Saturday, August 01, 2009

அணு நீர்மூழ்கிக் கப்பல்

இந்தியா அணு நீர்மூழ்கிக் கப்பல் (Nuclear Submarine) ஒன்றை உருவாக்கி, கமிஷன் செய்துள்ளது. அதன் பெயர் ஐ.என்.எஸ். அரிஹந்த். இது தொடர்பாக, சிங்கப்பூர் வானொலி என்னிடம் ஓரிரு வார்த்தைகள் கேட்டிருந்தனர். அப்போதே இதைப் பற்றி ஒரு பதிவு எழுத எண்ணியிருந்தேன்.

அணு நீ.க என்றால், அது அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பயன்படுவது என்று நினைக்கக்கூடாது. அந்தக் கப்பலுக்குத் தேவையான சக்தியை ஓர் அணு உலை கொடுக்கும். அவ்வளவுதான். அந்த நீ.கப்பல், கடலுக்கு அடியில் வெகு நாட்கள், ஏன் மாதங்கள், வருடங்கள் இருக்கமுடியும். சில கிலோ அணு எரிபொருளைக் கொண்டு ஓரிரு ஆண்டுகளுக்குத் தேவையான அளவு சக்தியை அதனால் உருவாக்கிக்கொள்ளமுடியும்.

குடிப்பதற்கான நல்ல நீரை கடல் நீரிலிருந்து சுத்திகரித்துப் பெற்றுக்கொள்ள முடியும். சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனைக்கூட எலெக்ட்ராலிசிஸ் மூலம் நீரை உடைத்து பெற்றுக்கொள்ள முடியும். அதனால் வெளியே தலையைக் காட்டாமல் பல மாதங்கள் நீருக்கு அடியில் இருக்கலாம். தேவையான அளவு உணவு மட்டும் இருந்தால் போதும். அந்த நீ.கப்பல் எதற்காகவும் கரையைத் தேடி வரவேண்டிய அவசியம் இல்லை. அதனால் பல மாதங்கள் கடலுக்கு வெகு ஆழத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடமுடியும்.

இதற்கிடையில், இந்த நீ.கப்பல் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என்றும் இது இந்தியாவின் வறட்டு ஜம்ப அறிவிப்பு என்றும் சில மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருக்கலாம். இப்போதைக்கு, கப்பலின் உள்ளே வைக்கும் அளவுக்கு சிறியதான அணு உலையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அவ்வளவே. ஆனால் அதுவே மாபெரும் நுட்ப சாதனைதான். இந்தக் கப்பல் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லவேண்டுமா; அது பிற நாடுகள்மீது அணுகுண்டுகளை வீசவேண்டுமா என்பது இப்போதைக்குத் தேவையில்லாத கேள்விகள்.

ஒரு அணு நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுதம் இருக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. அத்துடன், சில ஜைனர்கள், அந்தக் கப்பலுக்கு அரிஹந்த் என்று அவர்களது அருகக் கடவுள் பெயரை வைத்ததால் கோபம் கொண்டுள்ளனர். அமைதி விரும்பிகள் ஜைனர்கள். அஹிம்சைவாதிகள். இந்த அணு நீர்மூழ்கிக் கப்பலும் அமைதிப் பணிகளுக்கு மட்டுமே (அணு ஆயுதம் ஏதும் இல்லாமல்) பயன்படும் என்று நாமும் நம்புவோம்.

7 comments:

  1. பகிர்விற்கு நன்றி பத்ரி.

    ரொம்ப நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அறிவியல் பிளாக்கில் ஏன் யாருமே எழுதுவதில்லை..??

    ReplyDelete
  2. அரிஹந்த் என்றால் எதிரியை அழிப்பவர் என அர்த்தம். நாம் ஏன் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் ஆயுதங்கள் இல்லாமல் சுற்ற வேண்டும் நம்ப வேண்டும். அ.நீ.கப்பலகளின் முக்கிய உபயோகம் நாட்டின் பாதுகாப்பில், அதாவது அவை தரைக்கு வராமலேயே, ஏவுகணைகளை கொண்டு, தேவையானால் அதை எதிரி மீது ஏவலாம் என்பதுதான். அந்த முக்கிய உபயோகத்தை கைவிடுவது, மடத்தனம். மற்ற நாடுகள் - முக்கியமாக பாகிஸ்தான் - அ.நீ.கப்பலகளின் அந்த பயனைதான் இந்தியா நம்பியுள்ளது என எதிர்பார்க்கும்.

