Thursday, March 29, 2012

ஒரு மாணவனின் மரணம்

இன்று காலை தி ஹிந்துவில் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. [He fought poverty only to choose death]

மணிவண்ணன் என்ற இந்தப் பையனை எனக்குக் கொஞ்சமாகத் தெரியும். சில மாதங்களாக கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) என்.எஸ்.எஸ் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து சில பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சந்திப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கியிருந்தோம். அண்ணா பல்கலை மாணவர்கள் சிலரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி, ‘இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்; இவர்களைப் போலவே நீங்களும் சாதிக்கலாம்’ என்று சொல்லி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் இதன் நோக்கம்.

என்.எஸ்.எஸ் மாணவர்கள் பலரும் மிக நன்றாகப் பேசினார்கள். பெரும்பாலும் வறுமையான பின்னணியிலிருந்து வந்துள்ளவர்கள். பெரும்பாலும் கிராமப்புறத்திலிருந்து வந்துள்ளவர்கள். மிகச் சாதாரணப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்துள்ளவர்கள். எப்படி, தமக்கு முன் இருந்த தடைகளையெல்லாம் மீறித் தம்மால் சாதிக்க முடிந்தது என்பதை அந்த மாணவர்கள் விளக்க, பள்ளி மாணவர்கள் நிஜமாகவே மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். (அப்போது எடுத்த வீடியோ துரதிர்ஷ்டவசமாக அழிந்துபோய்விட்டது.)

ஆனால் பேசிய மாணவர்களிலேயே எங்களை மிகவும் அதிகமாக பாதித்தது மணிவண்ணன்தான். மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினான் அவன். தன் வாழ்க்கைக் கதையை விரிவாக எடுத்துச் சொன்ன அந்த மாணவன், தன் வாழ்க்கையில் படித்து முன்னேற தனக்கு உறுதுணையாக இருந்தது மூன்று விஷயங்கள் என்றான்.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தாய்க்கும் தந்தைக்கும் சண்டை வந்து பிரிந்துபோயினர். பணம் இல்லாததால், அடுத்த இரண்டு வருடங்கள் படிக்காமல் வீட்டிலேயே இருந்திருக்கிறான். அந்த வயதிலேயே செங்கல் சூளைகளில் வேலை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க எடுத்துக்கொண்ட முயற்சியால் பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறான். அந்த நிகழ்ச்சி அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. தானும் ஒரு கலெக்டராக வரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான். இது முதல் தூண்டுதல்.

ஆனாலும் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. விளையாட்டு, ஊர் சுற்றுதல். ஆனால் பரீட்சை எழுதினால் மதிப்பெண்கள் மட்டும் வந்துவிடும். ஒருமுறை அவனுடைய நெருங்கிய நண்பன் அவனிடம் சொன்னானாம்: ‘நான் எத்தனையோ முயற்சி செய்து கஷ்டப்பட்டுப் படிக்கிறேன். ஆனால் படிப்பு ஏறுவதில்லை, மதிப்பெண்ணும் வருவதில்லை. நீயோ முயற்சி எடுப்பதில்லை; ஆனால் மதிப்பெண் வாங்குகிறாய். என்னால் நினைத்தாலும் கலெக்டராக வரமுடியாது. ஆனால் நீ மட்டும் ஆர்வத்துடன் படித்தால் உன்னால் கலெக்டர் ஆகமுடியும். அப்படி நீ கலெக்டர் ஆனால் நான் உன் கார் டிரைவராக வரவேண்டும். பெருமையுடன் உனக்கு கார் ஓட்டவேண்டும்.’ இது மணிவண்ணனைப் பாதித்த இரண்டாவது தூண்டுதல். அன்று தொடங்கி மிகுந்த முயற்சி எடுத்துப் படித்திருக்கிறான்.

பின்னர் அதே மாவட்டத்துக்கு கலெக்டராக வந்த அமுதா ஐ.ஏ.எஸ் ஊக்கம் கொடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் 1167 மதிப்பெண் பெற்றிருக்கிறான். அவர் கொடுத்த ஊக்கம் மூன்றாவது தூண்டுதல்.

