காசி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அவரது கேள்விகளுக்கான பதில்கள் கீழே.
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?
தேவையான அளவு இல்லை. தமிழில் தரமான தகவல் தளங்கள், செய்தித் தளங்கள், கருத்துத் தளங்கள், துறை சார்ந்த தளங்கள்/ பதிவுகள்/ களஞ்சியங்கள், கருத்துப் பரிமாற்ற மேடைகள் ஆகியவை இல்லை. முடிந்தவரை இவை தயாராவதை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் கணினியும் இணையமும் உள்ளவர்கள் தமிழில் அதிகமாகப் புழங்குவார்கள். தாங்களும் இந்தத் தளங்களுக்கு எழுதவேண்டும் (அல்லது இவை போன்ற தளங்களைத் தாமே தயாரிக்கவேண்டும்) என்று நினைப்பார்கள்.
2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
இல்லை. குறுஞ்செய்தி தமிழில் முடியாத நிலையே பெரும்பான்மைத் தமிழர்களுக்கு உள்ளது. மின்னஞ்சல் தமிழில் முடியும் என்றே பலருக்கும் தெரிவதில்லை. அரட்டை அடிப்பவர்கள் இன்னமும் குறைவு. மின்வணிகம் செய்வோர் அவ்வளவாகத்தமிழை எதிர்பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். அரசின் சேவைகளைப் பெறுவதில் பெரும் சுணக்கமே உள்ளது. அரசின் தளங்களில் தமிழ் தேவையான அளவுக்கு இல்லை. செய்தி வாசிப்பு தேவலாம். நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெப் 2.0 சேவைகள் அந்த அளவுக்கு இல்லை.
3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?
விக்கிப்பீடியா இன்னமும் தேவையான அளவு உபயோகமாக இல்லை என்றே நினைக்கிறேன். (அதில் தேவையான அளவு தகவல்கள் இல்லாததற்கு என்னைப் போன்றோர் ஒன்றும் செய்யாததும் காரணம்; அத்துடன் கொஞ்சம் அதீதமான தமிழ் ஆர்வலர்கள் ஐதரசன் என்று ஹைட்ரஜனைப் பிய்த்துப் பிடுங்குவது எனக்கு பயத்தைத் தருகிறது என்பதையும் குறிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.) தன்னார்வலர்களின் பங்களிப்பால்தான் இதுவரையில் முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அமைப்புரீதியாக இதுவரையில் யாரும் பங்கே அளிக்கவில்லை என்றுதான் சொல்வேன் (அதாவது அரசு, பல்கலைக் கழகங்கள், பெரும் நிறுவனங்கள்).
தன்னார்வலர்கள் என்ன செய்யவேண்டும்?
(அ) அரசை, பல்கலைக்கழகங்களை மேலும் இணையத்தில் தங்கள் சேவைகளைத் தருமாறு ஊக்குவிக்கவேண்டும்.
(ஆ) துறை சார்ந்த தகவல் களஞ்சியங்களைப் பெருமளவு உருவாக்கிடவேண்டும்.
(இ) கணினி பயன்படுத்தும் நண்பர்களை தமிழைப்பயன்படுத்துமாறு ஊக்குவிக்க, மென்பொருள்களை நிறுவித்தர, கற்றுத்தர முயற்சிகளைச் செய்யவேண்டும்.
4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
(அ) நிறைய பொருட்செலவில், அரசின் அனைத்துத் துறைகளது செயல்பாடு குறித்த தகவல்களையும் இணையத்தில் யூனிகோடில் தமிழில் ஏற்ற வகை செய்வேன்.
(ஆ) அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டக் கலெக்டர்கள், தாசில்தார்கள், இன்னபிற முக்கியமான அரசு அலுவலர்கள் அனைவரையும் இணையதளங்கள்மூலமாக குறைகள், புகார்கள் கேட்பது, இணையம் மூலம் மக்களுடன் உறவாடுவது, மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது, தங்கள் துறையில் நடக்கும் தகவல்களை வெளியிடுவது போன்றவற்றைச் செய்யச் சொல்வேன்.
(இ) அரசின் அனைத்து மட்டங்களிலும் தகவல் தொடர்பு இணையம் மூலம் - முதலில் மின்னஞ்சல் மூலமும், பிறகு இண்ட்ராநெட் மூலமான அரசு WAN அளாவிய சேவை மூலமும் நடக்குமாறும், பல முக்கியமான புள்ளிவிவரங்களை அவ்வப்போது பொதுமக்கள் இந்த நெட்வொர்க் மூலம் பெறும் வகையிலும் செய்வேன்.
(ஈ) அரசுடன் நடக்கும் பணம் சார்ந்தவற்றை முழுவதும் இணையம் மூலம் செய்யுமாறு (பல்வேறு வரிகள்) வசதிகளை ஏற்படுத்துவேன்.
(உ) அரசாணை மூலம், தமிழக அரசின் நிதி உதவி பெறும் அனைத்துக் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் கட்டாயமாக தமிழில் இணையத் தளங்களும் வலைப்பதிவுகளும் வைத்திருக்கவேண்டும் என்பதைச் செயல்படுத்துவேன்.
(ஊ) கல்விக்கூடங்கள் அனைத்தும் தங்களது பாடத்திட்டங்கள், கற்பிக்கும் வழிமுறைகள், கேள்வித்தாள்கள் ஆகியவற்றை இணையத்தில் சேர்க்குமாறு வற்புறுத்தப்படுவார்கள்.
(எ) பள்ளிகள் அனைத்திலும் தமிழ் இணையத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான பாடம் ஆப்ஷனலாக இணைக்கப்படும். கல்லூரிகளில் கட்டாயமாக்கப்படும்.
5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
ஒரு சாதாரண வலைப்பதிவர் பெரிய முன்யோசனை ஏதும் இன்றியே வலைப்பதிய ஆரம்பிக்கலாம். எதையாவது தொடர்ந்து எழுதவேண்டும் என்ற உந்துதல் இருந்தால் போதும். அவர்கள் ஏதேனும் துறை அறிஞர்களாக இருக்கும்பட்சத்தில் இணையத்தில் கட்டாயமாக தங்கள் கருத்துகளைப் பதித்தல் அவசியம் என்பதை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?
தமிழ்மணம் ஒரு எனேபிளர். அந்த வகையில் வலைப்பதிவுகளை இணைத்து ஓரிடத்தில் காண்பிக்க ஆரம்பித்ததே பெரிய விஷயம்தான். ஆனால் அதற்குமேல் தமிழ்மணம் என்ற இணைய அமைப்பால் செய்யக்கூடியது அதிகமாக இருக்கும் என்று தோன்றவில்லை. களத்தில் வேலை செய்பவர்கள்தான் மேலும் அதிகமாகப் பலரை இணையத்துக்குக் கொண்டுவரமுடியும். தமிழ்மணம் அதற்கு எந்தவகையில் உதவினாலும் அது நலமே. உதாரணமாக தமிழ்மணம், தமிழ் இணையத்துக்குள் நுழைய ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதை சிடியாக, சிறு கையேடாகச் செய்து விநியோகிக்கலாம். பல இடங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம். ஏற்கெனவே சில நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ததைப் போல், மேலும் பரவலாக இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க உதவலாம்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
No comments:
Post a Comment