ஆஸ்திரேலியா 235, இந்தியா 291/6 (100 ஓவர்கள்) - காயிஃப் 34*, படேல் 27*
மற்றொரு சுவையான நாள். இந்தியா சற்று மேல், ஆனால் மிகக் குறைவாகவே. விரேந்தர் சேவாக் இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும்.
இன்று காலை சேவாகும், பதானும் பேட்டிங் செய்ய வந்தனர். இந்தியாவில் இரண்டு பேருக்கு பந்துகளை நன்றாக தடுத்தாடத் தெரிந்துள்ளது. ஒருவர் திராவிட். மற்றொருவர் பதான். காலை ஒன்றரை மணிநேரம் பதான் நேர்த்தியான தடுப்பாட்டத்தைக் காண்பித்தார். ஒரேயொருமுறை, காஸ்பரோவிச் பந்தை ஆஃப் திசையில் வெட்டப்போய் பந்தைத் தவறவிட்டார். அது ஒன்றுதான் அவர் தன் இன்னிங்ஸில் செய்த தவறு - விக்கெட் கொடுத்த பந்தைத் தவிர.
இந்நேரத்தில் பதான் எடுத்த ரன்கள் வெறும் 14தான். அதில் ஷேன் வார்ன் பந்தை ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸ், ஜஸ்டின் லாங்கர் ஓவர்துரோ செய்து ஓசியாகக் கொடுத்த ஒரு நான்கு அடங்கும். மற்ற நேரத்தில் பதான் ரன் ஏதும் எடுக்க முயற்சிக்கவில்லை. மெக்ராத், கில்லெஸ்பி, காஸ்பரோவிச், வார்ன் - ஒருவர் மாற்றி ஒருவராக வந்தனர், வீசினர், தடுக்கப்பட்டு தலை குனிந்து சென்றனர்! மறுமுனையில் சேவாக் கூட பல பந்துகளைத் தடுத்தாடினார். சில பிரமிக்க வைக்கும் அடிகள், அதே சமயம் அசிங்கமான சில கிந்தல்கள் என்று சேவாகின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. சேவாக் ஷேன் வார்ன் பந்துகளை கால் திசையில் மிட் விக்கெட் மேல் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார். இதனால் வார்ன் பந்துவீச்சின் போது கில்கிறிஸ்ட் அவருக்கு டீப் பைன்லெக், டீப் ஸ்கொயர் லெக், டீப் மிட்விக்கெட் என்று மூவரை எல்லைக்கோட்டிலேயே வைத்திருந்தார். அதனால் சேவாகிற்கு வேண்டிய நேரத்தில் ஒரு ரன்னைப் பெறுவது எளிதாக இருந்தது. பதானோ பந்துகளை விட்டுவிடுவார், அல்லது தன் பேட்டில் வாங்கி பொறுமையாக தரையோடு தரையாக அழுத்திக் கொன்று விடுவார்.
பதான் இன்றுமுழுவதும் ஆடுவார், யாராவது ஒருவர் அவுட்டாவார் என்றால் அது சேவாகத்தாண் இருக்கும் என்று தோன்றிய போது, திடீரென ஆட்டத்தின் போக்குக்கு முற்றிலும் மாறாக பதான், ஷேன் வார்ன் பந்துவீச்சில் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் ஹெய்டனால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். 83/2. இத்துடன் ஷேன் வார்ன் முரளிதரனை விட ஒரு விக்கெட் அதிகமாக எடுத்து உலகில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளரானார். இனி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் முந்துவார்கள்.
திராவிட் உள்ளே வந்து பதான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து தடுத்தாடினார். சேவாக் மறுமுனையில் கொஞ்சம் கொஞ்சமாக தன் முழு வீச்சையும் காட்டினார். ஓர் ஓவரில் ஒரு கவர் டிரைவ், ஒரு புல் என்று நான்குகள் அடித்து மெக்ராத்தை அதிர வைத்தார். வார்னை அவ்வப்போது இறங்கி அடித்து ரன்களைப் பெற்றார். உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் திராவிட் கூட முதலில் வார்ன் பந்தை அருமையாக மிட் விக்கெட் திசையில் தரையோடு ஆன் டிரைவ் செய்தார். பின்னர், ஏதோ வெறியில் மேலே தூக்கி அடித்தார். அந்தப் பந்து மிட் விக்கெட் பந்துத் தடுப்பாளர் தலைக்கு சற்றுமேல் சென்று நான்கானது. தெய்வாதீனமாக திராவிட் தப்பினார். உணவு இடைவேளை போது இந்தியா 101/2.
