நேற்று முதல்வர் கருணாநிதி பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்களுக்கான பிரதிகளின் எண்ணிக்கை 1,000-ஆக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் பேசும்போது சொன்னார்.
ஒரு நாளைக்கு ஏகப்பட்ட அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கையில் மேலே என்ன சொன்னார் என்பதைப் பிறரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கீழே சில புள்ளிவிவரங்களைக் கொடுத்துள்ளேன்.
----
தமிழக அரசின் பொது நூலகத்துறை தமிழ் நூல்களை வருடாவருடம் வாங்கி அவற்றை தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களில் பொதுமக்களுக்காக வைத்து வருகிறது.
தமிழகத்தில் இருக்கும் நூலகங்கள்
மாநில மைய நூலகம், சென்னை - 1
மாவட்ட மைய நூலகங்கள், மாவட்டத் தலைநகரங்கள் - 29
கிளை நூலகங்கள் - 1,568
கிராம நூலகங்கள் - 1,492
பகுதி நேர நூலகங்கள் - 649
நடமாடும் நூலகங்கள் - 12
மொத்தம் = 3,751
2004-05 வருடத்தில் உறுப்பினர்கள்: 34,92,326. இவர்கள் அனைவரும் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இருப்பவர்கள்.
நூலகத்துறைக்கு மூன்று வழிகளில் வருமானம் வருகிறது.
1. உறுப்பினர்கள் கட்டும் கட்டணம்
2. ராஜா ராம்மோகன் ராய் நூலக அமைப்பு (மத்திய அரசின் கீழ் இயங்குவது) வருடாவருடம் கொடுக்கும் நிதியுதவி
3. நூலக மீ-வரி (Library Cess). உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் வசூலிக்கும் சொத்துவரியின்மீதாக அதிகமாக வசூலிக்கப்படும் Cess.
நூலகத்துறைக்கு ஆகும் செலவு
1. கட்டட வாடகை, கட்டட மராமத்து, ஊழியர் சம்பளம், பிற அலுவலகச் செலவுகள்
2. புதிதாக ஆண்டுதோறும் வாங்கும் புத்தகங்களுக்கான செலவு
கடந்த நான்கு ஆண்டுகளில் ராஜா ராம்மோகன் ராய் நூலக அமைப்பு தமிழகத்துக்குக் கொடுத்திருக்கும் தொகை: 2001-02: ரூ. 1 கோடி; 2002-03: ரூ. 1.5 கோடி; 2003-04: ரூ. 1.5 கோடி; 2004-05: ரூ. 2 கோடி.
கடந்த ஆண்டுக்கு முன் நூலக மீ-வரியாக வசூலிக்கப்பட்ட தொகை: 2001-02: ரூ. 16.31 கோடி; 2002-03: ரூ. 22.48 கோடி; 2003-04: ரூ. 38.28 கோடி.
மீ-வரியாகக் கிடைக்கும் பணம் அடுத்த ஆண்டுச் செலவுக்காகும் என்று வைத்துக்கொண்டாலும் 2004-05-ம் ஆண்டு நூலகத்துக்கு எனக் கிடைத்த பணம் ரூ. 40.28 கோடி + உறுப்பினர் கட்டணம். உறுப்பினர் கட்டணத்தைச் சரியாகக் கணிக்க முடியாது. சாதாரண உறுப்பினர்கள் வருடத்துக்கு ரூ. 100 கட்டுகிறார்கள். ஆனால் மாணவர்கள் கட்டணம் அதைவிடக் குறைவு. எத்தனை பேர் மாணவர்கள் என்று சரியாகத் தெரியவில்லை. உறுப்பினர் கட்டணம் எப்படியும் மிகக் குறைந்த அளவில் பார்த்தாலும் ஆளுக்கு ரூ. 10 என்று வைத்துக்கொண்டாலும் ரூ. 3.5 கோடி வருகிறது.
ஆக கடந்த ஆண்டுக்கான மொத்த வருமானம் எப்படியும் ரூ. 45 கோடி.
ஆனால் 2004-05-ம் ஆண்டுக்காக பொது நூலகங்களுக்கு எனச் செய்யும் செலவு என்று எவ்வளவு விதித்தார்கள் தெரியுமா? ரூ. 15.03 கோடிகள். அதற்கு மேல் 130 உயர்நிலைப் பள்ளிகள், 75 மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி நூலகங்களுக்காகச் செலவழித்த தொகை ரூ. 37.5 லட்சம்.
சரி, இந்த ரூ. 15.03 கோடியை எப்படிச் செலவழித்தார்கள்?
