Friday, April 10, 2009

கோதாவரி ஹாஸ்டல் திருவிழா


நேற்று ஐஐடி மெட்ராஸ், கோதாவரி ஹாஸ்டல் மாணவர்கள் அவர்களது ஹாஸ்டல் ஆண்டு விழாவுக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள்.

எல்.கே.ஜியாக இருந்தாலும் சரி, ஐஐடியாக இருந்தாலும் சரி, ஆண்டு விழாக்களுக்குத் தலைமை தாங்குவது போன்ற கொடுமை வேறு எதுவும் கிடையாது. ஒப்புக்கு நாலு பேச்சு பேசவேண்டும். நான்கைந்து பேருக்குப் பரிசுகள் தரவேண்டும்.

எல்.கே.ஜி குழந்தைகளைக்கூட கதை சொல்லி ஈர்த்துவிடலாம். ஐஐடியில் கதைகள் சொன்னாலும் எடுபடவில்லை. இந்தப் பையன்களுக்கு என்னதான் பிடிக்கிறது என்றே தெரியவில்லை. ஏதோ கொஞ்ச நேரம் பேசினேன். பிறகு அவசர அவசரமாகப் பரிசுகள் கொடுத்துவிட்டு, ‘கலை நிகழ்ச்சிகளை’ கொஞ்சமாகப் பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டேன்.

கலை நிகழ்ச்சிகள் என்னவோ, எல்.கே.ஜி போலவேதான் இருந்தன. தமிழ் சினிமா, தெலுங்கு சினிமாப் பாடல்களுக்கு இரண்டு ‘புதுமுகங்கள்’ (முதலாம் ஆண்டு மாணவர்கள்) இடுப்பை வளைத்து ஆட்டம் போட்டனர். தாற்காலிக மேடையில் விரித்திருந்த துணி தடுக்கி கீழே விழுந்துவிடுவார்களோ என்று கவலையாக இருந்தது. ஒரு பையன் தடுக்கினாலும் சுதாரித்துக்கொண்டு தொடர்ந்து ஆடினான். பிறகு ஹெவி மெட்டல் மேற்கத்திய இசை. இங்கு எல்.கே.ஜி மாணவர்களே தேவலாம் என்றாகிவிட்டது. காட்டுக் கூச்சலே இசையாக, அதை மேலும் லட்சம் டெசிபெல்லாகப் பெருக்க ஆம்ப்ளிஃபையர்கள்.

இசை நிகழ்ச்சி தொடரும்போது, சமயோஜிதமாக ஹாஸ்டல் வார்டன் சாப்பிட அழைத்துப்போய்விட்டார். ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் ஏர்கண்டிஷனிங் (ஆர் அண்ட் ஏசி) பேராசிரியர் ஒருவர்தான் ஹாஸ்டல் வார்டன்களின் குழுத் தலைவர். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, நான் படித்தபோது யார் ஆர் அண்ட் ஏசி பாடம் எடுத்தார்கள் என்பது. சுத்தமாக நினைவில்லை.

***

கோதாவரி மட்டுமல்ல. ஐஐடி மெட்ராஸ் ஹாஸ்டல்கள் அனைத்துமே நிறைய மாறிவிட்டன. இரண்டாம் மாடிக்கு மேல் ஒரு மூன்றாம் மாடி வந்துவிட்டது. கிழக்கு-மேற்காக அறைகள் இருக்காது; அவற்றையும் மாற்றி மூன்று மாடிகளிலும் அங்கெல்லாம் அறைகளைக் கொண்டுவந்துவிட்டனர். ஹாஸ்டலில் மெஸ் கிடையாது. (இரண்டே இரண்டு பிஜி ஹாஸ்டல்களில் மட்டும் மெஸ் பழையபடி நடக்கிறது.) வெளியே பல உணவகங்கள் அடங்கிய ஒரு தனி இடமே வந்துவிட்டதால், மாணவர்கள் அங்கே சாப்பிடுகிறார்கள்.

