Tuesday, October 26, 2004

நாக்பூர் டெஸ்ட், முதல் நாள்

ஆஸ்திரேலியா 362/7 (90 ஓவர்கள்) - கிளார்க் 73*, கில்லெஸ்பி 4*

முதலிரண்டு டெஸ்ட்களில் இருந்த அணியின் வலிமை வெகுவாகக் குறைந்தும், இந்தியா இன்று சற்றும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டியது.

சென்னை டெஸ்ட் முடிந்த போதே இர்பான் பதான் விளையாட மாட்டார் என்று தெரிந்துவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன்னர் டெண்டுல்கர் இந்த டெஸ்டில் ஆடுவார் என்பதைக் கேட்டு நாடே சந்தோஷத்தில் மூழ்கியது. ஆனால் இன்று ஆட்டம் நடக்கும் முன்னரே சவுரவ் கங்குலி (தொடை இழுப்பு), ஹர்பஜன் சிங் (ஜுரம்) இருவரும் விளையாட மாட்டார்கள் என்பது பேரிடியாக விழுந்தது. திராவிட் தற்காலிக அணித்தலைவர் ஆனார். ஆனால் டாஸ் என்னவோ கில்கிறிஸ்ட் பக்கம்தான். இந்தியா யுவ்ராஜ் சிங்குக்கு பதில் ஆகாஷ் சோப்ராவையும், பதானுக்கு பதில் அகர்கரையும், ஹர்பஜனுக்கு பதில் முரளி கார்த்திக்கையும் கொண்டு வந்தது. ஆஸ்திரேலியா அணியில் எந்த மாற்றமும் இல்லை. டாஸ் வென்றதும் பேட்டிங் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை.

முன்னணிப் பந்துவீச்சாளர்கள் மூன்றுபேரை (பாலாஜி, பதான், ஹர்பஜன்) இழந்த இந்தியா காலை முதலே சுமாராகவே பந்து வீசியது. ஜாகீர் கான், அகர்கர் இருவரும் அவ்வப்போது மட்டை விளிம்புகளை முத்தமிட்டுச் சென்றனர். ஆனால் எதுவும் கேட்ச் ஆகவில்லை. கடந்த இரண்டு டெஸ்ட்களைப் போலவே ஆஸ்திரேலியத் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சுலபமாக ரன்களைப் பெற்றனர். ஹெய்டனை விட லாங்கர் ஆக்ரோஷமாக விளையாடினார். கும்ப்ளே பந்துவீச வந்தும் எந்த மாற்றமும் இல்லை. இப்படியே போனால் தொடக்க ஆட்டக்கார ஜோடி 250 ரன்களைப் பெறும் என்று நான் சொல்லிமுடிக்கவும், அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

உணவு இடைவேளை நெருங்கினாலே சற்று சாவதானமாக விளையாடுவது மற்ற அணிகளின் இயல்பு. ஆஸ்திரேலியா அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தன் இரண்டாவது ஸ்பெல்லில், ஜாகீர் கான் உள்நோக்கிக் கொண்டுவந்த பந்தை ஹெய்டன் வெட்டினார், ஆனால் பந்து விளிம்பில் பட்டு படேலிடம் சென்றது. இம்முறை கேட்சைப் பிடித்து விட்டார் படேல். ஹெய்டன் 23, ஆஸ்திரேலியா 67/1. மறுமுனையில் கும்ப்ளே நன்றாகப் பந்துவீசினார். முதல் விக்கெட் விழுந்து அடுத்த மூன்று ஓவர்களுக்குள், கும்ப்ளே வீசிய பந்தில் லாங்கர் விக்கெட் கீப்பர், முதல் ஸ்லிப் இருவருக்கும் இடையே ஒரு கேட்ச் கொடுத்தார். பிடிக்க மிகவும் கஷ்டமானதுதான். ஆனால் லாங்கர் அடுத்த ஓவரிலேயே கானின் சற்றே உயரம் அதிகமாகி வந்த பந்தை வெட்டி ஆடப்போய் முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிட் கையில் கேட்ச் கொடுத்தார். லாங்கர் 44, ஆஸ்திரேலியா 79/2. காடிச், மார்டின் இருவரும் உணவு இடைவேளை வரை சென்றுவிடுவார்கள் என்று நினைக்கும்போதே, கும்ப்ளே பந்தில் மட்டை, கால்காப்பு வழியாக பார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருக்கும் ஆகாஷ் சோப்ராவிடம் பிடிகொடுத்து காட்சி அவுட்டானார். காடிச் 4, ஆஸ்திரேலியா 86/3. மார்ட்டினும், லெஹ்மானும் சற்றும் பயமின்றி விளையாடி உணவு இடைவேளை போது ஆஸ்திரேலியாவை 103/3 என்னும் எண்ணிக்கைக்குக் கொண்டு சென்றனர்.

