சில மாதங்களாகவே நடந்துவரும் சேலம் ரயில்வே கோட்ட விவகாரம் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் சமயம், இல்லை என்று தோள் தட்டியிருக்கிறார்கள் மறத் தமிழர்கள்.
ரயில்வே கோட்டங்கள் (டிவிஷன்) மாநில எல்லைகளுக்கு உட்பட்டவை அல்ல. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே என்பது தமிழகம், கேரளா மாநிலங்களை முழுமையாகவும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. தெற்கு ரயில்வேயில் மொத்தமாக ஐந்து கோட்டங்கள் இருந்தன:
தமிழகம்: சென்னை, மதுரை, திருச்சி
கேரளம்: திருவனந்தபுரம், பாலக்காடு
இப்பொழுது, சேலம் என்ற புதிய கோட்டத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலக்காடு கோட்டத்தின் பல பகுதிகளைப் பிரித்து அவற்றை சேலம் கோட்டத்தில் கொண்டுவருகின்றனர்.
இது கேரளத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. தென் மாநிலங்களில் கேரளம் ஒன்றில்தான் எந்த ரயில்வே தலைமையிடம் எதுவும் கிடையாது. இப்பொழுது பாலக்காடு கோட்டத்தில் பெரும்பான்மைப் பகுதி சேலம் கோட்டத்துக்குச் சென்றுவிட்டால் ரயில்வே வட்டாரத்தில் கேரளத்தின் மதிப்பு கீழே இறங்கிவிடும், வேலைகள் அந்த மாநிலத்தை விட்டுச் சென்றுவிடும் என்று கேரள மக்களுக்கு பயம் ஏற்பட்டது; பயத்தை அந்த மாநில அரசியல்வாதிகள் தூண்டிவிட்டனர்.
அதன் விளைவாக சேலம் கோட்டம் ஆரம்பிப்பது தாமதப்பட்டது. ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுடன் தமிழக, கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி மதுரை கோட்டத்தில் சில பகுதிகள் பாலக்காட்டுடன் இணைக்கப்படும் என்று முடிவானது.
இது ஒரு பெரிய விஷயமே இல்லை. பாலக்காடு கோட்டமோ, மதுரைக் கோட்டமோ, சேலம் கோட்டமோ, எல்லாமே சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயில் தலைமைக்குக் கீழேதான் இயங்குகின்றன.
தமிழகத்துக்கு ஒரு புதிய ரயில்வே கோட்டம் வருகிறது என்பதால் தமிழர்கள் புளகாங்கிதம் அடையவேண்டியதில்லை. இதனால் சேலம் பகுதியில் கொஞ்சம் (சில நூறு) வேலை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கலாம். அவ்வளவே. தெற்கு ரயில்வேயில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.
கேரள அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதைக்கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையும் என்கிற பயம் ஒன்று. மரியாதை (பிரெஸ்டீஜ்) குறையும் என்கிற பயம் இரண்டு. அவர்கள் கோவை பகுதியை பாலக்காடு கோட்டத்தில் சேர்க்க விரும்பினர். பேச்சுவார்த்தையில் கோவை சேலம் கோட்டத்தில் சேர்க்கப்பட்டது. பதிலுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு (சுமார் 79 கிமீ) பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. இது மிகச்சாதாரண விஷயம்.
தமிழகம், கேரளம் நிலம், நீர் என்று பல பிரச்னைகள் உள்ளன. முல்லைப் பெரியாறு முதற்கொண்டு. சிறு சிறு விஷயங்களைப் பெரிது பண்ணாமல் நடந்துகொள்ளலாம். சில இடங்களில் விட்டுக்கொடுப்பதால், பிற இடங்களில் தமிழகத்துக்குச் சாதகமான நிலைமை ஏற்படும்.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
10 hours ago
No comments:
Post a Comment