Wednesday, March 31, 2004

பாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்

இன்று காலை பாகிஸ்தான் விசா வாங்க சென்னையிலிருந்து புது தில்லிக்கு வந்தேன். லாகூரில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்டு போட்டியைப் பார்ப்பதாக எண்ணம்.

காலையில் விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு, மாலை நான்கு மணியளவில் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் கிடைத்தது. இன்று மாலையே மீண்டும் விமானம் ஏறி சென்னை போய்விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

இன்று நடந்த நிகழ்ச்சிகள் கீழே:

06.45 சென்னையில் விமானம் ஏறல்

09.20 புது தில்லி வந்தடைதல்

10.15 பாகிஸ்தான் தூதரகம் வந்தடைதல்.

தூதரகம் வாசலில் பலர் தட்டச்சு இயந்திரத்துடனும், கையில் விண்ணப்பப் படிவங்களுடனும் அமர்ந்துள்ளனர். அவர்களிடம்தான் விண்ணப்பப் படிவங்களைப் வாங்கி அதில் அவர்களையே தட்டச்சு செய்து தரச்சொல்லிப் பெற வேண்டும். விண்ணப்பப் படிவம் நான்கு இதழ்களாக உள்ளது. கார்பன் பேப்பரில் செய்யப்பட்டது. தட்டச்சு செய்தால் நான்கு படிவங்களிலும் நிரப்பப் பெறும். இதற்கான செலவு ரூ. 60.

10.25 விண்ணப்பப் படிவம் நிரப்பி முடிதல்

கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு விசா வழங்கவென்று தனியாக ஒரு வரிசை துவங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஏற்கனவே பலர் இருந்தனர்.

10.40 விண்ணப்பப் படிவத்தை பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் கொடுத்தல். அவர் பதிலுக்கு எந்த ரசீதையும் கொடுக்கவில்லை. மாலை வந்து பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்கிறார். விசா பெறும் கட்டணம் ரூ. 15 (!!)

ஆகா, வேலை முடிந்தது, மாலை 16.00 மணிக்கு விசா அடித்த பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கிளம்பி, தில்லி சரவணபவனில் உணவை முடித்தோம். மதியம் எங்கள் அலுவலகத்தில் தில்லிக் கிளைக்குச் சென்று சற்று கிரிக்கெட் பார்த்துவிட்டு (அதுதான் எங்கள் வேலையே!) நான்கு மணியளவில் மீண்டும் பாகிஸ்தான் தூதரகம் சென்றோம்.

16.00 வரிசையில் நிற்றல்

16.30 வரிசையில் நிற்றல்

17.00 கால் வலித்ததால் கீழே சிறிது உட்கார்ந்து விட்டு மீண்டும் வரிசையில் நிற்றல்

17.30 கவுண்டரில் ஆள் யாரையும் இன்னமும் காணவில்லை. விமான நிலையத்தைக் கூப்பிட்டு இரவு 16.50க்கு திரும்பிப் புறப்படவிருந்த பயணச்சீட்டை தற்காலிகமாக நிறுத்தியாயிற்று.

18.00 இன்னமும் ஆள் யாரையும் காணோம். சுற்றி சுமார் 60 பேர் விசா எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான் முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெறுகிறது. பாகிஸ்தான் 207/9 இரண்டாவது இன்னிங்ஸில். சிலர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், அது முடிந்துதான் பாஸ்போர்ட்டுகளை வழங்க வருவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்!

18.35 கவுண்டர் திறக்கப்படுகிறது. சுமார் 2.35 மணி நேரம் தாமதமாக!

18.45 ஒரே குழப்பம். 70 பேர்கள் கவுண்டரைச் சுற்றிக் குழுமிக் கொள்கிறார்கள். இதற்கிடையில் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி, கொஞ்சம் அடிதடி, கைகலப்பு ஏற்படுகிறது.

19.15 ஒருவழியாக என் பெயர் கூப்பிடப்பட்டு என் பாஸ்போர்ட் கிடைக்கிறது.

19.45 என்னுடன் வந்த மற்றவர்களின் பாஸ்போர்ட்டுகள் ஒரு வழியாகக் கையில் கிடைக்கின்றன

விசா அதிகாரி டமாலென்று கதவைச் சாத்திக் கொண்டு 'எஸ்கேப்' ஆகிறார்! இன்னம் பலருக்கு பாஸ்போர்ட்டுகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அடுத்த நாள் கிடைக்கும் என்கிறார். எப்பொழுது என்று சொல்லவில்லை. பலர் தங்கள் பாஸ்போர்ட் எப்பொழுது கிடைக்கும் என்று பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாதிரியாக அந்த இடத்தை விட்டகன்று இரவு தங்க ஒரு விடுதியைப் பிடிக்கிறோம். நாளைக் காலை விமானம் பிடித்து சென்னை மீண்டும் வர வேண்டும். பிறகு சனியன்று சென்னை->புது தில்லி->லாகூர். ஆரம்பமே படு குழப்பம். பார்க்கலாம் போகப் போக எப்படியென்று.

Monday, March 29, 2004

விரேந்தர் சேவக் முச்சதம்

விரேந்தர் சேவக்
© Wisden CricInfo
கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் விரேந்தர் சேவக் இந்தியாவிற்காக முதல் முச்சதத்தை இன்று அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடந்த முதல் டெஸ்டு போட்டியில் இது நடந்தது.

எக்கச்சக்க அதிர்ஷ்டம் அவருக்கு. நான்கைந்து கேட்சுகள் கோட்டை விடப்பட்டன. ஒரு ரன்-அவுட் தடவப்பட்டது. இருந்தும், மிக வேகமாக, ஒரு மர்மக்கதையைப் படிக்கும் உணர்வைத் தூண்டிய 309 ரன்கள் சேவக்குடையது.

நூறாவது ரன் ஷோயப் அக்தரின் பந்தை தர்ட்மேன் திசையில் ஆறாக அடித்து எடுத்தார். முன்னூறாவது ரன் சக்லைன் முஷ்டாக்கின் பந்தை மிட் விக்கெட் திசைக்கு மேல் ஆறாக அடித்து எடுத்தார். இருநூறாவது ரன் நான்காகப் போய் விட்டது.

மற்றொரு பக்கத்தின் சச்சின் டெண்டுல்கர் இருநூறுக்கு ஆறு ரன்கள் குறைவாக இருக்கையில் திராவிட் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். பைத்தியக்காரத்தனமாக இருந்தது இந்த முடிவு! தனியொரு விளையாட்டு வீரரின் புள்ளிவிவரக் கணக்குகள் ஒரு அணிக்கு முக்கியமல்லதான். ஆனால் என்னவோ அந்த கடைசி ஆறு ரன்கள் எடுக்க டெண்டுல்கர் பல மணிநேரங்கள் செலவழித்துவிடுவது போலவும், அந்த நேரத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆயிரக்கணக்கில் விக்கெட்டுகளைக் குவித்து விடுவது போலவும் திராவிடுக்கு ஒரு எண்ணம்.

அல்லது, ஒருவேளை கங்குலி சும்மா இல்லாமல் திராவிடை தூண்டிவிட்டுக்கொண்டே இருந்திருக்க வேண்டும். எதுவானாலும் இன்னமும் ஐந்து ஓவர்கள் கூட இந்தியா விளையாடியிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ஸ்கோர்போர்டு

கொசுறுச் செய்தி: ரஞ்சிக் கோப்பை இறுதியாட்டத்தில் மும்பையிடம் தமிழ்நாடு உதை வாங்கிக்கொண்டிருக்கிறது. நாளை ஒரு இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து மும்பை கோப்பையை வென்றுவிடும்.

Sunday, March 28, 2004

கட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க!

பதர் சயீத், வக்ஃப் வாரியத் தலைவர், மற்றும் தென் சென்னைத் தொகுதிக்கான அஇஅதிமுக வேட்பாளர், தி.நகரில் பேசிய பேச்சு என்று தினமலரில் வந்ததிலிருந்து:
நம்ம எம்.பி., இப்ப சொன்னரு, அம்மாக்கு என்னா புட்க்கும். உண்மாய், நாண்யம், உழைய்ப்பு. இந்த மூனும் எங்கிட்ட இர்க்கு. அதனால என்ன வேய்ப்பாளரா நிர்த்தி வெச்சாங்க. என்க்கு கட்டாயமா ஓட் போட்வீங்க. எனக்கு ஜெயிக்க விட்டா நாட்க்கு நல்து செய்வன். என்க்கு டமில், இங்க்லீஷ், ஹிந்தி, பிரென்ச், உருது தெர்யும். எது தெர்யன்மோ அது என்க்கு தெர்யுது.

ஜெய்ச்சு வந்தா தொகதிக்கு வர்வீங்ளான்னு கேட்குது. கட்டாயமா வர்வேன். இருவத்தஞ்சு வர்ஷமா ஏழங்களுக்கு சேய்வை செய்றன். சுய உத்வி குழுக்கள்ல ஆயிரம் பெண்கள் இருக்கு.

எல்லா எட்த்துலயும் எங்கிட்ட ஒரு கேழுவி கேட்குது. முன்னால் எம்.பி., தொக்தி பக்கமா வர்லேன்னு. மொஹமே மர்ந்துட்டாங்க. என் மொஹம் மர்க்க முடியாது. ஒங்கள்க்கு என்ன தேய்வையோ ஒங்க குர்லே கொட்ப்பேன். அம்மாகிட்ட, டமில் நாட்ட முதல் மாநிலமா பண்றதுக்காக ஒழைப்பேன்னு கூறிக்கறேன். டமில் நாட்டுக்காக ஏழங்கள்க்காக ஒழைப்பேன். எதுமோ எதிர்பார்க்கலை. ஆண்டவன் நல்லபட்யா என்ன வெச்சிர்க்கான். ஒங்கள்க்கு சேய்வை செய்ணும். கட்டாயமா என்க்கு ஜெய்ச்சு வெப்பீங்க. இந்தியாவ இந்தியர்தான் ஆளுனும். வாஜ்பாய் வர்றதுதான் நல்லுது. ஒங்கள்க்காக அங்கே சண்ட போட்டுக் கொண்டு வர்வேன். என் தொகதிய மொதல் தொகுதியா பண்ணனும். நான் சிங்ஹம். கட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க.

சாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்

தமிழ்நாட்டில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட செல்லப்பிள்ளை அவர் [கண்ணதாசன்]. கல்கியில் அவர் தொடராக எழுதிய 'சேரமான் காதலி' சரித்திர நாவலுக்குச் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. 'இதைவிட உங்கள் கவிதை நூல் எதற்காவது பரிசு கொடுத்திருக்கலாம்.' என்றேன் நான் அவரிடம். 'இதற்குக் கூடப் பரிசு கொடுக்காமலும் இருந்திருக்கலாம்!' என்றார் அவர் என்னிடம்! பரிசுகளை ஒருபோதும் அவர் பொருட்படுத்தியதில்லை.
பக். 117, சுவடுகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 2003, பக் 184, ரூ. 200

கவிப்பேரரசு வைரமுத்துவை சாகித்திய அகாதமி விருதுபெற்ற விவகாரத்தில் வம்புக்கிழுத்தவர்கள், வைரநெஞ்சம் படைத்த என்னையும் சீண்டிப் பிடரியைச் சிலிர்க்கச் செய்திருக்கிறார்கள்.

நான் அகாதமி விருது பெற்றபோது அநியாயமாக என்னையும் விமரிசித்தார்கள்.

...

நான் ஓர் இலக்கணச் சுத்தமுள்ள இசைஞன். தம்பூரில் ஒலிக்கும் நுட்பமான அந்தரகாரத்தைப் போன்றவை என் படைப்புகள். எந்த ஆலாபனையையும் ஆலோசித்துச் செய்பவன். எனக்கே பிடித்த பைரவி (சரித்திரம்) ராகமானாலும், அதன் பாஷாங்க (கலப்புச்) சரமான சதுர்ஸ்ருதி தைவதத்தை எங்கு எப்படிப் பிரயோகித்தால் மூர்ச்சனை காட்டி மக்களைக் கவரும், மகோன்னதம் அடையும் என்கிற வித்தாரத்தை விதந்து அறிந்தவன்.

நான் எழுதிய 145 நூல்களும் 2 பத்திரிகைகளின் முதற்பரிசுகளும் 32 விருதுகளும் இதற்குச் சான்று பகரும். மிகுந்து நிற்பது ஞானபீடம்; அதையும் என் தமிழ் பெற்றுத் தரும்.
'இலக்கிய சாம்ராட்' கோவி.மணிசேகரன், அமுதசுரபி மார்ச் 2004.

தேர்தல்: அன்றும், இன்றும்

காமராஜ் பேச எழுந்தார். நல்ல உயரம். கறுப்பு நிறம். கண்களில் இனந்தெரியாத பிரகாசம். முழங்கால் வரை நீண்ட ராஜலட்சணமான கைகள். கிராமியப் பேச்சு. 'ஸ்தாபன காங்கிரசுக்கு வோட்டுப் போடுங்கள்' என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை. 'இந்தக் கட்சியின் அறிக்கை, இவற்றையெல்லாம் வாக்குறுதியாகத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வேறு சிலவற்றைச் சொல்கின்றன. மக்கள் சீர்தூக்கிப் பார்த்து, தங்களுக்கு நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.' இப்படிப் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

அடுக்குமொழி இல்லை. ஆரவாரம் இல்லை. நகைச்சுவை இல்லை. இலக்கணத் தமிழைக்கூட அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் நெஞ்சைத் தொடும் பனியன்களைத் தயாரிக்கும் திருப்பூர் நகர மக்கள் அனைவரின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது. காரணம் அவர் பேச்சில் சத்தியம் இருந்தது. நான் உங்களில் ஒருவன் என்கிற தொனி இருந்தது. உதட்டிலிருந்து பேசாமல் மனத்திலிருந்து பேசினார் அவர்.
பக்: 72, சுவடுகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 2003, பக் 184, ரூ. 200

சோனியாவுக்கு தேச பக்திதான் இல்லை. பதி பக்தியாவது இருக்க வேண்டாமா? தன் கணவரின் கொலைக்குக் காரணமாயிருந்தவர்களை ஆதரித்தவர்களுடன் கூட்டு சேர்கிறாரே?
ஜெயலலிதா, தேர்தல் கூட்டம், circa மார்ச் 2004

Saturday, March 27, 2004

ஐஐடி மும்பையின் 'அடைகாப்பகம்'

Incubator என்பதை அப்படியே அடைகாப்பகம் என்று மாற்றியுள்ளேன். ராஜேஷ் ஜெயின் தன் வலைப்பதிவில் டெக் ரிவ்யூவில் வெங்கடேஷ் ஹரிஹரன் எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டியுள்ளார்.

இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கலாம். இங்கு தொழில் என்பது ஒரு 'பெட்டிக்கடை' திறப்பது அல்ல. ஒரு அறிவுசார் தொழில்நுட்பத்தையும், சில புது யோசனைகளையும் வைத்து ஒரு தொழில் திட்டம் தயாரித்து, லட்சக்கணக்கில் முதலீடு செய்து, ஒரு நிறுவனத்தை உருவாக்கி, சிலரை வேலைக்கு அமர்த்தி, ஒரு பொருளையோ, சேவையையோ உண்டாக்கி, அதன்மூலம் பொருளீட்டி, வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை மேல் நிறுத்துவது.

ஏன் இந்தியாவில் இது கடினம்?

* பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை முதலீடு செய்து தொழில் புரிவது குறிப்பிட்ட சில சமூகங்களில் மட்டுமே இருந்து வந்தது. நடுத்தர மக்களின் வீச்சுக்கு வெகு வெளியில் இருந்தது.

* சேமிப்பிலிருந்து மட்டுமே தொழில் தொடர முடிந்தது. துவக்க கட்டத் தொழில்களுக்கு வங்கிக் கடன் பெறுவதே குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் இம்மாதிரித் தொழில்கள் வெற்றியடைய நட்டமானாலும் பரவாயில்லை என்னும் வகையில் போடப்படும் பங்கு மூலதனம் (risk equity) தேவையாயிருந்தது. வெறும் வங்கிக் கடனில்லை. அவ்வாறு முதலீடு செய்யும் 'angel investor', 'venture capitalist' யாரும் இல்லை. இன்றும் கூட அப்படிப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதே வருந்தத் தக்க விஷயமாகும். (இல்லையா பிரகாஷ்?)

* இந்தியாவில் இப்பொழுதைக்கு தொழில் முனைவோர் முதலீட்டு நிதிகளை (venture capital funds) நடத்துவோர் அனைவரும் BPO/Call center நிறுவனங்களுக்கு மட்டுமே பணம் கொடுக்க விரும்புகிறார்கள். இக்கு (risk) எடுக்க யாரும் விரும்புவதில்லை. தகுதியுள்ள தொழில் முனைவோரைத் தேடிக் கண்டுபிடிப்பதில்லை.

