Wednesday, December 28, 2011

2011: அண்ணா ஹசாரே

சந்தேகத்துக்கு இடமே இல்லாமல், 2011-ல் அதிகம் பேசப்பட்ட இந்தியர், இந்தியாமீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணா ஹசாரேதான்.

ஜன லோக்பால் என்ற மசோதா முன்வரைவை முன்வைத்து ஹசாரேவும் அவருடைய குழுவினரும் பெரும் போராட்டங்களைச் செய்தார்கள். அதன் காரணமாக அரசியல் கட்சிகள் லோக்பால் மசோதாவைக் கையில் எடுக்கவேண்டியதாயிற்று. லோக்பால் என்பது ஊழலை எதிர்க்க ஓர் அமைப்பு. அரசியல்வாதிகள் தாங்களாகவே இதனைச் செய்திருக்கா மாட்டார்கள். அண்ணா ஹசாரேவின் தொடர் உண்ணாவிரத மிரட்டல்களால்தான் இத்தனை வேகமாக அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. முதலில் அரசு கொண்டுவந்த டுபாக்கூர் மசோதா, பின் கொஞ்சம் அதிகமான பலத்துடன் நேற்று கொண்டுவரப்பட்டு, சாதாரணச் சட்டமாக (அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக இல்லாமல்) மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் என்ன ஆகும் என்பது இன்று தெரிந்துவிடும்.

அண்ணா ஒரு காந்தியா? அண்ணா ஒரு ஏமாற்றுப் பேர்வழியா? அண்ணா வெறும் முகமூடியா? பின்னிருந்து இயக்குவது யார்? கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன்/ஷாந்தி பூஷன் ஆகியோர் எப்படிப்பட்டவர்கள்? இந்த இயக்கத்தின்பின் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு என்ன? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள்.

வெறும் மத்தியவர்க்கப் பிரஜைகள்தான் அண்ணாவைப் போற்றுகிறார்கள், உழைக்கும் வர்க்கத்தவர் அல்லர்; பாருங்கள், மும்பையில் உண்ணாவிரத மைதானத்துக்கு யாருமே வரவில்லை என்கிறார்கள் சிலர். 74 வயதாகும் அண்ணாவின் உடல்நிலை தொடர் உண்ணாவிரதங்களாலும் ஊர் சுற்றுவதாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜன் லோக்பால் என்பது சர்வத்துக்குமான ஒரே அருமருந்து என்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தைக் குறுக்கிவிடுகிறார் இவர் என்பது ஒரு குற்றச்சாட்டு. அரசுக்கு மேலாக ஒரு சூப்பர் அரசமைப்பைக் கொண்டுவர முயற்சித்து அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கு உள்ளாக்குகிறார் இவர் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பான நாடாளுமன்றத்தைக் கேலி செய்கிறார், அவமதிக்கிறார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

இவர் வெறும் ஒரு பண்ணையார்தான்; ராலேகான் சித்தியில் கீழ்ச்சாதியினருக்கும் இன்னும் உரிமைகள் கிடையாது; குடிக்க முற்பட்டவர்களை தூணில் கட்டிவைத்து பெல்ட் எடுத்து விளாசியவர்தான் இவர்; இதோ நாங்கள் நேரடியாகவே அந்த ஊருக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்; அது ஒன்றும் பூலோக சொர்க்கம் இல்லை... என்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் கடந்து, அவருடைய சில திருவாய் மலர்தல்களையெல்லாம் தாண்டி, 2011-ல் பெருவாரியான இந்தியர்களின் மனத்தைத் தொட்ட மனிதர் அண்ணா ஹசாரேதான் என்பதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்.

