பாகம் 1
தமிழ்நாட்டில் சாதனை படைத்த புத்தகங்கள் என்று சிலவற்றைக் கடைக்காரர்கள் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கல்கியின் மூன்று வரலாற்றுப் புதினங்கள், சாண்டில்யனின் இரண்டு மூன்று, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் பிளீஸ், அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள், இப்படி. இதில் அக்கினிச் சிறகுகள் விற்பனை கொஞ்சம் இறங்கியிருக்கும் இப்போது. கல்கி நாட்டுடமையானதால் விற்பனை பரவலானாலும் தனி ஒரு பதிப்பாளருக்கு அதிகம் பலனிருக்காது. ரமணி சந்திரனின் நாவல்கள் நன்கு விற்கின்றன என்றும் கேள்விப்படுகிறேன்.
ஆனால் இவை எவற்றுக்கும் தெளிவான எண்ணிக்கை என்று தெரியாது. அக்கினிச் சிறகுகள் தமிழில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றுள்ளன. மதனின் வந்தார்கள் வென்றார்கள் 1 லட்சத்துக்கு மேல் என்று அந்தப் புத்தகத்தின் மேலட்டையில் போட்டுள்ளனர். கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘அள்ள அள்ளப் பணம் 1’ 1 லட்சம் பிரதிகளைத் தாண்டியுள்ளது. மனசே ரிலாக்ஸ் பிளீஸ் நிச்சயம் 1 லட்சத்துக்கு மேல் போயிருக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் கடந்த பல பத்தாண்டுகளில் 4 லட்சம் கூடத் தாண்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எங்களது கோட்பாட்டின்படி, இப்போதைக்கு நல்ல புத்தகம் என்றால் ஊடகங்களில் எந்தவித விளம்பரமும் செய்யாமல் ஆண்டுக்கு 20,000 பிரதிகள்வரை விற்கலாம். விகடன், குமுதம் போன்ற ஊடகங்களே வெளியிடும் புத்தகம் (அதுவும் அந்தப் பத்திரிகைகளில் தொடராக வந்தது, அதுவும் செலிபிரிட்டி ஒருவரால் எழுதப்பட்டது) என்றால் ஆண்டுக்கு 60,000 - ஒரு லட்சம் பிரதிகள் விற்கலாம். அதுவும் இரண்டு, மூன்று ஆண்டுகள் அந்த எண்ணிக்கையில் தாக்குப்பிடிக்கும். அதற்குப்பின் சறுக்கிவிடும்.
2009-ல் நாங்கள் வெளியிட்ட ‘பிரபாகரன் வாழ்வும் மரணமும்’ இதுவரையில் கிட்டத்தட்ட 15,000 பிரதிகளைத் தாண்டி விற்றிருக்கும். ஒரு முழு ஆண்டைக் கடந்தால் 20,000 பிரதிகளைத் தொடக்கூடும். இப்போது அதன் விற்பனை அதன் உச்சகட்டத்திலிருந்து கீழே இறங்கியுள்ளது. ‘பிரபாகரன் ஒரு வாழ்க்கை’ 2008-ல் வெளியானது. இதுவரையில் 20,000 தொட்டிருக்கும். அதற்கு முந்தைய ஆண்டில் கொண்டுவந்த ‘விடுதலைப் புலிகள்’ புத்தகம் இதுவரையில் அதே 20,000 என்ற கணக்கைத் தொட்டிருக்கும். இப்போது வெளியாகியுள்ள ‘ராஜிவ் கொலை வழக்கு’ ஓர் ஆண்டில் 20,000 பிரதிகளைத் தொடலாம். இரண்டு மாதங்களிலேயே 10,000 விற்றுவிடும். அதன்பின் தொடர்ந்து என்ன எண்ணிக்கையில் போகிறது என்பது பார்த்துத்தான் சொல்லமுடியும்.