இவற்றையெல்லாம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன மணிவண்ணன், அந்த மாணவர்களாலும் பெரிதாகச் சாதிக்க முடியும் என்றான்.

அன்றைய கலந்துரையாடலிலேயே அனைவரையும் மிகவும் பாதித்த பேச்சு மணிவண்ணனுடையதுதான்.

தான் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை எடுத்துக்கொண்டு போய் தன் தாயிடம் காட்டி சந்தோஷப்பட்டபோது தன் மகன் என்ன செய்திருக்கிறான் என்பதுகூட அந்தத் தாய்க்கு முழுமையாகப் புரியவில்லை. ‘ஏதோ பாஸ் பண்ணிட்டியேப்பா’ என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அதை மிக இயல்பாக மாணவர்களுக்குச் சொல்லிக் காட்டி, தான் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவன் என்பதைக் கோடி காட்டியிருந்தான் மணிவண்ணன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் என்று நினைக்கிறேன்.

தான் தமிழில் நிறையக் கவிதைகள் எழுதி வைத்திருப்பதாகவும் அவற்றை விரைவில் புத்தகமாகக் கொண்டுவரப்போவதாகவும் என்னிடம் சொன்னான். இந்த மாணவனைப் பல பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று பேசவைக்கவேண்டும் என்று நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம்.

நேற்றைக்கு முதல் நாள் மணிவண்ணன் தூக்கில் தொங்கிவிட்டான். அர்ரியர்ஸ் நிறைய உள்ளது என்றும் எதோ காதல் விவகாரம் என்றும் சொல்கிறார்கள். அவனுக்குத் தெரிந்த ஒரு மூத்த மாணவரிடம் இன்று காலை பேசினேன். மருத்துவமனைகளில் ரத்தம் கேட்டால், முதலில் போய் நிற்பானாம். இவனே பணம் சேர்த்து மூன்று மாணவர்களைப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறானாம். இன்னும் பலப் பல நல்ல விஷயங்கள்.

எனக்கு இருக்கும் வருத்தங்கள் இரண்டு.

1. இவ்வளவு தன்னம்பிக்கையுடன், இவ்வளவு சாதித்துள்ள இந்த மாணவன், தனக்கு இருக்கும் கஷ்டத்தைப் பற்றி ஏன் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை? உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவனுக்கு என்ன ஆகிவிட்டது? இந்தக் கல்லூரிகள் ஏன் உளவியல் கவுன்சிலர்களை வைத்து மாணவர்களுடன் தொடர்ந்து பேசச் செய்யக் கூடாது?

2. மணிவண்ணனை பல மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் அழைத்துச்சென்று ரோல் மாடல் என்று காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இனி அடுத்து யாரைத் தேடிப் பிடிப்பது?

26 comments:

  1. So sad! please post some of his poems...

    ReplyDelete
  2. ஒரு மாணவன் தொடர்ந்து வகுப்புகளுக்கு வரவில்லையென்றால், அவனுக்கு என்ன பிரச்சனை என்று கூட கவலைப்படமாட்டார்கள். வீட்டுக்கு ஒரு கடிதம் கூட செல்லாது.

    குறிப்பிட்ட நாளுக்குள் கல்வி கட்டணம் கட்டவில்லை என்றால், அடுத்த மணித்துளியில் இருந்து அபராதம் கந்து வட்டி ரேஞ்சுக்கு இருக்கும்.

    பணக்கார மாணவனாக இருந்தால் அவனுக்கு வினாத்தாள் வரை சப்ளை செய்யும் ஆசிரியர்களைக் கூட எனக்குத் தெரியும்.

    பொறியியல் கல்லூரிகளுக்கான அப்ரூவலுக்கால உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தரகர் வேலை பார்ப்பதையே உயர்ந்த பணியாகக் கருதும் ஒரு பேராசிரியர், மாணவன் என்றால் சிறு உதவி கூட செய்ய முன் வர மாட்டார்.

    மேலே குறிப்பிட்டது எதுவும் சிறிதளவும் உணமைக்குப் புறம்பானது இல்லை.

