நம் கண்ணுக்கு முன்னால் ஒரு மாபெரும் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. நம் வாழ்நாளில் ஒரு நாட்டில் முடியாட்சி மாறி குடியாட்சி மலர்ந்துகொண்டிருக்கிறது.
பரம்பரை பரம்பரையாக வரும் முடியாட்சியை மாற்றி குடியாட்சியாக்க பல நாடுகளில் பலவிதமான புரட்சிப் போராட்டங்கள் நடந்துள்ளன. இங்கிலாந்தில் சர்வாதிகார முடியாட்சி மாறி இன்று ராஜாவோ ராணியோ வெறும் டம்மியாக உள்ளனர். இந்த நிகழ்வு ஒரு நாளிலோ சில வருடங்களுக்குள்ளாகவோ நடந்துவிடவில்லை. பல நூறு வருடங்கள் பிடித்தது. இன்று டோனி பிளேரிடம் கேட்டு அனுமதி பெற்றபின்னர்தான் எலிசபெத் மஹாராணி வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகமுடியும். 1993 முதல் பிரிட்டன் அரசர்/அரசி தம் வருமானத்துக்கு வரி கட்டவேண்டும். இன்னும் சில வருடங்களில் பிரிட்டன் அரச குடும்பம் தமக்கு இந்தத் தங்கக் கூண்டு வேண்டாம் என்று உதறிவிட்டுப் போனாலும் ஆச்சரியமில்லை.
பிரான்சிலோ அரசாட்சியை ஒழிக்க மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தவேண்டியிருந்தது. ராஜா ராணியின் தலைகளை கில்லட்டினில் வெட்ட வேண்டியிருந்தது. ஆனால் அதற்கடுத்தும் இரண்டு தடவைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களையே ராஜாக்களாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். பலத்த போராட்டங்களுக்குப் பிறகுதான் குடியாட்சி வந்தது.
ஐக்கிய அமெரிக்க நாடு (USA) இங்கிலாந்தின் காலனி ஆதிகத்திலிருந்து விடுபட்டபோது ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் முடியாட்சியாக ஆகியிருக்கலாம். ஆனால் குடியாட்சியின் பலமான அடிவேர் அங்கு பரவியிருந்ததால் விடுதலைக்குச் சில வருடங்கள் கழித்து குடியாட்சிக்கான பலமான அரசியலமைப்புச் சட்டம் அங்கு உருவாக்கப்பட்டது.
ரஷ்யாவில் நடந்த மாபெரும் புரட்சியில் ஜார் அரச வம்சமே அழிக்கப்பட்டு கம்யூனிசம் முதன்முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஐரோப்பாவில் முடியாட்சி அழிக்கப்பட்டபோதெல்லாம் குடியாட்சிதான் மலர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. ஜெர்மனியில் முடியாட்சியை சதியால் முறியடித்த ஹிட்லர் தானே ஒரு சர்வாதிகாரியானார். இத்தாலியில் பிரதம மந்திரியாக இருந்த முசோலினியின் கையில்தான் நிஜமான அதிகாரம் இருந்தது.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பாவில் முழுமையாக மக்களாட்சியே நிலவியது என்று சொல்லலாம். சில இடங்களில் அரச குடும்பத்தினரை விட்டுவைத்திருந்தாலும் அவர்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் முழுமையான மக்களாட்சியாக இல்லாமல் சில சர்வாதிகாரிகளின் ஆட்சியாகவும் இருந்தது. ஆனால் பரம்பரை அரசர்களின் ஆட்சி என்பது ஐரோப்பாவில் காணாமல் போனது. (மோனாகோ, லீச்டென்ஸ்டைன் போன்ற சில சிற்றூர்களைத் தவிர)
ஆசியாவில் தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் பரம்பரை அரசர்கள் உண்டு; பிரிட்டனைப் போலவே இந்த நாடுகளிலும் நாடாளுமன்றத்துக்குத்தான் முழு அதிகாரமும்.
உலகில் ஓரளவுக்குப் பெரிய நாடுகள் என்று பார்த்தால் மத்தியக் கிழக்கு எண்ணெய் வள நாடுகள் சிலவும் நேபாளும்தான் பரம்பரை முடியாட்சியிலேயே ஒட்டிக்கிடந்தன. நேபாளில் நாடாளுமன்றம் என்ற ஒன்று இருந்தாலும் அரசருக்கு சர்வாதிகாரமும். அவர் நினைத்தால் காரணங்கள் ஏதும் சொல்லாது நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம். அப்படிச் செய்துள்ளார் தற்போதைய மன்னர் ஞானேந்திரா. ராணுவமும் அவர் சொன்ன பேச்சை இதுநாள் வரை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் போராட்டத்தின் முடிவில் முடியாட்சி மண்ணைக் கவ்வியுள்ளது.