    ReplyDelete
  3. அருமையானதொரு கட்டுரை. ஜைனர்கள் விஷயம் எந்த பத்திரிகையிலும் இதுவரை வந்ததாக தெரியவில்லை. நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. ஆனால் இந்த நீ.மூ.கப்பல் உலக அளவில் 6-7 நாடுகளில் தான் உள்ளதாமே! அதைப் பற்றியும் சொல்லியிருக்கலாமே? நன்றி.

    ReplyDelete
  4. // இப்போதைக்கு, கப்பலின் உள்ளே வைக்கும் அளவுக்கு சிறியதான அணு உலையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அவ்வளவே. ஆனால் அதுவே மாபெரும் நுட்ப சாதனைதான். //

    கழிவுகளை கடலில் கொட்டிவிடலாமா ??

    ReplyDelete
  5. புருனோ: அணுக் கழிவுகள், கரியால் இயங்கும் மின் நிலையங்களில் உருவாகும் சாம்பல் போல, நொடிக்கு நூறு கிலோ என்று கிடைப்பது அல்ல! அது சாம்பலோ, புகையோ போல அல்ல. ஓர் உலோகக் கட்டி. அந்தக் கட்டி கதிர்வீச்சை முடித்து, அதில் பெரும்பாலான பகுதி வேறோர் உலோகமாக ஆகியிருக்கும்; அப்போதும் அது அதேமாதிரியான கட்டியாகவே இருக்கும். எரிபொருளை மீண்டும் மாற்றும்போது, இந்தக் கட்டியை வெளியே எடுத்துவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட யுரேனியத்தை மீண்டும் செலுத்துவார்கள். இந்த ‘அணுக் கழிவை’ பத்திரமாக எங்காவது மீண்டும் பிராசஸ் செய்யவேண்டும். இதை யாரும் கடலில் கொட்டப்போவதில்லை. மண்ணுக்கு வெகு ஆழத்தில் ஓரிரு கிலோமீட்டர்கள் கீழே(?) புதைக்கவேண்டும்.

    ReplyDelete
  6. மஸ்கிட்டோ மணிMon Aug 03, 08:03:00 PM GMT+5:30

    இந்திய போர் வீரர்களுக்கு தீரச்செயல்களுக்கான விருது ஒன்றின் பெயர் மகாவீர் சக்ரா. ஆகிம்சையையை போதித்த வர்த்தமான மகாவீரரின் பெயரால் எப்படி போர் விருது கொடுக்கலாம் என்று இதுவரை ஜைனர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை.

    அர்ஹன் பிபர்ஷி (RV 2.4.33.10) என்று ருத்ரனைப்போற்றும் வேத மந்திரம் ஒன்றும் உள்ளது (இதனை பல ஜைனர்களே தங்கள் சித்தாந்தத்தின் பழமையை நிரூபிக்க மேர்க்கோள் காட்டுவர்) .
    மகாவீரன் என்னும் வார்த்தையை போலவே அரிஹந்தும் ஒரு பொதுவான சொல் தான்.
    ஒரு கொலைக்கருவிக்கு அரிஹந்த் என்னும் பெயர் வைத்ததில் தவறு எதுவும் இல்லை என்றாலும் இதனை தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  7. அருமையான கட்டுரை. நீங்கள் குறிப்பிட்ட ஜைனர்களின் கோபம் எந்த பத்திரிகையில் வந்தது என்று தெரியவில்லை. நான் ஜைன பத்திரிகைகளையும் வாசிப்பவன். என்றாலும் நீங்கள் சொல்வது போல் அமைதி பணிக்கு பயன்படும் என்ற விதத்தில் வைத்திருக்கலாம்.

    அன்புடன்
    த.வர்த்தமானன்

    ReplyDelete