உணவு இடைவேளைக்குப் பின்னர் சேவாக், திராவிட் ஜோடி மிகவும் எளிதாக ரன்களைப் பெற ஆரம்பித்தது. கில்கிறிஸ்ட் இந்த நேரத்தில் ரன்களைத் தடுக்கும் முகமாகவே தடுப்பாளர்களை நிறுத்தினார். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது திராவிடுக்கு ஒரு ஸ்லிப். சேவாகிற்கு அதுவுமில்லை. நான்கைந்து பேர்கள் எப்பொழுதும் எல்லைக்கோட்டில். இரண்டு மூன்று முறைகள் சேவாக் பந்தைத் தூக்கு அடிக்கும்போது தடுப்பாளர்கள் ஓடிச்சென்று பிடிக்க முயல்வர். கைக்கெட்டும் தூரம்... வாய்க்கெட்டாது. திடீரென சேவாக் 90களுக்கு வந்துவிட்டார். 95இலிருந்து இரண்டு நான்குகள் வழியாக சதம்.
தேநீர் இடைவேளை நெருங்கிக் கொண்டிருக்க, மூன்று முன்னணிப் பந்து வீச்சாளர்களும் விக்கெட் எடுக்காத நிலையில் கில்கிறிஸ்ட் காஸ்பரோவிச்சைக் கொண்டு வந்தார். காஸ்பரோவிச் வீசிய ஒரு பந்து இன்ஸ்விங் ஆனபின், தரையில் பட்டு உள்ளே திரும்பியும் வந்தது. திராவிடின் பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பில் விழுந்தது. இதுவும் எதிர்பார்க்காத ஒரு விக்கெட். திராவிட் 26 ரன்கள். இந்தியா 178/3. தொடர்ந்து வந்த கங்குலி சொதப்பு சொதப்பினார். காஸ்பரோவிச்சின் அதே ஓவரில் ரன்கள் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச். ஆனால் நல்லவேளையாக நோபால். பின் காஸ்பரோவிச்சின் மற்றுமோர் ஓவரில் கங்குலி கையில் கொடுத்த கேட்சை, கில்கிறிஸ்ட் தடவினார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 197/3.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு கில்லெஸ்பி பந்துவீச வந்தார். கங்குலி தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், 9 ரன்கள் எடுத்து, கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 203/4. லக்ஷ்மண் ஒரேயொரு நான்கை மட்டும் அடித்த பின்னர் கில்லெஸ்பியின் உயரம் வெகுவாகக் குறைந்து வந்த பந்தில் பவுல்ட் ஆனார். 213/5.
சேவாக் இந்த நேரத்திலும் கூட நின்று ஆட வேண்டும் என்று தோன்றாமல், ரிவர்ஸ் ஸ்வீப் எல்லாம் அடிக்க முனைந்தார். எல்லைக்கோட்டில் ஆறு பேர்கள் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படமால் ஷேன் வார்ன் பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க மைக்கேல் கிளார்க் கேட்ச் பிடித்தார். 233/6. சேவாகின் 155 ரன்கள் 221 பந்துகளில், 21 நான்குகளோடு வந்தது. சேப்பாக்கத்தில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்களில் நான்காவது சேவாக். இதற்கு முந்தைய மூவர் கவாஸ்கர், குண்டப்பா விஷ்வநாத், டெண்டுல்கர்.
அவ்வளவுதான், இனி நம்மாட்கள் 250 தாண்ட மாட்டார்கள் என்று நினைத்தோம். மணி பிற்பகல் 3.00. இருட்ட ஆரம்பித்தது. மின்விளக்குகள் எரிய, மொஹம்மத் காயிஃப், பார்திவ் படேல் விளையாடினர். படேல் கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுக்க, இன்று கில்கிறிஸ்ட் காலையில் யார் முகத்தில் முழித்தாரோ, இந்த கேட்சையும் தடவினார். படேல் இரண்டு முறை ஸ்லிப்பின் இடையே பந்தைத் தட்டி நான்கு ரன்களைப் பெற்றார். காயிஃப் கூட முழுவதும் சுயக் கட்டுப்பாட்டில் ரன்கள் பெற்றார் என்று சொல்ல முடியாது, ஆனால் அடித்த ஐந்து நான்குகளில் மூன்று அருமையான ஷாட்கள். பார்திவ் படேல் எடுத்ததெல்லாமே ஓசி.
83 ஓவர்களுக்குப் பிறகு கில்கிறிஸ்ட் புதிய பந்தை எடுத்தார். ஆனால் அதன்பின் விக்கெட் எதுவும் விழவில்லை. ஆட்டம் முடியும்போது இந்தியா 291/6 என்ற நிலையில் உள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களைச் சேர்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்ஸில் சுலபமாக அவுட்டாக்கி விடலாம் என்று நினைக்க முடியாது. மேலும் நாம் நான்காவதாக விளையாடுகிறோம். டெண்டுல்கர் அணியில் இல்லை. சேவாக் ஏற்கனவே தன் கணக்கில் இந்த மேட்சுக்கென நிறைய ரன்களைப் பெற்று விட்டார். லக்ஷ்மண் ஃபார்ம் கவலை தருகிறது. கங்குலியும் அப்படியே. யுவராஜ் தொடக்க ஆட்டக்காரராக வந்தால் விரைவிலேயே உள்ளே வந்துவிடுவார்... இந்தியாவில் நான்காவது இன்னிங்ஸில் 150க்கு மேல் அடிப்பது கஷ்டம்.
