* ஞாநி குமுதம் ஓ பக்கங்களில் எழுதியது. (அதில் ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.)
* எழுத்தாளர்களின் ராயல்டி - பா.ராகவன்
* ராயல்டி பற்றி ஜெயமோகன்
* ராயல்டி பற்றி சாரு நிவேதிதா
முதலில் ஞாநியின் கருத்தை எடுத்துக்கொள்வோம்:
ஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.எனக்கும் கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கும்முன் எழுத்தாளரின் ராயல்டி என்ன இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. ராயர் காபி கிளப் அரட்டையரங்கில், “என்ன, ஒரு 20-30% இருக்குமா?” என்று கேட்டுவைத்தேன். பொங்கிக் குமுறி வெங்கடேஷ் ஒரு பதில் அனுப்பியது ஞாபகம் உள்ளது. ராகவன், இரா.முருகன் எனப் பலரும் அப்போது ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவை பற்றி எழுதினர்.
அதிலும் சில பிரசுரங்கள் ஆறு ரூபாய் ஐம்பது காசுதான் கொடுக்கும். சிலர் ஒன்றுமே தரமாட்டார்கள். ஒரு புத்தகத்தை பதிப்பாளரிடமிருந்து வாங்கி விற்கும் விற்பனையாளர்க்குத்தான் லாபம் அதிகம். 100 ரூபாய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கும். அதாவது ஒரு எழுத்தாளன் தன் நூறு ரூபாய் புத்தகத்தையே பதிப்பாளரிடமிருந்து 30 சதவிகிதக் கழிவுக்கு வாங்கி தன் வாசகருக்கு 10 சதவிகித தள்ளுபடி கொடுத்து விற்றால் கூட அவனுக்கு 20 ருபாய் கிடைக்கும். புத்தகம் எழுதியதற்கு ஆறு ரூபாய் முதல் 10 ரூபாய்தான். கேரளத்தில் எழுத்தாளனுக்கு ராயல்டி 40 சதவிகிதம் வரை என்கிறார்கள்.
அந்தத் தகவல்கள் எல்லாம் உபயோகமாக இருந்தன. அவற்றையெல்லாம் கிழக்குக்கான பிசினஸ் பிளானை எழுத நான் பயன்படுத்திக்கொண்டேன்.
உலக அளவிலேயே 7.5-12.5% எந்த ரேஞ்சில்தான் எழுத்தாளர்களுக்கு ராயல்டி போகிறது. கேரளாவிலும் பெரிய எழுத்தாளர் என்றால் 15% வரை ராயல்டி போகிறது. அதற்குமேல் கிடையாது. இந்த 20-30-40% எல்லாம் கட்டுக்கதைகளே. பிசினஸ் மாடல் எதிலும் இதற்கு வாய்ப்பே இல்லை. எழுத்தாளரே முன்பணம் செலவு செய்து புத்தகம் அச்சிட்டாலும் அவருக்கு மொத்தமாக 50-55% பணம் கையில் கிடைக்கும். அதில் அச்சுக்கூலி, பேப்பர் செலவு, முதலீட்டுக்கான வட்டி என்று கழித்துப் பார்த்தால் கையில் 10-12%-க்கு மேல் மிஞ்சுவது கடினம்.
எழுத்தாளருக்கு புத்தக விலையில் வெறும் 10% என்பது அநியாயமாகத் தோன்றலாம். ஆனால் அடிப்படையில் இது ஒன்றும் மோசமான கணக்கு என்று சொல்லமாட்டேன். ஒரு எழுத்தாளர் இந்த சதவிகிதக் கணக்கைப் பற்றி அஞ்சக்கூடாது. மாறாக தன் புத்தகத்தின் எத்தனை பிரதிகளை பதிப்பாளர் விற்றுத்தருகிறார், எப்படி ராயல்டியைத் தருகிறார் என்பதுதான் முக்கியம். எழுத்தாளரின் உழைப்பு என்பது ஒரே அளவுதான். ஆனால் அவரது உழைப்புக்கு 50% ராயல்டி என்று சொல்லிவிட்டு, வெறும் 10 பிரதிகள் மட்டும் விற்றுத்தந்தால் போதுமா? ராயல்டி சதவிகிதம் அதிகமானால் மட்டும் போதுமா என்ன? அதே நேரம், குறைந்தபட்சம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத்தருவார் பதிப்பாளர் என்றால், நான் சந்தோஷமாக 5% ராயல்டிகூட பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பேன்.
புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது. இதனை ராயல்டியுடன் ஒப்பிடக் கூடாது. அந்தக் கடைக்காரருக்கு நிறையச் செலவுகள் இருக்கின்றன. கடை வாடகை, பிற ஓவர்ஹெட்ஸ் என்று. மேலும் பல நேரங்களில் அவர் வாடிக்கையாளருக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். அவர் கையிலும்கூட புத்தக விலையில் 10% மிஞ்சுவதே அதிகம்.