மற்றபடி எங்களது ரெகுலர் வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், பொது வரலாறுகள் எல்லாம் குறைந்தது ஆண்டுக்கு 5,000 பிரதிகளாவது விற்கவேண்டும் என்று முயற்சி செய்வோம். பல நேரங்களிலும் இது நடக்கிறது. குறைந்தது நான்கு, ஐந்து ஆண்டுகள் இப்படி நடந்தால், அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு அந்த ஒரு புத்தகம் குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வருமானமாகக் கொடுக்கும். அதுதான் எங்கள் நோக்கம். (உதாரணம்: அம்பானி இதுவரையில் 20,000 பிரதிகளுக்குமேல் விற்றுள்ளது. நாராயண மூர்த்தி 15,000 பிரதிகளுக்குமேல். சே குவேரா 12,000 பிரதிகளுக்குமேல்... இப்படி.)
ஆனால், எந்தப் புத்தகத்தைத் தொட்டாலும் இப்படி சில பத்தாயிரங்கள் விற்குமா என்றால் கட்டாயம் இல்லை. சே குவேரா விற்கும் அளவு லெனின் விற்பதில்லை. லெனின் விற்கும் அளவுகூட ஹோ சி மின் விற்பதில்லை. எது, எவ்வளவு விற்கும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது. ஆக, இங்கே பதிப்பாளர் ஒரு ரிஸ்க் எடுத்துதான் இறங்கவேண்டும்.
ஞாநி, ‘அறிந்தும் அறியாமலும்’ 2000 பிரதிகள் ஓராண்டில் விற்றுள்ளதாகச் சொன்னார். அது நல்ல எண்ணிக்கைதான். ஆனால் ஞாநி அந்தப் புத்தகத்தின் விற்பனையை மேலும் அதிகரிக்கலாம். அதற்கு மார்க்கெட்டிங் முயற்சிகள் சில தேவை. இப்படி ஒரு புத்தகம் விகடனில் தொடராக வந்து, பாதியில் நிறுத்தப்பட்டு, பின் முழுப் புத்தகமாக வந்துள்ளது என்ற விஷயமே தமிழ்நாட்டில் பாதிப்பேருக்குத் தெரியாது. மேலும் அந்தப் புத்தகத்தின் என்ன உள்ளது என்ற விவரமும் பலருக்குத் தெரியாது. இதனை விளம்பரங்கள்மூலம் செயல்படுத்த முடியாது. அதற்கு ஆகும் செலவு ஏராளம். ஆனால் எழுத்தாளர் தன் இணையத்தளம் மூலமாகவும், தனது பத்தி மூலமாகவும், தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன் புத்தகங்களைப் பற்றி நான்கு வரி (கூச்சப்படாமல்) சொல்வதன்மூலமாகவும் அப்படி ஒரு புத்தகம் உள்ளது என்பதைப் பரப்பமுடியும். அதன்மூலம் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும்.
ஒரு புத்தகம் எத்தனைக்கு எத்தனை அதிகப் பிரதிகள் ஓராண்டில் விற்கிறதோ, அத்தனைக்கு அத்தனை எழுத்தாளருக்கும் வருமானம்; பதிப்பாளருக்கும் லாபம். எனவே இதனை எப்படிச் சாதிப்பது என்பதுதான் இன்று பதிப்பாளரும் எழுத்தாளரும் சேர்ந்து சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்.
இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக்க கிழக்கு பதிப்பகம் என்னென்ன முறைகளைக் கொண்டுவந்துள்ளது என்று விளக்குகிறேன். இதனை நிச்சயமாக பிறர் பின்பற்றலாம்.