    மற்றும் நான் பொதுமைப்படுத்தவில்லை என்பதும் புரிந்துகொள்ளத்தக்கது.

    இதுதான் அண்ணா பல்கலைக்கழகம்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை என் மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்கவில்லை ...

      Delete
  3. It's really tough to come out of inferiority complex for students studied in Tamil Medium and village background especially in CEG environment. I have personally gone through this during my first year CEG days. Poor boy... he chose the wrong path having come up so far in life :(

    ReplyDelete
    Replies
    1. இதில் தமிழ் மொழி அல்லது கிராமத்து மாணவனின் நிலை என்று எதுவும் கிடையாது இது உண்மையும் இல்லை இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம்
      1. இவர்கள் நகரத்து மாணவர்களிடம் இருந்தோ , அல்லது இவர்களிடம் இருந்து நகரத்து மாணவர்களோ தனித்து இருப்பது, வேறுபடுவது (பழக்க வழக்க முறைகளில்)
      ௨.வசதியில் மேல்தட்டு மட்டு கீழ்தட்டு என்ற பாகு பாடு பார்ப்பது "இது காதலோ அல்லது வேறு எந்த நிலையோ" இதுவும் ஒரு காரணம் .

      மேற்கண்ட காரணமே இது போன்ற தவறான முடிவுக்கு காரணமாகிவிடுகிறது, மாறாக மொழி ஒரு தடையல்ல திறனோ அல்லது துணிவோ மொழியிலிருந்து கிடைப்பதில்லை சுற்றியுள்ள சூழலே வழிவகுக்கும் . மேலும் மொழி எந்தநிலையிலும் இதுபோன்ற செயலுக்கு காரணமாகாது என்பது திண்ணம்
      (உறுதியாக இதுபோன்ற செயலுக்கு பணக்காரர் & ஏழை , நகரத்தார் & கிராமத்தார் என்ற இடைவெளி காணப்படுவதுதான்,. இதற்கு இருவருமே காரணமேயொழிய, அன்றி கிராமமென்றும் மொழியென்றும், சொல்லும் உங்கள் கூற்று முற்றிலும் தவறானது )

      Delete
    2. எப்டிங்க ரவிச்சந்திரன் இவ்வளவ் பிளாக்கில் உங்களால் படிக்க முடிகிறது

      Delete
  4. It is sad that he did not have good friends to share his disappointments or frustrations. The current generation of students (my son included!) lack the social skills to survive the different situations. I only hope that the CEG authorities take this one seriously and provide recommendations. I have observed the inferiority complex in my school (the one I moved to in 11th) where Tamil medium students who passed out of 10th from the same found it very difficult to adjust to English medium education.

    ReplyDelete
  5. தமிழ் வழிக்கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச,எழுத தனிப்பயிற்சி தரவேண்டும்.ஆங்கிலம் ஒரு மொழிதான்.
    அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.
    இத்தனை காலம் போராடி சாதித்தவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார். ஒரு நிமிடத்தில்
    எடுத்த முடிவா?.இல்லை depression இருந்ததா அதனால் விரக்தியுற்று எடுத்த முடிவா.பல்கலைகழகங்களும்,கல்லூரிகளும் மாணவர்கள் உலகை புரிந்து கொள்ளவும், தங்களைப் புரிந்து கொள்ளவும்,உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் உதவ வேண்டும்.மிகவும் தேவையானது என்னவெனில் கல்வி நிலையச் சூழல் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருக்கக் கூடாது.

    ReplyDelete
  6. தன்னோடு கஷ்டத்தை புதைத்து வைத்ததால் வந்த விளைவு....

    மனம் விட்டு பேசுதல் பிரச்சனைகளை தவிர்க்கும்.

    மாணவனின் முடிவு துக்ககரமானது.