பதிப்பாளருக்கும் அப்படியே. பொதுவாக, 35% கடைகளுக்கு, 10% எழுத்தாளருக்கு, 20-25% புத்தகக் கட்டுமானத்துக்கு (paper, printing, binding) என்று போனால் பதிப்பாளருக்கு மிஞ்சுவது 30% மட்டுமே. இதிலிருந்து fixed expenses (வாடகை, கோடவுன் செலவுகள், புத்தகத்தை கட்டி அனுப்பும் செலவுகள், மார்க்கெட்டிங், இதர செலவுகள், ‘வட்டி’ செலவு) என்று அனைத்தையும் பார்த்தால், அவர் கையில் மிஞ்சுவதும் புத்தக விலையில் 8% என்றால் அதிகமே. அதிலும் பதிப்பாளருக்கு working capital பிரச்னை கடுமையானது. கிட்டத்தட்ட 8-9 மாத வொர்க்கிங் கேபிடல் கையில் இருக்கவேண்டும். (இதைப் பற்றி தனியாக எழுதவேண்டும். எனவே இங்கு இதுமட்டும் போதும்.)
எனவே புத்தகத் தொழிலில் எழுத்தாளனை ஏமாற்றி பதிப்பாளரோ, கடைக்காரரோ அதிகப் பணம் பார்த்துவிடுவதில்லை. எழுத்தாளருக்குச் சரியாக ராயல்டி கிடைத்துவிட்டால், எழுத்தாளர் வருத்தப்பட ஒரே ஒரு இடம் மட்டும்தான் இருக்கும். அது... என் புத்தகம் வெறும் 300 பிரதி, 500 பிரதி, 3000 பிரதி மட்டும்தான் விற்குமா? ஏன் என் பதிப்பாளர் லட்சம் பிரதிகள் விற்றுத் தருவதில்லை... என்பதுதான்.
இந்த இடத்தில் வாசகர்களை மட்டும் ஒருவர் குற்றம் சொல்லமுடியாது. ஒரு புத்தகம் அதன் உச்சபட்ச விற்பனையை அடைய என்னவெல்லாம் செய்யவேண்டும்? இது மார்க்கெட்டிங் மட்டும் சார்ந்ததல்ல. புத்தகத்தின் ஆதாரக் கருத்திலிருந்து ஆரம்பித்து, புத்தகத்தின் உருவாக்கத்தில் செலுத்தப்படும் சிந்தனை, எழுத்து வடிவம், பேக்கேஜிங், உருவாக்கும் தரம், விலை என பலவற்றைப் பொருத்தது. அதற்குப் பிறகு விநியோகம், விளம்பரம் என வேறு பலவற்றையும் சார்ந்தது. அந்தக் கட்டத்தில் வாசகர்களும் பேராதரவு தந்தால் புத்தகம் பிய்த்துக்கொண்டு போகும்.
(தொடரும்)
How does the honour system work in terms of copies sold statement? Also it would be nice if you explain, about the litigations involved on copyright material and who pays for it. I think your imprint had an issue with a Singapore guy, once!
ReplyDeleteஎழுதவேண்டிய அனைத்தையும் எழுதிமுடித்துவிட்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
ReplyDeleteநிச்சயம் தேவையான ஒரு பதிவு ப்
ReplyDelete//. எழுத்தாளருக்குச் சரியாக ராயல்டி கிடைத்துவிட்டால், எழுத்தாளர் வருத்தப்பட ஒரே ஒரு இடம் மட்டும்தான் இருக்கும். அது... என் புத்தகம் வெறும் 300 பிரதி, 500 பிரதி, 3000 பிரதி மட்டும்தான் விற்குமா? ஏன் என் பதிப்பாளர் லட்சம் பிரதிகள் விற்றுத் தருவதில்லை... என்பதுதான்.
ReplyDelete//
வழிமொழிகிறேன்
பத்ரி,
ReplyDeleteநல்ல தொடர். தத்தம் தொழில் துறை பற்றி பலர் எழுதுவது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
எனக்கு இரண்டு ஐயங்கள்:
1. தங்கள் தொழிலுக்கு தமிழ் இணையம் (நீங்கள், மற்ற கிழக்கு எழுத்தாளர்கள் வலைப்பதிவில் எழுதுவது) எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது? தமிழ் இணையத்தின் வீச்சு என்று ஏதாவது இருக்கிறதா என அறிய ஆவல்.
