Tuesday, March 21, 2006

தமிழகத்தில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள்

அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் 1.5 கோடி புதிய வேலைகள் உருவாகும் என்று Confederation of Indian Industry (CII) - Tamil Nadu கூறுகிறது.

தி ஹிந்து செய்தி

இதில்
  • துறைத் தேர்ச்சி ஏதும் இல்லாத (unskilled) வேலைகள் = 90 லட்சம் - 1.1 கோடி
  • ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சியுள்ள (skilled) வேலைகள் = 30-40 லட்சம்
  • தீவிரமான துறைத் தேர்ச்சி (highly specialised) வேலைகள் = 1-3 லட்சம்
ஆனால்...

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் 40% மாணவர்கள், கலை/அறிவியல் கல்லூரிகளில் படித்து வரும் 70% மாணவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்களாக உள்ளனர் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

அதாவது வேலைகள் உருவாகும். அந்த வேலையைச் செய்யக்கூடிய தகுதி படைத்த ஆள்கள் இருக்கமாட்டார்கள்.

கல்வி கற்பிக்கும் முறை மாறினால் ஒழிய, மாணவர்களுக்குக் கல்வியில் ஓரளவுக்காவது ஆர்வம் ஏற்பட்டால் ஒழிய, கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர்கள் கொஞ்சமாவது உருப்படியாக இருந்தால் ஒழிய - இந்த நிலை மாறப்போவதில்லை.

இப்பொழுது இருக்கும் நம் கல்வித்துறையின் வழியே வரும் மாணவர்களுக்கு
  • தன்னம்பிக்கையோடு பேசத் தெரிவதில்லை
  • தமிழோ, ஆங்கிலமோ - ஏதோ ஒரு மொழியில்கூட சரளமாக எழுதத் தெரிவதில்லை
  • கூர்ந்து கவனித்து, உலகில் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளத் தெரிவதில்லை
  • ஆழ்ந்து சிந்தித்து, பிரச்னை என்ன என்பதைப் புரிந்து கொள்ளத் தெரிவதில்லை
  • பிரச்னைக்கான தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசிப்பதில்லை
  • Presentation skills சிறிதுகூட இல்லை
உருப்போட்டு பத்தி பத்தியாகப் பரீட்சை எழுதி 100/100 மதிப்பெண்கள் வாங்குவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இந்தப் பிரச்னைக்கான தீர்வு அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் வரும் என்று நான் நினைக்கவில்லை. சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொல்கிறார்:
To this end, the varsity authorities proposed to the Universities Grant Commission to set up community colleges to train drop-outs/semi-skilled labour
இதற்கு UGC எதற்கு? தனியார்களால் இந்தக் காரியத்தை நன்றாகச் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. எப்பொழுது சான்றிதழ்கள் தேவை இல்லையோ, அப்பொழுதே UGC, அரசு மான்யம் ஆகியவை தேவையில்லை. அதோடுகூட அவர்களது தேவையற்ற பீரோக்ரசியும் தேவையில்லை.

இன்று மாணவர்களுக்குத் தேவை:
  • ஏதாவது ஒரு துறையில் மிகவும் அடிப்படைத் திறன்; அதற்கு மேல் வேண்டியதில்லை. இது கணினி தொடர்பாக இருக்கலாம். பற்று/வரவு கணக்கு எழுதுவதாக இருக்கலாம். பொருள் விற்பனையாக இருக்கலாம்.
  • தமிழில் நன்றாகப் பேச, எழுதப் பயிற்சி
  • ஆங்கிலத்தில் படித்துப் புரிந்து கொள்ள, நன்றாகப் பேச, ஓரளவுக்கு எழுதப் பயிற்சி
  • எந்தக் கூட்டத்திலும், யார் முன்னாலும் நாக்கு தொண்டைக்குள் மாட்டிக்கொள்ளாமல் தைரியமாக எழுந்து நின்று பேசக்கூடிய தன்னம்பிக்கை
  • அடிப்படையான கணினி அறிவு (உலாவி, மின்னஞ்சல், கூகிள் தேடல், வெட்டி ஒட்டல்...)
  • வோர்ட் பிராசஸிங் திறன். நன்கு அழகாக ஒரு ரிப்போர்ட் எழுதுவது (தமிழிலோ, ஆங்கிலத்திலோ)
  • பிரசெண்டேஷன் திறன். பவர்பாயிண்ட் அல்லது அதுபோன்ற மென்பொருளில் ஒரு குறிப்பிட்ட கருத்தை அழகாக வெளிக்கொணர்வது
இதை ஒரு வருட காலத்துக்குள் மிக அழகாகச் சொல்லித் தரலாம். குறைந்த பட்சக் கட்டணமாக ரூ. 2,500 முதல் ரூ. 5,000 வசூலிக்கலாம். UGCயும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்.

