தினமலர் பத்திரிகையில் எழுதப்பட்ட அநாகரிகமான, அவதூறான ஒரு செய்தி, பொதுவாக சட்டத்தின் வரம்புக்குள் தீர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நடிகர் சங்கத்தினர் அதை வரம்புக்கு வெளியே கொண்டுசென்று பிரச்னையைப் பெரிதாக்கியுள்ளனர். அதன் விளைவாக நிறைய கேலிக்கூத்துகள் நடைபெறப்போகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
முதலில் தினமலர் பத்திரிகைச் செய்தி, என் கணிப்பில் அவதூறு என்ற வகையை மட்டுமே சார்ந்ததாகும். அந்தச் செய்தி உண்மையா, இல்லையா என்பதல்ல விஷயம். ஒரு செய்தியில் சில உண்மைகள் இருந்தாலும் செய்தியாகப் பதிப்பிக்கும்போது அதனால் பொது நன்மை என்ன என்பதையும் பார்க்கவேண்டும். ஒரு செய்தி உண்மையே ஆனாலும், அதைப் பதிப்பிப்பதன்மூலம் பிறருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றால், அந்தச் செய்தியால் பொது நன்மை ஏதும் இல்லை என்றால், அப்போதுகூட மானநஷ்ட வழக்கு விதிக்கமுடியும். பொது நன்மை என்ற விஷயத்தின் பின்னால் நின்றுகொண்டு மட்டுமே தனிநபர்கள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடமுடியும்.
அப்படிப் பார்க்கும்போது தினமலர் செய்தி முழு வதந்தி என்பது மட்டுமல்ல, முழு அவதூறு. பாதிக்கப்பட்ட அனைத்து நடிகைகளும் ஒவ்வொருவராக அந்தப் பத்திரிகையின்மீது வழக்கு தொடர்ந்து, பெருமளவு நஷ்ட ஈடு கேட்டிருக்கலாம். அதன் விளைவாக நடக்கும் வழக்குகளில் மேலும் பல ‘அசிங்கங்கள்’ வெளிவரலாம். அப்படி வருவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அல்லது மறைப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள் தாரளமாக வழக்கு தொடர்ந்திருக்கலாம். தினமலர் நிச்சயம் தோற்றிருக்கும்; நிறையப் பணத்தையும் இழந்திருக்கும்.
ஆனால், அப்படிச் செய்யாமல், நடிகர் சங்கம் கூட்டம் போட்டுக் கண்டித்தது. அதிலும் பிரச்னை இல்லை. ஆனால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று சத்தம் போட்டது மட்டுமில்லாமல், முதல்வரைச் சந்தித்து, தங்கள் பலத்தைப் பிரயோகித்து தினமலர் நிருபரைச் சரியான காரணம் இன்றிக் கைது செய்யத் தூண்டினர்.
பிரச்னை இங்குதான் ஆரம்பம் ஆகிறது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கைதை எதிர்த்துப் போராடினர். அதில் தாவ்று ஏதும் இல்லை. ஆனால் நடிகர்கள் நடத்திய கண்டனக் கூட்டத்தில் சூர்யா ‘ஈனப்பயல்கள்’ என்று சொன்னதை (அல்லது வேறு சிலர் சில விஷயங்களைச் சொன்னதை) எதிர்த்து வழக்கு போடுவோம் என்று வரும் செய்திகள் அபத்தம்.
“இந்த மாதிரி செய்தி எழுதுபவர்கள் ஈனப்பசங்க” என்று சொல்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இதை எதிர்த்து வழக்கு போட முன்வரும் பத்திரிகையாளர்கள், மெலிந்த தோல் கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல, முழு முட்டாள்களும் கூட. இந்த வழக்கு நிஜமாகவே போடப்படும் பட்சத்தில் பத்திரிகையாளர்கள் துண்டு, துணி என அனைத்தையும் இழக்கவேண்டிவரும்.
பத்திரிகையாளர்கள் எந்த இழவையும் எழுதி, போராட்டம் மூலம் தப்பித்துவிட முடியும் என்ற நிலை இந்தியாவில் இருக்கக்கூடாது. அதற்கு நடிகர்கள் தைரியமாகச் சில வழக்குகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால்தான் முடியும்.
தினமலர் ஆரம்பித்து வைத்த வம்பு வழக்கை எப்படியாவது முன்னெடுத்துச் செல்வதே நல்லது என்று நக்கீரன் போன்ற சில அக்கப்போர் பத்திரிகைகள் முடிவெடுத்திருப்பதுபோல் தோன்றுகிறது. (நக்கீரன் ஒன்றுதான் கண்ணில் பட்டது. “நான் விபசாரி என்றால் நயந்தரா என்னவாம்?” என்று புவனேஸ்வரி சொல்வதுபோல முன் அட்டை. மேலும் பல வாரம் இருமுறை இதழ்களும் இந்தக் குளத்தில் குளித்து முத்தெடுக்க முற்பட்டிருக்கலாம்.)