2. Paulo coelho போன்றவர்கள் Portuguese மொழியில் எழுதி அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையில் சாதனை படைப்பது போல் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏன் நடப்பதில்லை? தமிழ் எழுத்தாளர்களின் உலகத்தரத்தை அளக்கப் போனால் பிரச்சினை ஆகும். எனவே, அதை விடுவோம். எழுத்தின் தரம் அல்லாத மற்ற தடைகள் என்ன? உலகச் சந்தையை எட்டாத வரை எழுத்தை முழு நேரத் தொழிலாக கொண்டு வாழும் நிலை பலருக்கு வாய்க்காது என நினைக்கிறேன்.
முதன் முதலாக ஞாநியின் கட்டுரைக்கு சரியான பதிலை ஏற்றுக்கொள்ளக்கூடிய எழுத்தை உங்கள் மூலம் இன்று கண்டு கொண்டேன்.
ReplyDeleteரவி:
ReplyDelete//1. தங்கள் தொழிலுக்கு தமிழ் இணையம் (நீங்கள், மற்ற கிழக்கு எழுத்தாளர்கள் வலைப்பதிவில் எழுதுவது) எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது? தமிழ் இணையத்தின் வீச்சு என்று ஏதாவது இருக்கிறதா என அறிய ஆவல்.//
நிச்சயம் இணையத்தின் வீச்சு உள்ளது. கிழக்கு ஆரம்பிப்பதற்கே இணையம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இணையம் வாயிலாகவே நான் பா.ராகவனைச் சந்தித்தேன். இணையம் வாயிலாகவே பல (புதிய) எழுத்தாளர்களின் தொடர்பு இன்றும் கிடைக்கிறது.
ஆனால் இணையம் என்பது புத்தக விற்பனையில் வெறும் 3% கூட இல்லை. இதனால் நான் வருந்துவதில்லை. நாளடைவில் இந்த சதவிகிதம் அதிகமாகும். இணையத்தின்மூலம் புதிய டிரெண்டை உருவாக்கலாம். அந்தப் போக்கு சாதகமானதா இல்லையா என்பதை வேகமாகத் தெரிந்துகொள்ளலாம்.
நாளை மின் புத்தகங்கள் என்ற துறை நன்கு வளருமானால், என்றும் அச்சே ஆகாத, மின் வடிவத்தில் மட்டுமே இருக்கக்கூடிய புத்தகங்கள் சிலவற்றை (கருத்திலிருந்து அனைத்துமே புதியவை) உருவாக்கும் ஒரு பிரிவை எங்கள் நிறுவனத்தில் அமைப்போம்.
இப்போதே மின் புத்தகங்களை பெரிய அளவு எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயத்தில் இறங்கியுள்ளோம்.
பாலோ கொய்லோ பற்றியும் தமிழ்மொழி எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் செல்ல என்ன செய்யவேண்டியிருக்கும் என்பதைப் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்.
மறுமொழிக்கு நன்றி, பத்ரி.
ReplyDeleteஇணைய விற்பனை 3 %க்கு குறைவு என்பது எதிர்பார்த்ததே. தமிழ்நாட்டில் இணையப் பெருக்கம், இணையம் மூலம் வாங்கும் பழக்கம் குறைவாக இருப்பது ஒரு காரணம்.
இன்னொரு காரணம்:
கிழக்குப் புத்தகங்கள் தமிழகத்தில் செல்லும் இடம் எல்லாம் கிடைப்பதால் நேரடியாக கடையிலேயே புரட்டிப் பார்த்து வாங்கி விட முடிகிறது. இணையத்தில் ஒவ்வொரு தமிழ் நூலுக்கும் MRPல் இருந்து தள்ளுபடி என்றால் நான் இணையம் மூலம் வாங்க முற்படுவேன். Flipkart.com இது போல் ஆங்கில நூல்களுக்குத் தள்ளுபடி தருவதால் அவர்களிடம் இருந்து இணையத்தில் வாங்குகிறேன்.
நீங்கள் குறிப்பிடுவது போல் இன்று பல நிறுவனங்களும் இயக்கங்களும் கட்டியெழுப்ப, ஆட்களை அறிமுகம் ஆக்கிக் கொள்ள இணையம் பெரிதும் உதவுகிறது.
தமிழ் இணையத்தின் வீச்சு என்பது இணையம் மூலம் வரும் விற்பனை மட்டும் அல்லவே? இணையத்தின் மூலம் கிழக்கு நூல்களை அறிந்து நேரடியாக கடையில் வாங்குபவர்களையும் உள்ளடக்கும். நான் இந்த வகையைச் சேர்ந்தவன். இது போல் இணையத்தின் மூலம் உங்கள் வாசகப் பரப்பைப் பெருக்க முடிந்திருக்கிறதா என்று அறிய ஆவல். நன்றி.
இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? எனக்கு முற்றிலும் புதிய தகவல்கள்.
ReplyDeleteIf your writings are correct Bloomsbury should be richer than J.K.Rowling.
ReplyDelete