"மகனுக்கு மேற்படிப்பா? மகளுக்குத் திருமணமா? எங்கள் வங்கி கடன் கொடுக்கத் தயாராயிருக்கிறது." என்று வங்கிகள் சில வருடங்கள் முன்னர் வரை கூட விளம்பரம் செய்து வந்தன. அரசு ஊழியர்கள் தங்கள் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் கடனாகப் பெற விரும்பினால் இரண்டு காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மகனது மேற்படிப்பு, மகளது திருமணம்!
சில வருடங்களாக வங்கிக் கடன் விளம்பரங்களில் பெண்களும் பட்டப்படிப்பு பெறுவது போல் காண்பிக்கப்படுகின்றனர். ஆனால் மற்ற பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விளம்பரங்கள் முழுக்க முழுக்க பெண்களை இழிவு செய்யுமாறும், ஆண்களின் ஆதிக்கத்தை சத்தமின்றி ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அதை மேலும் அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.
"சிகப்பழகுக்" களிம்பு
1978 முதல் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் 'ஃபேர் அண்ட் லவ்லி' என்னும் சிகப்பழகுக் களிம்பை விற்று வருகிறது. இப்பொழுது இன்னமும் பல நிறுவனங்கள் இவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு விற்க ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதில் நமக்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் இந்த சிகப்பழகு விற்பனையாளர்கள் தொலைக்காட்சிகளில், அல்லது திரையரங்குகளில் காண்பிக்கும் விளம்பரங்கள் மிகவும் கேடானவை.
1. சிகப்பழகுக் களிம்பைப் பயன்படுத்தும் முன்னர் விளம்பரத்தில் காட்டப்படும் ஒரு இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளையாக ஒரு புகைப்படம் வந்திருக்கும். அதில் வயதான, அழகில்லாத ஆண் வருவார். வீட்டில் அனைவரும் இந்த மாப்பிள்ளையே போதும் என்று எண்ண, ஒரு சிறுவன் மட்டும் கண்ணால் பெண்ணுக்கு சைகை காட்டி இந்த வரன் சரியில்லை என்பான். பெண் தன் முகத்துக்கு இதற்கு மேல் கிடைக்காது என்று வருத்தத்துடன் முடிவு செய்ய, அப்பொழுது விளம்பர அசரீரி 'முகத்தையும் மாற்றலாம், ஜாதகத்தையும் மாற்றலாம்' என்று சிகப்புக் கிரீமை அருளும். அந்தப் பசையை முகத்தில் அப்பிக் கொண்டவுடன் கணினி வரைகலையால் உருவாக்கப்பட்ட அடுத்தடுத்த திரைகளில் அந்தப் பெண்ணின் முகம் புத்துயிர் பெற்று ஒளிரும். அடுத்த காட்சியில் ஒரு அழகான யுவன் அவளது வதனத்தின் ஒளியில் மயங்குவான். வீட்டிலுள்ளோர் அனைவரும் 'ஜாதகமே மாறி விட்டது' என்று ஒத்துக் கொள்வர்.
2. சிகப்பழகுப் பசை பயன்படுத்தும் முன்னர் இளம்பெண் ஒன்றுக்கும் உதவாத வேலையில் இருப்பார். வீட்டில் காப்பிக்கே வழியில்லை. அவளது தந்தையார் சொற்களால் பெண்ணின் மனதை ஈட்டியால் துளைப்பார். பெண்ணின் கண்ணில் விமானப் பணிப்பெண் வேலைக்கான விளம்பரம் விழும். ஆனால் 'இந்த மூஞ்சிக்கு' அந்த வேலையெல்லாம் கிடைக்காது என்று தோன்றும். அப்பொழுது 'விளம்பர அசரீரி'யானது "ஏன் முடியாது? இதோ சிகப்பழகு கிரீம்" என்னும். 'அந்த மூஞ்சி'யில் பசை அப்பியபின் 'அந்த மூஞ்சி' விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் கலக்கியடித்து, ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் அப்பாவுக்குக் காப்பி வாங்கித் தரும்.
3. சிகப்பழகுப் பசைக்கு முந்தைய பெண்ணின் முகம் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கண்ணாடிக்கு முன்னால் சொல்லிப் பழகும். நீ ஏன் தொலைக்காட்சி வர்ணனையாளராகப் போகக்கூடாது என்ற தோழியின் கேள்விக்கு 'இந்த மூஞ்சி'யால் இதெல்லாம் முடியுமா என்று ஏக்கம் கொள்ளும். வந்ததே சிகப்பழகுப் பசை. அடுத்த காட்சியில் 'பள பள' முகம் ஓரு முன்னாள் கிரிக்கெட் வீரர், இன்னாள் வர்ணனையாளர் பக்கத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்யும்.