* பண முதலீட்டுக்கு மேலாக வழிகாட்டுதல் (mentoring) என்பது வெகு அவசியம். புதிதாகத் தொழில் புரியும் தொழில் முனைவோர் இதுகாறும் மற்றவர்கள் செய்த அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வார்கள். சரியான வழிகாட்டி இந்த புதைகுழிகளில் விழாவண்ணம் தப்பிக்க வழிகாட்டுவார். அதுவும் இந்தியாவில் இப்பொழுதைக்கு இல்லை.

ஐஐடி மும்பை உருவாக்கியுள்ள அடைகாப்பகத்தில் அங்கு படித்துப் பட்டம் பெறும் மாணவர்கள் தொழில் தொடங்க மூலதனம், வழிகாட்டுதல் போன்ற உதவிகளைச் செய்கிறார்களாம். இதே போல ஐஐடி கான்பூர், ஐஐடி தில்லி ஆகியவையும் ஆரம்பித்துள்ளனவாம். ஐஐடி சென்னையும் ஆரம்பிக்கும் நிலையில் இருப்பதாக அறிகிறேன்.

இந்த முயற்சி ஐஐடி சென்னையில் யார் தலைமையில் நடைபெறுகிறது என்றறிந்து அந்த முயற்சியில் என்னால் ஆனதைச் செய்ய வேண்டும்.

Friday, March 26, 2004

Fetus Protection Bill

அமெரிக்க செனட் Fetus Protection Bill என்றொரு சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் மீது ஏற்படும் தாக்குதல்களும் தனியான குற்றமாகக் கருதப்படும். அதாவது கருவுற்றிருக்கும் (எந்த நிலையில் உள்ள கருவானாலும்) பெண்ணின் மீது ஒரு தாக்குதல் நடந்தால் அது இரண்டு குற்றங்களாக எடுத்துக்கொள்ளப்படும் - தாயின் மீது + கருவின் மீது. இதனால் தாக்கியவருக்கு தண்டனை அதிகமாகும்.

இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? இந்தச் சட்டத்தில் பொடி வைக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறார்கள் அமெரிக்கர்கள் பலர். அமெரிக்காவில் பல காலமாக நடந்து வரும் ஒரு பிரச்சினை கருக்கலைப்பு பற்றியது. அமெரிக்காவின் அடிப்படைவாதிகள், கிறித்துவ மத தீவிரர்கள் கருக்கலைப்பு செய்வது பாவம், தவறு, குற்றம் என்கின்றனர். பெண்ணுரிமை அமைப்புகள், பெண் சுதந்திரம் விரும்புபவர்கள் ஆகியோர் தன் கருவை ஒரு காலம் வரையாவது கலைக்கக் கூடிய உரிமை கருவுற்ற பெண்களுக்கு இருக்க வேண்டும் என்கின்றனர். இந்தப் பிரச்சினை ரோ vs வேட் என்னும் அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்கில் போய் முடிந்தது. அந்த வழக்கின் 1973 தீர்ப்பில் கருக்காலத்தை மூன்று காலாண்டுகளாகப் பிரித்து முதல் இரண்டு காலாண்டில் எந்தப் பெண்ணும் விரும்பினால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்றும், மூன்றாவது காலாண்டில் தன்னிஷ்டப்படி செய்து கொள்ள முடியாது என்றும், மாநில அரசின் அனுமதி கிடைத்தால்தான் - அதுவும் அவ்வாறு கருக்கலைப்பு செய்து கொள்ளாவிட்டால் தாயின் உயிருக்கே ஆபத்து வரும் என்ற நிலை இருந்தால்தான் - கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும் என்றும் சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று வரை அமெரிக்காவே இரண்டாகப் பிரிந்து pro-life (உயிர்க்கட்சி) vs pro-choice (உரிமைக்கட்சி) என்றாகி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சண்டை போட்டுக்கொள்வார்கள். ரிபப்ளிகன் கட்சி பொதுவாக உயிர்க்கட்சி. டெமாக்ரடிக் கட்சி உரிமைக்கட்சி.

இப்பொழுது தாக்கலான சட்டத்தில் 'பிறக்காத குழந்தை' என்பது "கருப்பையில் இருக்கும் எந்த நிலை வளர்ச்சியிலுமான ஹோமோ சாப்பியன் இனத்தைச் சேர்ந்த கரு" என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதங்களின் போது டெமாக்ரடிக் கட்சியின் பேட்டி மர்ரே என்பவர் 'உயிர் எப்போது தொடங்குகிறது' என்னும் விவாதத்தை விட்டுவிடலாமே என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சித்துள்ளார். ஆனால் அந்த சட்டத்திருத்தம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

இப்பொழுது வந்துள்ள சட்டம் சட்டபூர்வமான கருக்கலைப்பைத் தடை செய்யவில்லை என்றாலும், அடுத்த விவாதம் அங்குதான் செல்லப்போகிறது. வயிற்றில் உள்ள கருவை அடுத்தவர் தாக்கினால் அது குற்றம் எனும்போது அந்தக் கருவைச் சுமக்கும் தாயே - அந்தக்கரு எந்த நிலை வளர்ச்சியில் இருக்கும்போதும் - அதை அழிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம் என்று 'உயிர்க்கட்சி'யினர் கேட்க ஆரம்பிக்கலாம்.

இன்னும் சில வருடங்கள் ரிபப்ளிகன் கட்சியினர் அமெரிக்க அதிபராகவும், செனட்டில் அதிகப் பெரும்பான்மையுடனும் இருந்தால் தங்களவர்களை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அதிகமாகக் கொண்டுவர முடியும். அப்பொழுது ஒரு வழக்கு கருக்கலைப்பை எதிர்த்து நடந்தால், மேற்படி சட்டத்தின் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் முடிவு வேறு மாதிரியாக இருக்கலாம்.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியம் கிரிக்கெட் பத்தியில்.

முந்தைய கட்டுரைகள்.

Thursday, March 25, 2004

आम आदमी को क्या मिला?

உங்களுக்குப் புரியாத மொழியில் காங்கிரஸ் பல விளம்பரங்களை செய்தித்தாள்களில் எடுத்து வருகிறது. இது பாஜக அரசின் "भारत उदय/இந்தியா ஒளிர்கிறது" விளம்பரங்களுக்கு எதிராக எடுக்கப்படுவது.

பொதுமக்களுக்கு என்னதான் கிடைத்தது?

பாஜக 'இந்தியா ஒளிர்கிறது' என்று சொல்வதெல்லாம் பொய். கடந்த 6 1/2 வருடங்களில் பொதுமக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பது, பங்குச்சந்தையில் ஊழல் போன்றவை மட்டுமே - என்பது காங்கிரஸின் வாதம்.

எப்படி பாஜகவின் 'இந்தியா ஒளிர்கிறது' விளம்பரங்களை எதிர்க்கிறேனோ, அப்படியே காங்கிரஸின் எதிர்மறை விளம்பரங்களையும் எதிர்க்கிறேன். 6 1/2 வருடங்களின் இந்தியாவில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனலாமே ஒழிய ஒன்றுமே உருப்படியாக நடக்கவில்லை என்பது அயோக்கியத்தனம். பங்குச்சந்தை ஊழலின் ஆரம்பம் ஹர்ஷத் மேஹ்தா. அது நடந்தபோது யார் ஆட்சியில் இருந்தது? காங்கிரஸ்தான். நேற்றைய கேதன் பாரிக் பங்குச்சந்தை ஊழல் நடந்தது பாஜக ஆட்சியில்.

UTI தொல்லைகள் நடைபெற்றது பாஜக ஆட்சியில்தான். ஆனால் அதற்கான வித்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நடைபெற்றது. மேலும் பாஜக அரசு யூ.டி.ஐ குழப்பத்தைக் கையாண்ட விதம் நன்றாகத்தான் இருந்தது.

வட்டி விகிதம் குறைவது என்பது தவிர்க்க முடியாதது. இதனால் பலருக்கு நன்மை, சிலருக்கு - முக்கியமாக வங்கியிலிருந்து வரும் வட்டியை மட்டுமே நம்பி வாழும் வயதானவர்களுக்கு - தீமை. (பலர்-சிலர் மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.) வங்கியில் பணத்தைப் போட்டு அதிலிருந்து வரும் வட்டியை மட்டுமே நம்புவது சரியான செய்கையல்ல. முதிர்ச்சியடைந்த பொருளாதார நாடுகளில் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் (Pension Fund Investments) உங்கள் வைப்பு நிதிக்கு அதிக வசூலைக் கொடுக்கும். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு அனுபவக்குறைவானது. காப்பீட்டு நிறுவனங்களும் மிகவும் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளன. எல்.ஐ.சி கூட யூ.டி.ஐ போன்று இல்லாமல் தன் பல காப்பீட்டுத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளது (from fixed returns to market linked bonus). நம் பொருளாதாரம் முதிர்ச்சி அடையும் நிலையில் பல பொறுக்கிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பணம் செய்யப் பார்ப்பார்கள். ஹர்ஷத் மேஹ்தா, கேதன் பாரிக் போன்றவர்கள் அப்படிப்பட்டவர்களே. இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு அப்பொழுது ஆட்சி நடத்தும் அரசினைக் குறை கூறுவதில் எந்தப் பிரயோசனமுமில்லை.

காங்கிரஸ், பாஜக இரண்டின் விளம்பரங்கள் பற்றியும் அவற்றைப் பற்றிய என் கருத்துகளையும் வரும் நாட்களில் இங்கு எழுதிகிறேன்.

Wednesday, March 24, 2004

தாய்லாந்து செக்ஸ் சுற்றுலா

(இன்றைய எகனாமிக் டைம்ஸ் வழியாக) இரண்டு நியூயார்க் சுற்றுலா நிறுவனங்கள் (travel operators) மீது விபச்சார சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிஎன்என் செய்தி இதோ.

ஈக்வாலிட்டி நௌ (Equality Now) என்னும் பெண்கள் உரிமை அமைப்பு விடாது தொடர்ந்து வந்த போராட்டங்களின் மூலம் [சுட்டி 1 | சுட்டி 2] நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எலியட் ஸ்பிட்ஸர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். ஹவாயியில் இதுபோன்ற குற்றங்களுக்கு ஐந்து வருடம் சிறைத்தண்டனை தருமாறு சட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.

நான் போனவருடன் தாய்லாந்து சென்றிருந்தபோது இதுதான் கண்ணில் பட்டது. வெளிநாட்டிலிருந்து வரும் ஆடவர்கள் பலர் செக்ஸுக்காகவே தாய்லாந்து வருவது போல் இருந்தது. இதைப்பற்றி திசைகளில் வந்த என்னுடைய பயணக்கட்டுரையிலும் எழுதியிருந்தேன்.

தாய்லாந்து அரசாங்கம் இந்த விஷயத்தைப் பற்றி துளிக்கூட கவலைப்படுவதாகவே தெரியவில்லை. மற்ற நாடுகள் அங்கொன்றும் ஒங்கொன்றுமாக சட்டம் இயற்றி, வழக்குத் தொடுப்பதனால் ஒரு நன்மையும் கிடையாது.

இதுபோன்ற செக்ஸ் டூரிஸம் கொடுமைகள் இந்தியாவில் நடக்காமல் இருக்க இப்பொழுதே இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, March 23, 2004

பங்குச்சந்தை பற்றி

பங்குச்சந்தை பற்றியும், IPO/PO க்கள் பற்றியும் ரீடிஃப்.காம் இலிருந்து இரண்டு சுட்டிகள்.

Dummies' guide to the stock market
How to apply for an IPO

இவ்விரண்டையும் வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நிறையச் செய்திகளை துல்லியமாகத் தரவில்லை. ஆயினும் ஓரளுவுக்கு புதிதாகக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

பங்குச்சந்தைகள் பற்றிய எனது முந்தைய பதிவுகள்:
இணையத்தில் பங்குகளை விற்க/வாங்க
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கம்

Sunday, March 21, 2004

தொழில்நுட்பம்.காம்

தொழில்நுட்பம்.காம் என்றொரு "மின்னியல், மின்னணுவியல், கணினியியல், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பத் தகவல்தளம்" இயங்கிவருவதைப் பற்றி நேற்று என் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

இங்கு கலைச்சொல்லகராதி ஒன்றும் (ஆரம்பகட்ட நிலையில்) இருக்கிறது.

Saturday, March 20, 2004

பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன?

நான் சென்னையில் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளில் யாருக்கு வாக்களிப்பது என்ற எனது முதல்கட்ட எண்ணங்களை எழுதியிருந்தேன். இந்த வேட்பாளர்களைப் பற்றி இன்னமும் செய்திகள் சேகரிக்க வேண்டும். முக்கியமாக TR பாலு, C குப்புசாமி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சராக என்ன செய்தனர் என்பது தெரிய வேண்டும். பதர் சையீது, பாலகங்கா, தயாநிதி மாறன், சுகுமாரன் நம்பியார் போன்றவர்கள் பற்றி அதிக விவரங்கள் இன்னமும் அறிந்து கொள்ள வேண்டும்.

சுற்று வட்டாரத்தில் கேட்டதில் பாலகங்காதான் 'dubious background'இல் வருகிறார். லோக்கல் கட்டப் பஞ்சாயத்து ஆசாமி போலத் தெரிகிறது. பதர் சையீது பற்றி பல நல்ல விஷயங்கள் கேள்விப்படுகிறேன்.

ஹரி என் முதல் பதிவிற்கு பதிலாக தன் தொகுதி பற்றி எழுதியுள்ளார்.

இதில் ஒரு விஷயம் பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை தொகுதி மேம்பாடு (சாலைகள் போடுதல், கழிவுநீர் வடிகால், மேம்பாலங்கள் போன்றவை) முக்கிய விஷயமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள்/உள்ளாட்சி உறுப்பினர்கள் வேலை என்றே நினைக்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பரந்த நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி சட்டம் இயற்றுவதும், நிதிநிலை அறிக்கையினை குடைந்து நிதி அமைச்சர் சரியான திட்டங்களைக் கொண்டு வருகிறாரா என்று பார்ப்பதும், உலக நாடுகளின் தரத்தில் இந்தியா முன்னேறுவது எப்படி என்பதிலுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். எனக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி மேம்பாட்டு நிதி மீது உடன்பாடு கிடையாது.

அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பு

அசோகமித்திரன்அசோகமித்திரன் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாய், இரண்டு புத்தகங்களாய் வெளிவந்து விட்டன. கவிதா வெளியீடு. விலை சற்று அதிகம். ஆனால் கெட்டி அட்டை, நல்ல தாள் என்று நன்கு வந்துள்ளது.

மொத்தம் 1488 பக்கங்கள். முதல் தொகுதி 720 பக்கங்கள், 79 சிறுகதைகள். இரண்டாவது தொகுதி 768 பக்கங்கள், 108 சிறுகதைகள், ஒருசில இணைப்புகள். மொத்தம் 187 சிறுகதைகள். 1956 தொடங்கி 2000 ஆண்டு வரை எழுதிய கதைகள். மொத்தம் 200 க்கு மேல் சிறுகதைகள் எழுதியுள்ளாராம். ஆனால் ஒரு சில கதைகள் இந்தத் தொகுதியில் இல்லை. இரண்டு தொகுதிகளும் சேர்த்து விலை ரூ. 750.

என்னுடைய அசோகமித்திரன் கலெக்ஷன் நிறைவு பெற இன்னம் சில புத்தகங்களே பாக்கி. இன்று அவரது மற்றுமொரு கட்டுரைத் தொகுதி கிடைத்தது.

அசோகமித்திரன் கட்டுரைகள், ராஜராஜன் பதிப்பகம், 2001, பக்கங்கள் 240, விலை ரூ. 75

தேர்தல் சுவரொட்டிகள் - 2

இது சுவரொட்டி அல்ல, சுவர்ச்சித்திரம். தத்ரூபமாக வரைந்துள்ள ஒரு சுவர் ஓவியத்தின் சிறு பகுதியே இது. பாராளுமன்றத்தின் மீது அடர்ந்து பரவி, தந்தையும், மகனுமாகக் காட்சியளிக்கும் படம். இருவரைச் சுற்றியும் ஒளிவெள்ளம், பிரகாசமாக உள்ளது.

முகம், மீசை, கண்ணாடி, தலைமுடி, வழுக்கை, சட்டை என்று பார்த்துப் பார்த்து வரைந்துள்ள படம்.

முரசொலி மாறனும், தயாநிதி மாறனும்


தேர்தல் சுவரொட்டிகள் - 1

Thursday, March 18, 2004

ஜெயமோகன் கேள்வி-பதில்கள்

மரத்தடி யாஹூ! குழுமத்தில் எழுத்தாளர் ஜெயமோகனிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கான ஜெயமோகனின் பதில்களும் இங்கு கிடைக்கும்.

யாருக்கு வாக்களிப்பது?

