சவுரவ் கங்குலியும், வெங்கட் லக்ஷ்மனும் ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களைப் பந்தாடிக் கொண்டிருக்கும்போது மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு சன் நியூஸில் மாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு பார்த்தேன். மன்னர்மன்னன் பாரதிதாசனது மகன். 'பாட்டுப் பறவைகள்' என்ற புத்தகம் எழுதியுள்ளார், தனது தந்தையைப் பற்றி, தந்தையின் ஆதர்ச குரு பாரதியாரைப் பற்றி. மாலனது பாரதியார் பக்தி தெரிந்ததே.
பாரதிதாசன், பாரதியார் மீதான குறும்படம் (அல்லது நெடும்படம்?) எடுக்க விரும்பி கதைவசனம் எழுதிக் கொண்டிருந்தாராம். அதில் பாரதியாரின் சவ ஊர்வலம் பற்றி எழுதும் காட்சியை எழுதிமுடிக்கையில் இவருக்கும் மாரடைப்பு வந்து பின்னர் அதிலிருந்து மீளாமல் இறந்திருக்கிறார். அந்தக் கதை வசனம் இதுவரைக் காணாமல் போய் இப்பொழுது மன்னர்மன்னன் மூலம் கிடைத்துள்ளது. அது இந்தப் புத்தகத்தில் (பாட்டுப் பறவைகள்) சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
சந்திப்பின் போது வெளிவந்த சில சுவாரசியமான தகவல்கள்:
* புதுவையில் பாரதியார் வறுமையில் உழன்றாரா - அப்படி வெளிவந்த செய்திகள் தவறு என்று பாரதிதாசனும் சொல்லியுள்ளாராம். புதுவையில் உள்ள செல்வந்தர்கள் பாரதிக்குத் தேவையான பொருளுதவி செய்துவந்தனர். ஆனால் பாரதியிடம் பணம் தங்கவே தங்காது, வந்த பணத்தை அப்படியே செலவு செய்து விடுவாராம்.
* ஒருமுறை பாரதியின் மனைவி வைகுந்த ஏகாதசி உத்சவம் செல்லும்போது பக்கத்தில் உள்ள பெண்மணிகள் 'உன் கணவன் உனக்கு நகை, பட்டுப்புடைவைகள் போடுவதில்லையோ' என்று கேட்க, கோபத்தோடு வீட்டுக்கு வந்த செல்லம்மா அன்று இரவு தன் கணவருக்குச் சோறு போடாமல் படுத்துறங்கி விட்டார். மகள் தங்கம்மா சோறளிக்கும்போது 'அம்மா எங்கே?' என்னும் கேள்விக்கு, 'ஆம், இரவு விழித்திருந்து சோறு போடும்போலாகவா அம்மாவை வைத்துள்ளீர்கள்' என்றாராம். கோபத்தால் பாரதி வீட்டை விட்டு வெளியே போய்விட, அடுத்த நாள் அனைவரும் தேடக் கிடைக்காதிருக்க, பாரதிதாசன் கடைசியாக பாரதியாரை புதுவை இரயில்வே நிலையத்தில் 'கட்டறுபட்ட சிங்கம் போல்' உலாத்திக் கொண்டிருக்கக் கண்டாராம். பின்னர் அவரிடம் ஏதோ நாடகம் நடந்து கொண்டிருக்கிறது, அதனைப் பார்க்க வாருங்கள் என்றவுடன் கோபம் குறைந்து நாடகம் பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாராம்.
* ஆங்கிலேய ஆட்சியாளர்களால் புதுச்சேரியில் ஒளிந்திருக்கும் பாரதி, அரவிந்தர், வவேசு அய்யர் ஆகியோரைப் பிடிக்க முடியாததால் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக் காரர்களும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு இரு நாட்டுப் பாராளுமன்றங்களிலும் சட்டம் கொண்டுவந்து ஒரு நாட்டின் பெரிய காலனிக்கு அருகில் உள்ள மற்ற நாட்டின் சிறு காலனியை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனராம். தென்னமெரிக்காவில் உள்ள இரு சிறு தீவுகளை புதுச்சேரிக்கு பதிலாக மாற்றிக் கொள்ள முடிவானதாம். அப்பொழுது புதுச்சேரி கவர்னருக்கு ஆலோசனை கொடுக்க ஐவர் குழு இருந்தது. பாரதி, அரவிந்தர், வவேசு ஆகியோரின் நண்பர்கள் அப்பொழுது பதற்றப்பட்டு சட்டங்களை ஆராய்ந்து புதுச்சேரி மக்களின் (வாக்கெடுப்பு மூலம்??) ஆதரவு இல்லாமல் இந்த மாற்றம் ஏற்படக்கூடாது என்பதனைக் கண்டறிந்து கவர்னரிடம் பேசி இந்த நில-மாற்றம் நடக்காது பாரதி முதலியவர்களைக் காப்பாற்றினர்.
* பாரதிதாசன் பெரியார் இயக்கத்தில் இருக்கும்போது ஏன் இன்னமும் பாரதியின் தாசனாகத் தன் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு, பெரியாருக்கும் முன்னதாகவே சுயமரியாதை, சாதி எதிர்ப்பு ஆகியவற்றைப் பேசியவர் பாரதி, அதனால் இளம் வயதிலேயே தனக்கு ஏற்பட்ட தோற்றத்தை வைத்து அதே பெயரை வைத்துக் கொண்டிருப்பதே சரியானது என்றாராம் பாரதிதாசன்.
பி.கு: சவுரவ் கங்குலி சதம் அடித்து விட்டார். வெங்கட் லக்ஷ்மன் ஐம்பதுக்கும் மேல்.
மாலன் - ஞானக்கூத்தன் சந்திப்பு
பயணம் என்பது அறிதலே
48 minutes ago
No comments:
Post a Comment