ஐரோப்பாவில் பல வருடங்களாகவே தனித்தனி நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொதுச்சந்தையை உருவாக்கின. ஐக்கிய ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு (European Economic Union) 1973இல் 9 நாடுகள் இணைந்து ஆரம்பித்த இந்தச் சந்தை விரிவாகி 2003இல் 15 நாடுகளை உள்ளடக்கி, 2004இல் 25 நாடுகள் சேர்ந்த ஒரு குழுமமாக இருக்கப்போகிறது. ஒரு நாட்டில் விளைவித்த, உருவாக்கிய பொருட்களை பொதுச்சந்தையின் மற்ற நாடுகளில் விற்பதற்கு எந்தத் தடையும் கிடையாது, தனி வரிகள் எதுவும் கிடையாது. இந்த நாடுகளுக்கிடையில் பொதுமக்கள் கடவுச்சீட்டு இல்லாமல் சுலபமாகப் போய் வர முடியும். ஒரு நாட்டைச் சேர்ந்தவர் குழுமத்தின் மற்ற நாடுகளில் தடைகள் ஏதுமின்றி வேலைக்குப் போக முடியும். இந்த நாடுகளுக்கிடையே குத்து-வெட்டுக் கொலை-பழி கிடையாது. அடுத்த நாட்டை அடுத்துக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
முதலில் பொதுச்சந்தையாகத் தொடங்கிய இந்தக் கூட்டமைப்பு பல வருடங்களுக்குப் பிறகே பொது நாணயம் (யூரோ) ஒன்றை உருவாக்கின. எல்லையில்லாத சந்தை என்பது ஒன்று, பொது நாணயம் என்பதோ மிகவும் வேறுபட்டதொன்று. பிந்தையதைச் செயல்படுத்த அத்தனை நாடுகளுக்கும் இடையே ஒரேமாதிரியான பொருளாதாரக் கொள்கை வேண்டும். வங்கியின் சேமிப்பு வட்டி விகிதம் எல்லா நாடுகளிலும் சமமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்த வட்டி உள்ள நாட்டில் கடன் வாங்கி, அதிக வட்டியுள்ள நாட்டில் அதை வங்கியில் சேமித்து வெறும் காற்றில் முழம் பூ அளக்கலாம். பண வீக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்க வேண்டும் எல்லா நாடுகளிலும். அத்தனை நாடுகளுக்கும் சேர்த்து பணம் அச்சடிக்க ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் மைய வங்கியும் (இந்தியாவில் ரிசர்வ் வங்கி போன்றது) தங்களது பணக்கொள்கையை தங்கள் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்ள முடியாது.
சார்க் நாடுகள் என்பன இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், பூடான் மற்றும் மாலத்தீவுகள் அடங்கியது. இதில் முதல் மூன்றுதான் அளவிலும், மக்கள் தொகையிலும் ஒப்பிடக் கூடியவை. இந்த மூன்று நாடுகளிடையே முதலில் மருந்துக்குக் கூட ஒற்றுமை கிடையாது. அதனினும் மேலாக ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருப்பது போலத் தெரிகிறது. பாகிஸ்தான் கள்ள நோட்டு அடித்து இந்தியாவில் புழங்க விடுகிறது என்று இந்தியா நேரம் கிடைக்கும் போதெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டேயிருக்கிறது. பொது நாணயம் வந்துவிட்டால் அடுத்த நாட்டைக் கெடுக்க இப்படிக் கள்ள நோட்டு அடிப்பது சுலபமாகிப் போய்விடும்.
முதலில் தேவை அமைதியும், நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையும். எல்லையில்லா பொதுச்சந்தைப் உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை. தடாலடியாகப் பொது-நாணயம் என்று குதிக்க வேண்டிய அவசியமில்லை. சார்க் நாடுகள் முதிர்ச்சி அடையாத புது நாடுகள் (நமக்கு வயது வெறும் ஐம்பதுகளில்). பொது-நாணயத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய திறன் நம்மிடையே இல்லை. அது குறித்த ஆரோக்கியமான சிந்தனை கூட நம்மிடைய இல்லை. எனவே ஆகவேண்டிய காரியங்களை முதலில் பார்ப்பது நல்லது. அவையாவன:
- நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது
- பக்கத்து நாடுகளுக்குத் தேவையான பண உதவியை மான்யங்கள் மூலம் அளிப்பது
- உயர் கல்வி வளர்ச்சிக்காக நாடுகளுக்கிடையே மாணவர்கள் பரஸ்பர மாற்றம், ஒரு நாட்டின் மாணவர்கள் அடுத்த நாட்டில் படிக்க எந்தத் தடையும் இல்லாமை
- கடவுச்சீட்டு இல்லாப் பயண அனுமதி
- ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் வேலை பார்க்கத் தடையின்மை (ஆமாம், இங்கே பீஹாருக்கும், அஸ்ஸாமுக்கும் இடையேயே தகராறு... அந்த பிரச்சினையைத் தீருங்கள் பிரதமரே!)
- ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் தொழில் தொடங்கத் தடையின்மை
- எல்லையில்லா, தனி-வரிகளில்லா வர்த்தகம்
இவற்றை சரியாக நடைமுறைப்படுத்த நமக்கு இன்னமும் 30 வருடங்கள் ஆகலாம். அதன் பின்னர் பொது-நாணயத்தைப் பற்றிப் பேசுவோம்.
No comments:
Post a Comment