உணவு இடைவேளைக்குப் பின் மார்ட்டினும், லெஹ்மானும் பிரம்மாதமாக விளையாடினர். தம் அணி மிகக் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பது போலவே அவர்கள் விளையாடவில்லை. ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் அடித்து நொறுக்கினார்கள். முதல் முறையாக முரளி கார்த்திக் பந்துவீச வந்தார். டெண்டுல்கரும் பந்துவீச வந்தார் (நிறைய அடி வாங்கினார்). அணி 216/3, தன் ஸ்கோர் 61* என்னும் நிலையில் ஹாம்ஸ்டிரிங் பிரச்னையால் (தொடை, கவுட்டி நரம்பு இழுத்துக்கொள்ளுதல். இதனால் காலை அகட்டி வைத்து விளையாட முடியாது, ஓடி ரன்கள் எடுக்க முடியாது) பாதிக்கப்பட்ட லெஹ்மான் உதவி ஓட்டக்காரரைக் கோரினார். கில்கிறிஸ்ட் செய்தது போல திராவிட் எந்த அசிங்கமான பிரச்னையையும் எழுப்பவில்லை. ஹெய்டன் உதவிக்கு வந்தார். அடுத்த பந்திலேயே லெஹ்மான் கார்த்திக் பந்தை இறங்கி அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். ஆனால் அடுத்த ஓவரில் லெஹ்மான் டெண்டுல்கர் பந்துவீச்சில் அவருக்கே கையில் கொடுத்த கேட்ச் நழுவிப்போனது. ஆனால் இங்கும் உடனடியாக கார்த்திக் வீசிய பந்தில் முதல் ஸ்லிப் திராவிட் கையில் பந்தை வெட்டி கேட்ச் கொடுத்து லெஹ்மான் அவுட்டானார். லெஹ்மான் 70, ஆஸ்திரேலியா 234/4. தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 245/4 என்ற நிலையில் இருந்தது. மார்ட்டின் 80 ரன்களுடன் இருந்தார்.

கடைசி வேளையின்போது தொடக்கத்தில் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. அகர்கர் வீசிய பந்தை கவர் பாயிண்ட் திசையில் நான்காக அடித்து மார்ட்டின் சதம் பெற்றார். அவரது ஒன்பதாவது டெஸ்ட் சதம் இது. ஆனால் மார்ட்டின் அதன்பின் வெகுநேரம் நிற்கவில்லை. கும்ப்ளே பந்தை லாங் ஆஃப் மேல் சிக்ஸ் அடித்தவர், அடுத்த பந்திலும் அதேபோல் அடிக்கப்போய் மிட் ஆஃபில் இருக்கும் அகர்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மார்ட்டின் 114, ஆஸ்திரேலியா 314/5. மார்ட்டினும், லெஹ்மானும் சேர்ந்து ஆஸ்திரேலியாவை தொல்லையிலிருந்து முழுவதுமாகக் காப்பாற்றினர். ஆனால் கிளார்க்கும், கில்கிறிஸ்டும் தோற்கமுடியாத நிலைக்கு ஆஸ்திரேலியாவை அழைத்துச் சென்றுவிடுவார்களோ?