ஏனென்றால், அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் என்பதை நீக்கமுடியும் என்ற நம்பிக்கையை பெருவாரியான இந்தியர்கள் மனத்தில் கொண்டுவந்துள்ளார். உண்மையிலேயே இது முடியுமா, சாத்தியமா என்பது அடுத்த கேள்வி. ஆனால் இதுநாள்வரையில், ஊழல் என்பது நம்மோடே இருக்கும் ஒன்று, அதை அசைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்றுதான் நாம் நம்பிவந்திருக்கிறோம். அப்படி, காந்தி காலத்தில் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை என்பதை பெருவாரியான மக்களால் நம்பமுடியவில்லையோ, அப்படி. எப்படி காந்தி விடுதலை பற்றிய நம்பிக்கை கொடுத்தாரோ, அப்படி ஹசாரே ஊழலை ஒழிக்கமுடியும் என்று ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவருடைய வழிமுறை எப்படி இருந்தாலும், நாம் நம் சொந்த வழிமுறை மூலமாவது ஊழலை எதிர்கொள்ளலாம். நாமே ஊழலில் ஈடுபட்டிருப்பவர்களாக இருந்தாலும்கூட.

9 comments:

  1. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியது அண்ணா ஹசாரே அல்ல. காமன்வெல்த் கேம்ஸ், ஸ்பெக்ட்ரம் வழக்குகளில் கடும் நடவடிக்கைகளுக்கு கறாராக உத்தரவிட்ட உச்ச நீதி மன்ற, சிறப்பு நீதி மன்ற நீதிபதிகள்தான். அந்த நம்பிக்கை உருவான சூழலையும் மீடியா கவரேஜையும் பயன்படுத்திக் கொண்டவர்தான் அண்ணா ஹசாரே.

    ReplyDelete
  2. You Are 100% right. Atleast , everyone , now think that Corruption can be removed from india and it is STOPPPEr for india growth.
    Karvind79

    ReplyDelete
  3. >>Gnani
    People like you always take the negative stance to be in the limelight. Have you safely forgotten the mega corruptions done previously like the Bofors?

    ReplyDelete
  4. >>Gnani

    A list of scams after independence, for your reference.

    the item and yearwise loot of the Congress Party:
    Jeep Purchase 1948 - Rs. 0.8 Crores
    BHU Funds 1956 - Rs. 0.5 Crores
    Mundhra Scandal 1957 - Rs. 1.2 crores
    Teja Loans 1960 - Rs. 22 crores
    Kuo Oil Deal 1976 - Rs. 2.2 crores
    HDW Commissions 1987 - Rs. 20 crores
    Bofors Pay-off 1987 - Rs. 65 crores
    ST Kitts Forgery 1989 - Rs. 9.45 crores
    Airbus Scandal 1990 - Rs. 2.5 (Per Week) crores
    Securities Scam 1992 - Rs. 5000 crores
    Indian Bank Rip-off 1992 - Rs. 1300 crores
    Sugar Import 1994 - Rs. 650 crores
    JMM Bribes 1995 - Rs. 1.2 crores
    In a Pickle 1996 - Rs. 0.1 crores
    Fodder Scam 1996 Rs. 950 crores
    CRB Scams 1997 Rs. 1000 crores
    Stock market Scam 2001 Rs. 115000 crores
    Stamp Paper Scam 2003 Rs. 30000 crores
    Scorpene Submarine Scam 2005 Rs. 18978 crores
    Ali Khan Tax Default 2008 Rs. 50000 crores
    The Satyam Scam 2008 Rs. 10000 crores
    (satyam takeover by congress govt.)
    2G Spectrum Scam 2008 Rs. 176000 crores
    Rice Exports Scam 2009 Rs. 2500 crores
    Orissa Mine Scam 2009 Rs. 7000 crores
    Common Wealth Gams Scam 2010 Rs. 40000 crores
    Blackmoney in Swiss Bank A/Cs Rs. 7100000 crores
    Telecom scam - 2011 - Rs. 2057.64 crores
    Total loss through corruption Rs. 91062381.07

    ReplyDelete
  5. On corruption, but for the Supreme Court's direct action, the scams would not have come to light. At the level of civil society, Anna and team have been successful in awakening the conscience of the nation and forcing the government to bring forward a legislation, though half-baked. On CBI, a compromise could have been worked out. Instead of making CBI reporting to Lokpal, the MPs could have empowered the agency in the same manner as the Election Commission so that the CBI is released from the clutches of the government in power.