பையன்கள் ஹாஸ்டலுக்குள்ளே வார்டன் இருக்கும்போதே சற்றே மறைந்து, ஆனால் தைரியமாக தம் அடித்துக்கொண்டிருந்தனர். பல பையன்களும் தங்கள் பெண் நண்பிகளுடன் வந்திருந்தனர். இதெல்லாம்தான் வளர்ச்சி.

கடைசி வருட மாணவர்கள் அமெரிக்கா ஓடுவதற்கு அவ்வளவாக ஆசைப்படுவதில்லை என்று தெரிந்தது. பலரும் ஓரிரு வருடங்கள் இந்தியாவிலேயே வேலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளனர். ஆனாலும் உள் மனத்தில், மேற்படிப்பு படிக்க அமெரிக்கா போகவேண்டும் என்ற ஆசை உள்ளது என்று தெரிகிறது. இரண்டு வருடங்கள் சம்பாதித்தபிறகு போகலாம் என்று நினைக்கிறார்கள்.

ஐஐடி மெட்ராஸ், மூன்று அல்லது நான்காவது இடத்தில்தான் உள்ளது என்றார் கோதாவரியின் தற்போதைய வார்டனும் வேதியியல் துறை பேராசிரியருமான செல்வம். கான்பூர், மும்பை முதல் இரண்டு இடங்களில் உள்ளனவாம். ஆராய்ச்சியில் போதவில்லை போல.

மற்றபடி, மாணவர்கள் கணக்கு, கம்ப்யூட்டர் சிமுலேஷன், தியரி ஆகியவற்றில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். உடம்பு வணங்கி, கையால் ஒரு பொருளைத் தயாரிக்கும் ஆர்வம் இல்லை என்று நன்றாகத் தெரிகிறது. அது வராதவரையில் ஐஐடியின் உபயோகம் குறைவுதான்.

இன்று நம் நாடும் சமுதாயமும் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. அதில் பலவற்றை தொழில்நுட்பத்தின் உதவியால் வெல்லமுடியும். ஆனால், அப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் ஆர்வம் நான் படிக்கும்போதும் ஐஐடி மாணவர்களிடம் இல்லை; இன்றும் இல்லை. இது வருத்தமான விஷயம்.

4 comments:

  1. //ஹாஸ்டலில் மெஸ் கிடையாது. (இரண்டே இரண்டு பிஜி ஹாஸ்டல்களில் மட்டும் மெஸ் பழையபடி நடக்கிறது.) வெளியே பல உணவகங்கள் அடங்கிய ஒரு தனி இடமே வந்துவிட்டதால், மாணவர்கள் அங்கே சாப்பிடுகிறார்கள்.//

    central library அருகே centralised mess கொண்டு வந்துள்ளார்கள். எல்லா விடுதி மாணவர்களும் ஒரே இடத்தில் உண்ணலாம்.

    ReplyDelete
  2. படிப்பை தவிர வேறு எதிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதில்லையோ?

    ReplyDelete
  3. //படிப்பை தவிர வேறு எதிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதில்லையோ?//

    மருத்துவக்கல்லூரிகளில் கூட தற்சமயம் படிப்பை தவிர வேறு திறனை வளர்ப்பதில் ஆர்வம் குறைவதை நான் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  4. //உடம்பு வணங்கி, கையால் ஒரு பொருளைத் தயாரிக்கும் ஆர்வம் இல்லை என்று நன்றாகத் தெரிகிறது//

    உடம்பு வணங்கி பொருள் தயாரிப்பவர்க்கு எந்தவிதமான வாய்ப்புகள் இருக்கிறது,குறிப்பாக தமிழகத்தில்? நம் மக்களை மென்பொருள் விற்பன்னர்களாகவே கருதுகிறார்கள்.

    இன்னும் சிறிது காலத்தில் தேவைகள் மாறும்போது அடித்துக்கோ,பிடித்துக்கோவென்று எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு மற்ற துறைகளில் முனைப்பைக் காட்டுவோம்.

    இந்த மென்பொருள் புரட்சி ரயிலை சரியான நேரத்தில் பிடித்ததற்கு சற்று கொண்டாடுவோம்.

    ரா.கிரிதரன்.
    http://beyondwords.typepad.com

    ReplyDelete