கார்த்திக் வீசிய காற்றில் மிதக்கும் பந்தை சரியாகக் கணிக்காத கில்கிறிஸ்ட் பந்தை விசியவரிடமே மேலாக அடித்தார். கார்த்திக் முன்னால் பாய்ந்து விழுந்து அற்புதமான கேட்ச் பிடித்தார். கில்கிறிஸ்ட் அடித்தது வெறும் 2 ரன்கள். ஆஸ்திரேலியா 323/6. இப்பொழுது கார்த்திக் நன்றாகவே பந்துவீசிக்கொண்டிருந்தார். மறுமுனையில் கிளார்க் சிறிதும் பயமின்றி இறங்கி இறங்கி வந்து சுழற்பந்து வீச்சாளர்களைத் தூக்கி அடித்து ரன்களைப் பெற்றுக்கொண்டிருந்தார். 87 பந்துகளில் தன் அரை சதத்தைப் பெற்றார். ஆனால் ஷேன் வார்ன் வெகுநேரம் நிற்கவில்லை. கார்த்திக் பந்தை இறங்கி அடிக்க வந்தவர் அதை முழுவதுமாக விட்டுவிட, படேல் வார்னை ஸ்டம்பிங் செய்தார். வார்ன் 2, ஆஸ்திரேலியா 337/7. கடைசி இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றதன் மூலம் இந்தியா மீண்டும் தன் முகத்தை முன்னுக்குத் தள்ளியது.

ஆனால் கிளார்க், கில்லெஸ்பியுடன் கூட்டு சேர்ந்து ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். கிளார்க் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார். படேல் இரண்டையும் தவற விட்டார். கும்ப்ளே பந்தில் ஒரு ஸ்டம்பிங், ஜாகீர் கான் பந்தில் கையில் வந்து விழுந்த ஒரு கேட்ச் - இரண்டையும் தவற விட்டார் படேல். முதல் நாள் ஆட்டம் முடிந்த போது ஆஸ்திரேலியா 362/7 என்ற நிலையில், கிளார்க் 73*, கில்லெஸ்பி 31 பந்துகளில் 4* என்றும் இருந்தனர்.

இந்தியாவின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் அவ்வப்போது எடுத்த விக்கெட்டுகள் மூலம் கொஞ்சமாவது ஆட்டத்தில் இருக்கின்றனர். படேல்... இவரை என்ன செய்யலாம்?

3 comments:

  1. நல்ல கட்டுரை..பட்டேல்...ஊகும்,வேலைக்காக மாட்டார் போல இருக்கே!

    By: Arun

    ReplyDelete
  2. பந்து வீச்சாளர்களோ, மட்டையாளர்களோதான் இதுவரை தோல்விக்கான காரணமாக இருந்திருக்கிறார்கள். முதல் முறையாக விக்கெட் கீப்பரால் தோல்வி அடையும் சாதனையை செய்ய படேல் முயற்சிக்கிறார். சென்னையில் இது நிகழ்ந்திருக்கக் கூடும். வருண பகவான் உதவியால் தவிர்க்கப் பட்டது.

    நாக்பூரில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இங்கிலாந்திற்கு எதிராக 1981ல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த நான்காவது (?) டெஸ்டில்தான் முதன்முறையாக ஒரு bye கொடுத்தார் கிர்மானி.

    ம்.. அது வேறு காலம்.

    -ராஜ்குமார்

    ReplyDelete
  3. படேல் ஒரு குழந்தை. இன்னும் கொஞ்சநாள் உள்ளூர் ரஞ்சி டிராபிகளில் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கலாம். ஒரு அவசரமும் இல்லை. இன்னும் இரண்டொரு வருடங்கள் கழித்து மீண்டும் அணியில் சேர்க்கலாம்.

    By: பாரா

    ReplyDelete