Saturday, October 16, 2004

இரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்

ஆஸ்திரேலியா 235 & 150/4 (50 ஓவர்கள்) - மார்ட்டின் 19*, கில்லெஸ்பி 0*; இந்தியா 376

என்ன சொல்ல? மற்றுமொரு சுவாரசியமான தினம். ஆடுகளத்திலும், வெளியிலும் பல சுவையான நிகழ்ச்சிகள்.

இன்று காலை ஆடத் தொடங்கிய படேலும், காயிஃபும் நேற்று கஷ்டப்பட்டது போல இல்லாமல் இன்று மிகவும் சுலபமாகவே பந்துகளைச் சந்தித்தனர். இன்று நேற்றை விட வெய்யில் அதிகம். படேல் நேற்று தடவித் தடவித்தான் விளையாடினார். ஆனால் இன்று ஆரம்பம் முதலே பல அருமையான நான்குகள் அவரது பேட்டிலிருந்து பறக்க ஆரம்பித்தன. காஸ்பரோவிச், கில்லெஸ்பி, வார்ன், காடிச் யாரையும் விட்டுவைக்கவில்லை. காயிஃப் அதே நேரம் ஒன்று, இரண்டு என தன் எண்ணிக்கைகளை அதிகமாக்கினார்.

முதலில் காயிஃப் தன் அரை சதத்தை எட்டினார். படேல் அவரைத் தொடர்ந்தார். வார்ன் பந்தை மிட்விக்கெட்டில் புல் செய்து ஒரு நான்கைப் பெற்ற படேல், அடுத்து அவரை வெட்டி ஆடப்போய், விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்தார். 335/7. படேல் 54, ஏழாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர் படேலும், காயிஃபும்.

கும்ப்ளே, காயிஃப் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை தொடர்ந்து துன்புறுத்தினர். கும்ப்ளே அளவு அதிகமாக வீசப்பட்ட பந்துகளை தைரியமாக அடித்து விளையாடினார். உணவு இடைவேளை வரையில் வேறெந்த விக்கெட்டும் விழாமல் இந்தியா 363/7 என்ற நிலையில் உள்ளே திரும்பியது.

காலையில் தண்ணீர் இடைவேளை நேரத்தில் ஆஸ்திரேலிய 12வது ஆள் தண்ணீர், குளிர்பானம் கொண்டுவரும்போது கூடவே இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளையும் கொண்டுவந்தார். இது போன்று இதுவரை எந்த டெஸ்டிலும் நடந்ததில்லை. மதியம் நாற்காலிகளோடு விரியும் பெருங்குடை ஒன்றையும் கூடக் கொண்டுவர ஆரம்பித்தார்! அவ்வப்போது நடுவர்களும் குடையின் கீழ் அமர்ந்தனர். ஆனால் இந்த முறையை இந்திய 12வது ஆள் பின்பற்றவில்லை! உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாகவே காயிஃப் ஒவ்வோர் ஓவரின் இடையிலும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை நடுவர் ஷெப்பர்ட் காயிஃப் இவ்வாறு நேரம் கடத்துவதைக் கடுமையாகக் கண்டித்தார். உணவு இடைவேளையின் போது அவசர அவசரமாக உள்ளே ஓடிய காயிஃப் இடைவேளைக்குப் பின் பேட்டிங் செய்ய வரவில்லை. அப்பொழுது காயிஃப் 60 ரன்களில் இருந்தார்.

இது இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக அமைந்தது. காயிஃப் உடலிலிருந்து நிறையத் தண்ணீர் வெளியேறியது என்றும் அதனால் அவர் திரும்பி விளையாட வருவது சந்தேகம்தான் என்றும், வேண்டுமானால் துணை ஓட்டக்காரர் ஒருவருடன் கடைசியாக வரலாம் என்றும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

இந்த ஒரு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா முன்னேற ஆரம்பித்தது. காயிஃப் உடன் நன்றாக விளையாடிய கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உள்ளே வந்ததும் ஷேன் வார்ன் பந்து வீச்சில் - லெக் பிரேக் - இறங்கி அடிக்கப் போய் ஸ்டம்பை இழந்தார். 369/8. ஹர்பஜனும் வார்ன் பந்தில் அவருக்கே கையில் நேராக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 372/9. இந்த நிலையில் காயிஃப் மீண்டும் விளையாட வந்தார்.

