சென்னை போலீஸ் கமிஷனர் ஆணையின்படி சென்னையில் உள்ள இணைய மையங்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளின்படி நடக்கவேண்டும்.
1. ஒவ்வொரு இணைய மையமும் காவல்துறையிடம் பதிவு செய்துகொள்ளவேண்டும். பதியாத மையங்கள் தொழில் நடத்தமுடியாது. (ஆனால் பதிவது எளிது. வெறும் ரூ. 25தான் கட்டணம். விண்ணப்பித்த ஓரிரு நாள்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும்.)
2. பதிவு செய்துள்ள மையங்கள் பதிவேடு ஒன்றை வைத்திருக்கவேண்டும். அந்தப் பதிவேட்டில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கையெழுத்திடவேண்டும். வாடிக்கையாளரின் பெயர், அவர் எந்தக் கணினியில் உட்காருகிறார்; எந்த நேரத்திலிருந்து எந்த நேரம் வரை அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறார் என்பது பதியப்படவேண்டும்.
3. வாடிக்கையாளரின் பெயர், முகவரி ஆகியவை பதிவுசெய்யப்படவேண்டும். அவை சரியானவையா என்று பார்ப்பது இணைய மையத்தை நடத்துபவரது வேலை. அதாவது பிரவுசிங் செய்ய வருபவரிடம் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், (வாக்காளர் அடையாள அட்டை?) என்று ஏதாவது புகைப்படம் ஒட்டப்பட்ட, முகவரி எழுதப்பட்ட அடையாள அட்டை இருக்கவேண்டும். அப்படி ஏதும் இல்லாதவர்களை இணைய மையத்தில் பிரவுசிங் செய்ய அனுமதிக்கக்கூடாது(?).
4. ஒவ்வொரு கணினியிலும் ஒற்றுவேலை செய்யும் மென்பொருளை நிறுவவேண்டும். இந்த மென்பொருள் ஒருவர் எந்தெந்த இணையத்தளங்களுக்குச் செல்கிறார் என்ற தகவலை சேகரித்துக்கொள்ளும். இந்தத் தகவலையும், பதிவேட்டில் உள்ள தகவலையும் காவல்துறை கேட்கும்போது இணைய மையத்தினர் கொடுக்கவேண்டும்!
5. இணைய மையத்தில் மூடப்பட்ட கேபின்கள் கூடாது. அதாவது மறைவான பிரைவசி கூடாது.
6. பிரவுசிங் செய்ய வருபவர்கள் "தடை செய்யப்பட்ட" தளங்களைப் பார்க்கக்கூடாது. (எவை தடை செய்யப்பட்ட தளங்கள் என்று தெளிவாகச் சொல்லாவிட்டாலும் போர்னோகிராஃபி தளங்கள் இதில் அடக்கம் என்றுமட்டும் தெரிகிறது.)
இவைதான் நான் இதுவரையில் ஆங்காங்கே விசாரித்துத் தெரிந்துகொண்டது. காவல்துறை ஆணையை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. சென்னை நகர காவல்துறை சட்டம் 1888-ன்படி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்! 1888-ம் வருடச் சட்டத்தைப் பயன்படுத்தி 2006-ல் இணையத்தைக் கட்டுப்படுத்தும் விந்தைதான் என்னே!
இதைப்பற்றி ஆல்பர்ட் என்பவர் தன் பதிவில் எழுதியிருந்தார்.
மேற்படி வழிமுறைகளைப் புகுத்தியதற்கான காரணம் திருநெல்வேலியிலிருந்த ஒரு கணினி வழியாக குடியரசுத் தலைவருக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது இந்தக் கட்டுப்பாடுகள் மிகவும் அபத்தமாகத் தோன்றுகின்றன.
முதலில் நம் நாட்டில் புகைப்படம், முகவரியோடு இணைந்த அடையாள அட்டைகள் பலரிடமும் கிடையாது. அடுத்ததாக 'தீவிரவாதத்தைத் தடுக்கிறேன் பேர்வழி' என்று கிளம்பி மாரல் போலிசிங் வேலையையும் செய்திருக்கிறார் காவல்துறை ஆணையர். இவ்விரண்டையும் ஒன்று சேர்ப்பதின் நோக்கம் புரியவில்லை.
