Friday, September 09, 2011

அரசு கேபிளின் செயல்முறை

அரசு கேபிள் பற்றி எழுதியபிறகு கேபிள் துறையில் ஈடுபட்டுள்ள சிலரிடம் பேச்சுக்கொடுத்து மேலும் சில விஷயங்களைக் கேட்டறிந்தேன். அரசின் நோக்கம் சன் குழுமத்தை நசுக்குவது என்று மட்டும்தான் உள்ளது என்பதையும் அதையும்கூட நியாயமான வழியில் செய்யாமல் முறையற்ற வழியில்தான் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறிந்துகொண்டேன். சன் குழுமமே முறையற்ற வழியில்தானே இதுவரை நடந்துகொண்டுள்ளது என்று சிலர் சொல்லலாம். அநியாயத்தை நியாயத்தின் வழியில்தான் எதிர்க்கவேண்டுமே ஒழிய மற்றுமொரு அநியாய வழியால் அல்ல.

சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் சில முக்கியமான நகரங்களில் மட்டும்தான் உள்ளது. இந்த நகரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. டி.ஆர்.பி (TRP) எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங்கைக் கணக்கிட உதவும் பீப்பிள்மீட்டர் (TAM Peoplemeter) கருவிகள் தமிழகத்தின் சில நகரங்களில் உள்ள சில வீடுகளில்தான் பொருத்தப்பட்டுள்ள. அந்த நகரங்களில்தான் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் விநியோகம் செய்கிறது. அந்த நகரங்களின் கேபிள் சந்தையின் மிகப் பெரும்பான்மை சுமங்கலி கையில்தான் இதுவரை இருந்துவந்தது. இதன் வாயிலாக தன் எதிரி சானல்கள் விநியோகிக்கப்படுமா, படாதா, சானல் வரிசையில் எந்த இடத்தில் இருக்கும், தரம் எப்படியிருக்கும் போன்றவை அனைத்தும் சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சுமங்கலி இருக்கும் நகரங்களில், அதற்குப் போட்டியாக கேபிள் சேவையை அளித்துவந்த பல நிறுவனங்களை சன் குழுமம் அநியாய வழிகளில் துரத்தி அடித்திருக்கிறது. சென்னையில் ஹாத்வே கேபிளை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். கேபிளை வெட்டுதல், எதிரி நெட்வொர்க்கில் சேர்ந்திருப்போரை அடியாட்களைக் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மிரட்டுதல் ஆகியவை நிகழ்ந்தேறியுள்ளன.

சன் குழுமம் அநியாயம் செய்தபோதெல்லாம் அதனை அடக்கி வழிக்குக் கொண்டுவர நம்முடைய பலவீனமானதும் அநியாயமானதுமான அரசியல் அதிகார அமைப்பால் முடியவில்லை. இப்போது அதே பலவீனமான, அநியாயமான அரசியல் அதிகார அமைப்பே சன் குழுமத்துக்கு எதிராகத் திசை திருப்பப்பட்டிருக்கிறது.

முதலில் அரசு கேபிள் அமைப்பு இந்த கேபிள் விநியோகத்தில் தானும் ஒரு பிளேயர் என்பதாக இல்லாமல், தான் மட்டும்தான் பிளேயராக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, அரசு கேபிளில் இணையுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர். மறுத்த சிலர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டு (எ.கா: தீண்டாமை தடைச் சட்டம் முதற்கொண்டு சாதா குற்றவியல் வழக்குகள்) சிறையில் தள்ளப்படுகின்றனராம்.

கடைசி மைல் கேபிள் ஆபரேட்டர்களுக்கு இரண்டு பக்கமும் அடி வாங்கவேண்டிய நிலைமை. ஒரு பக்கம் அரசை எதிர்க்க முடியாத நிலைமை. மறுபக்கம் மக்கள் விரும்பும் சானல்களைத் தரமுடியாத நிலைமை. ஏனெனில் அரசு கேபிள், சன் குழுமத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை. இன்றுதான் கட்டண சானல் கம்பெனிகளுக்குக் கடிதம் எழுதி, பேச்சுவார்த்தைக்கே அழைத்திருக்கிறார்களாம். அதிலும் சன் குழுமத்துக்கு அழைப்பு போகவில்லையாம். அரசு கேட்டு, சன் குழுமம் தரவில்லை என்றால் அதனை எதிர்கொள்வது என்பது வேறு. ஆனால் கூப்பிடவேயில்லை என்றால் நோக்கம் வேறு என்று புரிகிறது.