உள்ளே வரும்போதே அவருடன் கூட யுவராஜ் சிங்கும் வந்தார். அதைப் பார்த்த கில்கிறிஸ்ட் ஓடிப்போய் நடுவர்களிடம் தீவிரமாக முறையிட்டது போல இருந்தது. நடுவர் ஷெப்பர்ட் யுவராஜை வெளியே போ என்றார். அதிர்ந்து போன யுவராஜும், காயிஃபும் ஷெப்பர்டிடம் சென்று முறையிட்டனர். கில்கிறிஸ்ட் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஏதோ பேசினார். கடைசியில் யுவராஜ் துணை ஓட்டக்காரராக இருக்க நடுவர்கள் அனுமதி அளித்தனர். ஆனால் விதி விளையாடியது. வார்ன் தனக்கு வீசிய முதல் பந்தை காயிஃப் மிட் ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். அடுத்த பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்துவிட்டு தானே ஓட ஆரம்பித்தார். யுவராஜ் தனக்காக ஓட இருப்பதை காயிஃப் மறந்து விட்டார். இரண்டடி எடுத்து வைத்தவர் தடுக்கி கீழே விழுந்து மீண்டும் கிரீஸுக்குள் வரமுடியவில்லை. இதற்கிடையில் யுவராஜ் மறுமுனைக்கு செல்ல, ஜாகிர் கான் காயிஃப் இருக்கும் முனைக்கு வர, காயிஃப் மட்டும் பரிதாபமாக தரையில் விழுந்து கிடந்தார். எழுந்து நிற்கக்கூட முடியவில்லை அவரால். இதற்குள் மார்ட்டின் பந்தைப் பொறுக்கி கில்கிறிஸ்டுக்கு அனுப்ப, அவர் ஸ்டம்பை உடைத்து அப்பீல் செய்ய, காயிஃப் ரன் அவுட் 64. இந்தியா 376 ஆல் அவுட்.

இதுநாள் வரை கில்கிறிஸ்ட் கட்டிவந்த கோட்டை சரிந்தது போல இருந்தது. ஆஸ்திரேலியர்களால் அசிங்கமான கிரிக்கெட் தான் விளையாட முடியும் என்று தோன்றியது. காயிஃப் ரன் அவுட் பற்றியதல்ல என் கோபம். ஆனால் காயிஃப் கேட்ட உதவி ஓட்டக்காரரை மறுக்கும் விதமாக ஆஸ்திரேலியர்கள் நடந்துகொண்டது அசிங்கமாக இருந்தது. சயீத் அன்வர் சென்னையில் 194 அடிக்கும்போது இந்தியா ரன்னர் கொடுப்பதை மறுக்கவில்லை. அதுபோல எத்தனையோ ஆட்டங்களிலும்.

போகட்டும்.

141 ரன்கள் பின்னிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜாகீர் கான் வீசிய முதல் ஓவரில், அணியின் இரண்டாவது ஓவரில் ஹெய்டன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பார்திவ் படேலுக்கு எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். படேல் அதைத் தட்டிவிட அது முதல் ஸ்லிப் திராவிட் கையில் விழுந்தது, அவர் அதைத் தடவினார்! ஹெய்டன் மறுபடியும் கும்ப்ளே பந்துவீச்சில் படேலுக்குக் கொடுத்த கேட்சும் நழுவியது. படேல் இதற்கு மேல் மோசமான கீப்பிங் செய்ய முடியாது!

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 53/0 என்ற ஸ்கோரில் இருந்தது.

ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. அதுவரை ஒழுங்காக விளையாடிக் கொண்டிருந்த லாங்கர் கும்ப்ளே பந்தை வெட்டப்போய் ஸ்லிப்பில் நிற்கும் திராவிட் கையில் கேட்ச் கொடுத்தார். கடவுள் புண்ணியத்தில் இம்முறை திராவிட் இந்த கேட்சைத் தவற விடவில்லை. 53/1.