உலகின் பல நாடுகளைப் போலவே நேபாளத்தை ஆண்டவர்கள் பிரிட்டிஷ்காரர்களுடன் போராடவேண்டியிருந்தது. கடைசியாக 1923-ல் தாங்கள் ஆண்டுவந்த பல பகுதிகளை இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு இப்பொழுது இருக்கும் பகுதியை மட்டும் வைத்துக்கொள்ள பிரிட்டனிடம் அனுமதி பெற்றது நேபாள். பிற நாடுகளைப் போலவே நேபாளிலும் மக்கள் குடியாட்சிக்கான போராட்டங்களில் இறங்கினர். 1989 வரை ஒரு கட்சி நாடாளுமன்றமும் சர்வ வல்லமை பொருந்திய அரசரும் இருந்தனர். 1989 போராட்டங்களுக்குப் பிறகு பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அரசர் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்குவார் என்றும் முடிவானது.
ஆனால் 1990கள் முழுக்கவே நேபாள் நாடாளுமன்றம் ஸ்திரமாக இருந்ததில்லை. ஆட்சி மாற்றங்கள், உறுப்பினர்கள் கட்சி மாறுவது போன்ற பலவும் நடந்துள்ளன. இடையில் மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டத்தையும் ஆரம்பித்தனர்.
2001-ல் பட்டத்து இளவரசர் தீபேந்திரா தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடைக்காத காரணத்தால் மெஷின் துப்பாக்கியால் தன் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களையும் சுட்டுத் தள்ளிவிட்டு தானும் செத்தார். மன்னர் பீரேந்திரா, அவரது வாரிசுகள் அனைவருடனும் சேர்ந்து இறந்ததால், அவரது சகோதரர் ஞானேந்திரா அரசரானார். ஞானேந்திரா 2005-ல் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.
ஆனால் மக்கள் விடாது போராடினர்.
தான் கலைத்த நாடாளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிவந்தது ஞானேந்திராவுக்கு. நாடாளுமன்றம் என்ன செய்யும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். நாடாளுமன்றம் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் Constituent Assembly-ஐத் தேர்ந்தெடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நாடாளுமன்றம் மிகவும் முன்னே சென்று அரசரது அதிகாரத்தை முழுவதுமாக வெட்டிவிட்டது. ராணுவத்தின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. நாட்டை இந்து நாடு என்பதிலிருந்து மதச்சார்பற்ற நாடு என்று மொழிந்துள்ளது. அரசரால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டுத் தூதர்கள், அரசு அதிகாரிகளைப் பதவியிறக்கியுள்ளது.
இன்னமும் வேலை முடிந்துவிடவில்லை. நேபாள் ராணுவமும் இந்திய ராணுவம் போல நடந்துகொள்ளவேண்டும். பாகிஸ்தான் ராணுவம்போல நடந்துகொண்டால் நிலையான குடியாட்சி அமையமுடியாது. ராஜாவின் முழு அதிகாரங்களையும் ஒட்டுமொத்தமாக ஒழிக்க சில வருடங்கள் ஆகும். அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும். அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக நல்லதொரு அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதன்படி இன்னமும் நான்கைந்து தேர்தல்களாவது நடந்து நிலையான ஆட்சியும் சுபிட்சமும் வரவேண்டும்.
இந்திய அரசும் சீன அரசும் இந்தக் குழப்பத்தில் மீன்பிடிக்க முனையக்கூடாது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை விடுத்து தேர்தல் பாதைக்குத் திரும்ப வேண்டும்.
இப்போதைக்கு, நேபாளில் மன்னராட்சி இத்துடன் முடிந்தது என்று சந்தோஷப்படலாம்.
சவுதி அரேபியா, அமீரகம், குவைத் ஆகியவை இந்தப் பாதைக்கு வர இன்னமும் 20-30 வருடங்கள் ஆகலாம்.
Sunday, May 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
இந்த அளவுக்கு அமைதியாக இது நடந்திருப்பதே நிறைவாக இருக்கிறது. அரண்மனைப் படுகொலைகளோடேயே முடிவுக்கு வந்திருக்கவேண்டும். இப்போதாவது நடந்ததே.
ReplyDeleteoff-topic:
மூன்று நாட்களாக நானும் உங்களுக்கு முன்பாக இதைப்பற்றி யாராவது எழுதுவார்களா (நீங்கள் எப்படியும் எழுதுவீர்கள் என்று தெரியும்) என்று பார்த்துக்கொண்டிருந்தேன். (யாராவது எழுதி நான் படிக்கவில்லையோ...)
எனக்கு எழுத ஆரம்பித்து பாதியில் நின்றுவிட்டது.:-(
காசி,
ReplyDeleteநேபாள புரட்சி தொடர்பான வேறுபாடான கருத்துக்களை நானும் இரயாகரனும் எமது வலைப்பதிவுகளின் மூலம் வெளிப்படுத்தியிருந்தோம். நீங்கள் தவறவிட்டிருக்கக்கூடும்.
தேர்தல்கள் நடந்து சுமுகமான ஆட்சி மலர்ந்து என்பதெலாம் எனக்கு உடன்பாடில்லை.
நேபாளத்தில் புரட்சி காயடிக்கப்பட்டிருக்கிறது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தின் பரிமாணத்தை மாற்றி, தற்போது புதியவகை உத்திகளை கையாண்டு புரட்சியின் வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்திருப்பதாக இங்கே இருக்கும் சிங்கள இடது சாரி தோழர்கள் வாதிடுகிறார்கள்.