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் நிற்கப்போகும் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

தென் சென்னை: T.R.பாலு (திமுக), பாதர் சையீது (அஇஅதிமுக)

தென் சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் பாலு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவது சென்னை SIET அறக்கட்டளையினை நடத்தும் பாதர் சையீது என்னும் பெண்மணி. இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நண்பர் என்று அறியப்படுகிறார். ஜெயலலிதா இவரை சமீபத்தில் வக்ஃப் வாரியத் தலைமைப் பதவிக்கு நியமித்துள்ளார். தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி அரசியலில் ஆர்வம், ஈடுபாடு என்னவென்று தெரியவில்லை. அரசியலுக்குக் கற்றுக்குட்டி என்பது மற்ற அஇஅதிமுக அமைச்சர்கள் இவருக்கு எப்படி 'கைகூப்பி' பொதுமக்களைக் கும்பிடுவது என்றி வெளிப்படையாக சொல்லிக் கொடுப்பதிலிருந்தே தெரிகிறது. ஆனால் 'கும்பிடு' போடத் தெரிந்தவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லையே? முன்னாள் அமைச்சர் பாலு மீது எந்த ஊழல் வழக்கோ, வேறு எந்த குற்றச்சாட்டுகளோ எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் இவர் அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் என்றால் எப்பொழுதெல்லாம் ஜெயலலிதா கட்டிடத்தை இடிப்பேன், யானையைக் குத்துவேன் என்று வரும்போதெல்லாம், ஆபத்தில் மாட்டியுள்ளவர்களைக் காப்பாற்ற முயன்றதே.

பாதர் சையீதுக்கு தமிழ் பேசத் தடுமாற்றம் என்று தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டார்.

பாலுவை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை.

மத்திய சென்னை: தயாநிதி மாறன் (திமுக), N.பாலகங்கா (அஇஅதிமுக)

மத்திய சென்னை நான் வசிக்கும் தொகுதி. இங்கு மறைந்த அமைச்சர் முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி நிற்கிறார். எதிர்த்துப் போட்டியிடுபவர் அஇஅதிமுகவின் பாலகங்கா. இவர் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர். அந்தத் தேர்தலில் மிக மோசமான முறையில் இரு தரப்பிலிருந்தும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, வாக்காளர்களை பயமுறுத்துவது, கள்ள வாக்குகள் என்று அசிங்கங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து நிகழ்ந்தது. பாலகங்கா மிகக் கடுமையாக "உழைத்ததால்" ஜெயலலிதா அவருக்குப் பரிசாக குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியை வழங்கினார்.

இப்பொழுது தயாநிதி மாறனை எதிர்த்து மாறன் குடும்பத்திடமிருந்து மத்திய சென்னைத் தொகுதியைக் கைப்பற்ற வேண்டிய பொறுப்பு பாலகங்காவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

தயாநிதி மாறன் தேர்தலுக்குப் புதியவர். இவரை சில வருடங்களுக்கு முன்னர் குங்குமம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளேன். தொழில்முறையில் பெயரெல்லாம் இவரது அண்ணன் 'சன் டிவி' கலாநிதி மாறனுக்கே போகிறது. சுமங்கலி கேபிள் விஷன், குங்குமம் இதழ் ஆகியவற்றை இவர்தான் நடத்துகிறார் என்று கேள்வி.

இந்தத் தேர்தலில் என் வாக்கு தயாநிதி மாறனுக்கே.

வட சென்னை: C.குப்புசாமி (திமுக), சுகுமாரன் நம்பியார் (பாஜக)

78 வயதாகும் குப்புசாமி மீண்டும் இதே தொகுதியில் திமுக சார்பில் நிற்கிறார். குப்புசாமி தொழிற்சங்கங்களில் ஈடுபட்டவர். எதிர்த்துப் போட்டியிடுபவர் பாஜகவின் சுகுமாரன் நம்பியார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர். திரைப்பட நடிகர் M.N.நம்பியாரின் மகன்.

இருவர் பெயரிலும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.

இளைஞர் சுகுமாரன் நம்பியாருக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று தோன்றுகிறது.

Wednesday, March 17, 2004

வெறுங்கனவா?

அண்மையில் படித்ததில் மிக அருமையான கவிதை சுந்தரவடிவேலின் "வெறுங்கனவா".

ஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2


R வெள்ளிங்கிரி
R.வெள்ளிங்கிரி, முன்னாள் DSP, CBI. ஊ.எ.இ கோவை கிளையில் உள்ளவர். இவர் தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றி விட்டு, பின்னர் மத்திய அரசுப் பணியில் இருந்து, கடைசியாக CBI புலனாய்வுத் துறையில் DSP ஆக இருந்து ஓய்வு பெற்றவர். கடைசியாகப் பணியாற்றியது ஹர்ஷத் மேஹ்தா பங்கு ஊழல் விவகாரத்தில்.

கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கினார்.

* கோவையைச் சுற்றியுள்ள பள்ளிகளில், கல்லூரிகளில் ஊழல் எதிர்ப்பை விளக்கி, அங்குள்ள மாணவர்களை ஊழலுக்குத் துணைபோக மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வைப்பது.
* அரசு அலுவலகங்களில் ஊழல் நடப்பது தெரிய வந்தால், ஊழல் கண்காணிப்புத் துறையின் உதவியோடு 'trap' அமைப்பது.
* புகார்க் கடிதங்கள் எழுதுவது
* எவ்வாறு இப்பொழுதுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் பலனற்றது என்பதை விளக்கினார். இப்பொழுதுள்ள சட்டங்களால் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும்போது மட்டும்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தனியார் [அதாவது இடையில் வரும் தரகர்கள்...] மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதாம்.
* மேலும் லஞ்ச ஒழிப்பு, மற்றும் கண்காணிப்புத் துறை (vigilance and anti-corrpution department) யாரையாவது லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிக்க நினைத்தால் அதற்கான "லஞ்சப் பணத்தை' தயார் செய்ய முடியாதாம். இப்பொழுது எதாவது அரசு அலுவலகத்தில் என்னிடம் யாராவது லஞ்சம் கேட்டால், நானேதான் அந்த லஞ்சப் பணத்தைத் தயார் செய்து, பின் கண்காணிப்புத் துறையின் உதவியோடு லஞ்சம் கொடுக்கும்போது லஞ்சம் வாங்குபவரைப் பிடிக்க முடியும். அப்பொழுதும் நான் கொடுத்த 'லஞ்சப் பணம்' அரசினால் கைப்பற்றப் பட்டு, வழக்கெல்லாம் முடிந்து அந்தப் பணம் எனக்கு மீண்டும் வந்து சேர பல மாதங்கள் ஆகும். இப்படி இருக்கையில் அனைவரும் பேசாமல் அந்தப் பணத்தை லஞ்சமாகக் கொடுத்து தன் வேலையையாவது செய்து கொண்டு போவோமே என்றுதான் பார்ப்பர்.


M வள்ளுவன்
விருத்தாசலம் கிளையின் தலைவரும், விருத்தாசலம் நகரமன்றத் தலைவருமான Dr.M.வள்ளுவன் அடுத்து பேசினார். இவரது கதை வித்தியாசமானது. வெங்கடசுப்ரமணியனும் வள்ளுவனைப் பற்றி தன் பேச்சில் சொல்லியிருந்தார். வள்ளுவன் நகரமன்றத் தலைவரானதும் வீடுகளுக்குத் தண்ணீர் தருவதில் உள்ள ஊழலை எதிர்த்து, தண்ணீர் வழங்குதல் மற்றும் பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த நகரமன்றம் மூலம் பல மசோதாக்களை நிறைவேற்றினாராம். ஆனால் நகரமன்ற கமிஷனர் (தமிழக அரசால் வேலைக்கு அமர்த்தப்படும் செயலாளுநர் பதவி) மற்றும் நகரமன்ற ஊழியர்கள் இந்தக் கட்டளைகளை [சட்டத்துக்குப் புறம்பாக] செயல்படுத்தவில்லை. இதனால் வள்ளுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில், நகரமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிகழ்த்த வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாராம்.

இம்மாதிரி நகரமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை, செயலாளுநர்கள் செயல்படுத்த மறுத்து, நீதிமன்றம் வரை செல்வது முதல் தடவை. இதுபோல் பல பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகரமன்றங்கள் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், தலைவர்கள், உறுப்பினர்கள் நிறைவேற்றும் விஷயங்கள் கூட மாநில அரசினால் நியமிக்கப்பட்ட செயலாளுனர்களது ஊழலினால் செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். இவை தெரியாமல் நாமும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையே குற்றம் சொல்கிறோம். இந்த நிலைமை மாறும் வரையில் 'பஞ்சாயத் ராஜ்' திட்டமெல்லாம் பகல் கனவுதான்.


N சிவப்பிரகாசம்
அடுத்து நாமக்கல் கிளையின் N.சிவப்பிரகாசம் பேசினார். ஊழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி இவர் சொன்ன சில கருத்துகள் இதோ:

* கடிதம் எழுதுதல். ஊழல் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால், எல்லாப் பத்திரிகைகளுக்கும், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள எல்லோருக்கும் விடாது கடிதம் எழுதுவது.
* புகார் கொடுக்க அஞ்சாமை. எங்காவது தவறு நடக்கிறது என்று தெரிந்தால், அதை அப்படியே விட்டுவிடாமல் உடனடியாக புகார் கடிதம் எழுதுவது. நேரடியாகப் போய் புகார் செய்வது.
* சத்தம் போடுதல். யாராவது கையூட்டு கேட்டால் உடனடியாக குரலை உயர்த்தி "எதுக்கு காசு கேக்கறீங்க" என்று அந்த அலுவலகத்தில் உள்ள அனைவர் காதிலும் விழுமாறு பேசுதல்.
* தன் வீட்டிற்கான சேவைகள் தடைபடும்போது கலங்காதிருத்தல். தொலைபேசிச் சேவை ஊழியர் லஞ்சம் கேட்டு, கொடுக்காமல் போனதால் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதைப்பற்றி கவலைப்படாமல், புகார் செய்து, சண்டை போட்டு இணைப்பை மீண்டும் பெற வேண்டிய நிலை வரும்.

இவரும் தன் ஊரில் நடக்கும் ஊழல்களை தங்கள் இயக்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதனைப் பற்றி விளக்கிப் பேசினார்.

அடுத்து பேசியவர் வேலூர் கிளையின் சிவராஜ். இவரும் ஏதாவது புகார் என்றால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதம் போடுவதிலிருந்து (அப்துல் கலாம் வரை கடிதம் செல்லுமாம்!) கடிதத்தில் விளக்கமாக எந்தெந்தக் குற்றவியல் சட்டங்கள், அரசு நடத்தை விதிகள் ஆகியவை மீறப்பட்டுள்ளன, அதற்கு என்னென்ன தண்டனைகள் உண்டு என்றும் எழுதுவதாகவும் சொன்ன்னார். இவர் ஓய்வுபெற்ற தாசில்தார்.

உள்ளூரில் நடக்கும் ஊழல் புகார்கள் எல்லாவற்றிலும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும் இணைத்துக் கொள்வதன்மூலம் வழக்கைத் தீவிரப்படுத்தவும், விசாரணையைத் துரிதப்படுத்தவும் முடிகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நேரடி ஆசாமிக்கு வழக்கை முன்கொண்டுசெல்வது முடிவதில்லையென்றாலும், தங்கள் இயக்கத்தால் அதனை சமாளிக்கமுடிகிறதென்றும் சொன்னார்.

வேலூரைச் சுற்றியுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊழல் பற்றி, ஊழலைத் தடுப்பது பற்றியெல்லாம் விளக்கப்பட்டறை நடத்துவதாகவும் சொன்னார்.

இந்த இயக்கத்தில் சேர்ந்து உங்கள் ஊர்களில் ஊழலைக் குறைக்க, அறவே ஒழிக்க விரும்பினால் நீங்கள் அணுக வேண்டிய முகவரி

ஊழல் எதிர்ப்பு இயக்கம்
பதிவு எண்: 349/2001
7, காவேரி தெரு
காந்தி நகர், சாலி கிராமம்
சென்னை 600 093
தொ.எண்: 044-2362-1331
மின்னஞ்சல்: smarasu@hotmail.com

உறுப்பினராக, ஆண்டுக் கட்டணம்: ரூ. 100. நன்கொடையும் கொடுக்கலாம். வெறும் உறுப்பினர்களை விட இந்த இயக்கத்தின் கிளைகளை ஆரம்பிக்க தமிழகமெங்கும் ஆர்வலர்கள் தேவை. உறுப்பினர்களுக்கு 'நேர்மை நெறி' என்னும் மாத இதழும் அஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1

14 மார்ச் 2004, ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஊழல் எதிர்ப்பு இயக்கம்' (Anti Corruption Movement) என்னும் அமைப்பின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இந்த அமைப்பு 2001ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, இன்று 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழகமெங்கும் இயங்கி வருகிறது. இதுவரை 12 நகரங்களில் இந்த அமைப்பிற்குக் கிளைகள் உள்ளன.


CS குப்புராஜ்
இந்த இயக்கத்தின் நோக்கம் தமிழகத்தில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ, அதனை எதிர்ப்பது; விழிப்புடன் இருப்பது; விசாரிப்பது; வெளியிடுவது ஆகும்.

இந்த இயக்கத்தின் தலைவர் 80 வயதாகும் C.S.குப்புராஜ் என்பவர். பொதுச்செயலர் S.M.அரசு. சென்னைக் கிளை (தலைமை நிலையம்) செயலர் வீரப்பன் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் தலைவரின் உரையுன், பொதுச்செயலர் உரையும் தொடர்ந்தது.


SM அரசு
குப்புராஜ் பேச்சிலிருந்து:

* 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற நினைப்பு தேர்தல் சமயத்தில்தான் தோன்றுகிறது
* எல்லோரும் வாக்களிக்க வேண்டும் (படித்த, மேல்தட்டு, நடுத்தர மக்கள் முக்கியமாக)
* இப்பொழுது தேர்தலில் நிற்பவர்களைப் பார்க்கையில் 'யாருக்குமே ஓட்டு போடக்கூடாது' என்று தோன்றுகிறது. "இந்த அயோக்கியன் இல்லை என்றால், இன்னொரு அயோக்கியன்..."
* உந்துநர் அறக்கட்டளை வெங்கடசுப்ரமணியன் சொல்வதைப்போல 49ஓ பிரிவின்படி வாக்குச் சாவடிக்காவது சென்று பெயரைப் பதிவு செய்து கொண்டு, யாருக்கும் வாக்க்களிக்காமல் வரலாம்.
* தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்திருந்த போது அவரை இயக்கத்தின் சார்பில் சென்று சந்தித்து, 'வாக்கு யாருக்கும் இல்லை' என்னும் பொத்தானையும் வாக்கு இயந்திரத்தில் சேர்க்கச் சொல்லி மனு கொடுத்துள்ளோம்.
* இந்த நாட்டில் ஊழலை ஒழிப்பது கடினம். இதுவரை அரசுத்துறையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கும்போதுதான் ஊழல் நுழைகிறது என்று நினைத்தோம். இப்பொழுது திட்டம் தொடங்குமுன்னரே ஊழல் ஆரம்பித்து விடுகிறது. எடுத்துக்காட்டு: 'நதிகள் இணைப்புத் திட்டம்'. இதன் மொத்தச் செலவு ரூ. 5,60,000 கோடி என்று சொல்கிறார்கள். எனக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி இந்தத் திட்டத்தில் ஊழல் ஏற்கனவே நுழைந்து விட்டது என்று தெரிகிறது.

அடுத்து பேசிய அரசு, ஆண்டறிக்கையை வாசித்தார். பின்னர் பொருளாளர் அழகிய கிருஷ்ணன், நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கிளையின் பொறுப்பாளர்களும் தங்கள் கிளைகள் என்னென்ன செயல்களில் ஈடுபடுகின்றன என்பதைப் பற்றிப் பேசினர்.

அதில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

Tuesday, March 16, 2004

இணையத்தில் பங்குகளை விற்க/வாங்க

பங்குச்சந்தை பற்றி நான் எழுத ஆரம்பிக்க, ஐகாரஸ் பிரகாஷ், அதைத் தொடர்கிறார். Geogit என்னும் பங்குத்தரகர் அலுவலகத்தில் வேலை செய்தவர். அதனால் அதிகமான உருப்படியான விஷயங்கள் அவரிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கலாம்.

நான் பங்குச்சந்தையை மிகவும் மேலோட்டமாக அணுகுபவன். இணைய வியாபார வசதி வரும்வரை எந்தத் தரகரையும் அணுகவில்லை. என் பணத்தை நானே வீணடித்து, அதன்மூலம் பங்குச்சந்தையின் செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அதனால் சிறு அளவே பங்குகளை வாங்குவதில் செலவிடுவது என்ற உறுதியில் இருந்தேன், இருக்கிறேன்.