5 comments:

  1. //இதை ஒரு வருட காலத்துக்குள் மிக அழகாகச் சொல்லித் தரலாம். குறைந்த பட்சக் கட்டணமாக ரூ. 2,500 முதல் ரூ. 5,000 வசூலிக்கலாம். UGCயும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்.//

    UGC இல்லாமல் செய்வது நல்லதுதான், தனியார் வழியாக செய்வது சிறப்பு தான். ஆனால், நீங்கள் சொல்லும் இந்தத் தொகைக்குச் செய்ய முடியாது. ஒரு வருடத்திற்கு ஒரு மாணவரிடமிருந்து 5000 வசூலித்தால், தலைக்கு மேல் ஆகும் செலவெல்லாம் போக, ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் (அதிகபட்சம்) மிஞ்சும். ஒரு மாதத்திற்கு பத்தாயிரம் சம்பளம் கொடுக்கக் கூடப் போதாது (on average, accounting for multiple teachers, and multiple class schedules).

    நீங்கள் சொல்லும் திறமைகளைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்குத் திறன் படைத்தவர்களை இந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த முடியாது. Even if you do this as part time/ evening class programs, I doubt if you will be able to find skilled instructors for hire for this money, and consequently, I doubt if the private sector will do an efficient/adequate job with this mission.

    ReplyDelete
  2. ஸ்ரீகாந்த்: நான் இதைப் பகுதிநேரக் கல்வியாக மட்டும்தான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாணவருக்கும் நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் ஆசிரியர் மூலம் பயிற்சி. இரண்டு மணிநேரம் பிராக்டிகல்.

    ஏற்கெனவே இருக்கும் பள்ளிக்கூடங்களை, கல்லூரிகளை மாலை நேரம் வாடகைக்கு எடுத்து இரண்டு அல்லது மூன்று செஷன்கள் நடத்தலாம். இதனால் இடத்துக்கு என்று தனியாக, அதிகமாக செலவாகாது.

    பகுதிநேர ஆசிரியர்கள் - பல்வேறு தொழில்களில் உள்ள, விருப்பம் கொண்டவர்களைப் பிடித்து அவர்களை முதலில் தயாரித்து, பின்னர் அவர்கள்மூலம் கல்வியை அளிக்கவேண்டும்.

    இதை எளிதாகச் செய்யலாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் செய்யக்கூடிய விஷயம் இது என்று தோன்றுகிறது. நான் குறிப்பிட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் கல்வி பலருக்கும் போய்ச் சென்றடையாது. விளைவு மோசமாகத்தான் இருக்கும். அதனால் துறைத் தேர்ச்சியையும் கொடுக்கவேண்டும், லாபமும் சம்ம்பாதிக்கவேண்டும், மிக அதிகமான அளவு மாணவர்களையும் சென்றடைய வேண்டும் - எப்படி என்பதுதான் challenge.

    ReplyDelete
  3. பத்ரி, நீங்கள் கூறுவதில் பலவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உ-ம்,

    //இப்பொழுது இருக்கும் நம் கல்வித்துறையின் வழியே வரும் மாணவர்களுக்கு

    * தன்னம்பிக்கையோடு பேசத் தெரிவதில்லை//
    இது பண்பாடு / கலாச்சாரம் சார்ந்தவொன்று. வயதில் சிறியவர்கள் வாய் திறக்கக்கூடாது என்ற காலாவதியாகிப் போன சிந்தனைகளால், வாய் மூடி, கை கட்டியிருப்பதே உத்தமம் என்ற முடிவுக்கு இளைய தலைமுறை வரும்போது, அவர்களது தன்னம்பிக்கை அடிபட்டுப் போவதில் வியப்பில்லை.

    // * தமிழோ, ஆங்கிலமோ - ஏதோ ஒரு மொழியில்கூட சரளமாக எழுதத் தெரிவதில்லை//
    இதை ஒப்புக்கொள்கிறேன். நம் சூழலில் சாத்தியப்படும் ஆசிரியர் - மாணவர் விகிதத்தினால், ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்திலும் தனிகவனம் செலுத்த இயலாமல் போவதால் ஏற்படும் விளைவே இது. ஆசிரியர்கள் / பள்ளிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவது, மற்றும் அவ்வாசிரியர்களின் பங்களிப்பைக் கணித்து, வேண்டிய திருத்த நடவடிக்கைகள் எடுப்பது,் போன்றவற்றால்தான் இதைச் சரிபடுத்த முடியும்.

