Thursday, September 01, 2011

கருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்

[தி ஹிந்துவில் 20 ஆகஸ்ட் 2011 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம். எழுத்தாளரின் அனுமதியுடன் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது. இறுதிக்கு முந்தைய பத்தியின் கடைசி இரண்டு வரிகள் இரண்டாவது முறையாக வருவதைப்போலத் தோற்றம் அளித்ததால் அவற்றை நீக்கியுள்ளேன். உள்ளே ஓரிரு இடங்களில் தமிழுக்காகவேண்டி சற்றே விளக்கமான வரிகளாக மாற்றி எழுதியுள்ளேன். -- பத்ரி]

ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக அண்ணா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதமும் அவரை வீட்டிலேயே கைது செய்து சிறைக்குக் கொண்டுசென்றதன் விளைவாக நகரிய இந்தியாவில் ஏற்பட்ட பொதுமக்கள் எழுச்சியும் அரசை நிலைகுலையச் செய்துள்ளன. ஊழலுக்கு எதிரான மக்களின் ஆழமான உணர்வுகளை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கியுள்ளன. ஜன் லோக்பால் மசோதாவுக்கான போராட்டம், பொதுமக்களின் போராட்டத்துக்கான சிவில் உரிமை நசுக்கப்படுவதை எதிர்த்தல் என இரு முக்கியமான காரணிகள் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. இவை ஒன்றுசேர்ந்து உருவாகியுள்ள போராட்டம், ஊழலுக்கு எதிரானதாகக் காணப்படுகிறது. இதைச் சரியான கோணத்தில் பார்க்கவேண்டும் என்றால், இந்தியாவின் கருப்புப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதால் சமூகத்துக்கு ஏற்படும் நன்மைகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகிறது.

கருப்புப் பொருளாதாரமும்தான் வேலைகளை உருவாக்குகிறது, உற்பத்தியைத் தருகிறது என்கிறார்கள் சிலர். உதாரணத்துக்கு, கருப்புப் பணத்தைக் கொண்டு சந்தையில் பல பொருள்கள் வாங்கப்படுகின்றன என்றும் அதனால் உற்பத்தி அதிகரித்து, வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் இவர்கள் சொல்கிறார்கள். முறைசாராத் துறையில் வேலைகளை உருவாக்குவதன்மூலம் கருப்புப் பொருளாதாரம் ஏழைகளுக்கு நன்மை செய்கிறது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று, 2008-ல் உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தின் மோசமான விளைவுகளிலிருந்து இந்தியா தப்பித்ததற்குக் காரணமே இந்தியாவில் நிறைய கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருந்ததுதான் என்றும் இந்தப் பணம்தான் பொருள்களுக்கு அதிகக் கிராக்கியை ஏற்படுத்தியது என்றும் சொல்கிறார்கள். சிலர் லஞ்சத்தை, அது வேலையை வேகமாகச் செய்து முடிக்க உதவுகிறது என்பதால் ‘வேகப் பணம்’ என்று சொல்லி நியாயப்படுத்துகிறார்கள். இவை அனைத்திலுமே கொஞ்சம் உண்மை கலந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் சிறுசிறு நன்மைகளைவிட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கருப்புப் பொருளாதாரத்தால் தீமையே அதிகமாக ஏற்படுகிறது என்பதை நிறுவ முடியும்.

லஞ்சத்தை ‘வேகப் பணம்’ என்று வைத்துக்கொள்வோம். லஞ்சம் வாங்கவேண்டும் என்பதற்காக அதிகாரவர்க்கம் முதலில் வேலையை தாமதப்படுத்தி, பொதுமக்களைத் துன்புறுத்துகிறது. வேலைகள் தாமாகவே செய்யப்பட்டுவிட்டால் ஒருவர் எதற்காக லஞ்சம் தரவேண்டும்? எனவே முதலில் செயல்திறன் குறைக்கப்படுகிறது. அதனால், பணம் கொடுக்க முடிந்தவர்களுக்குமட்டும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. பிறர் தொடர்ந்து துன்புறுகிறார்கள். செயல்திறனை அதிகரிப்பதற்குபதிலாக எப்படியெல்லாம் பணத்தைப் பெறலாம் என்று யோசித்தபடி நிர்வாகத்தினர் முட்டுக்கட்டைகளைப் போடுவதில் மும்முரமாக இருப்பதால் நிர்வாகமே அலங்கோலம் ஆகிவிடுகிறது. இதன் காரணமாக இடைத்தரகர்கள் என்ற சாதி உருவாகிறது. இவர்கள்மூலமாகத்தான் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடிகிறது. எதுவுமே வாடிக்கையாக நடைபெறுவதில்லை. வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டால் யாரேனும் புகார் கொடுத்துவிடலாம் என்பதால் ஊழல் அதிகாரிகளும் இடைத் தரகர்களையே நாடுகிறார்கள். லஞ்சம் கொடுப்பவரும்கூட, நிர்வாகியை எப்படித் தொடர்புகொள்வது என்று தெரியாத காரணத்தால் இடைத்தரகர்களையே நம்பத் தொடங்குகிறார்கள்.