நான் ICICI வங்கியில் கணக்கு துவங்கியதும், அதே வங்கியின் பங்குத்தரகு நிறுவனமான ICICIdirect இல் demat கணக்கும் துவங்கினேன். என் வங்கிக் கணக்கையும், demat கணக்கையும் இணைத்து இணையம் வழியாகவே பங்குச்சந்தையின் வியாபாரம் செய்ய ICICIdirect உதவி புரிகிறது. ICICIdirect தவிர HDFC Bank, மற்ற பல தனியார் இணைய நிறுவனங்கள் இதே சேவையினைத் தருகின்றன. ஆனால் நான் மற்றவற்றினைப் பார்க்காத காரணத்தால், அவற்றைப் பற்றி சொல்லப் போவதில்லை.

ICICIdirectஇன் வழியாக demat பங்குகளை மட்டும்தான் வாங்க முடியும். இணையவழி பங்குவியாபாரத்தில் எங்கிருந்தாலும் demat பங்குகளை மட்டுமே வாங்க/விற்க முடியும். பழங்காலத்தில் நீங்கள் ஒரு கம்பெனியின் பங்குகளை, அந்த கம்பெனியின் நேரடி Public Offerகள் மூலம் பெற்றாலோ, அல்லது பிறரிடமிருந்து வாங்கினாலோ, அந்தப் பங்குகளை ஒரு தாளில், உங்கள் பெயர் பொறித்து சான்றிதழாக உங்களுக்கு அனுப்பினார்கள். உங்கள் பங்குகளை நீங்கள் பிறருக்கு விற்கும்போது உங்களிடமிருந்த சான்றிதழை ஏகப்பட்ட அத்தாட்சியுடன் நீங்கள் அஞ்சலில் அனுப்பி, அடுத்தவர் அதைப் பெற்றபின் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். அதிவேகமாக மாறும் பங்குச்சந்தை உலகில், இந்த சான்றிதழ் கிடைக்காதவரை மேற்கொண்டு விற்பதில் சிரமம் இருக்கும். அஞ்சலில் சான்றிதழ் காணாமல் போனால் அதைத் திரும்பப் பெற சண்டை போட வேண்டியிருக்கும். வருடாந்திர டிவிடெண்ட், ஊக்கப் பங்குகள் இவற்றைப் பெறுவதில் நிறையக் குழப்பங்கள் இருக்கும். ஆனால் டிமாட் செய்யும்போது குழப்பங்கள் மிகவும் குறையும். செலவு குறையும். வாங்கி விற்கையில் வேகமாகச் செய்யலாம். Dematerialisation பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள இங்கு செல்லவும்.

இன்று நடக்கும் பல Public Offer களிலும் (ONGC சேர்த்து), டிமாட் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

ICICIdirect மூலமாக என்னென்ன செய்யலாம்?
* மிகச் சுலபமாக பங்குகளை இணையம் மூலமாக வாங்கலாம், விற்கலாம்.
* பங்குகளை வாங்கும்போது உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். விற்ற பங்குகளுக்கான தொகை பங்குச்சந்தையிலிருந்து உங்கள் வங்கிக்கணக்கில் போய் விழுந்துவிடும்.
* அனைத்து மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளையும் ICICIdirect மூலம் வாங்கலாம், விற்கலாம்.
* IPO, PO அனைத்திலும், தெருவுக்குத் தெரு அலைந்து விண்ணப்பப் படிவங்களைத் தேடாமல், வங்கிக்குப் போய் வரைவுக் காசோலை வாங்காமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஒரே கிளிக் மூலம் பங்கு பெறலாம்.
* IPO/PO வில் நீங்கள் அதிகமாகக் கட்டிய பணத்தை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே திரும்ப அனுப்புமாறு செய்யலாம்.
* உங்கள் பங்குகளுக்கான dividendஐ நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே வருமாறு செய்யலாம். [அதாவது அவர்கள் தாளில் காசோலை அனுப்பி, அதை நீங்கள் வங்கிக்குக் கொண்டுபோய் போட்டு என்றெல்லாம் தேவையில்லை. Electronic clearing மூலம் நேரடியாகச் செய்ய முடியும்.]
* உங்களிடம் ஏற்கனவே சான்றிதழாக இருக்கும் பங்குகளை டிமாட் செய்து அதனையும் உங்கள் ICICIdirect டிமாட் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.
* Futures & options ஆகிய இன்றைய புதுமைகளிலும் பங்கேற்கலாம்.
* அரசின் பாண்டுப் பத்திரங்களை வாங்கலாம், விற்கலாம்.
ஆக உங்கள் இணையம் உள்ள கணினியில் பங்குச்சந்தையே அடங்கிவிடும்.

அதைத்தவிர இணையத்தில் வழியாக நிறுவனங்களின் முழு காலாண்டுப் பொது அறிக்கை, ஆண்டிறுதி அறிக்கை ஆகியவற்றை PDF கோப்புகளாகப் பெறலாம், அந்த நிறுவனத்தின் செய்கைகளை மிகவும் நுணுகி ஆராய்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதைத் தீர்மானிக்கலாம். இந்தியா முழுவதிலும் உள்ள பங்கு வியாபாரம் செய்யும் சிறு முதலீட்டாளர்களோடு இணையம் வழியாகப் பேசி தகவல்களைப் பரிமாரிக்கொள்ளலாம்.

இப்படி எத்தனை எத்தனையோ நன்மைகள் இணையம் வழியாகப் பங்கு வியாபாரத்தில் ஈடுபடுவதில்.

Monday, March 15, 2004

சேந்நஈ, தாமீல நாடூ

நான் 'சேந்நஈ' என்னும் நகரில் வசிக்கிறேன். இந்த நகரம் 'தாமீல நாடூ' என்னும் மாநிலத்தில் உள்ளது. இங்கு பேசப்படும் மொழி 'தமில'.

சேந்நஈ


இது மட்டுமல்ல. என் நாட்டில் (இந்தியாவில்) இருக்கும் மற்ற சில நகரங்கள், மாநிலங்கள், பேசப்படும் மொழிகள் இவை.

நகரம்மாநிலம்மொழி
1ஹைதராபாதஆந்த்ர ப்ரதேஷதேலகு
2படநாபிஹாரஹிந்தீ
3சந்தீகடசந்தீகடபஞ்ஜாபீ
4தில்லீதில்லீஅங்க்ரேஜீ
5அஹமதாபாதகுஜராதகுஜராதீ
6குடகாவஹரயாநாஹிந்தீ
7பைங்கலௌரகர்நாடககந்நட
8திருவநந்தபுரம்கேரலமலயாலம்
9போபாலமத்ய ப்ரதேஷஹிந்தீ
10மும்பஈமஹாராஷ்ட்ராமராடீ
11புவநேஷ்வரஓரிஸாஉடயா
12அம்ரிதஸரபஞ்ஜாபபஞ்ஜாபீ
13ஜயபுரராஜஸ்தாநஹிந்தீ
14சேந்நஈதாமீல நாடூதமில
15லகநஊஉத்தர ப்ரதேஷஹிந்தீ
16கோலகத்தாபஷ்சிம பங்காலபங்கலா


தேர்தல் கமிஷனுக்காக இணையத்தளம் அமைக்கும் CMC என்ன மென்பொருளைப் பயன்படுத்துகிறதோ... தெரியவில்லை. கன்னா-பின்னாவென்று transliterate செய்து இப்படி வாரிவழங்கியுள்ளது.

ஆனாலும் நல்ல தளம். இங்கு சென்று [IE யில் மட்டும்தான் வேலை செய்யும்] ஏதோ இயங்கு எழுத்துரு மூலமாக, என் பெயரும், மனைவியின் பெயரும் சரியான தொகுதிக்கு எதிராக உள்ளதா என்பதை ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கம்

TamilNadu Investors Association என்னும் தமிழக [சிறு] முதலீட்டாளர்கள் சங்கம் AJ-97, 9வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை 600 040, தொ.எண்: 2628 3094, என்னும் முகவரியிலிருந்து இயங்கி வருகிறது. பங்குச்சந்தையில் [NSE/BSE] பங்குகளை வாங்கி, விற்கும் சிறு முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்து நடத்தும் சங்கம் இது. SEBI எனப்படும் பங்குச் சந்தைகளை மேற்பார்வை செய்யும் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இது.

ஒவ்வொரு வாரமும் முதல், மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் 2, கில்டு தெரு, தி.நகரில் இந்தச் சங்கத்தின் கூட்டம் கூடுகிறது.

இப்பொழுது பல நிறுவனங்களின் Public Offer [சந்தையில் புதுப் பங்குகள் பொதுமக்களுக்கென விற்பனைக்கு வருவது] வந்த வண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் பங்குகளை அரசு Ministry of Disinvestment மூலம் பங்குச்சந்தையில் விற்றது. இவற்றில் முதன்மையானது ONGC எனப்படும் நிறுவனத்தில் அரசு வைத்திருந்த பங்குகளில் 10 விழுக்காடு. இதைத்தவிர அரசு IPCL, CMC, IBP, GAIL, Dredging Corporation, Bank of Maharashtra ஆகிய நிறுவனங்களில் பங்குகளையும் public offer மூலமாக சந்தையில் விற்று, கிட்டத்தட்ட 14,000 கோடி ரூபாய்களை ஈட்டியுள்ளது. இதைத்தவிர கடந்த சில தினங்களில் Patni, Power Trading Corporation, Petronet LNG ஆகிய நிறுவனங்கள் தங்கள் Initial Public Offer (IPO) க்களை நடத்தின. தற்பொழுது Biocon எனப்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் IPO நடந்துகொண்டிருக்கிறது.

இந்த சங்கத்தின் மூலம், பங்குச்சந்தைத் துறையின் வல்லுநர்களை அழைத்து வந்து பொதுமக்கள் பங்குச்சந்தையினைப் பற்றி அறிந்து கொள்ளுமாறு சிறப்புப் பேச்சுகளை நடத்துகிறார்கள்.

உறுப்பினர் கட்டணம் வருடத்திற்கு ரூ. 100 மட்டுமே.

Sunday, March 14, 2004

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3

1. அரசியல், ஆட்சியாளர்களிடையே ஊழல் மலிந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் தலைமைச் செயலாளுநருக்கு (chief executive) அவரது கட்சியின் சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் தினசரி ஓயாது கொடுக்கும் தொல்லையே. இந்த உறுப்பினர்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பதவி போய்விடும் என்ற பயம் ஓயாது இருக்கும்போது தலைமைச் செயலாளுநர் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் செய்யும் ஊழலை சகித்துக் கொள்கிறார், அடுத்து வரவேற்கின்றார், பின்னர் அவர்களைத் தூண்டவே தொடங்குகிறார். [tolerate, encourage, demand]. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் உள்ளவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இங்கு கட்சித் தலைவர்கள் கையில் பிரம்மாண்டமான அதிகாரம் உள்ளது போல் தோன்றுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் நிலைமையே வேறு.

தலைமைச் செயலாளுநர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்துமாறு செய்யலாம். இதனால் ஊழல் குறைய நிச்சயம் வாய்ப்புள்ளது.

2. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதை விட கட்சியைத் தேர்வு செய்யலாம். அதாவது ஒருசில கட்சிகள் தங்கள் பெயர்களை முன்வைக்க, வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்தமான கட்சிக்கு வாக்களிக்க, அதிக வாக்குகள் பெற்று வென்ற கட்சி, தங்கள் கொள்கைகளை நடத்தக்கூடிய நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் ஆட்சி புரியலாம்.

ஒரு ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் கிட்டத்தட்ட (ஒரு முறைக்கான மத்திய, மாநில தேர்தல்கள் அனைத்திற்கும் சேர்த்து என்று நினைக்கிறேன்) ரூ. 70,000 கோடிகள் செலவு செய்கின்றனர் என்று கணித்துள்ளது. இந்தச் செலவு தேர்தல்களை வெல்லவும், வென்றபின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும் சேர்த்து...

3. அரசியல் கட்சிகள் "வெற்றிவாய்ப்புள்ளவரை" மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்வு செய்கின்றனர் என்னும்போது, நாம் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் விதமாக 'எங்களுக்குத் தேவை நல்ல வேட்பாளரே' என்று அரசியல் கட்சிகளிடம் கேட்கிறோமா? இல்லையே?

பலர் வாக்களிக்கப் போவதேயில்லை. ஒரு கிராமத்திலிருந்து பெருநகரம் செல்லும்போது வாக்களிப்பவர் எண்ணிக்கை [மொத்த வாக்களிக்கக் கூடியவர்களின் விழுக்காடாகப் பார்க்கையில்] வெகுவாகக் குறைகிறது.
* கிராமப் பஞ்சாயத்து - 75% வாக்களிப்பு
* ஊராட்சி ஒன்றியம் - 65% வாக்களிப்பு
* சிறு நகரமன்றம் - 55% வாக்களிப்பு
* மதுரை/கோவை மாநகராட்சி - 45% வாக்களிப்பு
* சென்னை மாநகராட்சி - 35% வாக்களிப்பு
2001 சட்டமன்றத் தேர்தலில் அடையாறு முழுவதிலுமான வாக்களிப்பு 27%, திருவான்மியூர் 25%, கீழ்ப்பாக்கம் 20% மட்டுமே! படித்தவர்கள், நடுத்தர/மேல்தட்டு மக்கள் எதையோ காரணம் காட்டி வாக்களிக்கப் போகாதிருக்கின்றனர்.

கேட்டால், 'எல்லாருமே அயோக்கியர்கள், யாருக்கு ஓட்டளித்து என்ன ஆகப்போகிறது' என்று கோணையாகப் பேசுகின்றனர். அப்படித் தோன்றினால் வாக்குச்சாவடிக்குப் போகாதிருந்து பிரயோசனமில்லை. வேறு யாராவது கள்ள ஓட்டு போட வாய்ப்பு உள்ளது. அதனால் தெர்தல் நடைமுறை விதிகள் 1961, 49 ஓ பிரிவின்படியாவது நடந்து கொள்ளலாம்.
"49 ஓ - வாக்களிப்பதில்லை என வாக்காளர் முடிவு செய்வது - ஒரு வாக்காளர் படிவம் 17 A யில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாகப் பதிவு செய்யப்பட்டு அவரும் தமது கையெழுத்தையோ பெரு விரல் ரேகையையோ விதி 49 L1 படி வைத்த பிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17 Aயில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்தக் குறிப்புக்கு எதிரே பெற வேண்டும்." [மேற்கோள் தீம்தரிகிட மார்ச் இதழிலிருந்து]
இவ்வாறு செய்கையில் ஒரு தொகுதியில் மொத்தம் வாக்களிக்க வந்தது எத்தனை பேர், அதில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க மறுத்தது எத்தனை பேர் என்பது அரசியல் கட்சிகளுக்குப் புலப்படும். இதன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் மீது நமக்கு அதிருப்தி உள்ளது என்பதை கட்சிகளுக்குப் புரிய வைக்கலாம். [மார்ச் தீம்தரிகிட தலையங்கத்தில், ஞாநி சங்கரன் இதைத்தான் தான் செய்யப்போவதாகச் சொல்கிறார். இன்று - அதாவது 14 மார்ச் 2004இல் - நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்திலும், யாருக்கும் வாக்களிக்கத் தோன்றவில்லையானால் இந்த 49 ஓ பிரிவின்படியாவது நடக்க வேண்டும் என்று பேசினர். இந்தக் கூட்டம் பற்றி நாளை எழுதுகிறேன்.]

4. தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களெல்லாம் சொள்ளை என்று குற்றம் பேசாமல், நாமே தேர்தலில் நிற்பது. 'தேர்தல் என்றால் நிறைய செலவாகும், பொறுக்கிகள் மட்டும்தான் அரசியலுக்கு வருவர்' என்று கோணை பேசாமல், கீழ்மட்டத் தேர்தலில் நிற்கலாமே? அதாவது பஞ்சாயத்துத் தேர்தல், மாநகராட்சி உறுப்பினர் தேர்தல் ஆகியவை எல்லாம் கட்சி முறைப்படித்தான் தேர்தல் என்றில்லையே? அங்கு தொடங்கினால் ஒரு தேர்தலில் நிற்பது பற்றி முழுவதும் கற்க முடியுமே?

வெங்கடசுப்ரமணியன், பேச்சை முடிக்கும்போது ஜேம்ஸ் மாடிசன் மேற்கோள் காட்டினார்: (1778இல் சொன்னது)
"But I go on this great republican principle, that the people will have virtue and intelligence to select men of virtue and wisdom. Is there no virtue among us? If there be not, we are in a wretched situation."

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2

எட்மண்ட் பர்க், மோகன்தாஸ் காந்தி, AN சிவராமன்

சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இதற்கு மூன்று மேற்கோள்களைக் காட்டினார்.