    ReplyDelete
  6. இந்தியாவில் நல்லவர்களும், நன்மை செய்யவேண்டும் என்று நினைப்பவர்களும் எத்தனைபேர் வாழ்ந்துகொண்டிருந்தாலும், முன்வந்து எதையும் செய்யத்துணிவதில்லை.
    செய்யத்துணிந்து நம்மிடம் வேண்டிநிற்கும் அண்ணாவுக்கு வாழ்த்தவில்லைஎனினும், தூற்றாமல் இருக்கக் கற்றுக்கொள்வோம்.

    ReplyDelete
  7. //gnani said... ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியது அண்ணா ஹசாரே அல்ல. காமன்வெல்த் கேம்ஸ், ஸ்பெக்ட்ரம் வழக்குகளில் கடும் நடவடிக்கைகளுக்கு கறாராக உத்தரவிட்ட உச்ச நீதி மன்ற, சிறப்பு நீதி மன்ற நீதிபதிகள்தான். அந்த நம்பிக்கை உருவான சூழலையும் மீடியா கவரேஜையும் பயன்படுத்திக் கொண்டவர்தான் அண்ணா ஹசாரே.//

    அந்த நீதிபதிகளால் ஊழலை ஒழிக்க முடிந்ததா!? கனிமொழியை மீண்டும் கைது செய்ய முடியுமா?!? ஊழலில் அடித்த பணத்தை திரும்ப மீட்க முடியுமா?!? அல்லது அந்த நீதிபதிகளின் தீர்ப்பு மக்களை உசுப்பியதா?!? அரசியல்வாதிகளை பயமுறுத்தி ஊழலை குறைக்க வழிவகை செய்ததா?!? எதுவுமே இல்லையே?!?

    நீதிபதிகளின் கறாரான தீர்ப்பு என்பது தேவைதான் என்றாலும், மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியும் ஊழலை கிஞ்சித்தும் போருதுதுக்கொள்ள முடியாத நிலையம் தான் ஊழலை ஒழிக்க வழிவகை செய்யும். சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் தான் நீதிபதிகள். யாரும் கேட்காமலேயே தன்னார்வத்தில் காந்திய வழி போராட்டத்தை முன்னெடுத்து அநேக மக்களின் ஆதரவை பெற்ற அண்ணா தான் வேறு யாரையும்விட அதிக நம்பிக்கை தருகிறார். அதே சமயம் அவரின் செயல்பாட்டில் உள்ள பிழைகளை களைந்து அவர் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும்போது தான் ஊழல் போராட்டம் வெற்றிபெறும்.

    ReplyDelete
  8. அன்னா தோல்வி அடைந்தால் கூட அது தோல்வியாகவே எடுத்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம். இந்த மாதிரியான போராட்டத்தில் ஏது தோல்வி வெற்றி! என்ன இந்த முறை கொஞ்சம் காத்திருந்து பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் உண்ணாவிரத்தை ஆரம்பித்திருக்கலாம்.

    ஹன்ஸிகா

    ReplyDelete
  9. 2011ன் இறுதியில் அவருக்கு கிடைத்த ஆதரவு குறைந்து விட்டது என்பதுதான் உண்மை.2012ல் அவரும் அவரது குழுவும் என்ன செய்வார்கள் என்பதைப் பொருத்தே அவரது தாக்கம்/செல்வாக்கு தீர்மானிக்கப்படும், புகழுரைகளால் அல்ல.சிறை நிரப்பும் போராட்டம் போன்றவை வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.அடுத்த உண்ணாவிரதமும் அவர் உடல்நிலையைப் பொறுத்தே.காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்தால் அவர் மீது இருக்கிற நம்பகத்தன்மையும் குறைந்து விடும்.
    அவரைப் பற்றி எழுதி காசு பார்த்தவர் கூட இப்போது அவரைப் பற்றி முன்பு போல் எழுதுவதில்லை.

    ReplyDelete