3,994 தமிழ் புத்தகங்கள் - ஒவ்வொன்றும் 600 அல்லது 400 பிரதிகள் வாங்க: ரூ. 8.53 கோடி
2,411 ஆங்கிலப் புத்தகங்கள் - ஒவ்வொன்றும் 30 பிரதிகள் (என்று நினைக்கிறேன்) வாங்க: ரூ. 2.44 கோடி
மீதமுள்ள ரூ. 4.06 கோடி, ஊழியர் சம்பளம், பிற செலவுகள் என்று கழிந்துள்ளது.
கடந்த ஐந்து வருடங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் இந்த மாதிரிதான் நடந்துள்ளது. அதாவது பொதுமக்கள் நூலகத்துக்கு எனக் கட்டும் மீ-வரியில் ஒரு பகுதிதான் - சுமார் 33% அல்லது அதற்கும் குறைவுதான் நூலகங்களுக்கு எனச் செலவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தமிழ் புத்தகத்திலும் அது ரூ. 150-ஐ விடக்குறைவாக இருக்கும் பட்சத்தில் 600 பிரதிகளும் ரூ. 150க்கு மேலுள்ள புத்தகங்கள் என்றால் 400 பிரதிகளும் வாங்கினார்கள்.
முதல்வர் கருணாநிதியின் அறிக்கையை வைத்துப் பார்த்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திலும் 1,000 பிரதிகள் எடுத்தால் தமிழ் புத்தகங்களுக்கு ஆகும் செலவு ரூ. 17 கோடி வரை ஆகும். இது நிச்சயமாக வரவேற்க வேண்டிய செய்தி. இது கேட்காமல் கிடைத்த ஒன்று எனும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஒரு பதிப்பாளராக என் நன்றி.
ஆனால் ஒரு வாசகனாக நான் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். 2006-07 நூலகத்துக்கு என மக்கள் கொடுக்கும் பணம் கிட்டத்தட்ட ரூ. 50 கோடியை நோக்கிச் செல்லும். எப்படியும் செலவுகள் ரூ. 25-30 கோடிக்குள்தான் வரும். மீதம் ரூ. 20 கோடியை வேறு செலவுகளுக்கு என்று எடுத்துக் கொள்ளாமல் அந்தப் பணத்தில் புது நூலகங்களைக் கட்டுங்கள். வருடத்துக்கு 500 புது கிளை நூலகங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஐந்தாண்டுகளில் 2,500 நூலகங்களைக் கட்டிவிடலாம். இப்படிக் கட்டப்படும் நூலகங்கள் சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் பெருத்த நன்மையைக் கொடுக்கும். அத்துடன் ஒவ்வொரு அரசுப் பள்ள்ளிகளிலும் கார்பொரேஷன், முனிசிபாலிட்டி, பஞ்சாயத் பள்ளிகளிலும் நல்ல நூலகங்களை அமைக்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசு கஷ்டப்பட்டு பணம் சேர்க்க வேண்டியதில்லை. வருடா வருடம் பெறும் Library Cess ஒன்றே போதும்! அந்தப் பணத்தை நூலகங்களுக்கு மட்டும் செலவு செய்யவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.
மனிதன் கடவுளைப் படைத்தானா?
3 hours ago
தகவல்களுக்காக பத்ரிக்கு நன்றிகள்! தகவல்களின் Factual சரிபார்ப்புகள் என்பதெல்லாம் எனக்கு இப்பொது தோன்றவில்லை!
ReplyDeleteஇந்தப் பதிவின் உன்னதமான நோக்கமான அதிக நூலகங்கள் கட்டுவது, பிரதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் அதிகம் பேரை படிக்கத் தூண்ட உதவுவது - ஆகியவற்றை முழு மனதாக ஆதரிக்கிறேன்! :)
நீங்கள் கூறியது நிறைவேறினால் மிக்க சந்தோஷம். செய்வார் என நம்புவோமாக!
ReplyDeleteமிக நல்ல பேச்சு, எந்த நீர்ப்பும் இல்லாமல் அப்படியே மக்களுக்கு சென்றடைய அவா.
ReplyDeleteமக்கள் முன்னேற்றத்திற்க்கு வழி வகுக்கும் ஒரு நல்ல அறிவிப்பு.
பல காரணங்களுக்காக (உதாரணம் குடும்ப அரசியல்) கலைஞர் மேல் Apprehension இருந்தாலும் அவர் கல்விக்கென்று மற்ற அனைவரையும் விட அதிகம் செய்திருக்கிறார் என்ற ஒரு காரணதிற்காகவே அவரை ஆதரிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
ReplyDeleteஇது போன்ற வோட் பேங்க் பாலிடிக்ஸ் இல்லாத விஷயங்கள் அதிகம் செய்தது கலைஞர் தான் என்பது என் கருத்து
By the way, I think my coding this time is correct and I have some what learnt to post Unicode Comments in Tamil
அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்கப்படல் வேண்டும். ஏற்கனவே ஏறக்குறைய அனைத்துப்பள்ளிகளிலும் (அரசுபள்ளிகள்) குறைந்த எண்ணிக்கையினாலான புத்தகங்கள் பீரோக்களில் பூட்டிவைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteபெரும்பாலான அரசு நூலகங்களில் கதை, கவிதைகளே அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூலகங்களிலும் பாடங்கள்தொடர்பான (Text book Reference)பயனுள்ள நூல்கள் (from Pearson Education, McGraw-Hill, Thomson-SW etc.) வாங்கி வைக்கப்படல் வேண்டும்.