முதலாவது, எட்மண்ட் பர்க், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரிஸ்டல் என்னும் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். அவரது தொகுதியின் வாக்காளர்கள் பர்க் தனது தொகுதிக்காக என்று ஒன்றும் செய்யவில்லை என்று குறை கூற, பதிலாக பர்க் இவ்வாறு கூறினாராம்:

"ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிக்கு, தன் தொகுதி மக்களுக்கு வெகு அருகாமையிலும், அவர்களோடு நெருக்கமாக தொடர்பு வைத்திருப்பதிலும்தான் மகிழ்ச்சியும், பெருமையும் உள்ளது. ஒரு பிரதிநிதிக்கு, தொகுதி மக்களின் விருப்பங்கள் மீது அதிக அழுத்தமும், அவர்களது கருத்துகள் மீது அதிக மரியாதையும், அவர்களது தேவைகளின் மீது அதிக கவனமும் இருக்க வேண்டும். தனது ஓய்வு, கேளிக்கை, திருப்தி ஆகியவற்றை, தன் தொகுதி மக்களுக்காக தியாகம் செய்வதும், தன் தொகுதி மக்களின் தேவைகளைத் தனது தேவைக்கு மேலாகக் கருதுவதும் ஒரு பிரதிநிதியின் கடமை. ஆயினும், அந்த பிரதிநிதி, தனது நடுநிலையான கருத்துகளை, முதிர்ந்த தீர்ப்புகளை, தெளிந்த மனசாட்சியினை உங்களுக்காகவோ, எந்தவொரு மனிதனுக்காகவோ, எந்த மக்களுக்காவுமோ பலிகொடுக்கக் கூடாது. இவற்றை ஒரு பிரதிநிதி உங்களது அத்தாட்சியினால் பெறவில்லை; நீதி, அரசியல் நிர்ணயச் சட்டம் அகியவற்றால் கூடப் பெறவில்லை. கடவுளிடமிருந்து பெறுகிறான் - அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் கடவுளிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உங்கள் பிரதிநிதி உங்களுக்குத் தன் உழைப்பை மட்டும் கொடுப்பதில்லை, தன் அறிவுரைகளையும்தான். உங்கள் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதற்காக அந்த அறிவுரைகளைக் காற்றில் பறக்கவிட்டால் அவன் உங்களுக்கு எந்த விதத்திலும் சேவை செய்வதில்லை, உங்களையே கைவிடுகிறான்."
[என் தமிழாக்கம். ஆங்கிலத்தில் மேற்கண்ட சுட்டியில் 4.1.22 க்கு செல்லவும்]

இது நடந்தது 1774இல். இப்படியெல்லாம் பேசியபின், அடுத்த 1780 தேர்தலில், பர்க் தோல்வியடைந்தார்.

இரண்டாவதாக 1920இல் மோகன்தாஸ் காந்தி "Young India" இதழில் எழுதிய தலையங்கத்திலிருந்து. [தலையங்கம் இணையத்தில் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை.] "தேர்தலின் போது 'நற்குணங்கள்' பொருந்தியவர்களாகப் (men of character) பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அதன்பிறகு அப்படிப்பட்டவர்கள் தாங்களாகவே ஒரு நல்ல ஆட்சியைத் தருவார்கள்."

மூன்றாவதாக தினமணியின் ஆசிரியராக 1944இலிருந்து 1987வரை பணியாற்றிய AN சிவராமன் 1984இல் தினமணியில் எழுதிய கட்டுரை - 'யாருக்கு ஓட்டுப்போடுவது?'.

முதலில் சிவராமன் எழுப்பும் கேள்வி: யாருக்கு ஓட்டுப்போடுவது?

பதில்: நல்லவருக்கு.

கேள்வி: யார் நல்லவர்?

பதில்: தன்னை அரசியல் தரகராக எண்ணாமல், தன் பதவியின் மூலம் தனக்கோ, தன் உறவினர்களுக்கோ வசதிகளைப் பெருக்கிக்கொள்ளாமல் இருப்பவர். பொதுமக்கள் நன்மையையே முன்னிலையில் வைத்திருப்பவர். சாதி, மதம் ஆகியவைகளை முன்னிறுத்தி குழப்பங்களை விளைவிக்காதிருப்பவர். பொருளாதாரம் பற்றித் தெரிந்திருக்காவிட்டாலும், தேர்தலில் வென்றபின்னராவது கற்றறிந்து கொள்பவர் - இவரே நல்லவர்.

இப்படிப்பட்ட நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்.

இந்த மூன்று மேற்கோள்களையும் காட்டிய பின்னர், வெங்கடசுப்ரமணியன் நமக்கிருக்கும் முக்கியமான பிரச்சினையை முன்வைத்தார். ஒரு அரசியல் கட்சி நல்லவர்களுக்குத் தேர்தலில் நிற்க வசதி செய்தால்தானே, நாம் இருக்கும் வேட்பாளர்களில் மிக நல்லவரைத் தேர்ந்தெடுப்பது? ஆனால் இன்றைய தேதியில் அரசியல் கட்சிகள் 'வெற்றிவாய்ப்பு' யாருக்கு அதிகமாக இருக்கிறதோ, அவர்களைத்தான் தேர்தலில் நிற்கவைப்பேன் என்கின்றன. 'வெற்றிவாய்ப்புள்ளவர்' யார்? இன்றைய தேதியில் யாருக்கு பணபலமும், ஆள்பலமும் (ஆள்பலம் என்றால் அடிதடி பலம்) இருக்கிறதோ, அவர்தான் வெற்றிவாய்ப்புள்ளவர் என்றாகி விட்டது. அதுவும் ஒரு அரசியல் கட்சி, தமிழகத் தேர்தலில் தன் சார்பில் நிற்க ரூ. 60 லட்சம் கட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. (திமுக)

இப்படி இருக்கையில் நம்மால் என்ன செய்ய முடியும்? இதைப் பற்றி அடுத்த பதிவில்.

Saturday, March 13, 2004

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரத்தை எப்படி உயர்த்துவது?

BS ராகவன்
BS ராகவன்
7 மார்ச் 2004, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.45 மணிக்கு சென்னை, மைலாப்பூர் YMIA கட்டிடத்தில் அ.கி.வெங்கடசுப்ரமணியன் "Raising the quality of MPs and MLAs" என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சியை நடத்தியது "Rajaji Centre for Public Affairs" என்னும் அமைப்பாகும். [இந்த அமைப்பைப் பற்றிய மேலதிக விவரங்கள் என்னிடம் இல்லை.]

அ.கி.வெங்கடசுப்ரமணியன் இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவர். தற்போது Voters Awareness Campaign (வாக்காளர் விழிப்புணர்வு) என்னும் அமைப்பை நடத்தி வருகிறார்.

B.S.ராகவன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, வெங்கடசுப்ரமணியனை கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தினார். B.S.ராகவனும் இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்தவர்.

சுவற்றில் காரை உதிர்ந்திருந்த அந்தச் சிறிய அறையில், கிட்டத்தட்ட 60-70 பேர்கள் குழுமியிருந்தனர். வந்திருந்தவர்களில் 7-8 பேர்கள்தான் இளைஞர்கள் என்பது வருத்தத்தைத் தரக்கூடியது. [என்னையும், கூட வந்த சத்யாவையும், முப்பதைத் தாண்டியிருந்தாலும் இளைஞர்கள் வரிசையில் சேர்த்துக்கொள்கிறேன்.] மீதியில் பாதியாவது அறுபதைத் தொட்டவர்கள். மற்றவர்கள் நாற்பதுக்கும் மேல். வந்தவர்கள் அனைவரும் ஆண்கள். இது இன்னமும் வருத்தத்தைத் தரக்கூடியது. இத்தனைக்கும் 'தி ஹிந்து' மூன்றாம் பக்கம் 'நிகழ்ச்சிகள்' பத்தியில் இந்தக் கூட்டம் பற்றி எழுதியிருந்தனர்.

AK வெங்கடசுப்ரமணியன்
AK வெங்கடசுப்ரமணியன்
சரி, விஷயத்துக்கு வருவோம்.

ராகவன் தான் இதழ்களில் பார்த்த இரண்டு கார்ட்டூன்களைப் பற்றிப் பேசினார். ஒரு கார்ட்டூனில் சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது சிலர் வேகமாக ஓடிவந்து "என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க இங்க? அங்க தேர்தலுக்கு வேட்பாளர்கள தேர்வு செஞ்சுகிட்டிருக்காங்க, போங்க சீக்கிரம்..." என்று சொல்கின்றனர்.

இரண்டாவது கார்ட்டூனில் ஒரு கட்சியில் ஒரு தொகுதிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்கிறார்கள்.

தேர்வு செய்பவர்: திருடுவியா? பிக் பாக்கெட் அடிப்பியா?
மனு செய்தவர்: அய்யோ, அதெல்லாம் கெடையாதுங்க...
தே.செ: கொள்ளை அடிப்பியா?
ம.செ: அய்யோ, அதெல்லாம் கெடையாதுங்க...
தே.செ: கற்பழிப்பு? கொலை?
ம.செ: அய்யோ, என்னங்க இப்படியெல்லாம் கேக்குறீங்க? என்கிட்ட எந்தக் கெட்ட பழக்கமுமே கெடயாதே?
தே.செ: அப்ப என்ன தைரியத்துலயா வேட்பாளரா நிப்பேன்னு சொல்ற? மொத வெளில போ!"

இந்தப் பத்திரிகைகள் மிகவும் 'cynical' ஆக எழுதுகின்றன. உண்மை இவ்வளவு மோசமில்லை. மேலும் பெரியார் சொன்னது போல் "தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால், தேர்ந்தெடுத்தவன் முட்டாள்". அதனால் வெறுமனே குறை சொல்வதை விட்டுவிட்டு நாம்தான் உருப்படியாக எதையாவது செய்து நிலைமையை மாற்ற வேண்டும் என்று முடித்தார்.

வெங்கடசுப்ரமணியன் பேச்சு:

* தரத்தை உயர்த்துவது என்றால் என்ன? இப்பொழுது உள்ளவர்கள் தரங்கெட்டவர்கள் என்பதல்ல. நிறைய பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தரம் வாய்ந்தவர்களே. படித்தவர்கள், திறமைசாலிகள், நிறைய சாதித்தவர்கள் எல்லாம் உறுப்பினர்களாக உள்ளனர். ஆயினும், பலர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளும் உள்ளது; ஊழல், ஒழுங்கின்மை, செயலாற்றும் திறன் இல்லாமை ஆகிய பல குறைகளும் உள்ளன.

* தரத்தை உயர்த்துவது என்றால், ஆரம்ப கட்டத்திலேயே - அதாவது யார், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, வேட்பாளர்களாக நிற்கிறார்கள் என்பதில் தரத்தை உயர்த்துதல்., இரண்டாவது, வெற்றி பெற்ற வேட்பாளர்களது தரத்தை உயர்த்துதல்.

* தரம் என்றால் என்ன? எப்படி தரம் வாய்ந்தவர்களைக் கண்டறிவது?

* ஒரு சட்ட/பாராளுமன்ற உறுப்பினரது வேலை என்ன? சட்டம் இயற்றுவது. அரிஸ்டாட்டில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சொன்னது போல், சட்ட/பாராளுமன்றங்களின் வேலை "நம்முடைய சமூகத்தையும், அதன் செயல்களையும், நாம் அனைவரும் சேர்ந்து ஒழுங்குபடுத்துவதே." (See Aristotle's Politics)

* சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்ய வேண்டும்?
1. சட்டம் இயற்ற வேண்டும்
2. இயற்றிய சட்டங்களை அரசு அதிகாரிகளும், அரசு இயந்திரமும் நிகழ்த்துமாறு செய்ய வேண்டும்
3. அரசின் செயல்பாட்டில் குறைகள் இருப்பது தெரிய வந்தால், அதனை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் கருத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

இங்கு "legislator", "executive" இரண்டிற்கும் வித்தியாசம் காட்டுகிறோம். முதல்வர், அமைச்சர்கள் "executives". அரசு அதிகாரிகளும் "executives"தான். அமைச்சர் பதவியில்லாத தனி உறுப்பினர்களே "legislators". [அமெரிக்காவில் legislature, executives இரண்டிற்கும் நல்ல, வெளிப்படையான வேறுபாடுகள் உண்டு. ஜார்ஜ் புஷ் executive. இப்பொழுதைக்கு ஜான் கெர்ரி legislator.]

சட்டங்கள் இயற்றப்படும்போது நீண்ட கால அவகாசத்தை மனதில் வைத்து சட்டங்களை உருவாக்க வேண்டும்.

* சட்டமன்ற உறுப்பினர் என்பவர் ஒரு தரகரா (agent)? பிரதிநிதியா (delegate)? பினாமியா (proxy)? உதவியாளரா (deputy)? பாதுகாவலரா (trustee)? இந்த ஒவ்வொரு சொல்லும் வேறு பொருளைக் குறிக்கிறது.

மீதி அடுத்த பதிவில்.

முதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி

கடைசிப் பந்து வரை சென்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 349 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. விரேந்தர் சேவாக் 79 (57 பந்துகள்), ராஹுல் திராவிட் 99 (104 பந்துகள்) மிக அருமையாக விளையாடினர்.

இத்தனை ஓட்டங்கள் எடுத்திருந்தால், நிச்சயமாக ஜெயிக்க முடியும் என்றுதான் எந்த அணியும் நினைக்கும். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு எப்படிப்பட்டது என்றுதான் நமக்குத் தெரியுமே? பாகிஸ்தான் கடைசியில் 50 ஓவர்களில் 344 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்தது. கடைசிப் பந்தில் மோயின் கான் ஒரு சிக்ஸர் அடித்தால் ஜெயிக்கலாம் என்று இருக்கையில் ஆஷீஸ் நேஹ்ரா வீசிய ஃபுல்-டாஸை ஜாகீர் கான் கேட்ச் பிடிக்க, இந்தியா வெற்(று)றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு இன்ஸமாம்-உல்-ஹக் 122 (104 பந்துகள்), யூசுஃப் யௌஹானா 73 (67 பந்துகள்) அடித்து, ஒரு சமயத்தில் பாகிஸ்தானை ஜெயிக்க வைத்து விடுவார்களோ என்றிருந்தது.

இப்பொழுதைக்கு சந்தோஷப்படுவோம். நாளை நமது பந்து வீச்சைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுவோம்.

தேர்தல் பற்றி

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களது குற்றப்பட்டியல், சொத்துப் பட்டியல் மற்ற தகவல்கள் ஆகியவை வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பற்றியும், மற்ற பல உபயோகமான சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார் ஹரி - இது புதிய வலைப்பதிவு.

வேட்பாளர் ஜாதகம் உங்கள் கையில்: பகுதி ஒன்று | இரண்டு | மூன்று

போன வாரம் அ.கி.வெங்கடசுப்ரமணியனது பேச்சுக்குப் போயிருந்தேன். இந்திய ஆட்சிப் பணியில் (IAS) இருந்து ஓய்வு பெற்று, இப்பொழுது வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். அவரது பேச்சின் ஒரு சில கருத்துகளை தீம்தரிகிட இதழில் ஞாநி சங்கரன் ஏற்கனவே எழுதி விட்டார். அதன் பதிவு இந்த வாரத் திண்ணையிலும் வந்துள்ளது.

என் கட்டுரை இன்றைய இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் முடிந்தபின்னர்.

Friday, March 12, 2004

இட்லிவடை கிண்டல்

ஹாலிவுட் சினிமாப் படங்களை உல்டா பண்ணி, வரைபடங்களில் சித்துவேலை காட்டி இந்திய அரசியல்வாதிகளைக் கடாசியிருக்கும் தமாசு வலைப்பதிவு இதோ.

மிகவும் ரசித்த பதிவு இது. [ஆனால் இவரது எழுத்தில் பிழைகள் சகிக்கவில்லை.]

சோனியா காந்தி வரும் 'The Italian Job' சூப்பர்.

தென்றல் திரைப்பட விமரிசனம்

வயிறு குலுங்கச் சிரிக்குமளவிற்கு டைனோ எழுதியுள்ள இந்த விமரிசனத்தை அனைவரும் படிக்கவேண்டும்!

திண்ணை: வாசம் வீசும் தென்றல் - என் கண்களில் - டைனோ

தமிழோவியம் கிரிக்கெட் பத்தி

இந்தவாரம் என்னுடைய தமிழோவியம் கட்டுரை.

ரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை

சில நாட்களுக்கு முன் சாமியார் உமா பாரதி, மஹேஷ்வர், அமர் கண்டக், உஜ்ஜைனின் ஒருசில பகுதிகளில் இறைச்சி, மீன் விற்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்ததைப் பற்றி எழுதியிருந்தேன்.

இந்த சட்டத்தை நீதிமன்றங்கள் எப்படிப் பார்க்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.

இன்று விடை கிடைத்துள்ளது.

ரிஷிகேஷில் (உத்திரப் பிரதேசம் இம்மாதிரியான தடை ஏற்கனவே உள்ளதாம். அத்துடன் முட்டையும் விற்கக் கூடாது என்று தடை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து வழக்கு உயர் நீதிமன்றம் போய், இப்பொழுது உச்ச நீதிமன்றத்திலும் இம்மாதிரியான தடைகள் இருக்கலாம் என்று முடிவாகியுள்ளது.