சைமன் காடிச் வருவதற்கு பதில் கில்கிறிஸ்ட் உள்ளே வந்தார். எல்லா பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். திடீரென ஹெய்டனும், தானும் அவ்வாறே விளையாட முடிவு செய்து கும்ப்ளே பந்தை வானளாவ அடித்தார். பந்து மிட்விக்கெட்டில் இருக்கும் லக்ஷ்மண் கையில் விழுந்தது! 76/2.

இப்பொழுது காடிச் விளையாட வந்தார். இருவரும் மிக சுலபமாக ரன்களைப் பெற ஆரம்பித்தனர். இப்படி அப்படி திரும்புவதற்குள் இருவரும் சேர்ந்து 45 ரன்களைப் பெற்றனர்.

ஆட்டம் கைவிட்டுப் போவதை அறிந்த கங்குலி, வேறு வழியின்றி ஜாகீர் கானைப் பந்து வீச அழைத்தார். முதல்முறையாக கானின் பந்துவீச்சு பிரமாதமாக அமைந்தது. ஸ்விங் ஆகிவந்த பந்து ஒன்று காடிச்சை எல்.பி.டபிள்யூ ஆக்கியது. இரண்டு பந்துகளுக்குப் பிறகு மற்றுமொரு பந்து கில்கிறிஸ்ட் காலில் பட்டது. அரங்கில் இருந்த எங்களுக்கு அதுவும் அவுட் போலத்தான் தோன்றியது, ஆனால் ஷெப்பர்ட் நிராகரித்தார்.

இந்த ஸ்பெல்லில் கான் தொடர்ந்து ஐந்து ஓவர்கள் வீசினார். ஒவ்வொன்றிலும் கில்கிறிஸ்டையும், மார்ட்டினையும் தடுமாற வைத்தார். மார்ட்டினுக்கு எதிராக மிக நெருக்கமான ஒரு எல்.பி.டபிள்யூ கானுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் கூட அவுட் என்றுதான் தோன்றியது.

இதற்கிடையில் கில்கிறிஸ்ட் தன் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஆனால் கானும், கும்ப்ளேயும் வீசிய பந்துகளில் எளிதாக ரன்களைப் பெற முடியவில்லை. நாளின் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை கும்ப்ளே வீசினார். ஒவ்வொரு பந்தும் கூக்ளியாக இருந்தது. கில்கிறிஸ்ட் சற்றும் புரிந்துகொள்ள முடியாத இந்த ஓவரின் ஒரு பந்தில் 49 ரன்னுக்கு பவுல்ட் ஆனார். 145/4.

கில்லெஸ்பி இரவுக் காவல்காரனாக வந்தார். கும்ப்ளே வீசிய கடைசி சில பந்துகள் எங்கு போகின்றன என்று கூட அறிய முடியவில்லை அவரால். படேலுக்கும் ஒரு மண்ணும் புரியவில்லை. ஒரு பந்து நான்கு பை, அடுத்த பந்து ஒரு பை.

கடைசி ஓவரை ஹர்பஜன் வீசினார். அதை கில்லெஸ்பி ஒரு மாதிரியாகத் தடுத்தாடினார்.

இப்படியாக நாளின் கடைசியில் ஆஸ்திரேலியா 150/4 - அதாவது 9/4. நாளை ஆட்டம் கத்தியின் மீது நடப்பது போல இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை. இந்தியா ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டுகளை இன்னமும் 150 ரன்களுக்குள் எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் கஷ்டப்பட நேரிடும். ஆனால் கும்ப்ளே பந்துவீசுவதைப் பார்க்கும்போது இந்தியாவின் கையே மேலோங்கியிருப்பது போலத் தோன்றுகிறது.

காசி... இன்றும் மழை பெய்யவில்லை. 3.00 மணிக்கு இருட்டத் தொடங்கியது!

1 comment:

  1. மீண்டும் சுவையான வருணனை. அனாயசமாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி.

    படேல் எடுத்த ரன்னையெல்லாம் கீப்பிங்கில் கோட்டை விட்டு விட்டாரா என்று கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete