Tuesday, September 11, 2007

ஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்

சென்ற வாரம் எங்களது மலையாளம் பதிப்பின் சார்பாக இரண்டு மலையாளக் கவிதைப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

தமிழ், ஆங்கிலத்தை அடுத்து மலையாளத்தில் புலரி பிரசிதீகரணம் (പുലരി പ്രസിദ്ധീകരണം) என்ற பெயரில் ஒரு பதிப்பைத் தொடங்கியிருக்கிறோம். இதுவரையில் எட்டு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மாதா மாதம் புதிய புத்தகங்கள் வெளியாகும்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற விழாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் தலைமை வகித்துப் பேசினார்.

தமிழகத்தில் பதிப்புத் தொழிலை எடுத்துக்கொண்டால் சென்னைதான் எல்லாமே. பிற நகரங்களில் வலுவான பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் இல்லை. ஆனால் கேரளத்தில் கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சி, கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய ஆறு நகரங்களிலும் பதிப்பகங்கள் பரவியுள்ளன. இங்கெல்லாம் தொடர்ச்சியாகப் புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன. எங்கள் நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள் தமிழ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரனை அழைத்து சில மலையாளக் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டனர். (தமிழ்ப் புத்தக வெளியீட்டுக்கு பிற மாநில எழுத்தாளர்களை நாம் அழைக்கிறோமா?)

கோழிக்கோட்டில் நிகழ்ச்சியை கவனிக்க சூர்யா டிவி தவிர அனைத்து முக்கியமான தொலைக்காட்சி சானல்களும் - மனோரமா, ஏசியாநெட், கைரளி என்று - கேமராக்களை அனுப்பியிருந்தன. அடுத்த நாள் சூர்யா தவிர அனைத்து சானல்களிலும் நிகழ்ச்சியின் சிறு துண்டு காட்டப்பட்டது. அதேபோல 'தி ஹிந்து' பத்திரிகை தவிர, இண்டியன் எக்ஸ்பிரஸ், அனைத்து மலையாளப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தனர். சன் குழுமத்துக்கு இலக்கியம் என்பது சுட்டுப்போட்டாலும் பிடிக்காது / புரியாது என்பது நன்கு புரிந்தது. அதேபோல மலையாள எழுத்து கலாசாரம் என்பது தமிழ் எழுத்துகளைப் போலவே 'தி ஹிந்து' பத்திரிகைக்கு உவப்பானதல்ல என்றும் புரிந்தது. (ஆனால் யுவன் சந்திரசேகர் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி 'தி ஹிந்து'வில் செய்தி வந்திருந்தது ஆச்சரியம்தான்!)

வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம் வந்திருந்தது. வாசுதேவன் நாயர் நம்மூரில் ரஜினிகாந்த் மாதிரி. அவர் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் வந்திருந்தது. தமிழ்நாட்டு இலக்கியவாதி கேரள எழுத்துக்காரனுக்கு அவனது ஊரில் கிடைக்கும் மரியாதையைக் கண்டால் பொறாமையால் மனம் வெதும்பிச் சாவான்!

கவிஞர் ஜெயதேவன் குழந்தைகள் பள்ளிக்கூட வாத்தியார் (Lower Primary). நீளமான பிரம்பின் நுனியில் தளிரும் பூவும் (ஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்) என்ற புத்தகத்தின் தலைப்பே கவிதை. பள்ளிக் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. மற்றொன்று குறச்சுகூடி ஹரிதாபமாய ஓரிடம்... என்ற கவிதைத் தொகுப்பு.

வெளியே அவரிடம் பாடம் கற்ற/கற்கும் சில குழந்தைகள் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தன.

நான் ஜெயதேவனிடம், இந்தக் குழந்தைகளுக்கு உங்களது கவிதைகள் புரியுமா என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, அவர்களுக்கு நன்றாகப் புரியும் என்று சொன்னார்.

அரங்கின் உள்ளே விமரிசகர்கள் கவிதைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

2 comments:

  1. கலக்கறீங்க பத்ரி!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கேரள இலக்கிய சூழல் நம் ஊரைப்போல பாழாய்போன அரசியலால் கெட்டுப்போகவில்லை. திறமைக்கு மதிப்பளிக்கும் மக்கள் அவர்கள்.

    வாழ்த்துக்கள்!.

    -- விபின்

    ReplyDelete