கேவலமாக இருக்கிறது. மதச்சார்பில்லாத, அனைத்து மதங்களையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் மதிக்குமாறு இயற்றப்பட்டுள்ள அரசியல் நிர்ணயச் சட்டத்தைக் கட்டிக் காக்கும் உச்ச நீதிமன்றம் எப்படி இம்மாதிரியான தீர்ப்பை வழங்க முடியும் என்று குழப்பமாக உள்ளது.

ஹிந்து மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் பலரால் நாட்டின் பல நகரங்கள் புனிதத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுகிறது. அங்கெல்லாம் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் அந்த நகரங்களில், விரதம் இருக்கும் ஒருசில ஹிந்து சாதுக்களால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும்.

லிபரல் சிந்தனைகள் உடைய எல்லோரும் இந்த சட்டங்களைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

Thursday, March 11, 2004

வலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்

மாலன் நேற்று வலைப்பதிவுகள் பற்றி வெளியிட்டுள்ள கருத்துகளுக்குப் பல எதிர்வினைகள். சிலர் தங்கள் வலைப்பதிவுகளில் எதிர்வினைகளையும் வெளியிட்டுள்ளனர்.

இணையத் தொழில்நுட்பங்கள் அதிகம் தெரியாத ராகவன் எதிர்வினையை வெளியிட்டு, பின்தொடரும் சுட்டியாகவும் கொடுத்துள்ளார்! சபாஷ். இதுவரை மேலோட்டமாக மேய்ந்ததில், பரிமேலழகர், அருண் வைத்யநாதன் ஆகியோரும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். (ஆனால் பின்தொடர் சுட்டிகளைக் கொடுக்கவில்லை, கொடுத்திருந்தால் மற்றவர்கள் பின்தொடர வசதியாக இருக்கும்.)

நிச்சயம் மற்ற பலரிடம் கருத்துகளை எதிர்பார்க்கலாம்.

என் எண்ணங்கள் இங்கே:

1. வலைப்பதிவுகள், வலைப்பக்கங்கள் ஆகியவற்றுக்கான மாலனின் 'definition'கள் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. வலைப்பதிவுகளில் என்னதான் இருக்கலாம் என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை. இதற்கும், "உணவை மூக்கால் சாப்பிடுவதற்கும்" எந்த ஒப்புமையையும் காண்பிக்க முடியாது.

வலைப்பதிவுகளோ, வலைப்பக்கங்களோ, இணைய இதழ்களோ, யாஹூ! அல்லது மற்ற குழுமங்களோ, சுய வெளிப்பாட்டிற்கான சாதனங்கள் மட்டுமே. எதை வெளிப்பாடு செய்வது என்பது ஒரு தனி மனிதனின் முழு சுதந்திரம்.

மேற்சொன்ன பலவித சாதனங்களில் ஒருசில தொழில்நுட்பக் காரணங்களால் சிலவற்றை எளிதாகச் செய்ய முடிகிறது, சிலவற்றை செய்வது கடினமாகிறது.

நாளடைவில் தொழில்நுட்பம் பற்றிய ஒரு பிரஞ்ஞையே இல்லாது ஒருவர் சர்வசாதாரணமாக ஒவ்வொரு சாதனத்தையும் அதற்கான சரியான வகையில் பயன்படுத்துவார். இன்றைய தேதியில் நாம் அனைவரும் வலைப்பதிவுகளின் சாத்தியங்கள் என்னவென்று அறிந்துகொள்ள மட்டுமே முயற்சித்து வருகிறோம்.

ஆங்கில வலைப்பதிவுகள் பலவும் சாத்தியங்களை நன்கு அறிந்ததோடு மட்டுமல்லாமல், அவற்றின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டும் வருகிறார்கள்.

2. இப்பொழுது இருக்கும் தமிழ் இணையம் திருப்தி தரக்கூடியதாக இருக்கிறதா, என்றால் பதில் "இல்லை" என்றுதான் சொல்வேன். ஆனால் எப்படி திருப்தி தரக்கூடிய, தரத்தை அதிகமாக்கக் கூடிய வகையில் மாற்ற முடியும் என்பதைப் பற்றிய யோசனைகளோடுதான் இந்த விமரிசனத்தை முன்வைப்பேன்.

ராகவன் சொன்னது போல், இணைய இதழ்களும்தான் மிகக் குறைவான தரத்தில் உள்ளன. இணைய இதழ்களின் தரத்தை உயர்த்துவது எப்படி? இணைய எழுத்தாளர்கள் அதிகமாக வரவேண்டும். சரியான ஆசிரியர் பணியைச் செய்யக்கூடிய ஆட்கள் தேவை. யார் எதை எழுதி அனுப்பினாலும் அதைப் பிரசுரிக்கக் கூடாது. சப்-எடிடிங் செய்ய ஆட்கள் தேவை. எப்படி அச்சில் வரும் இதழுக்கு தாளின் தரம், பக்கங்களின் நேர்த்தி, அச்சின் தரம், விஷயத்தின் தரம், கோர்வை, நோக்கம் ஆகியவை முக்கியமோ, அப்படியே இணைய இதழுக்கும் webserver தரம், பக்க வடிவமைப்பு, பொருள் தரம், உலாவுதல் நேர்த்தி என்று பல தேவைகள் உள்ளன. எந்தவொரு தமிழ் மின்னிதழும் இந்த வகையில் பார்க்கையில், ஆங்கில மின்னிதழ்கள் பலவற்றின் தரத்திற்கு அருகில் கூட வரமாட்டேன் என்கிறது.

3. "தமிழ் வலைப்பதிவில் கோழி, வாத்து படங்கள் உள்ளன, அந்தரங்க தொனியைக் காணோம்." கோழி, வாத்து படம் காண்பிப்பதும் அந்தரங்க தொனிதான்! எனக்குப் பலமுறை தேவையற்ற படங்களைப் பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது. ஆனால் அதுபோல நான் எழுதும் பல கட்டுரைகள் படிக்கும் பலருக்கு எரிச்சலும், அலுப்பும் தரலாம் என்று நினைக்கையில் என் எரிச்சலை மூட்டை கட்டி வைத்துவிடுகிறேன்.

4. "விவாதக் குழுக்களில் வெட்டி அரட்டைகளே அதிகம்."

விவாதக் களங்கள் தொழில்நுட்பக் குறைவு காரணமாகவும், மிகக் குறைவானவர்களே பங்குபெறுவதாலும், அயர்வின்றி எழுதக்கூடிய ஆட்கள் இல்லாத காரணத்தாலும் தரம் குறைந்து காணப்பெறுகிறது. கணினிகளின் வீச்சு அதிகரிக்கும்போது நிச்சயமாக தரம் இங்கு அதிகரிக்கும்.

இப்பொழுதைக்கு, தொழில்நுட்பத்தின் மூலம் வெட்டி அரட்டைகளை வேகமாக விலக்கிவிட்டு உருப்படியானவைகளைப் பற்றி மட்டுமே படிக்க வசதிகள் இருக்கின்றன.

5. 'வலைப்பூ' இதழை மேம்படுத்த வேண்டும் என்னும் மாலனின் கருத்துக்கு எனக்கு எதிர்க்கருத்தே இல்லை. நானும் அதைத்தான் சொல்கிறேன்.

===

பல நாட்கள் வலைப்பதிவுகளை மேயும்போது "அய்யோ, உருப்படியாக ஒன்றுமே இல்லையே" என்று தோன்றும். அந்த நிலைமை இன்று மாறிவருகிறது. போக வேண்டிய தூரம் அதிகம். இன்றைய நிலையில் தேவை அதிக வலைப்பதிவாளர்களே. அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். தானாகவே நல்லவை மேலே வரும்.

தமிழ் இலக்கியத்தையும், மற்ற கலைகளையும் நாளை கட்டிக் காப்பாற்றப் போவதில் வலைப்பதிவுகளே முக்கிய அங்கம் வகிக்கப்போகின்றன.

Wednesday, March 10, 2004

திசைகள் இயக்கம் மகளிர் தின விழா

செவ்வாய் மும்பை போய்விட்டு இன்று காலைதான் சென்னை வந்தேன். முடிந்தால் சில படங்களை இன்று இரவு ஏற்றுகிறேன்.

Monday, March 08, 2004

வலைப்பதிவுப் படங்களுக்கென ஒரு இலவசத்தளம்

வலைப்பதிவுகளுக்கென பல இலவசத்தளங்கள் வந்துகொண்டிருக்கின்றன. Blogger/Blogspot போன்றவை பின்னூட்டங்கள், பின்தொடர்தல் ஆகியவை தராதபோதும், மற்ற இலவசச்சேவை தளங்கள் அந்த வசதியினை அளிக்க ஆரம்பித்தன.

இப்பொழுது படங்களை சேர்த்துவைக்கவும், அவற்றைப் பிற இடங்களில் உள்ள வலைப்பதிவுகளில் பொருத்திக்கொள்ளும் அனுமதியோடும் சில தளங்கள் வந்துள்ளன. இன்றுதான், ராகவனின் வலைப்பதிவு மூலம் அவற்றைப் பார்த்தேன். ஆலோசனை கொடுத்த மதிக்கும் நன்றி.

1. PhotoBucket.com
2. weBLOG IMAGES [Nice pun on 'We Blog Images']

கேமரா செல்பேசிகள்

பிரகாஷ் தன் வலைப்பதிவில் கேமரா செல்பேசிகள் எப்படி தனி மனிதனது அந்தரங்கத்தைத் தாக்குகிறது என்று தி ஹிந்து செய்தியை முன்வைத்து எழுதியுள்ளார்.

Sony Ericsson T68iஎந்தப் புதுத் தொழில்நுட்பம் வந்தாலும் மனிதனின் வக்கிர புத்தி அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத்தான் முயற்சிக்கும். VCD player வந்தவுடன் அதிகமாக விற்பனை ஆவது 'பலான' படங்களும், திருட்டு சினிமா VCDக்களும்தான். முந்தையது "immoral" என்று சிலர் சொல்லலாம் [நான் சொல்லமாட்டேன்], பிந்தையது "illegal". இணையம் கிடைத்தவுடன் செக்ஸ் தளங்கள்தான் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தன. தொடக்க காலத்தில் பலர் இணையம் என்றாலே 'பசங்கள்ளாம் கெட்டுப் போயிடுவாங்க' என்ற வகையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதுபோலத்தான் இப்பொழுதும். கேமரா செல்பேசிகளால் பல நன்மைகள். ஆனால் முதலில் வெளிவருவது அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் படங்களே. நம் நாட்டில் இந்தப் பிரச்சினை வருமுன்னரே ஜப்பானிலும், (தென்) கொரியாவிலும் பெரிதாகி, அதற்கான மாற்றும் சட்டப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன பிரச்சினைகள், எப்படித் தீர்க்கலாம்?

1. கேமரா செல்பேசிகள் 'பேசுகிறார்களா' அல்லது 'படம் எடுக்கிறார்களா' என்று தெரியாவண்ணம் இருக்கிறது. ஜப்பானிலும், கொரியாவிலும் இந்த கேமரா செல்பேசிகள் படம் எடுக்கும்போது 'விர்ர்ர்' என்று சத்தமோ, அல்லது 'கிளிக்' என்று சத்தமோ போடும் வண்ணம் இருக்கவேண்டும் என்று சட்டமியற்றியுள்ளனர். இந்தச் சத்தமும் 65 டெசிபல் அளவிற்கு இருக்குமாறும் (அதாவது வெட்டிப்பேச்சுக்கிடையிலும் கண்டு பிடிக்கக்கூடிய அளவிற்கு) வேண்டும் என்று சொல்கின்றனர்.

2. பெண்களே உடைமாற்றிக் கொள்ளும் இடங்களில், நீச்சல் குளங்களில் எல்லாம் இந்த கேமரா செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றனவாம். உலகெங்கிலும் பெண்கள் உடைமாற்றும் இடங்களில் அனுமதிப்பது மற்ற பெண்களைத்தான். சந்தேகப்படும்படி யாரேனும் கையில் கேமரா செல்பேசியுடன் உலவிக்கொண்டிருந்தால் நேரடியாக அவர்களைக் கேள்வி கேட்கலாமே? நீச்சல் குளங்களில் கண்டிப்பாக கேமரா செல்பேசி எடுத்து வரக்கூடாது என்று கட்டளைகள் பிறப்பிக்கலாம். இவையெல்லாம் ஜப்பானிலும், கொரியாவிலும், [ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்] பிரச்சினைகளாக இருக்கலாம். இந்தியாவில் பெரிய பிரச்சினைகளே அல்ல.

3. மற்றபடி காதலர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு பொது இடங்களில் நிற்கையில் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடை செய்யக்கூடிய அளவிற்கு இந்தியாவில் சட்டங்கள் கொண்டுவரமுடியுமா, ஏற்கனவே இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரபு ராஜதுரைதான் சொல்ல வேண்டும்.

பல மேலை நாடுகளில் காவல்துறையே வீடியோ கேமராக்களை பொது இடங்களில் வைத்துள்ளனர். இந்தியாவில் கூட ATM தானியங்கி பணம் வழங்கும் கருவிகளின் மேல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் பலமுறை, பலவிடங்களில் "அந்தரங்கமான" படங்கள் மாட்டுகின்றன.

4. கொரியாவில் இந்த கேமரா செல்பேசியை பெரிதும் விற்பனை செய்த சாம்சங் நிறுவனமே இவற்றை தன் ஒருசில தொழிற்சாலைகளுக்குக் கொண்டுவரக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. நிறுவனத்தின் ரகசியங்களை யாரும் பிடித்துக்கொண்டு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே இது.

இன்னும் ஒரு வருடத்தில் இதுபோன்ற 'எதிர்மறை'களை விடுத்து கேமரா செல்பேசியின் நல்ல பயன்பாடுகளை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு செல்லத் தொடங்குவோம்.

===

மற்றொன்று: இந்தக் கேமரா செல்பேசிகள் இப்பொழுதைக்கு அசையாப் படங்களை மட்டும்தான் பிடிக்கின்றன. அதனால் தெஹல்கா கோஷ்டியினர் இன்னமும் சிறிதுகாலம் பொறுக்கவேண்டும். அப்பொழுதுதான் இவை ஒலியுடன் கூடிய அசையும் படங்களையும் பிடிக்குமாறு அமைக்கப்படும்.

===

தி ஹிந்து செய்தியில் குறிப்பிட்டிருந்தது: "கேமராக்கள் செல்பேசிகளுக்கு வரவேற்கத்தக்க ஒரு சேர்க்கையே. ஆனால் ஒருசில விளம்பரங்கள் ஆபாசமான, மோசமான, வலைவிரிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இளைஞர்கள் [கேமரா செல்பேசிகளை] தவறான முறையில் புரிந்துகொள்ள வழிவகுக்கும்."

சோனி எரிக்சன் கேமரா செல்பேசிக்கான விளம்பரம் ஒன்றில் குட்டைப்பாவாடை அணிந்த பெண் தெருவில் போகையில் ஒருவன் தன் கேமரா செல்பேசியால் படம் பிடித்துகொண்டிருப்பான். அதனைப் பார்த்த அந்த பெண் ஆணருகில் வந்து அவனது கேமரா ஃபோனைப் பிடுங்கி .... தூக்கியெறியப் போகிறாளோ என்று நினைக்கையில், காரின் மீது விழுந்து புரண்டு, தன்னை குளோசப்பில் படமெடுத்து அந்த ஆணிடம் கொடுத்துவிட்டுப் போவாள்.

இதைப் பார்க்கும் நம் நடுத்தெரு மன்மதராசாக்கள் தாங்களும் ரூ. 30,000 செலவுசெய்து எந்தப்பெண்ணிடமோ விளக்க்குமாற்றால் அடிவாங்கப் போகிறார்கள்!

Sunday, March 07, 2004

ஆம்பூர் நிகழ்ச்சி நிறைவு

மதிய உணவிற்குப் பின்னர் 'நாகூர் ரூமியின் கவிதை உலகம்' என்ற தலைப்பில் ராகவன் பேசினார். நாகூர் ரூமி, ஆம்பூர்க் கவிஞர் இராம.பிரபுவின் 'இசையுதிர் காலம்' என்னும் புத்தகத்தைப் பற்றி "வாமனமும் விஸ்வரூபமும்" என்ற தலைப்பில் பேசினார்.

தொடர்ந்து நானும், வெங்கடேஷும் கணினியில் தமிழ் பற்றிப் பேசினோம்.

வெங்கடேஷ் எழுத்தாளர்கள் இணையத்தில் என்னென்ன செய்ய முடியும் என்பதை விளக்கினார். யாஹூ! குழுமங்கள், இணையப் பத்திரிகைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்துவைத்தார்.முடிவாக ஐகாரஸ் பிரகாஷ் நன்றியுரையுடன் விழா முடிவடைந்தது. விழா முழுவதையும் தொகுத்து வழங்கியவர் சோம.வள்ளியப்பன்.

விழாவில் பங்குகொள்ள சென்னையிலிருந்தும் நெய்வேலியிலிருந்தும் வந்தவர்கள் அனைவரது படங்களும் இதோ.