போர்னோகிராஃபி பார்ப்பதைத் தடுப்பது எந்தச் சட்டத்தின்கீழ் வருகிறது என்று சரியாகப் புரியவில்லை. இன்று போர்னோ எழுத்துகள் கடைகளில் புத்தகமாகக் கிடைக்கின்றன. போர்னோ சிடிக்கள் விடியோ லைப்ரரிகளில் கிடைக்கின்றன. சாஃப்ட் போர்ன் விடியோக்கள் நல்ல தரமான விடியோ டிஸ்டிரிப்யூட்டர்கள் வழியாகவே வெளியாகின்றன. நண்பர்கள் மூலமாகவும் ஸ்பாம் வழியாகவும் ஆண், பெண் நிர்வாணப் படங்கள் மின்னஞ்சலுக்கு வருகின்றன. இதையெல்லாம் தடுக்கவேண்டுமா என்பது ஒரு கேள்வி. தடுக்கவேண்டும் என்றால் எப்படிச் செய்யப்போகிறார்கள் என்று அடுத்த கேள்வி. சைபர் கஃபேயில் பார்ப்பதைத் தடுக்கலாம். அலுவலகங்களிலும் வீடுகளிலும் பார்ப்பதை, படிப்பதை, பகிர்வதைத் தடுக்க முடியுமா? முடியும் என்றால் எந்த சட்டத்தில் மூலம்?
அடுத்து சைபர் குற்றங்கள். ஒன்று இணையத்தைப் பயன்படுத்தி அனுப்பும் மிரட்டல் கடிதங்கள், cyber stalking, ஐடெண்டிடி திருட்டு போன்றவை. அடுத்தது இணையம் மூலம் பணத்தைத் திருடுவது, ஏமாற்றுவது, கிரெடிட் கார்டு மோசடி ஆகியவை. மூன்றாவது இணையம் வழியாக வைரஸ்களைப் பரப்புவது, ஸ்பாம் அனுப்புவது போன்றவை.
இதில் மிரட்டல் கடிதங்களை எப்படிக் கையாள்வது, எந்த அளவுக்கு சீரியசாக எடுத்துக் கொள்வது ஆகியவற்றை காவல்துறையினர் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியத் தபால் துறை மூலமாகக்கூட குடியரசுத் தலைவருக்கு மொட்டைக் கடிதாசு மிரட்டல் அனுப்பமுடியும். அதனால் நாளை முதல் கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுபவர்கள் அனைவரும் புகைப்படம், முகவரி உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தால்தான் அவர்களது கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை அறிவிக்குமா? கணினி என்ற உடனேயே அபத்தமான விதிகளைக் கொண்டுவருகிறார்கள்.
இணையம் வழியான பிற மோசடிகளைக் கையாள காவல்துறை தனிப்படைகளை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. இணையம் வழியாகக் கிடைக்கும் வரி வருமானத்தில் ஒரு பகுதியை காவல்துறையில் இந்தத் தனிப்படைக்காகச் செலவழிக்கலாம்.
பிரவுசிங் மையங்கள் பெரும்பாலும் சிறுதொழில்கள் ரகத்தைச் சேர்ந்தவை. அவர்களே இன்று சரியும் கட்டணத்தால் லாபமா/நஷ்டமா என்ற நிலையில் இருக்கிறார்கள். சிஃபி ஐவே, ரிலையன்ஸ் வெப்வோர்ல்ட்/வெப்எக்ஸ்பிரஸ் போன்றவை தவிர மீதி உள்ளவர்கள் அமைப்புரீதியாக வலு இல்லாதவர்கள். இவர்களால் காவல்துறை ஆணையை எதிர்த்துப் போராடமுடியாது. இவர்களது வருமானம் குறைந்து கொஞ்ச நாளில் காணாமல் போகப்போகிறார்கள்.
சைபர் குற்றங்கள் பெருகியுள்ள ஐரோப்பிய நாடுகளில்கூட சென்னை காவல்துறை அறிவிப்பைப்போன்ற மோசமான ஆணைகள் கிடையாது. இந்த ஆணை எதிர்க்கப்படவேண்டிய இன்று. இதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடியதான குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளை, சட்டமன்றம் மூலம் உருவாக்கி, விதிக்கவேண்டும்.
முக்கியமாக இந்த விதிகள் தனியாரது அந்தரங்கத்தை மதிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். மூடப்பட்ட கேபின்கள் அவசியம். ஒருவர் உலாவும் அத்தனை இணையத்தளங்களையும் கண்காணிக்கக்கூடாது. அதை காவல்துறைக்குத் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. போர்னோகிராஃபி தளங்களைப் பார்க்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆனால் இது தேர்தலுக்கு முன்னதாக நடைபெற வாய்ப்பில்லை. தேர்தலுக்குப் பிறகாவது?
1888-ம் வருடச் சட்டங்களைத் தூக்கி உடைப்பில் போடவேண்டும்.
Sunday, March 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
இதன் தொடர்பாக அமெரிக்க அரசிற்கும் கூகிளுக்கும் நடக்கும் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் பற்றிய விவாதம் நோக்கத் தக்கது.
ReplyDeleteMY comments about the rules
ReplyDelete1. This is must for any business
2. OK
3. Practically Impossible. You can even enter into Secretariat without a Passport
4. Intruding Privacy
5. I welcome this. Of late browsing centres are being used for activities other than browsing.
6. WHat is the banned website
இந்தியத் தபால் துறை மூலமாகக்கூட குடியரசுத் தலைவருக்கு மொட்டைக் கடிதாசு மிரட்டல் அனுப்பமுடியும். அதனால் நாளை முதல் கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுபவர்கள் அனைவரும் புகைப்படம், முகவரி உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தால்தான் அவர்களது கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை அறிவிக்குமா? கணினி என்ற உடனேயே அபத்தமான விதிகளைக் கொண்டுவருகிறார்கள்.
