Saturday, September 04, 2004

பெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்

தீம்தரிகிட ஞாநி எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த பெரியார் ("அய்யா") தொலைக்காட்சித் தொடர் நேற்று முதல் தூரதர்ஷன் ("பொதிகை") தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது.

ஐந்து பாகங்களாக, (நேற்று தொடங்கி) ஒவ்வொரு வெள்ளியும் இரவு 8.30-9.00 மணிக்குக் காண்பிக்கப்படுகிறது இந்தத் தொடர்.

இதுபற்றி மேலும் விளக்கமாக ஞானி செப் 1-15 தீம்தரிகிடவில் எழுதியுள்ளார். அந்தப் பிரதியை எங்கேயே தொலைத்து விட்டேன், அதனால் அதிக விவரங்கள் தரமுடியவில்லை.

நேற்றைய பகுதி பற்றிய மிகக்குறுகிய விமரிசனம். பெரியார் பற்றி ஒரு பெண் விவரணப்படம் எடுப்பது போலத் தொடங்குகிறது கதை. ஞாநி கறுப்புச்சட்டை தோழர் குருசாமியாக படத்தில் வருகிறார்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம். கேமரா கோணங்கள் சரியாக இல்லை. ஞாநியும், விவரணப்படம் எடுக்கும் பெண்ணும், இரண்டு மாணவர்களும் பேசும் காட்சிகளில், ஞாநியின் பின்மண்டை மட்டும்தான் கண்களில் படுகிறது. இரண்டு கேமராக்கள் வைத்துப் படம் எடுத்திருந்தால் பேசுபவர் முகம் தேவையானபோது காட்டப்பட்டிருக்கலாம்.

எஸ்.வி.இராஜதுரை, வ.கீதா ஆகியோர் பெரியார் பற்றி எழுதிய புத்தகமே இந்தத் தொலைக்காட்சித் தொடருக்கு மூலம் என்று நினைக்கிறேன். அவர்களது பெயர்கள் கடைசியாக (நன்றி... எனச் சொல்லி) வருகின்றன.

வசனத்தில் ஒருவித செயற்கை காணப்படுகிறது. ஞாநி வரப்போகும் விவரணப்படத்தைப் பற்றிப் பேசும்போது அவசர அவசரமாகப் பேசுகிறார். ஆனால் விவரணப்படம் எடுக்கும் பெண்ணாக வந்தவர் (பெயர் மறந்து விட்டது) நடிப்பு, வசனம் பேசுவது இயல்பாக, நன்றாக வந்துள்ளது.

இளம் வயது இராமன் (பிற்காலப் பெரியார்) தன் சகாவிடம் பேசும்போதும் நடிப்பும், வசனமும் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம். இப்பொழுதுதான் பெரியாரின் சிறுகுழந்தைப் பருவம் தொடங்கியுள்ளது. அப்பொழுதே குவளையை வாயில் சூப்பி நீர் குடித்தால் 'தீட்டு' என்று ஓதுவார் வீட்டுப் பெண் சொல்வதைக் கேட்டு தன் பக்கத்தில் உள்ள சிறுவனிடம் அதெல்லாம் குப்பை என்று சொல்வதிலிருந்து, வீட்டில் தன் அப்பாவிடம் கை நிறையக் காசு வாங்க வந்திருக்கும் அந்தணர்கள் விடும் புராணக் கதைகளை வைத்து அவர்களையே மடக்குவது ("பூமியைச் சுருட்டி அக்குள்ளயே வச்சிண்டானா? அப்பன்னா அவன் எங்க நின்னான்? அவனும் பூமிக்கு மேலத்தான் நிக்கறான்னா அவனும் தன்னையே மடிச்சுண்டிருப்பானே? பூமிக்கு வெளிலன்னா எங்க நின்னான்? சூரியன் மேலயா?") என்று நாத்திகம், ஆசார எதிர்ப்பு ஆகியவை இளம் வயதிலேயே தொடங்குகிறது. சிறுவயதில் மிகவும் அதிகமாகப் பேசி, குறும்பு செய்வதால் கையிலும் காலிலும் சங்கிலியால் விலங்கு பூட்டி அதில் ஒரு பெரிய மரக்கட்டையை இணைத்து அந்த மரக்கட்டையைக் கையில் வைத்துக்கொண்டுதான் இராமன் அவ்வப்போது நடக்கவேண்டியிருந்தது என்று காட்டுகிறார் ஞாநி. இது உண்மையா? பார்க்க மிகவும் கொடுமையாக இருந்தது!