சோம.வள்ளியப்பன்

நளினி சாஸ்திரி

பா.ராகவன்

நாகூர் ரூமி

ஐகாரஸ் பிரகாஷ்

வைகைச்செல்வி

சத்தியமோகன்

ஆம்பூர் கணினிப்பட்டறை

சிறிய வகுப்பறை ஒன்றில் கிட்டத்தட்ட நூறு மாணவர்களுக்கு மேல் கூட்டம்! அத்தனை பேர் முகத்திலும் நிசமான ஆர்வம் இருந்தது. நீங்களே பாருங்களேன்?என் மடிக்கணினி, திரை ஆகியவற்றை சரி செய்து கொண்டே அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அதிகமாக எதையும் சொல்லிகொடுத்து விட முடியாது என்று தெரியும். ஆனால் என்னென்ன சாத்தியம் என்பதை மட்டுமாவது சொல்லிகொடுக்க வேண்டும் என்று தோன்றியது. டிஜிட்டல் கேமரா மூலம் படமெடுத்து அதைக் கணினியில் கொண்டுபோக முடியும் என்பதைக் காட்டிவிட்டு, தமிழில் கணினியில் எழுதுவது எப்படி என்பதையும் விளக்கிக் காட்டினேன்.

வலைப்பதிவுகள் பற்றிப் பேசினேன். பின்னர் அவர்கள் விருப்பப்படி த்ரிஷா படத்தை கூகிள் மூலம் தேடி, உடனடியாக அதனை என் வலைப்பதிவில் ஏற்றி, அதனை அவர்களுக்கு அங்கேயே பெரிய திரையில் தெரியுமாறு காட்டினேன்.பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போய்விட்டது.

அதே நேரம், சக்காரியா அரங்கில் கவிதைப்பட்டறை நடந்துகொண்டிருந்தது. அதனைப் பற்றிய விவரங்களை ராகவனின் வலைப்பதிவில் படித்துக்கொள்ளவும்.

மதிய உணவு நேரம் நெருங்கியதும் மாணவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு மீண்டும் ரூமி வீட்டிற்கு மதிய உணவுக்கும் போனோம்.

ஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்

போனவாரம் ஆம்பூரில் நடந்த திசைகள் இயக்கத்தின் கூட்டம் பற்றி பா.ராகவன் ஏற்கனவே எழுதிவிட்டார். அந்த நிகழ்ச்சியின் ஒருசில படங்களை இங்கு காணலாம்.

காலையில் கோவை எக்ஸ்பிரஸில் கூட்டமாகப் பயணம் செய்தோம். டென்ஷனோடு ரூமி ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருந்தார். ஆட்டோ, கார் என்று ஸ்டேஷனிலிருந்து ரூமி வீட்டுக்குப் போய் அங்கு கனமாக காலையுணவை முடித்துக் கொண்டு ஆம்பூர் மஸருல் உலூம் கல்லூரிக்கு வந்தோம். கல்லூரி உள்ளே நுழையும்போதே ஒரு விளையாட்டுத் திடல் உள்ளது. நேராக நிகழ்ச்சிகள் நடப்பதற்கான என்.எம்.சக்காரியா அரங்கம். வலதுபுறத்தில் கல்லூரியின் முதன்மைக் கட்டிடம். அரங்கின் வாயிலில் கல்லூரி மாணவர்களின் கூட்டம். சிறிது நேரம் கல்லூரி முதல்வரது அலுவலகத்தில் அமர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது கூட்டமாக பலர் வந்து மாலனுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். சிலர் மாலனுக்குப் பொன்னாடை போர்த்தி அதையும் 'கிளிக்'கிக் கொண்டிருந்தனர்!

சிறிது நேரம் கழித்து அரங்கிற்கு வந்தோம். கூட்டம் நிறைய ஆரம்பித்திருந்தது. மொத்தம் கல்லூரியில் 900 மாணவர்களாம். காலைக்கல்லூரி, மாலைக்கல்லூரி என்று இரண்டும் உண்டு. அரங்கில் கிட்டத்தட்ட 200 மாணவர்களாவது இருப்பர். மற்ற பல கல்லூரிகளிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் மாணவ, மாணவியர் வந்திருந்தனர். அதைத்தவிர, இலக்கிய நாட்டமுள்ள பொதுமக்கள் சிலரும் வந்திருந்தனர்.

விழா தொடக்கமாக க்ரா-அத் ஓதியபின்னர், ஒரு மாணவர் வரவேற்புரை ஆற்றினார். மாணவர் மைக்கைப் பிடித்ததும், நண்பர் குழாம் அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டி ஆர்பர்டித்தது, விசில் மழை அப்பொழுது ஆரம்பித்ததுதான், பின்னர் பலர் கடிந்துகொள்ளும் வரை ஓயவேயில்லை என்று தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து பாரதிபாலன் திசைகள் இயக்கத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
அடுத்து மாலன் 'கயல் பருகிய கடல்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இறுதியாகக் கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று, மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் என்னென்னவெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.


இத்துடன் காலை நிகழ்ச்சிகள் முடிந்து, கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒரு குழு மாணவர்கள் கணினிப்பட்டறைக்கும், மற்றொரு குழு கவிதைப்பட்டறைக்கும் என்று பிரிந்தனர்.

Saturday, March 06, 2004

பின்தொடரும் நிழலின் குரல்

இந்தப் பதிவு ஜெயமோகனைப் பற்றியில்லை. RSS பற்றியும் இல்லை! Trackback பற்றி.

Trackback அல்லது பின்தொடர்தல் என்றால் என்ன? வெங்கட் வலைப்பதிவுகளின் சாத்தியங்கள் பற்றி (மூன்றாம் வலை பற்றிய கட்டுரைத் தொடர்) எழுதிவருகிறார். அதையும் படிக்கவும்.

டயரியில் பென்சிலால் எழுதி வந்தீர்கள். அது யார் கையில் கிடைத்ததோ அவர்களால் மட்டுமே படிக்க முடிந்தது. அதுவே வலைப்பதிவு என்று இணையத்தில் வந்தவுடன் பல வழிகளில் மக்களால் படிக்க முடிந்தது.
 1. யாருக்கெல்லாம் உங்கள் வலைப்பதிவின் முகவரி தெரிகிறதோ, அவர்கள் நேரிடையாக அந்த முகவரியை உலாவியில் தட்டுவதன் மூலம்
 2. ஒருவரது இணையத்தளம்/வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவு முகவரிக்குத் தொடர்பு கொடுத்திருப்பதைத் தட்டி, அதன் மூலம்
 3. கூகிள்/யாஹூ!/எம்.எஸ்.என் தேடுதல்கள் மூலம்

அதற்குமேல் என்ன செய்ய முடியும்?
 • நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பல ஹைப்பர்லிங்குகளைக் கொடுக்க முடியும்.
 • படங்கள், ஒலித்துண்டுகள், ஒளித்துண்டுகளைச் சேர்க்க முடியும்.
 • அழகாக, பல வண்ணங்களில் பின்புலம், எழுத்துகள் ஆகியவற்றை வடிக்க முடியும்.
 • பட்டியல்கள் (ordered, unordered list), அட்டவணைகள் (tables) ஆகியவற்றை உருவாக்க முடியும்
 • சுருக்கமாக HTML மொழியின் அத்தனை சாத்தியங்களையும் செய்ய முடியும்

உங்கள் வலைப்பதிவு, செய்தி நிறுவனங்கள் நடத்தும் தளம் அல்ல. அதனால் அமாவாசைக்கொருதரமோ, ஆடிக்கொருதரமோ தான் புதிய பதிவுகள் இருக்கும். சில நாட்கள் ஒன்றுமே எழுதியிருக்க மாட்டீர்கள். சில நாட்கள் பல குறிப்புகள் வரைந்திருப்பீர்கள். படிக்க ஆசைப்படுபவருக்கு எப்பொழுது புதிதாக உங்கள் வலைப்பதிவில் ஒரு துண்டு வந்துள்ளது என்று தெரியும்? அதற்குத்தான் RSS செய்தியோடை என்றதொரு வசதி உள்ளது. உங்கள் வலைப்பதிவிற்கென ஒரு செய்தியோடையை உருவாக்குகிறீர்கள். உங்கள் வலைப்பதிவைப் பெற விரும்புபவர் அந்த செய்தியோடையைத் தன் RSS செய்தியோடைத் திரட்டியில் புகுத்திவிடலாம்.

நீங்களாகப் பல்வேறு வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் என்று சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் செய்தியோடைத் திரட்டி தானாகவே அந்த வேலையைச் செய்து, புதிதாக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதனை உங்கள் திரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும். பல RSS திரட்டிகள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள். [வெங்கட், பரிமேலழகர், என்னுடையது, செல்வராஜ்]

உங்கள் வலைப்பதிவுச் செய்தி ஒன்றைப் பார்த்து பலர் உடனடியாக மறுமொழி கொடுக்க விரும்பலாம். நீங்கள் எழுதியிருப்பது அவருக்குப் பிடித்திருக்கலாம் [உங்கள் எழுத்து சூப்பர்!], கடுப்பேற்றலாம் [பெரிய புடுங்கின்னு நெனச்சிட்டு எழுத வந்திட்டியா?], உங்களை வேறு ஒருவர் எழுதியிருப்பதைப் பார்க்கச் சொல்லலாம் [சும்மா எழுத வரதுக்கு முன்னாடி அந்தாண்டப் போயிப் பார்த்து, படிச்சிட்டு வாய்யா!]. இதற்கென 'Comments/feedback/பின்னூட்டம்/மறுமொழி' எனும் வசதியை உங்கள் வலைப்பதிவுடன் சேர்க்கலாம். இந்த வசதி சேர்ந்தால்தான் உங்கள் வலைப்பதிவு அடுத்த தளத்திற்குச் செல்கிறது.

சரி, உங்கள் பதிவிற்கென நான் அளிக்க இருக்கும் மறுமொழி ஒன்றிரெண்டு வரிகள் என்றால் பரவாயில்லை. அதுவே ஒரு கட்டுரை முழுக்க (ஜெயமோகன் எழுதுவது போல்) நிரம்பி வழியக்கூடியது என்றால் என்ன செய்ய? அதை உங்கள் பதிவின் மறுமொழியில் போடுவது கடினம். சில 'இலவச மறுமொழி' வசதிகளில் 300 எழுத்துகளுக்கு மேல் இருக்க முடியாது. இதற்கு ஒரே வழி, என்னுடைய வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவைச் சுட்டி, என் விவாதத்தை மேலே தொடருவதுதான்.

அப்படிச் செய்துவிட்டால், நான் உங்கள் பதிவு ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி நான் தெரிவிப்பது? அப்பொழுதுதானே நீங்கள் வந்து என் பதிவைப் படிக்க முடியும், படித்தபின், என்னுடனான சண்டையைத் தொடர முடியும்? அதற்குத் துணைபுரிவதுதான் பின்தொடர்தல் (அ) trackback.

இது எப்படி வேலை செய்கிறது?

நான் எழுத வேண்டிய பதிவை முதலில் எழுதி முடிக்கிறேன். அதில் உங்கள் பதிவிற்கான சுட்டியை (எதை வைத்து நான் என் கட்டுரையை எழுதினேனோ, அதை/அவற்றை) கட்டுரையின் உள்ளேயே கொடுக்கிறேன். இந்தச் சுட்டிகள் பலருடைய வலைப்பதிவுகளாக இருக்கலாம். அவ்வாறு செய்தவுடன், என் வலைப்பதிவைப் பிரசுரிக்கிறேன். அதன்பிறகு, எந்தெந்தக் கட்டுரைகளை என் கட்டுரையின் சுட்டியுள்ளேனோ, அவற்றின் பின்தொடர் சுட்டிகளைச் (இவை trackback URLகள் எனப்படும். வலைப்பதிவு URLகள் அல்ல இவை.) சேர்த்தெடுத்து 'ping' செய்கிறேன். உங்கள் வலைப்பதிவின் பின்தொடர்தல் பகுதியில் இதற்கான வழிமுறை இருக்கும்.

எடுத்துக்காட்டினை இப்பொழுது பார்ப்போம்:

ஐராவதம் மகாதேவனின் பேச்சை வைத்து எழுதிய என் வலைப்பதிவு "தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3" என்பதன் சுட்டி http://thoughtsintamil.blogspot.com/2004_02_29_thoughtsintamil_archive.html#107806377479850385

இதே கட்டுரையின் பின்தொடர் சுட்டி http://haloscan.com/tb/bseshadri/107806377479850385

பா.ராகவன் தன் வலைப்பதிவில் என் கட்டுரையைச் சுட்டி "ஐராவதம் மகாதேவன்" என்ற தலைப்பில் எழுதினார். அதை எழுதியபின், என் வலைப்பதிவுக் கட்டுரைக்கு தன் 'பின்தொடர்தல் சேவை' மூலம் http://haloscan.com/tb/bseshadri/107806377479850385 என்ற என் பின்தொடர் சுட்டிக்கு 'ping' செய்தார். இதனால் என் வலைப்பதிவைப் பார்க்கும் அனைவருக்கும் Trackback என்னும் பகுதியை கிளிக் செய்தால் ராகவன் இந்தக் கட்டுரையைப் பற்றித் தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படி என் கட்டுரையை 'refer' செய்து, பின்தொடர் சுட்டியை 'ping' செய்த அனைவரது கட்டுரைகளும் என் வலைப்பதிவில் இடம் பெறுகின்றன. இதன் மூலம் யாரெல்லாம் என் கட்டுரையை அடியொட்டி எழுதியுள்ளனர் என்பதை நானும், என் வலைப்பதிவுக்கு வரும் மற்றவர்களும் கண்டுபிடிக்கலாம், அந்தந்த இடங்களுக்குச் சென்று அந்தக் கட்டுரைகளையும் படிக்கலாம்.

வலைப்பதிவுகளில் வேறென்ன வித்தை இருக்கிறது? உங்கள் வலைப்பதிவுக்கு எவ்வளவு பேர்கள் வருகின்றனர்? எங்கிருந்து வருகின்றனர்? வந்தபின் எங்கு செல்கின்றனர்? இப்படி 'access statistics' அனைத்தையும் அறிந்துகொள்ள உங்களுக்கு ஆசையாயிருக்கலாம். அதைச் செய்யவும் பல வழிகள் உள்ளன.

ஆக, ஒரு வலைப்பதிவில் என்னென்ன தொழில்நுட்பங்கள் அமைந்திருக்கவேண்டும் என்று இப்பொழுது ஒரு தொகுப்பாகப் பார்ப்போம்:
 • RSS (அ) Atom செய்தியோடை உருவாக்கும் வசதி
 • உங்கள் வலைப்பதிவுக்கு வருபவர்கள் பின்னூட்டம்/மறுமொழி தரும் வசதி
 • உங்கள் கட்டுரைகளை பிறர் பின்தொடரும் வசதி (அதாவது உங்கள் பதிவு ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்தொடர் சுட்டியும் உருவாக்கி அதனை வெளியே தெரிவிக்க வேண்டும்)
 • நீங்கள் பிறரது கட்டுரைகளைச் சுட்டினால், அவர்கள் பின்தொடர் சுட்டிகளை உருவாக்கியிருந்தால், அந்தப் பின்தொடர் சுட்டிகளை 'ping' செய்யும் வழிமுறை
 • உங்கள் வலைப்பதிவுக்கு வருபவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை அறிதல் (இதனால் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடப் போவதில்லை என்றாலும்....!)
 • இதைத் தவிர உங்கள் வலைப்பதிவிற்குள்ளாக தேடுதல் வசதியையும் சேர்த்துவிட்டால், நீங்கள் பெரிய கில்லாடிதான்!

தேர்தல் சுவரொட்டிகள் - 1

தேர்தல் நெருங்கியதும் சுவர்கள் எல்லாம் சுவரொட்டிகளாலும், வண்ணப் படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் வித்தியாசமாகக் கண்ணில் படுவதைப் படமெடுத்து உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவதாக 'இந்தியன்' என்ற பேர்/அமைப்பு எதையும் சொல்ல விருப்பமில்லாத நபர் அடித்து ஒட்டியுள்ள சுவரொட்டி இதோ:இத்தாலிநாட்டு பெண்மணியும்,
இலங்கை விடுதலை புலிகளின் ஆதரவாளர்களும்,
இந்திய திருநாட்டை ஆளமுயற்ச்சிப்பதை
அனுமதியோம்..! அனுமதியோம்..!
- இந்தியன்

[ஒற்றுப்பிழைகளுடன் சுவரொட்டிகளை அச்சிடுவதே இப்பொழுது வாடிக்கை]

Friday, March 05, 2004

பாரதீய பாஷா பரிஷத் விருது

பா.ராகவனுக்கு 'பாரதீய பாஷா பரிஷத்' விருது வழங்கப்பட்டதல்லவா? கொல்கத்தாவில் விருது வழங்கப்பட்டபோது எடுத்த புகைப்படம், இங்கே. சால்வையைப் போர்த்துபவர் உத்திரப் பிரதேச ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரி.RSS செய்தியோடைத் திரட்டு

RSS செய்தியோடைத் திரட்டு பற்றி காசி எழுதியுள்ளார். [காசி: பின்தொடர்தல் (trackback) வசதியை இன்னமும் செய்யவில்லையே? பரி தன் வலைப்பதிவில் நூக்ளியஸில் இதனைச் செய்துள்ளார், அவரைப் பிடிக்கவும்...]

