Sunday, December 20, 2009

ஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா

மாதம் மார்கழி. ஆழ்வார்களின் பாடல்களில் பலரும் மதி மயங்கியிருக்கும் காலம்.

இந்த ஆண்டு நான் ‘மேற்பார்வை’ பார்த்த புத்தகங்களில் ஒன்று ‘பூர்வா’ என்ற மாய யதார்த்த நாவல். ஆழ்வார்கள் கதைதான். ஆனால் அதையே சிறுவர்கள் ரசிக்கும்படியாக மாற்றியுள்ளார் லக்ஷ்மி தேவநாத்.

ஸ்வாமி தாத்தா என்ற ஒரு கிழவர் சாமி, கோயில், வேதாந்தம் என்று ஏதோ சொல்லி கழுத்தை அறுக்கப்போகிறாரோ என்று பயப்படுகிறாள் பூர்வா என்ற சிறுமி. ஆனால் ஸ்வாமி தாத்தாவோ சிறு குழந்தைகளையும் கவரக்கூடிய சுவாரசியமான மனிதர். அவர் வெறுமனே கதை சொல்லவில்லை. பூர்வாவை ஆழ்வார்களில் அற்புத உலகத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார்.

ஸ்வாமி தாத்தாவுடன் சேர்ந்து பூர்வாவும் முதலாழ்வார்கள் ஓர் அறைக்குள் ஒண்டிக்கொண்டு ஒளி விளக்காக ஸ்ரீமன் நாராயணனைத் தரிசிப்பதைப் பார்க்கிறாள். பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு என்று எம்பெருமானுக்குத் திருக்காப்பு இடுவதைப் பார்க்கிறாள். ஆண்டாள் திருமாலுக்கு வைத்த மாலையை அள்ளி அணிவதையும் மாலையே மணாளன் ஆக்கிக்கொள்வதையும் பார்க்கிறாள்.

விப்ரநாராயணர் ஜெயிலில் மாட்டிக்கொள்வதைக் கண்டு பதைபதைக்கிறாள். குலசேகரர் பாம்புக் குடத்தில் கைவிடுவதைக் கண்டு திகைத்துப்போகிறாள். பாணர், திருமங்கை, நம்மாழ்வார், மதுரகவி என்று அனைவர் வாழ்விலும் நடப்பதை அருகருகே இருந்து கவனிக்கிறாள். அவள்மூலம் நமக்கும் அனைத்து விஷயங்களும் தெரியவருகின்றன.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நல்ல பாராட்டைப் பெற்ற நூலை பத்மா நாராயணன் இயல்பான தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சொல்லப்போனால் தமிழில்தான் இயல்பாக வருகிறது. ஆழ்வார் பாசுரங்களின் சுவையே தமிழில் இருந்தால்தானே சரியாகக் கிடைக்கும்?

குழந்தைகளுக்கு ரசிக்கும்படிக் கதை சொல்ல விரும்புபவர்கள் தாராளமாக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கலாம். சொல்லப்போனால், உங்கள் குழந்தைகளையே இந்தப் புத்தகத்தை நேரடியாகப் படிக்குமாறு தூண்டுங்கள். நிச்சயம் ரசிப்பார்கள்.

3 comments:

  1. Definitely will be in my list of must-buys at this book fair.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி... தமிழில் 'அற்புத உலகில் ஆலிஸ்' போன்றதொரு புத்தகம்... வெறும் மாயஜால நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், ஆழ்வார்களைப் பற்றிய புத்தகம் என்பதால், சிறுவர்களுக்கு ஆழ்வார்கள் பற்றி அறிய உதவும்.

    என்னுடைய அக்கா மகளுக்கு பரிசளிக்கப் போகிறேன்...:)அவள் 5ம் வகுப்பு படித்து வருகிறாள்...

    ReplyDelete
  3. மாய யதார்த்த

    u mean magical realism :).then i am scared :)

    ReplyDelete