சிவில் வழக்குகள் மூலம் சில பத்திரிகளுக்குப் பாடம் கற்பிக்க நடிகர் சூர்யா சொல்வதுபோல நடிகர் சங்கத்தினர் ஒன்றுசேர்ந்து சட்டப் பிரிவு ஒன்றை அமைக்கவேண்டும்.
மானுடத்தின் வெற்றி
7 hours ago
உள்ளூர் ஏரியாக்களில் மட்டுமே இலவசமாக வீட்டுக்குவீடு வரும் பேப்பரில் 'இந்த வீடுதான்....' என்று விலாசத்தோடு வீட்டின் படமும் கட்டிடத்தின் பெயருடன் வந்திருந்தது.
ReplyDeleteஅந்தக் கட்டிடத்தில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைச்சுப் பார்க்கவே முடியலை.
இப்படியெல்லாம் செய்ய அவுங்களுக்கு அதிகாரம் கொடுப்பது யார்?
அக்கிரமமால்லே இருக்கு(-:
பொது நன்மை என்ற விஷயத்தின் பின்னால் நின்றுகொண்டு மட்டுமே தனிநபர்கள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடமுடியும். //
ReplyDeleteவிபச்சாரத்திற்கு எதிரான அல்லது விபச்சாரம் குறித்த செய்தி பொதுநன்மைக்கு எதிரானதா?!
அப்படிப் பார்க்கும்போது தினமலர் செய்தி முழு வதந்தி என்பது மட்டுமல்ல, முழு அவதூறு. //
எப்படிச் சொல்கிறீர்கள் பத்ரி... புவனேஸ்வரி அப்படிச் சொன்னார் என்பதை தினமலர் நீதிமன்றத்தில் நிரூபணம் செய்து விட்டால்...
பெருமளவு நஷ்ட ஈடு கேட்டிருக்கலாம். அதன் விளைவாக நடக்கும் வழக்குகளில் மேலும் பல ‘அசிங்கங்கள்’ வெளிவரலாம். அப்படி வருவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அல்லது மறைப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள் தாரளமாக வழக்கு தொடர்ந்திருக்கலாம்.//
யெஸ்... யூ ஆர் கரெக்ட். காவல்துறை நடத்துகிற ஆப்பரேசன் என்பதனால்தான் எப்பவோ ஒரு நடிகை மாட்டிக்கொள்கிறாள். பத்திரிகைகள் தங்களது ஸ்டிங் ஆப்பரேஷனைத் துவக்கினால், என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்...
சூர்யா ‘ஈனப்பயல்கள்’ என்று சொன்னதை (அல்லது வேறு சிலர் சில விஷயங்களைச் சொன்னதை) எதிர்த்து வழக்கு போடுவோம் என்று வரும் செய்திகள் அபத்தம். //
ஓஹோ! விபச்சாரிகள் என்று எழுதியதை எதிர்த்து வழக்குப் போடலாம். தப்பில்லை. ஈனப்பயல்கள் என்று சொன்னதை எதிர்த்து வழக்குப் போடுவது அபத்தமா?! நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்.
இதை எதிர்த்து வழக்கு போட முன்வரும் பத்திரிகையாளர்கள், மெலிந்த தோல் கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல, முழு முட்டாள்களும் கூட. இந்த வழக்கு நிஜமாகவே போடப்படும் பட்சத்தில் பத்திரிகையாளர்கள் துண்டு, துணி என அனைத்தையும் இழக்கவேண்டிவரும். //
சத்தியமா புரியலீங்க... ஒவ்வொரு பத்திரிகைக்காரனும் லீகல் அட்வைஸர் டீமே வச்சிருக்கான். ஏன் துண்டு, துணியை எல்லாம் இழக்கனும்னு தெரியல... தவிர, வழக்கில் ஜெயித்தால் மொத்த கோடம்பாக்கமும் நிர்வாணமாயிடும்.
பத்திரிகைகளும், சினிமாவும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். பத்திரிகைகளுக்கு சினிமாவைத் தவிர்த்து எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. சினிமாக்காரர்களுக்குத்தான் பத்திரிகை அதை விட்டால் தொலைக்காட்சி என இரண்டே வாய்ப்புகள். மொத்த கோடம்பாக்கக் குரங்குகளும் ஆப்பை அசைத்திருக்கின்றன...