பார்க்க,
www.tamilcircle.net
http://mauran.blogspot.com/2006/05/blog-post.html
http://mauran.blogspot.com/2006/04/blog-post.html
மயூரன்: நன்றாக CP M-L கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். அமைதியான முறையில் மாற்றம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும் அதனை விடுத்து கையில் ஏகே 47 ஏந்தி நிறைய ரத்தத்தைக் குடித்துதான் புரட்சி நடத்தவேண்டும் என்று சொல்லும் சிங்கள இடதுசாரிகள் வாழ்க.
ReplyDeleteசிங்கள மாவோயிஸ்டுகளும் தமிழ் மாவோயிஸ்டுகளும் ஒன்றுசேர்ந்து இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வாக என்ன உத்திகளை வகுப்பார்கள் என்று முடிந்தால் எனக்குத் தெரிவியுங்கள்.
//நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தின் பரிமாணத்தை மாற்றி, தற்போது புதியவகை உத்திகளை கையாண்டு புரட்சியின் வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்திருப்பதாக//
ReplyDeleteஎன்றுதான் சொன்னேன்.
நோர்வே எனப்படும் டை கட்டிய அமரிக்காவின் வருகை எப்படி ஒடுக்குவோருக்கு சார்பாக மட்டுமே இருக்கும் என்பதை மிக அண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவன் என்ற வகையிலேயே நேபாளத்தின் இன்றைய நிகழ்வுகளைை பயத்தோடு பார்க்கிறேன்.
அமெரிக்காவில் மன்னராட்சி இல்லை. இந்தியாவிலும் மன்னராட்சி இல்லை. பிறகு எதுக்கு நேபாளத்தில் மட்டும் மன்னர் இருக்க வேண்டும்?
மன்னராட்சியை, மன்னரை தூக்கியெறியச்சொல்லி நிகழ்ந்த போராட்டத்தில் சமாதானப்பேச்சுவார்த்தை என்பதன் அர்த்தம் என்ன?
90% ஆன மக்க மன்னருக்கெதிராக நிற்கும் போது, மன்னருக்கும் மக்களுக்கும் இடையில் பேச்சு நடத்தி "நடு நிலையான" தீர்வை எட்டுவதென்பது வெளிப்படையாகவே மன்னரை ஆதரிப்பதற்கு சமம்.
அத்தோடு எங்கே நேபாளத்தில் புரட்சிகர ஆட்சி வந்துவிடுமோ என்று அஞ்சி பாராளுமன்ற ஜனனாயகம் என்ற போலிக்கூத்தை அரங்கேற்றுவதற்கு செய்யப்படும் ஏற்பாடுகள் தாம் இவை எல்லாம்.
அண்மையில் frontline சஞ்சிகைக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அளித்த நேர்காணல் பற்றி விவாதித்த போதுதான் மேற்கண்ட கருத்துக்களை சிங்கள தோழர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்தியாவை சமாளிக்கும் தொனி அந்த நேர்காணலில் இருந்தது.
அதனால் தான் உத்தியை மாற்றுகிறார்கள் என்றேன்.
ஆயுதப்போரடடத்தை மழுங்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் எப்படியும் கைகோர்த்துக்கொள்ளும்.
இருவருக்கும் நேபாளத்தில் சுதந்திரமாக சுரண்டல் நிகழ்த்துவதற்கு பாராளுமன்ற ஆட்சி முறை தேவை.
ஆக, ஆயுதப்போராட்டம் என்ற கட்டத்தை தாண்டி இராஜதந்திர போராட்டத்துக்குள் நுழைய வேண்டிய தேவை அவர்களுக்கு வந்திருக்கிறது.
விடுதலைப்புலிகளும் இவ்வாறான சூழலில் தான் மாட்டிக்கொண்டுள்ளார்கள்.
ரத்தமின்றி சத்தமின்றி அமைதியாக வாழ்வதற்கு மிக நல்ல வழிகள் இருக்கின்றன.
பேசாமல் எம்முடைய ராணுவத்தை கலைத்துவிடலாம். பாராளுமன்றத்தையும் கலைத்து அதனை அஎரிக்க கம்பனி ஒன்றிடம் விற்கலாம். அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றாக மாறிக்கொள்ளலாம். என்ன, அவர்கள் இந்த மாநிலத்தில் தான் அணுக்கழிவுகளை கொட்டுவார்கள்.
மற்றபடி ரத்தமும் இல்லை, போராட்டங்களும் இல்லை.
சுபாஷ் சந்திரபோசும், பகத்சிங்கும் தேசத்துரோகிகள். முட்டாள்கள், வன்முறையாளர்கள்
Badri,
ReplyDeleteEnnavo India, Bangladesh, Indonesia mathri democratic countries-la "paalum,thenum" odra mathri solreenga?
Nalla mannar irunthal (like Kuwait,Oman,Emirates), mannaratchiyum nallathu than.
Mosama arasiyalvaathigal, thalaivargal irunthal, Democracy-m kedu than.