Well said !!!
பத்ரி
ReplyDeleteஇந்த விஷயத்தைப் பற்றி எழுதியதற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல - தபாலில் மிரட்டல் அனுப்புவதைத் தடுக்க - தபால் போடுபவர் போட்டோ அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்; பொதுத் தொலைபேசி(PCO) பயன்படுத்த வருபவர் பாஸ்போர்ட் காட்ட வேண்டும் என்றெல்லாம் லூசுத்தனமான கட்டளைகள் போடுவார்கள் போல!
அந்த இணைய சேவை உரிமம் வாங்குவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றைப் படிக்க நேர்ந்த்து! ஆடிவிட்டேன் ஆடி!
உலாவியின் cache(Temporary files) ஆறு மாதங்களுக்கு அழிக்காமல் வைத்திருக்க வேண்டும், Download history வைத்திருக்க வேண்டும், மையத்தின் கணிணியில் ஏதாவது 'வன்பொருள்' பாகங்களை மாற்றினால் - அந்தப் பழைய/புதிய பாகங்களின் Configuration, ID எல்லாம் குறித்து வைக்க வேண்டும் என ஏகப்பட்ட அலம்பல்கள்!
நீங்கள் சரியாகக் குறிப்பிட்டது போல - சிறுதொழில் முனைவோர் போல இணையதள மையம் நடத்துவோரைப் பார்க்க வேண்டும். இப்படியெல்லாம், இஷ்டத்துக்கு, நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளைப் போட்டால் இழுத்து மூடிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.
அப்புறம், மையத்துக்கு வருகிற பெண்களிடம் கூட முகவரி தரச் சொல்லிக் கேட்பதில் உள்ள சிக்கல்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை!
ஃபிகர்களை 'உஷார்' பண்ண விரும்பும் 'ரோமியோக்கள்' - அப்பெண்கள் இணைய மையத்தில் தந்திருக்கும் முகவரியை வைத்து தொலைபேசி எண்களை சுழற்ற ஆரம்பித்துவிடக் கூடும்!
இப்படிப் பல சிக்கல்கள்.
2002 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதி மன்றத்தில் அப்போதைய - பா.ஜ.க அரசு - இணைய மையங்களின் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது - இணையதளப் பயன்பாட்டை விரிவாக்கும் நோகத்திற்கே எதிரானது என்றும், அமேரிக்காவிலேயே இது போன்ற கட்டுப்பாடுகள் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு கைவிட்டுவிட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து தமிழக காவல் துறைக்கு யார் விளக்குவது?! 23 ஆம் தேதிக்குப் பிறகு புதிய காவல்துறை ஆணையாளர் வரும் போது சொல்லலாம்! :)
First, I thought you were talking about a "Talibanised" place. Then the heading said it is Chennai.
ReplyDeleteLooks like the tamilnadu/Chennai police is busy in intruding others' privacy than worrying about the problems it has with its own squad starting from bribe to Jeyalakshmi.
சமீபத்துலே சென்னையில் ப்ரவுசிங் செண்ட்டர்களிலே இந்த அறிவிப்புகளை ஒட்டி இருந்ததைக்
ReplyDeleteகவனிச்சேன்.
2 வது பத்தியில் சொன்ன அத்தனையும் ஃபாலோ செய்யவேண்டி இருந்தது.
காவல்துறை ஆணைன்னு போட்டிருந்தது.
அதுலே இவ்வளவு 'விஷயம்' இருக்கா?
மிக முட்டாள்தனமான விஷயம். கடந்த முறை ஊரில் இருக்கையில், பெயர், முகவரி, தொலைபேசி எண்ணை எழுதுங்கள் என்று இணைய உலாவி மையங்களில் பெரும் இம்சை - திருநெல்வேலி அருகிலிருந்து முதல்வருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்படதென்று. எலிக்குப் பயந்து ஊரைக் கொளுத்துவதுபோலத்த்தான் இது. ஏதோவொரு வலைப்பதிவிலோ பின்னூட்டத்திலோ படித்தமாதிரி, மின்னஞ்சலை ப்ரிண்ட்-அவுட் எடுத்து கெஸட்டட் அலுவலரிடம் attestation வாங்கிக்கொண்டு வா" என்பது மாதிரித்தான் தோன்றுகிறது. நிஜமாகவே எதையாவது செய்யவேண்டுமென்று நினைத்தால் இந்த மாதிரி லூசுத்தனமாகச் செய்வதைவிட உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறதென்று நினைக்கிறேன்.
ReplyDelete