    ReplyDelete
  7. I second Ravichandran's comment. I know how intimidating it is for anyone with the village background, Tamil medium to survive in Anna university campus in Chennai. This could have been avoided if he got some help emotionally. :-(((

    ReplyDelete
  8. All our human suffering can be split in to two i.e. physical and psychological. Most of us suffer from the later. The human mind is quite strange. Some Psychoanalysts say that most humans think of suicide at least a few times in their life. Such is the nature of the mind. Mind is a wonderful instrument when it is in your control (and not the other way round). If you want to get out of the clutches of the mind (and take control of it), you must first develop a distance between "you" and "your mind". If that distance arises, there will be no more psychological suffering (as you will just become a witness to your mind). If that distance arises, no one would ever think of any such life negative things. However, the modern education is all mind oriented. It totally neglects other dimensions (such as intuition, beauty etc.;) of a human being. Unless we bring in the spiritual aspect in to our life, in my opinion, there can be no end to such mishaps/sufferings.

    ReplyDelete
  9. So, மணிவண்ணன் ரோல் மாடல் இல்லை. என்னதான் கலெக்டரும் நண்பர்களும் கொடுத்த ஊக்கத்தில் உந்தப்பட்டு 1167 எடுத்திருந்தாலும், அவனுக்குள் தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு கோழைத்தனம் இருந்திருக்கிறது. ரோல் மாடலாகச் செல்லும் இவனது பேச்சில் எங்கேனும் இந்த கொழைத்தனம் வெளிப்பட்டு, அது அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவனை பாதித்தாலும் முயற்சி வீண்.

    எல்லாத் திறமையும் ஒன்றாய் அமையப் பெற்ற ஒருவனை கண்டுணர்வது அரிது. கிடைத்துவிட்டால் அவன்தான் ரோல்மாடல்.

    மற்றபடி, மணிவண்ணனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.(உண்மையில் தற்கொலை தானா?)

    மாணவர்களுக்கு உளவியல் பாடம் மிக அவசியம், அதுவே ஊக்கப் பாடமாகவும் அமையலாம்.

    ReplyDelete
  10. இதை செய்தித் தாளிலும் படித்தேன். நீங்கள் எழுதியதைப் படித்தது மிக்வும் துக்கமாக இருந்தது.மனம் மிகவும் கனத்தது.அவன் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான போது யாராலும் அவனைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவன் ஆன்மா சாந்தியடைவதாக்.

    ReplyDelete
  11. Deeply depressed, this society is missed one talented youth,
    இந்தக் கல்லூரிகள் ஏன் உளவியல் கவுன்சிலர்களை வைத்து மாணவர்களுடன் தொடர்ந்து பேசச் செய்யக் கூடாது? They should start doing this at-least from now.

    Praying to god for Manivannan’s soul to rest in peace.

    ReplyDelete
  12. தனது நிலை உயர காரணமான உந்துதல்கள் பற்றி தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த ஒரு மாணவன் திடீரென தற்கொலைக்கு தூண்டப் பட்டிருக்க மாட்டான். வெளிப்படையாக தேர்ந்த மனிதனாகக் காட்டிக் கொள்ளும் நிறைய பேர் அந்தரங்கத்தில் மிகுந்த கோழைகளாக இருக்கிறார்கள். Profound depression with momentary wrong decisions. Definitely the college students need counselling.

    ReplyDelete
  13. கவுன்சலிங் மாணவர்களை விட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் தேவைப்படுகிறது. வாழ்க்கைக் கல்வி அல்லாத ஏட்டுக் கல்விக்கும், முதல் மார்க், டிஸ்டிங்க்‌ஷன் போன்ற தேவையற்ற இலக்குகளுக்குமாக இளம் மனதுகளைக் காய்ப்பேற்றி காயப்படுத்தி - எத்தனை கொடுமைகள். ஆசைப்பட்டோ சந்தோஷத்துடனோ பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  14. நேற்று இதை ஹிந்து செய்திதாளில் படித்தபோது,என்னையும் இந்த செய்தி பாதித்தது..
    நான் ஊகித்தவரை இந்த மாணவன்,
    தாழ்வுமனப்பான்மையால் அவதியுற்ற்வன்
    ஆறு செமஸ்டர்களில் 26 ARREARS வைத்துள்ளான்.இது, அவனுக்கு படிப்பில் நாட்டம் போய் விட்டது என்றோ அல்லது பொறியியல் கல்வி அவனுக்கு ஏற்றது அல்ல என்றோ நிரூபிக்கிறது.
    தகுந்த நேரத்தில் கவுன்சல் செய்திருந்தால் இவன் மரணத்தை தவிர்த்திக்கலாம்.
    அவன் ஆன்மா சாந்தி அடைவதாக!
    பெற்றோர்கள் அளவுக்கு மீறி கவனம் செலுத்துவதால் நகரத்து குழந்தைகளும்,சற்றும் கவனம் செலுத்தாமல் இருப்பதால் கிராமத்துக்குழ்ந்தைகளும் படிப்பில் நாட்டம் இழக்கின்றனர்.
    ஆனால் பெருகி வரும் இந்த தற்கொலை நிகழ்வுகள் அபாய மணியை ஒலிக்கின்றன ஒரு நல்ல அரசு இதை உணர்ந்து உடனே செயல்படும்.. ஆனால் என்ன செய்வது நமக்குத்தான் அரசே கிடையாதே!!

