டியானன்மென் படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரெஸ்திரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட்களால் சோவியத் ரஷ்யா உடைந்ததுபோல, ஒரு டியானன்மென்னால் சீனாவும் அழிய நேரிடலாம் என்று உலகம் நினைத்தது. ஆனால், சீனா, கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு, டியானன்மென் எழுச்சியை அடக்கியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றையாட்சியில் இருந்த சீனாவில் பலதரப்பட்ட மக்களும் ஆட்சியின் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஜனநாயகத்தை விரும்பியவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் எதிரிகள் என்று பலர்.
இவர்கள் அனைவரும் பெய்ஜிங்கின் டியானன்மென் சதுக்கத்தில் குழுமி, இடத்தை விட்டு அகல மறுத்து பொருளாதாரத்திலும் அரசியல் முறையிலும் சீர்திருத்தம் வரவேண்டும் என்று போராடினார்கள். ஆனால், ஒருங்கிணைந்த தலைமை இல்லாத காரணத்தாலும், கொள்கையில் முழுமையான தெளிவு இல்லாததாலும், கம்யூனிஸ்ட் கட்சி ராணுவத்தை ஏவி போராட்டக்காரர்களை கொன்று குவித்ததாலும், ‘புரட்சி’ முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை உடனடியாகச் செயல்பட்டு, 1990களில் மாபெரும் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது. ஜனநாயக முறை வழியாக அல்ல; பொருளாதாரத்தில் தாராளமயமாக்கலைக் கொண்டுவருவதன்மூலம். மக்களின் வசதி வாய்ப்புகள் பெருமளவு பரவின. உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு வெகுவாக அதிகரித்தது. நகர மக்கள் செல்வத்தில் புரண்டனர்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இந்தக் காலகட்டத்தில்தான் சீனா வெகுவாக முன்னேறியது. அதிகமான சாலைகள் போடப்பட்டன. நகர வேலைவாய்ப்புகள் அதிகமாகின. ஆனால் இந்தக் காலகட்டத்தில்தான் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் சுரங்கங்களில் சாவுகளும் கலப்பட ஊழலும் பெருகின. எய்ட்ஸ் ஊழல் என்ற மாபெரும் ஊழலில் ஏழை மாகாணம் ஒன்றில் ரத்தம் சேர்க்கும் மோசடியில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு எச்.ஐ.வி கிருமி பரப்பப்பட்டது.
கம்யூனிஸ்ட் சீனா, ஜனநாயக இந்தியா... இரண்டையும் இன்று ஒப்பிடாதவர்களே கிடையாது. இரண்டில் எந்த நாடு சிறந்த நாடு? எந்த நாடு மோசமான நாடு? எந்த வகையில் ஒரு நாடு மற்றதைவிடச் சிறந்தது? ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா?
இந்தியர்களாகிய நமக்கு சீனாவைப் பற்றித் தெரிந்தது மிகவும் குறைவு. சமீபத்தில் சீனா பற்றி வந்துள்ள புத்தகங்களில் மிகவும் சிறந்தது பல்லவி அய்யர் எழுதியுள்ள Smoke and Mirrors: An Experience of China. சீனாவில் ஐந்தாண்டு காலம் வாழ்ந்து, ஆசிரியராக, பத்திரிகையாளராக, மொழிபெயர்ப்பாளராக, தொழில் துறை ஆலோசகராக இருந்தவர். தனது அனுபவங்கள் வாயிலாக சீனாவைப் பற்றி நமக்குச் சொல்லுகிறார். சீனாவையும் இந்தியாவையும் பல இடங்களில் ஒப்பிட்டு இரு பக்கங்களிலும் உள்ள குறை நிறைகளை சீர்தூக்கி அலசுகிறார். ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பாக ஆங்கிலத்தில் வந்த இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழிமாற்றத்தை கிழக்கு பதிப்பகம் இந்த மாதம் வெளியிடுகிறது. “சீனா: விலகும் திரை” என்ற தலைப்பில் வெளியாகும் இந்தப் புத்தகம், 368 பக்கங்கள் கொண்டது; ரூ 200 விலை. ராமன் ராஜா, மிக அழகாக இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
டியானன்மென் விவகாரம், திபெத், சீனாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையே உள்ள உறவு, விரிசல், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது பெய்ஜிங்கில் ஏற்பட்ட மாற்றங்கள், பெய்ஜிங்கின் பாரம்பரிய ஹுடாங்கில் ஆசிரியர் வசித்தபோது சீன சமூகத்தை அருகில் இருந்து பார்த்தது, சீனாவின் உணவு, அதை எப்படி சைவ உணவு சாப்பிடும் இந்தியர்கள் எதிர்கொண்டார்கள், சீனாவில் இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் மத சுதந்தரம், சீனாவில் தொழில்முனையும் திறன், சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்படி சீனாவை அடக்கி ஆளுகிறது, அதே சமயம் எப்படி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர முன்வருகிறது என்பது, சீனாவில் ஆண்-பெண் உறவு, சமூகத்தில் பெண்களின் பங்கு என்று பலதரப்பட்ட விஷயங்களை அலசி ஆராய்கிறார்.
சீனா என்ற மாயத்திரைக்குப் பின்னால் இருக்கும் நாட்டையும் மக்களையும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் எனக்கு உதவியது.
விண்திகழ்க!
4 hours ago
பத்ரி, இந்தப் புத்தகத்தை எப்படி வாங்க?
ReplyDeleteகௌசிக்
கௌசிக்: இந்தப் புத்தகம் திங்களன்றுதான் அச்சுக்குச் செல்கிறது. அதிலிருந்து 7-10 நாள்கள் ஆகும் கையில் கிடைக்க. வந்தவுடனேயே என் வலைப்பதிவில் தகவல் தருகிறேன்.
ReplyDeleteவரவேற்பிற்குரிய வெளியீடு. சீனாவைப் பற்றி வெளியில் தெரியாதவை எவ்வளவோ உள்ளன போலுள்ளது. ஆட்கடத்தல், ஆட்கள் காணாமல் போதல் போன்றவை அங்கு சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சங்கதிகள் என்று சீன நபரொருவர் இன்று கவலையைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.
ReplyDeleteஇதைப்போல் வடகொரியா, ஈரான், பர்மா(மியான்மர்), மங்கோலியா, காங்கோ, நேபாள்.. பற்றியும் வந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteபத்ரி, புத்தகம் வந்துவிட்டதா?
ReplyDeleteகௌசிக்
கௌசிக்: புத்தகம் இன்று கையில் கிடைக்கிறது. நாளை முதல் கடைகள், புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லத் தொடங்கும்.
ReplyDelete