செல்வேந்திரன்: ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ReplyDelete1. புவனேஸ்வரி அப்படிச் சொன்னார் என்று தினமலர் எழுதினாலும் அது அவதூறு. செய்தியில் உண்மை இல்லை என்றபோதிலும் செய்தியாக வெளிவருவதால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவமானம், மனக்கஷ்டம், பணக்கஷ்டம் ஆகியவை உள்ளன என்பதால் இது அவதூறு வகையைச் சார்ந்ததே.
தகவல் பிழையானதாக இல்லாவிட்டாலும், பிழையாக அர்த்தப்படுத்திக்கொள்ளுமாறு இருந்தாலேகூட அது அவதூறே. உதாரணத்துக்கு
“நடிகை _____ நடுத்தெருவில் அம்மணமாக” என்பதை மிகப்பெரிய கொட்டை எழுத்துகளிலும் அடுத்த வரியில் “வரவில்லை” என்பதை மிகச்சிறிய எழுத்துகளிலும் போட்டு, பக்கத்தில் அந்த நடிகையின் அரைகுறை ஆடைப் படத்தைப் பெரிதாக்கிக் கொடுத்தால் அது அவதூறே. What the readers interpret from the presentation is very important.
இந்த தினமலர் செய்தியில் என்ன இருந்தது?
“பெரிய்ய விபசார நடிகைகள்” என்று முதல் வரியில் கொட்டை எழுத்தில் இருந்தது.
அடுத்த வரியில் சின்னதாக “பட்டியல் வெளியிட்டார் புவனேஸ்வரி” என்று இருந்தது. அதன்கீழ் வரிசையாகச் சில படங்கள்.
தூரத்திலிருந்து பார்க்கும் ஒருவருக்கு கீழ்க்கண்ட படங்களில் உள்ள நடிகைகள் அனைவரும் விபசாரிகள் என்று இந்தப் பத்திரிகை சொல்வதாக மட்டுமே தோன்றும். “என்றார் புவனேஸ்வரி” என்பதை மக்கள் சரியாகக் கவனிக்க மாட்டார்கள். ஆகவே புவனேஸ்வரி உண்மையாக இதைச் சொல்லியிருந்தாலும் பொய்யாகச் சொல்லியிருந்தாலும், ஒன்றுமே சொல்லியிருக்காவிட்டாலும், இது அவதூறே.
2. அடுத்து, இதில் சில உண்மைகள் இருந்தாலும், இது பொது நலத் தகவல் அல்ல. Public disclosure of private facts என்று ஒரு விஷயம் உண்டு. இந்தியச் சட்டங்களில் இதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது பற்றி எனக்கு முழுமையான தகவல்கள் இல்லை. தனிப்பட்ட முறையில் நடக்கும் சில காரியங்கள் உண்மையாக இருந்தாலும் தனி நபரை பாதிக்கக்கூடிய விஷயம் என்றால் ஒரு பத்திரிகையால் அவற்றை வெளியிடமுடியாது. (அல்லது வெளியிட்டால் வழக்கைச் சந்திக்க நேரிடும்.) பத்திரிகைகள், அந்த விஷயம் வெளியே வந்தால்தான் பொது நலன் காக்கப்படும் என்று நிரூபிக்கவேண்டி இருக்கும். அப்படிச் செய்யாவிட்டால் பத்திரிகைக்கு சங்குதான்.
இங்கு இந்த விஷயம் உண்மையாகவே இருந்தாலும், எந்தப் பொது நலனும் காக்கப்படவில்லை.
3. அடுத்து இது சட்டத்துக்குப் புறம்பான சில செயல்கள் அல்லது அப்படி இருக்கக்கூடும் என்ற அனுமானம் என்றால், காவல்துறைக்குத் தகவல் சொன்னால் போதும். விபசாரத் தடைச் சட்டம் கூட, retro-active ஆக, செயலைச் செய்து முடித்தபின் கைது செய்து வழக்கு தொடரமுடியுமா என்று தெரியவில்லை. செயலில் ஈடுபடும்போது அல்லது ஈடுபடும் நிலையில் இருக்கும்போது மட்டுமே அரெஸ்ட் செய்து வழக்கு தொடரமுடியும் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தச் செய்தியின் நிறைய உண்மைகள் இருப்பதாகக் கொண்டாலும்கூட இதை வெளியிடுவது அவதூறு வகையைச் சார்ந்ததே.
4. இதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியே கொண்டுவர முனைந்தாலும் இதே பிரச்னைகள் உண்டு. பொது நலன் ஏதும் இல்லை என்ற பட்சத்தில் அடுத்தவர் பெட்ரூமில் மூக்கை நுழைக்கும் எந்தப் பத்திரிகையாளரையும் கைது செய்து உள்ளே தள்ளலாம். ஒருவரது பிரைவசியில் நுழைவது மட்டுமல்லாமல் அதை சட்டத்துக்குப் புறம்பான வகையில் (போனை ஒட்டுகேட்பது, கேமராவை மறைத்து வைத்துப் பிடிப்பது) செய்வது - இரண்டுமே குற்றங்கள்.
பத்திரிகைக்காரன், பத்திரிகை இரண்டின்மேலும் தனித்தனியான வழக்குகளை விதித்து நடத்தலாம். பத்திரிகை ஓனர் ஒரு கட்டத்தில் சத்தம் போடாமல் கழன்றுவிடுவார். அப்போது பத்திரிகை நிருபருக்கு போண்டாதான் கிடைக்கும்.
ஒன்றை கவனித்தீர்களா? பத்திரிகையாளர்கள் பக்கத்திலிருந்து வந்த ஸ்டேட்மெண்டில் தினமலர் செய்தியைத் தாக்கியே வந்துள்ளது. ஆனாலும் லெனின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், முதல்வரை வற்புறுத்தி நடவடிக்கை எடுத்தது தவறு என்றுதான் சொல்கிறது.
முதலில் பத்திரிகையாளர்கள் ஒன்றுகூடி தினமலரின் அராஜகச் செய்தியைக் கண்டிக்கவேண்டும்.
5. அடுத்து ‘ஈனப்பயல்’ விஷயம். ‘லெனின் ஈனப்பயல்’ என்று சூர்யா சொல்லவில்லை. கன்னாபின்னாவென்று செய்திகளைப் பொடும் ‘இந்த ஈனப்பயல்களை’ என்றுதான் சொல்கிறார். எனவே பத்திரிகையாளர்கள் எல்லொரையும் அவர் அவமதித்துவிட்டார் என்று எப்படிச் சொல்வது. ஈனமான காரியத்தைச் செய்பவர்களைத்தான் நான் ஈனப்பயல்கள் என்றேன் என்று அவர் சொல்லலாம். அதை நான் நீதிபதியாக இருந்தால் அனுமதிப்பேன்.
நடிகைகள் பெரும்பாலானோர் விபசாரிகள் என்றி தினமலர் எழுதியிருந்தால் விஷயம் வேறு. ஆனால் ‘இவர், அவர், அவர் எல்லாம் விபசாரிகள்’ (என்று சொல்கிறார் புவனேஸ்வரி) என்று பெயர் குறிப்பிட்டு, படம் போட்டு அல்லவா எழுதியிருந்தார்கள்?
பத்ரி, பொறுப்பான பதில்வினைக்கு நன்றி. உரையாடல் தொடர எனக்கு தரவுகள் தேவை. கொஞ்சம் சேகரம் செய்துவிட்டு வருகிறேன் :)
ReplyDelete//1. புவனேஸ்வரி அப்படிச் சொன்னார் என்று தினமலர் எழுதினாலும் அது அவதூறு. செய்தியில் உண்மை இல்லை என்றபோதிலும் செய்தியாக வெளிவருவதால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவமானம், மனக்கஷ்டம், பணக்கஷ்டம் ஆகியவை உள்ளன என்பதால் இது அவதூறு வகையைச் சார்ந்ததே.//
ReplyDeleteஇது எப்படி அவதூறாகும்?
ஒருவர் சொன்னதை அவர் சொன்னதாக வெளியிடுவது அவதூறாகுமா? தினமலர் செய்தியில், புவனேஸ்வரி சொன்னதோடு சிலதையும் சேர்த்துப் போட்டார்கள் என நினைக்கிறேன். நான் தினமலரின் இந்தச் செய்தி பற்றிக் கேட்கவில்லை, பொதுவாகக் கேட்கிறேன்.
//முதலில் பத்திரிகையாளர்கள் ஒன்றுகூடி தினமலரின் அராஜகச் செய்தியைக் கண்டிக்கவேண்டும்.
//
இதற்கு எந்த பத்திரிகைக்காவது தகுதி இருக்கிறதா என்ன? ஜெயலலிதா, ஜெயேந்திரர், லாலு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இதுவரை எந்தப் பத்திரிகை நிச்சயமாக உண்மை என்று தெரிந்ததை மட்டுமே வெளியிட்டதோ அது மட்டுமே தினமலரைக் கண்டிக்கலாம்.
//முதலில் பத்திரிகையாளர்கள் ஒன்றுகூடி தினமலரின் அராஜகச் செய்தியைக் கண்டிக்கவேண்டும்.
ReplyDelete//
இதற்கு எந்த பத்திரிகைக்காவது தகுதி இருக்கிறதா என்ன? ஜெயலலிதா, ஜெயேந்திரர், லாலு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இதுவரை எந்தப் பத்திரிகை நிச்சயமாக உண்மை என்று தெரிந்ததை மட்டுமே வெளியிட்டதோ அது மட்டுமே தினமலரைக் கண்டிக்கலாம்.
Those who never sinned, may cast the first stone மாதிரி இருக்கு.