    ReplyDelete
  15. so, அறிவுரை கூறுவது சுலபம். அதை நடைமுறை படுத்துவது என்பது மிகவும் கடினம் என்பதை நிரூபிக்கும் மற்றொரு நிகழ்வுதான் இந்த தற்கொலை(?)
    இவ்வளவு அருமையாக சிந்தித்து உறை நிகழ்த்திய இவனுக்கு தனக்கு தேவையானதை முடிவெடுக்க இயலாமல் போனது இந்த சமுதாயம் ஏற்படுத்திக்கொண்ட போலித்தனம்.
    கொலை கொள்ளை கற்பழிப்பு என எந்த தவறு நடந்தாலும் அதற்கு சினிமாவை ஒரு காரணமாக கூறி தப்பிக்க/திசை திருப்ப நினைப்பவர்களில் எத்தனை பேர் அதே சினிமாவால் நான் வென்றேன்/சாதித்தேன் அல்லது தோலிவியிலிருந்து மீண்டேன் என்று கூறுகின்றனர்! இந்த மாணவன் "நண்பன்" படம் பார்க்கவில்லையா? எதற்காக SUCCESSக்கு பின்னால் ஓட நினைத்தான்?
    தன் தாயின் நிலையை சற்று நினைத்துப்பார்த்தானா?
    இனி அவளின் நிலை...

    ReplyDelete
  16. பத்தாவது தேர்வு எழுதும் மகனை சென்னையில் உள்ள பாலிடெக்னிக் ஒன்றில் சேர்க்க எண்ணி அங்கு வசிக்கும் எனது தம்பி மனைவியிடம் கூறிய போது, நம்மூரில் இருந்துவிட்டு இங்கு இந்த வயதில் வந்தால் அவன் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவான். எனவே நம் ஊருக்கு அருகிலேயே ஏதாவது நல்ல இடத்தில் சேர்க்க முயலவும் என்றாள். என் புத்திக்கும் அது மிகவும் சரியெனப் பட்டது.
    இதுபோல அந்த மாணவனையும் அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லு£ரியில் படிக்க வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என எண்ணுகிறேன்.
    மேலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவன் என்றால் அவன் அறிவாளி என சொல்ல இயலாது. நமது கல்விமுறையில் அதிக அளவு ஞாபகத்திறன் கொண்ட ஒரு மாணவன் தான் படித்ததை பற்றி எந்த அறிவும் இன்றி மனப்பாடம் பண்ணியே அதிக மதிப்பெண் வாங்க இயலும். எங்களுரில் பல கிராமபுற மாணவர்கள் ஆங்கில கட்டுரைகளை ஒவ்வொரு எழுத்தையும் ஒரு படம் போல மனனம் செய்து முழுமதிப்பெண்கள் பெறுவார்கள். அவர்களுக்கு அக்கட்டுரையில் ஒரு சொல்லுக்கு கூடி அர்த்தம் தெரியாது. இது தான் கிராமப்புற அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் நிலை.
    நான் எண்ணியதை போல நகர்புறத்தில படித்தால் மாணவனின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பது அனைவரும் செய்வதுதான், ஆனால் +2 படித்து வரும் மாணவனின் பருவம் மற்றும் அவன் புதிதாக நுழையும் சூழ்நிலை அவனிடையே ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே நிதர்சனம்.