இந்தியாவின் கருப்புப் பொருளாதாரம் என்பது பெரும்பாலும், குழியைத் தோண்டி அதையே மீண்டும் மூடுவதற்கு ஒப்பானதாகும். அதாவது, ஒருவர் காலை நேரத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டுகிறார். மற்றொருவர் இரவு நேரத்தில் அதே குழியை மூடுகிறார். மொத்தத்தில் உற்பத்தியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் இரண்டு சம்பளங்கள் தரப்படுகின்றன. ஆக இது, உற்பத்தி இல்லாத செயல்பாடாக ஆகிவிடுகிறது. மோசமாக உருவாக்கப்பட்ட சாலைகள் மழையின்போது அடித்துச் செல்லப்படுகின்றன. அல்லது குண்டும் குழியுமாக ஆகி மேற்கொண்டு பராமரிப்பு செய்யவேண்டியிருக்கிறது. இதனை மேலே சொன்னதற்குச் சரியான உதாரணமாகக் கொள்ளலாம். ஆக, புதிதான சாலைகளைப் போடுவதற்குபதிலாக ஏற்கெனவே இருக்கும் சாலைகளைப் பராமரிப்பதற்கே பெரும்பாலான நிதி ஒதுக்கீடு செலவாகிவிடுகிறது. வகுப்பில் ஆசிரியர்கள் சரியாகப் பாடம் சொல்லித் தராததால் மாணவர்கள் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லவேண்டியிருக்கிறது. இதனால் குடும்பங்களுக்கு அதிகச் செலவு ஏற்படுகிறது. மாணவர்களும் கல்வியில் நாட்டம் இழக்கின்றனர். இதனால் அவர்களது படைப்புத் திறனும் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

எத்தனை லட்சம் வழக்காடுபவர்களும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் வழக்குரைஞர்களும் ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களுக்கு வந்துபோகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். பெரும்பாலான வழக்குகள் சில நிமிடங்களுக்குமேல் தாண்டுவதில்லை. பெரும்பாலும் அடுத்த விசாரணை எந்த நாள் நடக்கும் என்று நாள் குறிக்கப்பட்டு அனைவரும் மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நீதி கிடைத்தல் தாமதப்படுவது மட்டுமல்ல, முக்கியமாக நேரம் வீணாகிறது, வழக்குரைஞர் கட்டணம், போக்குவரத்துச் செலவு என்று பெரும் பணமும் விரயமாகிறது. சில மாதங்களுக்குள் முடியவேண்டிய வழக்குகள் பல ஆண்டுகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டு செலவு பலமடங்காகிறது. தாமதமான நீதியின் விலை நேரடியானது மட்டுமல்ல, மறைமுகமானதும்கூட. கருப்புப் பொருளாதாரத்தின் தாக்கத்தினாலேயே தாமதம் ஏற்படுகிறது. இதனால் நேர்மையானவர்கள்கூட நம்பிக்கை இழந்து பிற வழிகளை நாடுகிறார்கள். இதனால் சமூக நீதி சிதைந்துபோய் சமூகமே பலவீனமடைகிறது. இதன் விலையைப் பணமாகக் கணக்கிட முடியாது. ஆனால் இது மிகப் பெரியது.