அரசு கேபிள் மட்டும் ஒழுங்காக இயங்க முன்வந்திருந்தால் இப்போது நிகழ்ந்திருப்பதுபோல பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது.
  1. முதலில் அடாவடி செய்வதை அரசு கட்டாயமாக நிறுத்தவேண்டும். காவல்துறையும் கலெக்டர்களும் வெட்கமே இல்லாமல் இதற்குத் துணைபோவது அசிங்கம். முக்கியமாக, பொய் வழக்கு போடுதல், மிரட்டுதல் போன்ற அசிங்கங்கள் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டும்.
  2. அரசு கேபிள் கொண்டுவருவது சந்தையில் தேர்வை அதிகப்படுத்தவே; எந்த நிறுவனத்தையும் அழிக்க அல்ல என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். முக்கியமான பீப்பிள்மீட்டர் நகரங்கள் ஒரு சானல் குழுமத்தினர் கையில் இருப்பது விளம்பரதாரர்களுக்கு நல்லதல்ல. உண்மை நிலையை என்றுமே அவர்களால் அறியமுடியாது. போட்டியாளர்கள் பிழைப்பதும் கடினம். எனவே மாற்று வேண்டும். அந்த மாற்று தனியாரிடமிருந்து வருவதே சரியானது. அது ஏற்படாமல் சன் குழுமம் இதற்குமுன் தடுத்திருப்பதால் அதன் கொட்டத்தை அடக்க என்று மட்டுமே அரசு கேபிள் இயங்கவேண்டும்.
  3. அனைத்து சானல்களும் - குறைந்தபட்சம் பெரும்பான்மைத் தமிழர்கள் பார்க்கும் சானல்களாவது - கிடைக்குமாறு செய்துவிட்டுத்தான் சேவையையே ஆரம்பித்திருக்கவேண்டும்.
இங்கே பிரச்னை, ஓர் அரசின் செயல்முறை பற்றியது. அரச அதிகாரத்தை எப்படி, எதற்காகப் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றியது. தனிப்பட்ட முறையில் நமக்கு சன் குழுமத்தின்மீது எத்தகைய கருத்து இருந்தாலும், தமிழக அரசு இப்போது நடந்துகொள்ளும் விதம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட நபர்கள் இதனைப் பெரிய அளவுக்கு எடுத்துக்கொண்டு போகாவிட்டால் காட்டாட்சிதான் விளைவாக இருக்கும்.

8 comments:

  1. அநியாயத்தை நியாயத்தின் வழியில்தான் எதிர்க்கவேண்டுமே ஒழிய மற்றுமொரு அநியாய வழியால் அல்ல.

    Salutations Badri, all the very best

    ReplyDelete
  2. For a change, I agree with you 100% on your views.

    Economic justice can be best be won by free men of free enterprise and the role of government is to govern and not to run liquor shops and cable business

    ReplyDelete
  3. //சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் சில முக்கியமான நகரங்களில் மட்டும்தான் உள்ளது. இந்த நகரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. டி.ஆர்.பி (TRP) எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங்கைக் கணக்கிட உதவும் பீப்பிள்மீட்டர் (TAM Peoplemeter) கருவிகள் தமிழகத்தின் சில நகரங்களில் உள்ள சில வீடுகளில்தான் பொருத்தப்பட்டுள்ள. அந்த நகரங்களில்தான் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் விநியோகம் செய்கிறது. அந்த நகரங்களின் கேபிள் சந்தையின் மிகப் பெரும்பான்மை சுமங்கலி கையில்தான் இதுவரை இருந்துவந்தது. இதன் வாயிலாக தன் எதிரி சானல்கள் விநியோகிக்கப்படுமா, படாதா, சானல் வரிசையில் எந்த இடத்தில் இருக்கும், தரம் எப்படியிருக்கும் போன்றவை அனைத்தும் சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.//
    as they sow, so they reap!