    ReplyDelete
  17. சைதை முரளிTue Apr 03, 03:49:00 PM GMT+5:30

    செய்தியைப் படித்து முடித்ததும் இனம்புரியாத ஒருவித சோகம்தான் சில நிமிடங்களுக்கு உள்ளத்தில் நீடித்தது. என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏனோ, மு.வ. அவர்களின் ‘கட்டாயம் வேண்டும்’ என்ற சிறுகதைதான் என்னுள்ளத்தில் தோன்றியது.

    ReplyDelete
  18. இங்கே பலரும் அந்த மாணவனை 'கோழை' என்று விமர்சித்துள்ளனர். தயவுசெய்து அதைத் தவிர்க்கவும்.
    அவன் எதிர்பார்த்த ஏதோ ஒரு விஷயம் அவனுக்கு கிட்டாது என்ற அச்சம் வந்திருக்கும், ஆனால் அதற்காக பயந்துபோய் வாழ்வை முடித்திருப்பான் என்று எண்ணுவதற்கில்லை. தான் ஒரு 'ஸ்பெஷல்' மாணவன் என்ற எண்ணம் அவனுக்குள் அதீத தன்னம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. வாழ்வின் யதார்த்தம் யாரையும் எப்படியும் புரட்டிப்போடும் என்ற படிப்பினையை அவன் உணர்ந்ததில்லை..அவனுக்கு உணர்த்துவோரும் யாருமில்லைபோல் தெரிகிறது.

    சரியான உளவியல் கல்வியே மாணவர்கள் தங்களை மாய்த்துக் கொள்வதையோ அல்லது சக மாணவர்கள் அல்லது ஆசிரியர்களை கொல்லுவதையோ தவிர்க்க உதவும்.


    அப்புறம்..பத்ரி சார்... //தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் என்று நினைக்கிறேன்.// இந்த வரியைத் தவிர்த்திருக்கலாம். அவனை உயர்த்திச் சொல்வதற்காகவே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் என்ற போதிலும் நாமும் கலைஞர் பாணியை பின்பற்ற வேண்டாமே!

    ReplyDelete
  19. To know the Reason for his dead ...Read this news...

    http://www.dinamalar.com/News_detail.asp?Id=440937

    ReplyDelete
  20. பத்ரி,
    இதை பதிவு செய்தற்கு நன்றி!

    மிகவும் மனதைப் பாதிக்கக்கூடிய இதுபோன்ற கிராமப்புற மாணவர்களின் திறன், தன்னம்பிக்கை போன்றவை நகர்ப்புற மாணவர்களுடன் கல்லூரியில், வேலையில் போட்டிபோடும்போழுது ஒன்றும் இல்லாமல் போய் அவர்களை தான் எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. அதுவரை தமிழில் கம்பீரமாக, உயர்ந்த சிந்தனையாளர்களாக வளம் வந்த மாணவர்கள், ஆங்கிலமும், நகர்புற காலச்சார பிரம்மாண்டமும் அவர்களை கூனி குருகச்செய்துவிடுகிறது. இதை சவாலாக ஏற்று போராடி தன்னை நிலைநிருத்திக்கொல்வது சாதாரணமான காரியமில்லை. உங்களைப்போன்ற மெத்த படித்த இளைஞர்கள் இன்று பல ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தும் விழிப்புணர்வும் தொடரவேண்டும். பல நூரு தன்னமிபிக்கை இளைஞர்கள், சாதித்த இளைஞர்கள் கிராமப்புற மாணவர்களை உருவாக்கும் சேவையில் லாப நோக்கின்றி செயல்பட முன்வர வேண்டும். இது மிகவும் கடுமையான பனி.