ஆக, சிகப்பழகுப் பசை இல்லையேல் - திருமணம் நடக்காது, இல்லை ஒரு கிழவனுக்கு இரண்டாந்தரம், வேலை கிடைக்காது. தகுதி இருந்தாலும்... முகத்தழகு இல்லையெனில் பெண்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒழுக்ககேடான விளம்பரங்கள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண்களின் நிலை சமூகத்தில் கீழிறங்கிக் கொண்டே போகிறது. இந்த விளம்பரங்களை நம்பும் எத்தனையோ பெண்களுக்குத் தங்கள் தோலின் நிறத்தை வைத்துத் தங்களால் வாழ்க்கையில் உயரவே முடியாது என்றதொரு எண்ணம் வரலாம். வந்துள்ளது என்று சிலரிடம் பேசியதில் அறிகிறேன். நிறம் 'மங்கல்' என்பதால் 70 சவரனுக்கு பதில் 150 சவரன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.
இருபாலருக்கும் பொதுவானதில்லை இந்த இழிநிலை செய்யும் விளம்பரங்கள். ஆண்களின் முகத்துக்கு பசை யாரும் விற்பதில்லை. ஆண்களின் நிறத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆண்களுக்கான பிரத்யேக விளம்பரங்கள் முகத்தில் முடி மழிப்பதற்கானது. அந்த விளம்பரங்களும் எதிர்மறையாக வருவதில்லை. நன்றாக மழித்த முகமிருந்தால் பெண்கள் ஓடிவந்து முகத்தைத் தடவி வழிவார்கள் என்று சொல்கிறதே தவிர, முகத்தை மழிக்காவிட்டால் பெண்கள் ஓடிப்போவார்கள் என்று சொல்வதில்லை. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி விளம்பரங்களில். ஏன்?
ஒரே விதிவிலக்கு உடல் நாற்றம் மற்றும் வியர்வை எதிர்ப்பான்களின் (anti-perspirant, deodorant) விளம்பரங்கள். இவ்விளம்பரங்களில் நாற்றமடிக்கும் ஆண்களை ஆடுகள் போல என்று நினைத்துப் பெண்கள் கேலி செய்வது போலவும் காட்சிகள் வரும்.
பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே காட்டும் விளம்பரங்கள்
1. "உங்களது நண்பருக்கு ஆளை மயங்கடிக்கும் பெண் மனைவியாய் வாய்த்தால் என்ன? போகட்டுமே" என்கிறது ஒரு சொகுசுக் கார் விளம்பரம். அதாவது அவரிடம் 'அழகான மனைவி' என்னும் சொத்து இருக்கட்டும், உங்களிடம் இந்த அழகான சொகுசுக் கார் இருக்கிறதே என்று சொல்கிறது விளம்பரம். காருக்கு மனைவி சமமா? ஒரு காரைப் போல மனைவி கணவனின் உடைமையா? இது போல ஆண்களைக் காட்சிப்பொருளாக்கும் விளம்பரங்கள் ஏன் இல்லை? பெண் என்றால் கிள்ளுக்கீரையா?
2. ஒரு கண்ணாடி விளம்பரத்தில் இறுக்கமாகக் குட்டையாடை அணிந்து கொண்டு ஒரு பெண், ஒரு அலுவலகக் கட்டிடத்தில், கையில் பல கோப்புகளை எடுத்துக் கொண்டு நடக்கிறார். அவரைப் பார்த்தவுடன் இரு ஆண்கள் வேலையெல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் 'லிஃப்ட்'டின் உள்ளே நுழையும் போது கோப்பிலிருந்து தாள்கள் சில கீழே விழுகின்றன. அந்தப் பெண் குனிந்து அந்தத் தாள்களை எடுக்கும் போது 'தரிசிக்க' அந்தப் பெண்ணின் உறுப்புகள் ஏதேனும் தெரியுமோ என்று அந்த ஆண்கள் காத்துக் கொண்டிருக்கையில் லிஃப்ட் கதவுகள் மூடிவிடுகிறது. அந்த லிஃப்ட்டுக்குக் கண்ணாடிக் கதவுகள் வைத்திருந்தால் 'எல்லாவற்றையும்' பார்த்திருக்கலாமே என்கிறது விளம்பரம்.
