மார்பிங் என்று தெரிய வந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட இழப்புத் தொகை கேட்க வழி உண்டு என்ற ஆச்சம் கூட இருக்கலாம்

    ReplyDelete