நல்லதொரு பதிவு பத்ரி
ReplyDelete///இதற்காக தமிழக அரசு கஷ்டப்பட்டு பணம் சேர்க்க வேண்டியதில்லை. வருடா வருடம் பெறும் Library Cess ஒன்றே போதும்! அந்தப் பணத்தை நூலகங்களுக்கு மட்டும் செலவு செய்யவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.///
பத்ரி இதைத்தான் 15 வருஷமா நாங்க இராஜபாளைய நூலகம் சார்பாசொல்லிக்கொண்டிருக்கிறோம்.
மொத்த நூலகத்துக்கான செஸ் வரியும் என்ன ஆச்சுன்னு நூலகத்துறையிலிருந்து முனிசிபலைக் கேட்பதேயில்லை.
அங்கிருந்தும்(நூலகத்துறையிலிருந்தும்) சரி செய்யப்பட வேண்டும்.
அந்தந்த நகரங்களில்,ஊர்களில் வசூலிக்கப்படும் வரிப்பணம் அந்தந்த இடத்து நூலகங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்று
சாதாரண அஸ்பெக்ட்-டில் யோசித்தாலே போதும்.
இருக்கிற நூலகத்தினை சிறப்பாக செயல்படச் செய்யட்டும் முதலில்.
முழு பதிவு எழுதுவதற்கான விஷயம் இருக்கிறது பத்ரி.
உங்களின் இந்தப் பதிவிற்கு நன்றி
பத்ரி,
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு. இப்படியான பதிவுகளைத்தான் நான் எதிர்பார்ப்பது. பாராட்டுக்கள்.
இது ஒர் நல்ல அறிவிப்பு. எனவே தமிழகத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
நிற்க. மேற்குலக நாடுகளில் நூல்நிலையங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கு எதுவித கட்டணமும் கட்டத்தேவையில்லை. தமிழகத்திலும், குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் நூல்நிலையங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கான கட்டணத்தை இல்லாமல் செய்வதன் மூலம் பல ஏழை எளியவர்களும் நூல்நிலைய பத்தகங்களை பாவிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகும். அதுமட்டுமல்ல, இலவசம் என்றால் உறுப்பினர் தொகை அதிகரிக்கலாம். அதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கலாம். சும்மா இலவச தொலைகாட்சி போன்ற உருப்படி இல்லாத கவர்ச்சித் திட்டங்களைவிட இலவச நூல்நிலைய உறுப்பினர் திட்டம் மூலம் பன்முக அறிவுள்ள சமுதாயத்தைக் கட்டி எழுப்பலாம். தொலைநோக்குப் பார்வையான திட்டமும் கூட.
Badri
ReplyDeleteThank you for publishing a insightful post with numbers.
"கிளை நூலகங்கள் - 1,568
கிராம நூலகங்கள் - 1,492 "
numbers doesn't look satisfactory.
Also I don't know who suggests the library to buy what kind of books(your inside knowledge is most welcome). I am using the library resources for almost twenty years now. I liked very few of the libraries in Madras but never liked the Libraries in the district head quarters. In village libraries (approx 17 years before), what is the most interesting stuff you get is daily paper. In district there are not enough books for kids or teenage and the books what they have are not really that qualitative (this may not be applicable for novels). There are three libraries which has attracted me most are Guindy Engineering College, Madras university (Guindy campus), no doubt IIT madras library (we call this as a gold mine).
I welcome your suggestions to increase the libraries; also we should have enough children’s resources to attract the kids. Government should start investing the tax money in developing the libraries for today’s situation Like we should bring in computers with broadband internet connections( BTW I read one of your English article published in 2004 , from what I perceive we can bring in the connections as per your suggestion at cheaper cost and also I guess it is technically feasible) , VIDEO cassettes and DVD’s related to different subjects , A room with a TV and VIDEO Cassette, DVD player for people who don’t have facility to watch…..,
I still believe KNOWLEDGE IS POWER …………….
with best
CT
பத்ரி,
ReplyDeleteநான் இந்தப் பதிவின் சுட்டியை என்னுடைய பதிவில் இனைத்துள்ளேன்.. இது Just உங்கள் கவனத்திற்கு..
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தமிழ் புத்தகத்திலும்
ReplyDeleteSir,
Can you please give details on how a book is selected to be bnought for government libraries?
thanks,
Venkat