(தொடரும்)
பெங்களூர் இலக்கியத் திருவிழா
2 hours ago
அன்பின் பத்ரி,
ReplyDeleteஎத்தனை பேர் இனி விளக்கினாலும் இவ்வளவு எளிதாக ராயல்டியை பற்றி விளக்க முடியாது. அற்புதமான விளக்கம் ! மேலும் கிழக்கு பதிப்பகத்தின் மார்க்கெட்டிங் முறைகளை இனி வரும் பதிவுகளில் விளக்குவேன் என்று அறிவித்ததற்கே உங்களுக்கு ஒரு பூச்செண்டு ! பல பேர் தங்கள் குழுமத்தின் மார்க்கெடிங் யுக்திகளை வியாபார ரகசியம் என்று வெளியெ சொல்ல மாட்டார்கள்.உண்மையில் ஒரு பதிப்பகத்தின் செயல்பாடுகளை,அதன் கஷ்ட நஷ்டங்களை அறிந்தாவது மக்கள் புத்தகம் வாங்கி அவர்கள் பயனுற வேண்டும். 2010இல் ஆவது நமது எழுத்தாளர்கள் ராயல்டி பற்றிய புலம்பல்கள்,வேதனைகள்,வருத்தங்கள் பதிவு எழுதாமல் இருக்க வேண்டுகிறேன்.(மக்கள் புதகங்கள் வாங்கி அவர்கள் மனதையும் பையயும் நிறைக்க வேண்டுகிறேன்.) :)
நல்ல தொடர் பதிவு. பதிப்புலகம் குறித்தான நிறைய விஷயங்க்ள புகைமூட்டமாகவே உள்ளன. குறிப்பாக ராயல்டி. பெரும்பாலும் இதைக்குறித்த அதிருப்தியான எதிர்மறையான கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன.வெளிப்படையாகவே சொன்னால் பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தொகையை முறையாக தருவதில்லை என்பதே அது. ஆனால் மறுபுறம் வாசகர்களின் மனஓட்டம் 'புத்தகங்களின் விலை அதிகம்' என்பதாக இருக்கிறது. குறிப்பிட்ட சில பதிப்பகங்களைத் தவிர பெரும்பாலான பதிப்பகங்களின் அச்சுத்தரமும் கட்டுமானமும் வடிவமைப்பும் சொல்லிக் கொள்கிறாற் போல் இல்லை. வாசகர்களிடம் நூற்களை கொண்டுச் செல்வது குறித்தான புதிய வழிமுறைகள் எதிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. பதிப்பக பணியாளர்களுக்கு வெளியிடப்படும் நூற்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கே பெரும்பாலும் இருப்பதில்லை.
ReplyDeleteஇந்நிலையில் பதிப்புலகத்திலிருந்து வெளிப்படையாக ஒலிக்கும் இந்தக் குரல்,நிச்சயம் பயனளிக்கும் என நம்புகிறேன்.
//தனது பத்தி மூலமாகவும், தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன் புத்தகங்களைப் பற்றி நான்கு வரி (கூச்சப்படாமல்) சொல்வதன்மூலமாகவும் அப்படி ஒரு புத்தகம் உள்ளது என்பதைப் பரப்பமுடியும்.//
ReplyDeleteஎந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தன் புரிதலின்மை குறித்து எவ்விதக் கூச்சமுமில்லாமல், தான் எழுதுவதுதான் உண்மை என்கிற தொனியில் எழுதுபவர் ஞாநி. இதற்குச் சிறந்த உதாரணம், ராயல்டி பற்றி அவர் எழுதியிருப்பது. இத்தனை ஆண்டுகள் பத்திரிகையாளராகவும், பதிப்பாளராகவும் இருந்தும் புத்தக விநியோகம் குறித்த அடிப்படைப் புரிதல்களே இல்லாமல் அவர் எழுதியிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லைதான்.
”உண்மை என்று எதுவும் கிடையாது, மீடியாவில் தாம் உருவாக்குவதுதான் உண்மை” என்ற மனநிலை கொண்ட ஞாநி போன்றவர்கள் தம் புத்தகங்களைப் பற்றிச் சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள எவ்விதக் கூச்சமும் படமாட்டார்கள்.
//இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக்க கிழக்கு பதிப்பகம் என்னென்ன முறைகளைக் கொண்டுவந்துள்ளது என்று விளக்குகிறேன். இதனை நிச்சயமாக பிறர் பின்பற்றலாம்.//
ReplyDeleteஒபன் சோர்சா :) :) :)
வாழ்த்துக்கள்
புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது.இந்த எண்ணம் புத்தக விற்பனையில் மட்டுமல்ல எல்லாப் பொருள் விற்பனையிலும் இருக்கின்றது. எனக்கும் இருந்தது.காந்தி நிகேதன் ஆசிரம சோப் உற்பத்தித் துறையியனருடன் இதைப் பற்றி அங்கலாய்பாகப் பேச அவர்கள் மிகக் கூலாக, “மக்களுக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். லாபம் கிடைக்கும். கல்லடி கூட கிடைக்கும். அவனுக்கு கிடக்கும் லாபத்தை பார்த்து பொறாமைபடுவதில் அர்த்தமே இல்லை.உற்பாதியாளன் தள்ளிதானே இருக்கின்றான்”. புத்தக விற்பனையாளரை மக்களுக்கு அருகாமையில் இருப்பவர் என்று எண்ணிப் பாருங்கள். எழுத்தாளர்கள மக்களுக்கு, அவர்கள் மனங்களுக்கு, உணர்வுகளுக்கு அருகாமையில் இருந்தால்..லாபமும் மரியாதையும் பதிப்பாளருக்கு அல்ல, எழுத்தாளருக்கே
ReplyDeleteS.Rengasamy
Madurai Institute of Social Sciences
பத்ரி, இந்தத் தொடர் புத்தகமாக வெளிவந்தால் செம்ம ஹிட். தமிழ்நாட்டில் கைகாசு போட்டு புத்தகம் வெளியிடுற 9999 கவிஞர்களும் வாங்கிடுவாங்க ;-)
ReplyDeleteKVR: இதையெல்லாம் புத்தகமாக ஆக்கிவிடமுடியாது! சும்மா வலைப்பதிவில் எதை எழுதினாலும் அதனைப் புத்தகமாக்கிவிட முடியுமா என்ன? :-) ஆனால் பதிப்புத் தொழில் பற்றி ஒரு புத்தகம் எழுத யோசித்துக்கொண்டிருக்கிறேன். வரும் ஆண்டா, அல்லது அதற்கடுத்த ஆண்டா என்று பார்ப்போம்.
ReplyDeleteதமிழ்நாட்டில் சொந்தக் காசை செலவழித்துப் புத்தகம் வெளியிடும் 9999 கவிஞர்களும் (அவ்வளவுதானா?) குறைந்த காசில் இதனைச் சாதிக்க பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் வழிமுறை உள்ளது. அது எப்படி என்று விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். மற்றபடி என் பதிவுத் தொடர், சீரியஸ் பதிப்பாளர்களுக்கானது.
பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஹரன்பிரசன்னாவிடம் கேளுங்கள். அவர் தன் கவிதைகளை மிகக் குறைந்த செலவில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்!
//புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது.//
ReplyDeleteஅப்படியா
எல்லா புத்தகத்துக்குமா
நீங்க சொல்லும் 30 சதம் மார்ஜின் இருப்பது சில வகைகளுக்கு மட்டும் தான் :) :) :)
கிழக்குப் பதிப்பகம் நஷ்டத்தில் ஓடுவதாக ஒரு நண்பர் குறிப்பிட்டார். அவரது சொந்த ஊரில் ஒரு டீக்கடையில் உங்கள் புத்தகங்களின் விற்பனை நிலவரம் குறித்து அவர் கேட்டுத் தெரிந்துகொண்டாராம் :-)
ReplyDelete////இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக்க கிழக்கு பதிப்பகம் என்னென்ன முறைகளைக் கொண்டுவந்துள்ளது என்று விளக்குகிறேன். இதனை நிச்சயமாக பிறர் பின்பற்றலாம்///
ReplyDeleteVery nice !!!
Print On Demand : Need More !!!