வளரும் கருப்புப் பொருளாதாரத்தால், கொள்கைகள் பரந்த அளவிலும் நுண்ணிய அளவிலும் தோற்றுப்போகின்றன. பெரும் கருப்புப் பொருளாதாரம் இருக்கும் காரணத்தால், திட்டமிடுதல், பணக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றால் எதிர்பார்த்த இலக்குகளை எட்டமுடிவதில்லை. கல்வி, உடல்நலம், குடிநீர் போன்றவற்றில் திட்டமிடப்பட்டுள்ள இலக்குகள் அடையப்படுவதே இல்லை. ஏனெனில் செலவு செய்தால் குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும் என்ற நிச்சயம் கிடையாது. தேவையான வளங்கள் இருந்தும், செயற்கையாகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பெருமளவு முதலீடுகள், உற்பத்தி குறைந்த அல்லது பயனற்ற வழிகளான தங்கம், நிலம் ஆகியவற்றில் போய்ச் சேர்கின்றன. நாட்டிலிருந்து முதலீடு வெளியே போவதால் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் குறைகிறது. அதனால் உற்பத்தியும் குறைகிறது. அந்நிய நாட்டுக்கு அனுப்பப்படும் மூலதனத்தால் இந்தியாவில் உற்பத்தி அதிகரிப்பதில்லை; மாறாக அந்தப் பணம் போய்ச்சேரும் ஏதோ ஓர் அந்நிய நாட்டில்தான் உற்பத்தி அதிகமாகிறது. ஆக, மூலதனம் குறைவாக உள்ள நாடு என்று சொல்லப்படும் இந்தியா அந்நிய நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்கிறது! இதனால் மூலதனத்தை ஈர்க்க அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகைகளை அள்ளித் தருகிறது. இதன் வாயிலாக உள்ளே வரும் மூலதனத்தைவிட அதிகமான அளவு இழப்பு ஏற்படுகிறது. அப்படி உள்ளே வரும் அந்நிய நேரடி அல்லது அந்நிய நிதிநிறுவன மூலதனத்தின் விலையும் அதிகம். மேலும் இந்தியாவின் கொள்கைகளை சர்வதேச நிதியங்கள் கட்டுப்படுத்துவதற்கும் வழி ஏற்படுகிறது. இந்தியா சுதந்தரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியாவின் கொள்கைகள் நாட்டிலிருந்து மூலதனத்தை வெளியே துரத்தும் விதமாகவே இருந்துள்ளன. இதற்காக நாம் கொடுத்துள்ள விலை மிக மிக அதிகம்.

இதற்காக நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்திருக்கும் விலைதான் கொள்கைகளில் தோல்வி, பயனற்ற முதலீடுகள், மெதுவான வளர்ச்சி, அதிகமான ஏற்றத்தாழ்வு, சூழியல் பாதிப்பு, சாத்தியமானதைவிடக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவை. கருப்புப் பொருளாதாரம் மட்டும் இல்லையென்றால், 1970-களிலிருந்து இந்தியா ஆண்டுக்கு 5% அதிகமான வளர்ச்சியை அடைந்திருக்க முடியும். அப்படி ஆகியிருந்தால் இந்தியா இன்று 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆகி, உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இருந்திருக்கும். ஓர் ஏழை நாடாக இல்லாது, மத்திய வருமான நாடாக இருந்திருக்கும். இதுதான் நாம் கொடுத்துள்ள விலை.

கருப்புப் பொருளாதாரத்தின் மற்றொரு விளைவு, எது வழக்கமாக இருக்கவேண்டுமோ அது வழக்கத்துக்கு மாறானதாகவும் எது வழக்கத்துக்கு மாறானதோ அது வழக்கமானதாகவும் ஆகிவிடுகிறது. எது நடக்கவேண்டுமோ அது நடக்காது; எது நடக்கக்கூடாதோ அது நடக்கும். நமக்கு 220 வோல்ட் மின்சாரம் கிடைக்கவேண்டும். ஆனால் கிடைப்பதோ 170 வோல்ட் அல்லது 270 வோல்ட். இதனால் மின்கருவிகள் சேதமடைகின்றன. அனைத்து அதிகவிலை மின்கருவிகளுக்கும் வோல்டேஜ் ஸ்டபிலைசர் (மின் நிலைநிறுத்தி) வேண்டியுள்ளது. இதனால் முதலீட்டுச் செலவும் அதிகமாகிறது; பராமரிப்புச் செலவும் அதிகமாகிறது. குழாயிலிருந்து வரும் நீர் குடிக்கத்தக்கதாக இருக்கவேண்டும். ஆனால் இருப்பதில்லை. ஏனெனில் குழாய்கள் சரியாகப் போடப்படுவதில்லை. கழிவுநீர் கலந்துவிடுகிறது. எனவே மக்கள் கையில் குடிதண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லவேண்டியுள்ளது. வீடுகளில் குடிநீர் சுத்தம் செய்யும் கருவிகளைப் பொருத்தவேண்டியுள்ளது. அல்லது நீரைக் கொதிக்கவைக்கவேண்டியுள்ளது. இவற்றுக்கு அதிகச் செலவாகிறது. அப்படிச் செய்தும் மக்களுக்கு நோய் வருகிறது. இந்தியாவில் ஏற்படும் நோய்களில் 70%, நீரால் ஏற்படுபவை. இதனால் மருத்துவச் செலவு அதிகமாகிறது. அத்துடன், நோய் பாதிக்கப்பட்டவர் வேலை செய்யமுடியாத காரணத்தால் உற்பத்தியில் குறைவும் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலும் ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனை வாசம் பெருமளவு வேதனையையே தருகிறது. ஏனெனில் அங்கு வேலை செய்வோர் பெரும்பாலும் அலட்சியமாகவே நடந்துகொள்கிறார்கள். பொது மருத்துவமனைகளில் கூட்டம் தாங்கமுடிவதில்லை. மருத்துவர்கள் கடுமையான வேலைப்பளுவால் அவதிப்படுகின்றனர். மருத்துவமனையில் நிலவும் சுகாதாரமற்ற சூழலால் நோயாளிகளுக்கு இரண்டாம்நிலை தொற்றுவியாதிகள் ஏற்படுகின்றன. நோயாளிகளுடன் கூட வருபவர்களுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றனவா அல்லது தம்மைப் பரிசோதிப்பதற்காக வரும் பெரிய நிபுணர்கள் எல்லாம் தேவையா என்ற சந்தேகம் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் நோய்கள் குணமாவதில்லை. மருந்துகள் போலியாக இருக்கலாம். ஊசி மருந்து கலப்படமானதாக இருக்கலாம். ஏழைகள் போலி மருத்துவர்களிடம் சிக்கி, அதிக டோசேஜ் ஆண்டிபயாடிக் மருந்துகளையும் ஸ்டீராய்டுகளையும் உட்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி மக்கள் குணமடைவதற்குக் காரணம் அவர்களது உடலில் உள்ளூர இருக்கும் வலிமைதான்!