    //* கூர்ந்து கவனித்து, உலகில் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளத் தெரிவதில்லை
    * ஆழ்ந்து சிந்தித்து, பிரச்னை என்ன என்பதைப் புரிந்து கொள்ளத் தெரிவதில்லை
    * பிரச்னைக்கான தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசிப்பதில்லை
    * Presentation skills சிறிதுகூட இல்லை//

    இதில் பெரும்பாலானவை, பட்டறிவால் பெறப்படும் ஆற்றல்களாகும். இவற்றிற்கு கல்வி முறையை குற்றம் கூறிப் பிரயோசனமில்லை. சமூகத்தின் மனோபாவங்கள் மாற வேண்டும். மாணவர்களைப் பகுதி நேர வேலைகளில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வமும் வாய்ப்புகளும் வசதிகளும் உண்டாக வேண்டும். கருத்துச் சுதந்திரம், கட்டுப்பாடுகளற்று தம்மை வெளிப்படுத்தும் சூழல், ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். இவையனைத்தையும் செய்த பிறகு, அவர்களது presentation skillஐ கணித்துப் பாருங்கள்.

    //இன்று மாணவர்களுக்குத் தேவை:

    * ஏதாவது ஒரு துறையில் மிகவும் அடிப்படைத் திறன்; அதற்கு மேல் வேண்டியதில்லை. இது கணினி தொடர்பாக இருக்கலாம். பற்று/வரவு கணக்கு எழுதுவதாக இருக்கலாம். பொருள் விற்பனையாக இருக்கலாம்.//

    தற்போது நாம் பின்பற்றும் மெக்காலேயின் (Lord Macauley) கல்வித் திட்டம், 'குமாஸ்தாக்களை உருவாக்கும் திட்டம்' என்று விமர்சிக்கப்படுகிறது. நீங்கள் முன்வைப்பது அதை விடக் குறுகிய பார்வையைக் கொண்டிருக்கிறது. பாடத்திட்டத்தைக் குறுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. பரந்த அறிவை வழங்குவதாகவே அது இருக்க வேண்டும். Non-conventional போதனை முறைகள் ஆராயப்பட வேண்டும் e.g. do-it-yourself projects, non-paper-based educational media (TV/Radio/Casettes/CDROMs) etc. இவற்றால், குறுகிய உழைப்பில் / நேரத்தில் அதிக அறிவைப் புகட்டும் சாத்தியங்கள் ஆராயப்பட வேண்டும்.

    ReplyDelete
  4. //தற்போது நாம் பின்பற்றும் மெக்காலேயின் (Lord Macauley) கல்வித் திட்டம், 'குமாஸ்தாக்களை உருவாக்கும் திட்டம்' என்று விமர்சிக்கப்படுகிறது. நீங்கள் முன்வைப்பது அதை விடக் குறுகிய பார்வையைக் கொண்டிருக்கிறது.//

    I think Badri has since clarified that he sees his proposal as a part-time effort that supplements (and not substitutes) the general/wholistic education that you are referring to.

    Having said that I do agree with Srikanth that it is not as easy as Badri makes it out to be.

    ReplyDelete
  5. Anonymous,

    //I think Badri has since clarified that he sees his proposal as a part-time effort that supplements (and not substitutes) the general/wholistic education that you are referring to.//

    I think Badri is the best person to clarify his stand. But from the post it seemed to me that he is in fact proposing his curriculum as a substitute and not as a supplement to mainstream education. Note the reference to 'drop-outs / semi-skilled' (in the VC's quote) which by inference means that his proposal is for persons who do not have access to the 'wholistic/mainstream education'.

    My contention is that 'wholistic education' is not feasible with classroom based lessons alone. Unless the students are facilitated to take up responsibilities like part-time jobs/apprenticeships, and given the freedom to think 'out-of-the-box' (sorry about the cliche) and express such thoughts without fear, we may not see much of a change in terms of their readiness to take on challenging jobs. I am also inclined to think that imparting of specialized knowledge in classrooms is one of the expensive options. In comparision, it may not cost much to produce high quality content in a broadcastable, reproducible medium like Video and make it available to a large number of students either as CDs or broadcast on TV.

    ReplyDelete