இந்தியாவின் லீட் 125-150 இல்லாவிட்டால் திண்டாட்டம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
14 hours ago
பத்ரி,
ReplyDeleteஇன்றைய சுவையான ஆட்டத்தை சுவையுடன் விமர்சித்துள்ளீர்கள். மேட்ச் இன்னும் 50-50'யாக்த்தான் உள்ளது. ஆஸ்தேரிலியாவின் ஃபில்டிங் மிகவும் தரக்குறைவாக இருந்ததும் நமக்கு சாதகமாக இருந்தது (6 கேட்ச் கோட்டை விடப் பட்டன; 2/3 ஓவர்திரோ). ஆஸ்தேரிலிய வீரர்கள் நடுவர் வேலையையும் தாங்கலே செய்வது குறித்து உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
By: Ravikumar
சந்தோஷமான நிகழ்ச்சிகள் + சுவையான வருணனை = சுகமான வாசிப்பு. சென்னையில் மூன்று மணிக்கு இருட்டத் தொடங்குகிறதா? Daylight savings time? :-)
ReplyDeleteஆஸ்திரேலியாவின் பீல்டிங் நேற்று படுமோசம். கையில் விழுந்த கேட்ச்கள் மூன்றுதான் நழுவவிடப்பட்டது. மற்ற மூன்று ஓடிச்சென்று பிடிக்க முற்பட்டவை (சேவாகிற்கு). அவற்றைப் பிடிப்பது கஷ்டம். இந்திய வீரர்கள் அதன் அருகே கூடச் சென்றிருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாக இவற்றைப் பிடித்திருப்பர். நேற்று இல்லை.
ReplyDeleteஇரண்டு ஓவர்துரோ.
அதைத் தவிர பந்துத் தடுப்பு வியூகம் அதிக defensive ஆக இருந்தது நாள் முழுவதுமே. அதுவும் சேவாக் பேட்டிங் வந்துவிட்டார் என்றால் எல்லோரும் எல்லைக் கோட்டுக்கு ஓடுவர். மெக்ராத் கில்லெஸ்பி பந்துவீசும்போது கூட சேவாகிற்கு ஒரு ஸ்லிப் கூட கிடையாது. தூரத்தில் ஒரு கல்லி மட்டும். பாண்டிங், ஸ்டீவ் வா அணித்தலைவராக இருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் சேவாகையும் தொடர்ந்து 'அட்டாக்' செய்வர்.
நேற்று மதியம் (தேநீர் இடைவேளைக்கு முன்னர்) மழை வரும்போல பயமுறுத்தியது. கறுப்பு மேகங்கள் இல்லை, சற்றே வெளுத்தவைதான். ஆனால் வெளிச்சம் இருந்தது. மைதானப் பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு போய் டார்பாலின் கவர்களை தயார் படுத்தினர். எனக்கு மட்டும் மழை சொட்டு கூடப் பெய்யாது எனத்தோன்றியது. கடைசிவரை மழை பெய்யவில்லை.
ReplyDeleteதேநீர் இடைவேளைக்குப் பின் மீண்டும் மேகமூட்டம் - இம்முறை நன்கு வெளுத்த மேகங்கள், ஆனால் சூரியனை முற்றிலுமாக மறைத்து விட்டன. அதனால் இருள். தயங்கித் தயங்கித்தான் நடுவர்கள் மின்விளக்குகளைக் கேட்டனர்.
ஆட்டம் நடக்கும்போது ஒருமுறை விளக்குகளைப் போட்டுவிட்டால், முடியும்வரை விளக்குகளை அணைக்கக் கூடாது. நடுவில் இயல்பு வெளிச்சம் நன்றாக ஆனாலும், விளக்குகள் இருக்க வேண்டும். கடைசியில் சீரிய வெளிச்சம் கொஞ்சம் வரத்தொடங்கியது, ஆனாலும் விளக்குகள் கடைசிவரை இருந்தன.
இன்றும் மாலையில் அப்படித்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது... மதியம் மழை வருவது போல பயமுறுத்தும், ஆனால் மழை இருக்காது, பின் நன்கு இருளும், அப்பொழுதும் மழை இருக்காது.
//இந்தியாவின் லீட் 125-150 இல்லாவிட்டால் திண்டாட்டம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.//
ReplyDelete//எனக்கு மட்டும் மழை சொட்டு கூடப் பெய்யாது எனத்தோன்றியது. கடைசிவரை மழை பெய்யவில்லை.//
எப்பலேர்ந்து அருள்வாக்கெல்லாம் சொல்ல ஆரம்பிச்சீங்க?:-)) 141 லீட்!
//இன்றும் மாலையில் அப்படித்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது... மதியம் மழை வருவது போல பயமுறுத்தும், ஆனால் மழை இருக்காது, பின் நன்கு இருளும், அப்பொழுதும் மழை இருக்காது.//
இதைப் பாக்கலாம். ;-)