    வருடா வருடம் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் விஷயத்தை கேள்விப்படும்போழுது மனது பதுருகிறது. எனவே StudyGuideIndia.com என்ற அமைப்பின் மூலம் பல தொண்டு நிறுவனங்கள், கல்வித்துறை, தனியார் அமைப்புகள், CSR துறைகள் துணையுடன் மாவட்டம்தோறும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுதிவருகிறோம். உங்களைப்போன்ற , நீயா நானா கோபிநாத் போன்ற பல சாதனையாளர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவர்களை, பள்ளி மாணவர்களை சந்தித்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். கிராமப்புறத்தில் இருந்து வந்து, முதல் பட்டதாரி உதவித்தொகை பெற்று படித்த என்னைப்போன்ற பல கிராமத்து மாணவர்கள் இன்றைய கல்வி, நாகரிக வேறுபாடுகளை எதிர்கொள்ள முடியாமல் கரிகிப்போவதை காணச் சகிக்கவில்லை. இதை அரசின் கடமையாக, பள்ளிகளின், சமுதாயத்தின் கடமையாக விட்டுவிடாமல், நம்மை போன்றவர்கள் இதற்க்கு விடைகான முயலவேண்டும். நன்றி . ச. பார்த்தசாரதி, Founder & CEO, StudyGuideIndia.com.

    ReplyDelete
  21. படிக்கும்பொழுது நெஞ்சம் கனமாகிறது. அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து வரும் முதல் தலைமுறை குழந்தைகளின் இப்படிப்பட்ட சோகம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில நாட்கள் தலைப்புச் செய்தியாகி பிறகு மறந்துவிடும் அவலநிலை. இதற்கு முக்கிய காரணம், இன்றைய கல்வி ஏற்றத்தாழ்வும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வும், ஆங்கிலத்தில் பேச முடியாத நிலையும் ஆகும். இதை அரசாங்கம் மட்டும் சரிப்படுத்திவிட முடியும் என்றோ, பணம் காய்க்கும் தொழிலாகிவிட்ட கல்வி நிறுவனங்கள் சரிசெய்துவிடும் என்றோ கருதாமல், பொது சேவை அமைப்புகள், பன்னாட்டு நிறுவன CSR அமைப்புகள், சமூக அக்கறை உடைய படித்த இளைஞர்கள் களத்தில் இறங்கி இப்படிப்பட்ட மாணவர்களை வழிநடத்தவேண்டும். பத்ரி, நீயா நானா கோபிநாத், சத்யா போன்ற பலர் இன்னும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அதிகம் சந்தித்து தன்னம்பிக்கை கொடுக்கவேண்டும். மாவட்டந்தோறும் கல்வி/வேலைவாய்ப்பு/தன்னம்பிக்கை ஆலோசனை மையங்களை துவங்கவேண்டும் என்ற என் கனவு StudyGuideIndia.Com மூலம் நிறைவேறும் நாளில் இப்படிப்பட்ட மணிவண்ணன்கள் ஒரு சிலரையாவது காப்பாற்றமுடியும் என நம்புகிறேன்.

    ச. பார்த்தசாரதி

    ReplyDelete
  22. I feel sorry for the student and his mother to loose such a whole hearted man.

    Initially, namma punch,,

    kastapattu kidaippathu nilaikum,
    Kastapadamal kidaipathan payan theriyathu athanal nilaikathu.

    As for as i heard he had 26 arriers in the course.
    If he is really interested in social service, he should have aimed finishing his degree and IAS and serve the people with a dignity.

    He spent all time in social service,, No time for his study., All these things put him in a stress, that lead for his hanging.,

    I do not want to waste time to read the history of these people.,, Guys, i advise you,, if you really interested in social service, first prove yourself and get into some standard positions and do it either by yourself as what this student did or through government using your power of the position.

    All the best..,
    I know all of you wanted to reply to me, but i am not going to spend again my time to replying your emails.

    ReplyDelete
  23. I'm from 2005 batch. Anna university vella kaaran uruvaakkinathu. It has very good systems and processes for counselling & all round development. I remember that one staff member is made a class counsellor or something for each batch and they remain so for the entire 4 years till the batch goes out of the college. Unfortunately it just came in to picture during some signing formalities for trips and so on . very very sad . apdinnnu naan comment koduthaaa ennaa maathiri oru thella vaari naay yaarumey kedayaathu . I tell to myself today. If I dont make a effort on this problem I'm the worst of creatures . any body willing to work with me please call me at 7829211106. My name is vijay

    ReplyDelete