ஒரு RSS படிப்பானை என்னுடைய வலைப்பதிவை நோக்கிக் காண்பித்தால் அது தானாகவே RSS செய்தியோடையின் முகவரியைக் கண்டுபிடித்து விடுகிறது என்றும், இது எப்படி சாத்தியம் என்றும் கேள்வியை எழுப்பியிருந்தார். இது RSS Auto discovery என்னும் முறையில் செயல்படுகிறது. பல RSS படிப்பான்கள் index.rdf என்றுள்ள முகவரி இந்த இணையப்பக்கத்தில் உள்ளதா என்று தேடும். அப்படி இருந்தால் அது ஒரு RSS செய்தியோடைதான் என்று நிச்சயம் செய்துகொண்டு தானாகவே அந்த RSS செய்தியோடையைப் படிக்க ஆரம்பித்து விடும்.

மற்றுமொரு வழியும் உண்டு. உங்கள் RSS செய்தியோடைக் கோப்பின் பெயர் .rdf என்று முடியவில்லை என்றால் (காசியின் செய்தியோடையின் பெயர் http://kasi.thamizmanam.com/xml-rss2.php), உங்கள் HTML பக்கத்தில், </head> வருமுன்னால் கீழ்க்கண்ட வாசகத்தை இணைத்துக்கொள்ளவும். இங்கு என்னுடைய செய்தியோடை முகவரியைத் தவிர்த்து உங்கள் செய்தியோடை முகவரியை எழுத வேண்டும்.
<link rel="alternate" type="application/rss+xml" title="RSS" 
href="http://thoughtsintamil.blogspot.com/rss/index.rdf">

நான் நியூஸ்மான்ஸ்டர் என்னும் மொசில்லா உள்ளிருந்து இயங்கும் RSS படிப்பானைப் பயன்படுத்துகிறேன். அதுபற்றி நான் முன்னர் எழுதியிருந்த பதிவு.

செல்வராஜ் தான் ஷார்ப்ரீடர் என்னும் செய்தியோடைத் தொகுப்பானைப் பாவிப்பதாக எழுதியிருந்தார். நான் அதைத்தான் நேற்று ராகவனது கணினியில் நிறுவியிருந்தேன். ஷார்ப்ரீடர் ஆடம் ஓடைகளையும் படிக்கிறது என்பதால் அதற்குத் தாவியுள்ளதாகச் சொல்கிறார். நான் இன்னமும் நியூஸ்மான்ஸ்டரில்தான் உள்ளேன். ஆடம் ஓடையை நேரிடையாகப் படிக்க முடியாவிட்டாலும் http://www.2rss.com/atom2rss.php?atom=http://writerpara.blogspot.com/atom.xml என்று RSS ஆக மாற்றிப் படிக்கிறேன்.

ஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்

போனவாரம் சென்றிருந்த ஐராவதம் மகாதேவனின் பேச்சு பற்றி என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். பகுதி ஒன்று | இரண்டு | மூன்று.

ஐராவதம் மகாதேவன் Frontline இதழில் எழுதிய கட்டுரையின் சுட்டி இதோ: Orality to literacy: Transition in Early Tamil Society

அன்றைய பேச்சிலிருந்து நான் குறிப்பிட மறந்த சில செய்திகள்:

* கல்வெட்டுகளில் எழுதியிருப்பதை ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஐரோப்பிய அறிஞர்கள் பிறரைக் கொண்டு (உள்ளூர்க் கூலிகளைக் கொண்டு என்று வைத்துக்கொள்வோமே?) தாளில் மை கொண்டு பூசி, கல்வெட்டு எழுத்துகள் தாளில் பதியுமாறு செய்து அதனைத் தங்களிடம் வரவழைத்து, (ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ உட்கார்ந்து கொண்டு) படித்தார்கள். இதனால் அவர்களது படிப்பில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. கல்லின் மேடு பள்ளங்கள், நாளைடவில் ஏற்பட்டிருந்த சேதங்கள் ஆகியவை 'noise' ஐ உருவாக்கியதால் ஒழுங்காக இந்த எழுத்துகளை வகையறுக்க முடியவில்லை. அதனாலேயே மகாதேவன், தான் நேரடியாக இந்த இடங்களுக்குச் சென்று எழுத்துகளைப் படிக்க முயன்றதாகச் சொன்னார். தமிழக அரசுப் பணியில் கைத்தறித் துறைச் செயலராக இருந்தபோது இந்த வாய்ப்பு தானாகவே தனக்குக் கிடைத்தது என்றார்.

* இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்ததனால் டிஜிட்டல் கேமரா போன்றவைகளால் படம் பிடித்து, கணினிகளைக் கொண்டு படங்களின் தரத்தை உயர்த்தி (enhancing the digital images) பின்னர் அவற்றை வகைப்படுத்த முடிகிறது என்றார். ஐஐடி சென்னை இதற்கென இவருக்கு நிறைய உதவிகள் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* இந்த அரிய கல்வெட்டுகள் இப்பொழுது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் ஆதங்கப்பட்டார். எப்படியெல்லாம் அழிகின்றன? இன்றைய காதலர்கள் இந்தக் கல்வெட்டுகளில் மீது தங்கள் பெயர்களைப் பொறித்து பழைய செய்திகளையெல்லாம் அழித்து விடுகின்றனர். கல் குவாரிகளுக்குக் குத்தகை விடுவதாலும் பலர் டயனமைட் வைத்து அரிய கல்வெட்டுகள் உள்ள மலைகளை உடைத்து கிரானைட் ஆக்கி விற்றுவிடுகின்றனராம்.

இந்த இரண்டினாலும் நம் வரலாற்றுப் பதிவுகளை நாம் தினமும் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த இழப்பை நிறுத்த, அரசுகளால்தான் முடியும்.

====

ஐராவதம் மகாதேவன் கல்வெட்டியல் அறிஞர் மட்டுமல்ல. தினமணி செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தவர். அவரைப் பற்றி பா.ராகவன் எழுதிய கட்டுரை இதோ.

தமிழோவியம் கிரிக்கெட் பத்தி

இந்த வாரம் தமிழோவியத்தில் என்னுடைய கட்டுரை.

Thursday, March 04, 2004

அத்வானியின் ரதம்

அத்வானி 'பாரத் உதய் யாத்ரா' என்று கன்யாகுமரியிலிருந்து ஆரம்பித்து நாடெங்கிலும் சுற்றப் போகிறாராம். ஆக 'பாரத் உதய்' (India shining, இந்தியா ஒளிர்கிறது) மத்திய அரசின் சாதனையாக ஆரம்பித்து, தே.ஜ.கூ கூட்டணியின் சாதனையாகி, பா.ஜ.க சாதனையாகி, இப்பொழுது அத்வானியின் சாதனையாகியுள்ளது.

வீடியோ முன் கையும், களவுமாகப் பிடிபட்ட திலீப் சிங் 'மீசைக்கார' ஜுதேவின் ஸ்வராஜ் மாஸ்தா பஸ் இது.

அரசியலை விடுவோம். இந்த வண்டியில் உள்ள சவுகரியங்கள் இதோ:

* முற்றும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்டது
* நான்கு ஓட்டுநர்கள், 12 பேர் அமரும் வசதி
* இரண்டு சோஃபாக்கள்
* இணைய இணைப்புள்ள மடிக்கணினி
* பேக்ஸ் கருவி
* தொலைக்காட்சிப் பெட்டி, CD/VCD/DVD பார்க்கும் வசதி
* ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் மேல் பக்கம் திறந்து அதன்வழியே அத்வானி மேலேற்றப்பட்டு மக்களை நோக்கிப் பேசக் கூடிய வசதி

கேள்விகள்:

1. இணைய இணைப்பு எப்படிக் கிடைக்கிறது? VSAT வழியாகவா? இல்லாவிட்டால் எல்லோருக்கும் கிடைக்கும் ரிலையன்ஸ் CDMA வழியாகவா? அத்வானி புண்ணியத்திலாவது இவர் போகும் வழியெல்லாம் அரசு செலவில் இலவச wi-fi hotspots போட்டுக்கொண்டே போகலாமே?

2. "எனக்கும் வேணும்" என்று ஜெயலலிதா எப்பொழுது அடம் பிடிக்கப் போகிறார்?

3. கருணாநிதி என்ன ஜோக் அடிக்கப்போகிறார்?

Wednesday, March 03, 2004

அந்த நாள் ஞாபகம் - soc.culture.tamil

செல்வராஜ் 'இனிய தோழி சுனந்தாவிற்கு' என்று ஒரு கடித வரிசை எழுதுகிறார்.

இல்லை. ஏற்கனவே 1993இல் soc.culture.tamil (SCT) என்னும் usenet newsgroups இல் எழுதியதை இன்று வலைப்பதிவில் மீள்பதிவு செய்கிறார்.

முதலில் SCTஇல் இந்தக் கடிதங்கள் வந்தபோது அவற்றைப் படித்தவர்களில் நானும் ஒருவன். ரோமன் எழுத்துகளில் தமிழ் படிப்பது என்பது கொடுமையானது. கண் வலிக்கும். மதுரை எழுத்துமுறை என்று ASCII எழுத்துகளை வைத்து நான்கைந்து வரிகளில் தமிழ் எழுத்துகள் போல் தெரியுமாறு குண்டு குண்டாக தமிழ் எழுத்துகளை வடிவமைத்திருந்தார் பாலா சுவாமிநாதன் என்பவர். அதன்மூலம் ரோமன் எழுத்துகளில் எழுதியிருந்த தமிழைப் படிக்க ஒரு வழி இருந்தது.

பாலா சுவாமிநாதனின் தம்பி ஞானசேகரன் சுவாமிநாதன் என்பவர் அப்பொழுது X இல் தமிழ் எழுத்துகள் வருமாறு ஒருசில சோதனைகளைச் செய்து வந்தார். அந்த சமயத்தில் நானும் முன்-பின் ஒன்றும் தெரியாமல் X சாளரங்களுக்கு தமிழில் ஒரு .bdf எழுத்துரு ஒன்றைச் செய்து அதைப்பற்றி சந்தோஷமாக SCTக்கு தகவல் கொடுத்திருந்தேன்.

பின்னர் ஞானசேகரன் என்னிடம் தொடர்பு கொண்டு, ஆளாளுக்கு புதிய எழுத்துருவையும், எழுத்துக் குறியீட்டினையும் கண்டுபிடிக்க முயலாமல் ஒன்றாய்ச் சேர்ந்து உழைக்கலாமே என்று கேட்டுக்கொண்டார். ஞானசேகரனின் கைவண்ணத்தில் வெளியானதுதான் LibTamil, m2t ஆகியவை. [இதைப்பற்றியும் செல்வராஜ் தன் கட்டுரையில் எழுதியுள்ளார்.] LaTeX உடன் சேர்த்து தமிழில் லினக்ஸ்/யூனிக்ஸ் கணினிகளில் தமிழில் அச்சுக்கோர்ப்பது அனைவர் கைக்கும் கிடைத்தது.

LibTamil மூலமாக X செயலிகள் அனைத்திலும் தமிழில் படிக்கக்கூடிய வசதியினைச் செய்ய முடிந்தது. X செயலிகள் அனைத்தும் திறந்த ஆணைமூலச் செயலிகளாக இருந்ததனால், அவற்றினை LibTamil கொண்டு recompile செய்துவிட்டால் எங்கெல்லாம் \bt \et என்று வருகிறதோ அதற்கிடையில் உள்ளதை ரோமன் எழுத்துகளில் எழுதிய தமிழ் என்று கண்டுபிடித்து அதனைத் தமிழாக்கி தமிழ் எழுத்துருவில் நீங்கள் பயன்படுத்தும் X செயலி காண்பித்து விடும். xedit - தமிழில் எழுத; xmail - தமிழில் மின்னஞ்சல் அனுப்ப; xrn - தமிழில் usenet newsgroup SCTஐப் படிக்க என்று 1993இலேயே முடிந்தது. உதாரணத்திற்கு என்னுடைய இந்த அஞ்சலைப் பாருங்கள். இதை LibTamil கொண்டு மாற்றிய xrnஇல் தமிழிலேயே படிக்கலாம்.

அன்றைய தினத்தில் லினக்ஸ்/யூனிக்ஸ் கணினி கொண்டு இணையத்தில் புழங்கியவர்களே அதிகம். மைக்ரோசாஃப்ட் கணினிகள் இணையத்தில் இணைவது எப்படி என்று தடுமாறிய காலம். அதன்பின் இன்றுவரை எத்தகு மாற்றங்கள்!

Tuesday, March 02, 2004

Livelihood Advancement Business School - LABS

நேற்று லாப்ஸ் எனப்படும் ஒரு கல்வி நிலையத்துக்குப் போயிருந்தேன்.

சோம.வள்ளியப்பன் (திசைகள் இயக்கத்தில் அவ்வப்போது அடிபடும் பெயர், பல சுய-முன்னேற்ற நூல்கள், வியாபாரம் பற்றிய நூல்கள் எழுதியுள்ளார்) சென்னையில் இந்த நிறுவனத்தின் மண்டல இயக்குனராக உள்ளார். ஆம்பூரிலிருந்து ரயில்வண்டியில் வரும்போது அவர் சொன்னதை வைத்து திங்கள் அன்று போய்ப் பார்த்தேன்.

Dr. Reddy's Labs எனப்படும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தின் (pharmaceutical company) நிறுவனர் டாக்டர் அஞ்சி ரெட்டியின் முயற்சியால் உருவான தொண்டு நிறுவனமே LABS. இந்த நிறுவனத்திற்கு Dr. Reddy's Labs மற்றும் Dr. Reddy's Foundation for Human and Social Development இரண்டும் நிதியுதவி அளிக்கின்றன. இவற்றைத்தவிர மற்ற பல லாபநோக்குள்ள நிறுவனங்களும், அரசுசாரா அமைப்புகளும் லாப்ஸுக்கு உதவிபுரிகின்றன. ஹைதராபாத், சென்னை, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் லாப்ஸ் பள்ளிகளை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பின் நோக்கம் சமுதாயத்தின் விளிம்புகளில் உள்ள, போதிய படிப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வண்ணம் கல்வி அளித்து அவர்களுக்கு தக்க வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே. முக்கியமாக பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு படிப்பு பாதியில் நிறுத்தப் படுகிறது. பலர் பத்தாவது, பனிரெண்டாவது படிப்புடன் மேற்படிப்பிற்குப் போக முடியாத நிலையில் உள்ளார்கள். பலர் 10/12 வகுப்புத் தேர்விலேயே தேறாமல் உள்ளனர். இந்நிலையில் வேலை என்பது இந்த இளைஞர்களுக்குக் கிடைப்பது வெகு கடினம். இதனால் வேலையின்றி வெட்டித்தனமாக ஊர் சுற்றுவதால் கெட்ட நட்பும், பழக்கங்களும் ஏற்படுகின்றது.

லாப்ஸ் அமைப்பின் மூலம் இருபால் இளைஞர்களுக்கும் தொழிற்கல்விப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு அறையில் கிட்டத்தட்ட பத்து பெண்களுக்கு முதியோர்/நோய்வாய்ப்பட்டோரைக் கவனித்துக் கொள்ளும் பயிற்சியினை (Health and Home Care Services) அளித்துக் கொண்டிருந்தார் ஒரு ஆசிரியை. அவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் மாதம் ரூ. 1,500 வரை வருமானம் வருமாறு இந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். மற்றுமொரு அறையில் கணினிப் பயிற்சி (Data Entry) நடந்துகொண்டிருந்தது. உணவகங்களில் வேலை பார்க்கப் பயிற்சி (Hospitality Services), விற்பனை/நுகர்வோர் உதவி ஆகிய துறைகளில் பயிற்சி (Sales and Customer Support) மற்றுமொரு அறையில் நடந்து கொண்டிருந்தது.

பெப்ஸி நிறுவனத்தில் இருந்து ஒரு அதிகாரி வந்து சில மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பத்து, பதினைந்து பேருக்கு அந்த நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலை கிடைக்கும் என்று சொன்னார் வள்ளியப்பன். இதுவரை லாப்ஸ், சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து அதில் பலருக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இப்படி ஒரு தொண்டு நிறுவனம் பார்க்க மனதுக்கு நிறைவாக உள்ளது. நான் ஒருசில மாணவ, மாணவிகளுடன் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

இந்த நிறுவனம் மேலும் பல இளைஞர்களுக்கு வாழ வகைசெய்யுமாறு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமென்று நம்பிக்கை இருக்கிறது.

சென்னை முகவரி:
LABS
617, First Floor, Anna Salai
Thousand Lights, Behind Saffire Theatre
Chennai 600 086
Ph: 044-2829-0041/3656/2080