இதை விடப் பெண்களை இழிவு செய்யும் விளம்பரங்கள் ஏதேனும் இருக்க முடியுமா?
3. ஒரு எண்ணெய் விளம்பரம். இந்த எண்ணெய் சர்வரோகநிவாரணியாம். எதை வேண்டுமானாலும் இதன் மூலம் குணப்படுத்தி விடலாமாம். முகம் சிவப்பாக; கால்களில் பித்த வெடிப்பு நீங்க என்று காலிலிருந்து முகம் வரை. ஒரு மனைவி கணவன் 'ஹாய்'யாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்தித்தாள் படிக்கும் போது கொண்டு வந்து காபி தருகிறார். கணவன் மனைவியின் வயிற்றில் உள்ள பிரசவத்தினால் ஆன வரிகளைப் பார்க்கிறார் (வயிறு விரிந்து பிரசவத்துக்குப் பின்னர் திடீரென்று சுருங்குவதால் ஆனது), முகம் சுளிக்கிறார். மனைவியும் வருத்தத்தோடு என்னவெல்லாமோ முயற்சித்து விட்டேன், போகவில்லை என்கிறார். விளம்பர அசரீரி துணைக்கு வருகிறது. வேறென்ன, அதே எண்ணெய்தான், இப்ப வயித்திலயும் தடவுங்க.
நீங்கள் பெண்ணாயிருந்தால் அந்தக் கணவனின் முகம் சுளிக்கும் போது எரிச்சல் வருமா, வராதா சொல்லுங்கள்?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஓரிரு பொருட்களைத் தவிர மீதி எல்லாம் பெண்களால் நுகரப்படுவது. பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்த வேண்டும். இந்த விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் பல பங்குச்சந்தையில் உள்ளவை. எனவே அவர்களது வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு (annual general meeting) சென்று கோஷமிடுவதோடு மட்டுமல்லாமல், பிராக்ஸி வாக்குகள் வாங்கி இம்மாதிரி விளம்பரங்களைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற முயலுங்கள். தீர்மானம் நிறைவேறாமல் தோற்றாலும், ஊடகங்களில் வரும் எதிர்மறைச் செய்திகளுக்குப் பயந்து இந்த நிறுவனங்கள் தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.
2. இம்மாதிரிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரி, இணைய தள கருத்துப் பக்கங்கள் ஆகியவற்றில் உங்களது கோபத்தை வெளிப்படுத்துங்கள்.
3. இப்பொருட்களை வாங்காதீர்கள். இப்பொருட்களை விற்கும் நிறுவனங்கள் செய்யும் மற்றப் பொருட்களையும் நிராகரியுங்கள். அவர்களது போட்டி நிறுவனங்கள் பெண்களை இழிவுசெய்யாத வகையில் விளம்பரம் செய்யுமானால் அந்தப் பொருட்களை வாங்குங்கள்.
4. சிகப்பு நிறத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த விருப்பம், மற்றும் அதன் நீட்சியான கருமை நிறத்தின் மீது உள்ள வெறுப்பு ஆகியவை மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. தீண்டாமைக்கு அடுத்ததாகப் பெரிய பிரச்சினையாக இதைத்தான் சொல்வேன். அதிலும் பெண்கள் மீது மட்டுமே இந்தக் 'குற்றம்' சாட்டப்படுவதால் இந்தப் பிரச்சினை மிகவும் பெரிதாகிறது. இதனை எதிர்கொள்ள ஒரு சமூகப்புரட்சி இயக்கம் தேவை. இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியது பெண்களே. இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்த்தே. சாதீயம், சாதீயவாதிகள் என்ற சொற்களைப் போல 'நிறத்தியம்', 'நிறத்தியவாதிகள்' போன்ற சொற்கள் பழக்கத்தில் வரவேண்டும். அப்படிப் பட்டவர்கள் இனங்காணப்பட வேண்டும். அவர்கள் பகிஷ்கரிக்கப்பட வேண்டும்.
விளம்பரங்கள் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வர்தான் பீடி பற்றிய பதிவு
2. புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்
3. சினிமா தியேட்டரில் தேசிய கீதம்
நாத்திகத்திற்கு தத்துவம் உண்டா?
9 hours ago