இராமனாக நடித்த சிறுவன் இன்னமும் நன்றாக நடித்திருக்கலாமோ என்று எதிர்பார்ப்பு எனக்கு. மேலும் இராமன் நாயக்கர் ஜாதி. அவர்கள் தமிழ் எந்தவித உச்சரிப்பில் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. சிறிய வயது இராமன் சீரியலில் பேசுவது பிராமண ஜாதியினர் பேசுவது போல இருக்கிறது.... பெரியார் தன் கல்லறையில் புரளக்கூடாது பாருங்கள்? பிற்காலத்தில் பெரியார் பேசிய/எழுதிய பேச்சுத் தமிழுக்கும் இந்தத் தொடரில் இதுவரை சிறுவன் இராமன் பேசியதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பிற்கால உச்சரிப்பு நடை வேண்டுமென்றே தானாகவே தனக்குள்ளே புகுத்தியதாக இருந்திருக்க முடியாது.

இவற்றையெல்லாம் பெரிய குறைகளாகச் சொல்லவில்லை. ரூ. ஐந்தரை லட்சத்தில், இரண்டரை மணிநேரம் படம் வருமாறு இயக்கியிருப்பது பிரம்மாண்டமான காரியம். மற்ற நான்கு பகுதிகளையும் வரும் மாதத்தில் பார்த்துவிட்டு அவ்வப்போது எழுதுகிறேன்.

4 comments:

  1. regarding the the scene of chaining the kid raman(periyar), it is indeed an event naratted by periyar in his writings. Being not in India, I am not able to see Gnani's seriel. Rosavasanth.

    ReplyDelete
  2. பத்ரி, நான் இந்த நிகழ்ச்சியை இன்று மறுஒளிபரப்பில் பார்த்தேன். பெரியார் , அந்த விவரண படம் எடுப்பவரின் கனவில் பேசுவதாக வரும் காட்சிகள் (முக்கியமாக சில facts) மிக நன்றாக இருந்தது. அடுத்த பகுதிகளை தவறவிடமால் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது. நீங்கள் கூறிய தொழில்நுட்ப குறைகளை நானும் கவனித்தேன், ஆனால் அந்த குறும்படத்தின் போக்கில், பெரியார் பற்றி அதிகமாக தெரியாத எனக்கு ரொம்ப பெரிய குறையாக தெரியவில்லை.

    அந்த விவரண படம் எடுப்பவராக வருபவர் பெயர், ஆனந்தி.

    ReplyDelete
  3. சந்தோஷ்: பெரியார் கனவில் வருவதாக வரும் காட்சிகள் எனக்கென்னவோ அவ்வளவு சுவாரசியமாகத் தோன்றவில்லை. அதையொட்டி வரும் சில தேவையற்ற ஜோக்குகளும் ("ஓ, நீங்க பெரியாரைச் சொன்னீங்களா, இல்லை பெரியார் வேஷத்துல நடிக்கற தோழர் ரவிராஜைச் சொன்னீர்களா" என்று ஞாநி - தோழர் குருசாமி - கேட்பது போல வருவது) நேரத்தை வீணடிக்கின்றன.

    வேறு மாதிரி எடிட் செய்திருக்கலாம் இந்த விஷயங்களை. உள்ளடக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. அதை இன்னமும் கச்சிதமாக, வடிவம் மாற்றிக் கொடுத்திருக்கலாம்.

    மேலும் 'பெரியார் கனவில் வந்து பேசுவது' என்ற படிமமே பெரியாரின் கருத்துகளுக்கு எதிரானது என்று நினைக்கிறேன். இல்லையா? என்னவோ புராணங்களில் கடவுள் அசரீரியாக வந்து பேசுவது போல உள்ளது...

    ReplyDelete
  4. நான் மிகவும் கவரப்பட்டது, அந்த கற்பனையான விவாதத்தில் அவர் கூறிய சில செய்திகளால் தான். தோழர் ஜீவானந்தம் தன்னைவிட்டு பிரிந்தது, மற்றும் ஏனைய பிற கொள்கை விளக்கங்கள் என்று வந்த வசனங்கள் (3 அல்லது 4 நிமிட வசனங்கள் ஒரே டேக்கில் எடுத்திருந்தனர்).

    // 'பெரியார் கனவில் வந்து பேசுவது' என்ற படிமமே பெரியாரின் கருத்துகளுக்கு எதிரானது என்று நினைக்கிறேன். இல்லையா? //

    நீங்கள் சொல்வது சரியே. ஆனால் அதற்கும் அந்த நிகழ்ச்சியிலேயே குருசாமியாக வரும் ஞானி ஒரு விளக்கம் கொடுத்தாரே . "நீங்கள் பெரியார் பற்றியும், அந்த திரைப்படத்தினைப் பற்றியும் அதிகமாக சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுதான் கனவில் வந்தது", என்ற ரீதியில் ஒரு வசனம் அதில் வரும்.

    ஆனால் ஒன்று, எதோ வித்தியாசமாக படம் எடுக்க முயன்றிருக்கின்றனர். முழு படத்தையும் (அனைத்து எபிஸோடுகளையும்) பார்த்தால் தெரியும் என நினைக்கிறேன்.

    ReplyDelete