மாதத்திற்குக் கிட்டத்தட்ட 1 மில்லியன் GSM செல்பேசி இணைப்புகள் விற்கப்படுகின்றன. இதைவிட சற்றே குறைவாக CDMA இணைப்புகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில் 2004 முடிவில் கிட்டத்தட்ட 40 மில்லியன் செல்பேசிகள் இந்தியாவில் இருக்கும்.
இதனாலெல்லாம் இந்தியா செல்பேசித் துறையில் மிகவும் முன்னணியில் இருப்பதாக எண்ண வேண்டாம். கால தாமதமாக நடக்கும் துரித விற்பனையே இவை. GSM செல்பேசிகளை எடுத்துக் கொண்டால் மிகவும் அரதப் பழசான தொழில்நுட்பமே இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக வாங்கப்படும் செல்பேசிக் கைக்கருவிகளும் மிகவும் குறைந்த விலையானவையே (ரூ. 2000-4000). ஒரு சிலர் மட்டும் ரூ. 30,000 வரை செலவுசெய்து நவீனக் கைக்கருவியினை வாங்குகின்றனர். வாங்கியும் ஒரு பிரயோசனமுமில்லை. இந்திய GSM சேவை நிறுவனங்கள் மற்ற வளர்ச்சியுற்ற நாடுகளைப் போல 3G என்றெல்லாம் பேசுவதில்லை. இவர்களது நெட்வொர்க்கில் குறுஞ்செய்திச் சேவையே (Short messaging service - SMS) ததிங்கிணத்தோம் போடுகிறது. அதற்கான SMSC எனப்படும் கணினியால் ஒரு நிமிடத்திற்கு குறைவான குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும் என்ற நிலை உள்ளது. சில நிறுவனங்கள் GPRS என்னும் தொழில்நுட்பம் மூலம் இணையச் சேவையை அளிக்க முன்வந்துள்ளனர். ஆனால் அவை தரம் குறைவானதாகவே உள்ளன.

இதே நேரத்தில் ரிலையன்ஸ் CDMA செல்பேசி நிறுவனத்தார் வழங்கும் தொடக்கநிலைக் கைக்கருவிகளே நல்ல வேகத்தில் இணைய இணைப்பை வழங்குகின்றன. இவற்றை வாங்க செலவும் அதிகமில்லை. வெறும் ரூ. 501 பணம் செலுத்தினால் போதும். மீதியெல்லாம் மாதம் சிறிதாகக் கட்டிக் கொள்ளலாம். இந்த செல்பேசியின் மூலம் மடிக்கணினியானாலும் சரி, மேசைக்கணினியானாலும் சரி, USB அல்லது serial port இல் மூலம் இணைப்பைப் பெறலாம் (இணைப்பான் ரூ. 1,200). லினக்ஸில் serial port உள்ள இணைப்பான் மட்டும்தான் வேலை செய்கிறது. நான் இந்த இணைப்புடன் ஓடும் காரில் பயணம் செய்திருக்கிறேன், அப்பொழுதும் இணைப்பு தொடர்ந்திருக்கிறது. இந்த இணைப்பின் மூலம்தான் ஆகஸ்டு 2003 இல், சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டினை அதற்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கிய வலைப்பதிவில் வெளியிட்டேன்.
இந்த இணைப்பு 115.6 kbps வேகத்தில் பிட்கள் வருவதாகக் கூறுகிறது. ஆனால் நிகழ்வில் அதிகபட்சமாக 60-70 kbps வரை தொடுகிறது. சராசரியாக 20-30 kbps கிடைக்கலாம். ஒரு நிமிடத்திற்கு 40 காசுகள் கட்டணம் (இணையம் + தொலைபேசிக் கட்டணம் இரண்டும் சேர்ந்து). என்னைப் போன்ற ஊர்சுற்றிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
No comments:
Post a Comment