    ReplyDelete
  4. அது எப்படி தி.மு.க.காரர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது மட்டும் அதிகார துட்பிரயோகம், சானல் இருட்டடிப்பு, "காவல்துறையும் கலெக்டர்களும் வெட்கமே இல்லாமல்", "நியாயமான வழியில் செய்யாமல் முறையற்ற வழியில்தான் மேற்கொண்டுள்ளது" போன்ற சொற்றொடர்களையும், வரிகளையும் எழுத முடிகிறது?

    ReplyDelete
  5. I think your jalra sound is at it's worst level hope same way whether Govt do anything to stop like u people, if that happen really I feel great

    ReplyDelete
  6. இந்த பதிவை படித்தபின் பத்ரி மீதிருந்த மதிப்பு போய்விட்டது போல தோன்றுகிறது.நல்லவைகளை எழுதுங்கள்.நடுநிலையோடும் எழுதுங்கள்.நீங்கள் எப்படி எழுதியும் சன் குழுமத்திடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்.ஏனெனில் அரசிடமிருந்து வாங்க் முடியாது. வினை விதைத்தவன் ,தினையா அறுக்க முட்யும்?

    ReplyDelete
  7. மீடியா துறையை சார்ந்தவன் என்ற முறையில் உங்கள் கருத்துக்கு சில மாற்றுக்கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்:

    1. கேபிள் சேவையை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக நிலுவையில் உள்ள ஒன்று.
    2. குறுகிய கால அடிப்படையில் பார்த்தால், நீங்கள் சொல்லும் பல பிரச்சினைகள் சரி என பட்டாலும், அரசு ஏற்பதனால், நீண்ட கால அடிப்படையில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன.
    3. சன் போன்ற ஒரு அடாவடி நிறுவனத்தை வழிக்கு கொண்டு வர இது மாதிரியான நடவடிக்கைகளே சரி என்பது என் கருத்து.
    4. சன் சேனல்களின் நிகழ்ச்சிகளை பார்க்காவிட்டால், மக்களுக்கு எந்த வித நட்டமும் கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து.
    5. தன் சேனல்கள் அரசு கேபிளில் தெரிய வைக்க சன் TRAI, TDSAT போன்ற மன்றங்களில் முறையிட்டு கொள்ளலாம். ஆனால், இந்த மன்றங்களின் தீர்ப்புகளை மதிக்காமலே இதுவரை சன் நடந்து கொண்டுள்ளது என்பதே வரலாறு.
    6. கேபிள் ஆபரேட்டர்கள் என்பவர்கள் அப்பாவி தொழில் முனைவோர் கிடையாது. அவர்களையெல்லாம் எப்போதோ விரட்டி அடித்து விட்டு அரசியல் கட்சி வட்ட செயலார்களும், ரவுடிகளுமே இன்று last mile connections கொடுக்கிறார்கள்.

    ஆகவே, இது கொள்ளையர்களுக்கு இடையே நடக்கும் பங்கு சண்டை மட்டுமே. இதில் நியாய தர்மங்களுக்கு இடமே இல்லை!

    ReplyDelete
  8. தாங்களே கூறியது போல, சன் குழுமம், அக்கிரமமாக நடந்து கொண்டிருக்கும்போது,
    அதைப் பற்றி, அப்பொழுதே எழுதியிருக்கலாமே? Sun Network-ன் Monopoly க்கு ஆபத்து எனத்தெரிந்ததும், பொது நியாயம் பேசுவது போல, எதற்கு இந்த வேடம்?
    கலைஞர் தான் 'அரசு கேபிள்' அமைப்பினை கொணர்ந்தார் என்பதையும், குடும்ப சண்டை தீர்ந்து, ராசியானதும், அரசு கேபிளை கிடப்பில் போட்டார் என்பதையும் வசதியாக மறந்து விடுகிறீர்களே? அரசு கேபிளில் சன் டி.வி வந்துவிட்டால் எல்லாம் சரியென்று சொல்லுவீர்களா? "நடு நிலையோடு" இருப்பதாக நாங்கள் நம்புவதற்காக, சிரமப்பட்டு எழுதுகிறீர்கள். ஆனால் சாயம் வெளுத்து விடுகிறதே!

    ReplyDelete