இவை அனைத்தின் விளைவாகவும், அனைத்து இடங்களிலும் தேவையைவிடச் செலவு அதிகமாக ஆகிறது. அதனால் பணவீக்க விகிதம் அதிகமாகிறது. மூதலீட்டுக்கான விலை அதிகமாக இருப்பதால், தொழிலை நிறுவும் செலவு அதிகமாகிறது.

சமூகத் தளத்தில் இதற்குக் கொடுக்கும் விலை, சமூகத்தின்மீதும் அதன் செயல்பாட்டின்மீதும் மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு. எனவே பெரும்பாலானோர், சமூக வழியை விடுத்து தனிப்பட்ட தீர்வை நாடுகிறார்கள். அரசியல் தளத்தில் இதனால் துண்டாடல் நிகழ்கிறது. தேச அளவில் முழுமையான தீர்வுகள் கிடைக்கா என்ற காரணத்தால் மாநிலங்கள் தத்தமக்கான தீர்வுகளைக் கோருகிறார்கள். பெரிய மாநிலங்களால் அனைவருக்கும் சரியான தீர்வு கிடைக்காது; ஒரு சில அதிகக் குரலெழுப்பும் பகுதிகளுக்கு மட்டுமே வளர்ச்சி கிட்டும் என்பதால் மாநிலங்களைத் துண்டாடிச் சிறியவை ஆக்கக் கோரிக்கைகள் எழுகின்றன. ஒவ்வொரு சாதியும், சமூகமும், பகுதியும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட தத்தம் பிரதிநிதிகள் ஆட்சியில் இருந்தால்தான் தமக்குப் பலன் கிடைக்கும் என்று நம்புவதால் சிறு கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. இப்படித் துண்டாகி தேசிய உணர்வு அழிபடுவதின் விலையை எப்படித்தான் கணக்கிட முடியும்?

வலுவான லோக்பால், கல்வி, உணவு, தகவல் ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றுக்கான இயக்கங்களால், நமக்கு மிகவும் அவசியமான பொது தேசியப் பண்புகளை உருவாக்க முடியும். இவை காரணமாக நாம் இதுவரை பெரும் விலையை அளிக்கக் காரணமாக இருந்துள்ள கருப்புப் பொருளாதாரத்தை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் உறுதி ஏற்படலாம். ஒன்றுக்கான போராட்டம் என்பது பிறவற்றுக்கான போராட்டமும்கூட.

[The author is with the Centre for Economic Studies and Planning, School of Social Sciences, Jawaharlal Nehru University, New Delhi. This article is based on his forthcoming book, Indian Economy since Independence: Tracing the Dynamics of Colonial Disruption in Society. E-mail: arunkumar1000@hotmail.com]

1 comment: