ஐ.பி.எல் கிரிக்கெட் (பொதுவாக 20/20) எனக்கு அவ்வளவு உவப்பில்லாதது. கிழ போல்ட்டுகள் “எங்க காலத்துல பிரசன்னா வந்து ஆஃப் ஸ்பின் போட்டா...” என்று பேசுவதுபோல அரைக்கிழமான நான் இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்கு உகந்த 20/20-ஐக் கேவலமாகப் பேசுவதாக நினைக்கவேண்டாம். 20/20 வேகம் இருந்தாலும் விவேகம் குறைவான, அறிவு அதிகம் தேவைப்படாத, முரட்டுத்தனம் மட்டுமே போதும் என்கிற ஆட்டம் என்பது என்னுடைய இன்றைய கருத்து. இது நாளை மாறலாம்.
யூசுஃப் பதான் 20/20-ல் ராஜாவாக இருக்கமுடியும். ஏதோ நூற்றில் ஒரு ஒருநாள் ஆட்டத்தில்தான் பிழைப்பார். டெஸ்ட் பக்கம் அவர் போக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
சென்ற ஆண்டு ஐ.பி.எல் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஊத்திவிடும் என்றே நினைத்தேன். நிச்சயம் டிக்கெட் வாங்கிக்கொண்டு நான் பார்த்திருக்கமாட்டேன். அரங்கம் சென்று டெஸ்ட் மேட்ச்கள் மட்டுமே பார்ப்பவன் நான். ஒருநாள் போட்டிகள் என்றால் டிவியே போதும் என்று நினைப்பவன்.
20/20 பார்க்க என்று செட் மேக்ஸ் சப்ஸ்கிரைப் செய்தேன். சில ஆட்டங்கள் பார்த்தேன். கடைசியில் நிறைய ஆட்டங்கள் பார்த்தேன். இறுதி ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் பல ஆட்டங்கள் நன்றாகவே இருந்தன. கடைசியில் ஐ.பி.எல் எனக்கு ஓரளவுக்குப் பிடித்துப்போனது.
***
இரண்டாம் சீசன் ஐ.பி.எல் ஆரம்பமே கொஞ்சம் தகராறில்தான் இருந்தது. முதலாவது பிரச்னை பொருளாதார வீழ்ச்சி. அதன் பாதிப்பு. இரண்டாவது மும்பை தாக்குதல். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்மீதான தாக்குதல். மூன்றாவது லலித் மோடிக்கும் ராஜஸ்தானில் புதிதாக ஜெயித்த காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான பிரச்னை. நான்காவது இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்.
இந்தியாவில் தேர்தல் மிகப்பெரிய விஷயம். அடிப்படையில் இந்தியா இன்னமும் வன்முறையை விட்டு வெளியே வரவில்லை. இந்தியத் தேர்தல்கள் ஊழல் நிறைந்தவை. வாக்காளர்களுக்குக் காசு கொடுப்பது, திமுக, அஇஅதிமுக மட்டுமல்ல, முலாயம், பாஜக, லாலு என்று அனைவரும்தான். கள்ள வாக்களிப்பதில் பிஎச்.டி வாங்க ஒவ்வொரு கட்சியும் முயன்று வருகிறது. வாக்காளர்களை அடித்து உதைத்துத் துரத்துவது பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போது, உள்ளாட்சித் தேர்தல்களில் கருணாநிதியின் திமுக, “நானும் இருக்கேண்டா” என்று தமிழகத்தை உத்தரப் பிரதேசம், பீகார் அளவுக்குக் கொண்டுசெல்கிறது.
உள்ளூர் போலீஸ் என்றாலே ஆளும் கட்சியின் ஜிஞ்சா என்று அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டனர். உளவுத்துறையின் வேலை எதிர்க்கட்சிகளை உடைப்பது, ஒட்டுக் கேட்பது.
***
இப்படி இருக்கும்போது தேர்தலை எப்படி நியாயமாக நடத்துவது? இதற்குத்தான் தேர்தல் ஆணையம், ஒரு போருக்குத் தேவையான அளவுக்கு பாராமிலிட்டரி, ராணுவம் ஆகியவற்றின் துணையை நாடுகிறது.
ஒழுக்கம் கெட்ட நாட்டில், தேர்தல் மட்டுமாவது ஓரளவுக்கு ஒழுக்கமாக நடக்கவேண்டும் என்றால் ராணுவ மொபிலைசேஷன் தேவை என்று கடந்த 17 வருடங்களாக தேர்தல் ஆணையம் நினைக்கிறது. நவீன் சாவ்லா இதனை ஒருவேளை மாற்றக்கூடும்.
இந்தத் தேர்தல் ஆணைய நிலைப்பாடுதான், கடைசியாக ஐ.பி.எல் இந்தியாவில் நடப்பதற்கு சங்கூதியது. ஐ.பி.எல், பிசிசிஐ ஆசாமிகள் கேவலமானவர்கள்தான் என்றாலும் ஊடகங்கள், கார்ட்டூன்கள் சொல்வதுபோல அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. தேர்தலை வேறு நாட்டுக்கு நகர்த்தினால் என்ன அல்லது தேர்தலைத் தள்ளிவைத்தால் என்ன என்று இவர்கள் எந்தக் காலத்திலும் கேட்க மாட்டார்கள். ஆனாலும் கார்ட்டூன்கள் அப்படித்தான் சித்திரித்தன.
ஐ.பி.எல் என்பது பல கோடி ரூபாய்கள் புழங்கும் தொழில். ஓர் ஆண்டு தொலைக்காட்சி வருமானம் 820 கோடி ரூபாய்! அதை நகர்த்துவது, மாற்றுவது என்பது கடினமான காரியம். உள்துறை அமைச்சகம், பாதுகாப்புக்கு என்று நல்ல பணத்தை வாங்கிக்கொண்டு, இந்தியாவிலேயே ஆட்டங்களை நடத்த ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம். சும்மா இருக்கும் சில ராணுவ டிவிஷன்களை இதற்கென வேலைக்கு அமர்த்தி, ஓர் ஆட்டத்துக்கு இத்தனை ரூபாய் என்று கேட்டு வாங்கியிருக்கலாம்.
ஆனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு லலித் மோடியிடம் என்ன குறையோ தெரியவில்லை. மூன்று முறை ஷெட்யூலை மாற்றியும் மஹாராஷ்டிரம் (காங்கிரஸ் அரசு), ஆந்திரம் (காங்கிரஸ் அரசு) ஆகியவை தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருந்தன. விளைவு: ஐ.பி.எல் வேறு நாட்டுக்குப் போகவேண்டியதாயிற்று.
இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. போ, ஒழியட்டும் ஐ.பி.எல் என்று சில விமரிசகர்கள் சொல்கிறார்கள். இது நியாயமற்றது. பணம் பண்ணும் முரட்டு ஆசாமிகளைக் கண்டு சிலருக்கு வரும் நியாயமற்ற கோபம்தான் இது.
இதில் என்ன வேடிக்கை என்றால், ஐ.பி.எல் தென்னாப்பிரிக்கா செல்கிறது. அங்கும்... ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல்! அதுவும் மிக இளைய குடியாட்சிதான். இந்தியா அளவுக்கு அங்கு தீவிரவாத பயம் இல்லை என்றாலும், அங்கும் வன்முறை உண்டு.
ஒரே நேரத்தில் தேர்தலையும் நடத்தி, விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான பாதுகாப்பையும் தர இந்தியா வக்கற்றது என்றுதான் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார். பாஜகவின் அருண் ஜெயிட்லி இப்படிக் குற்றம் சாட்டுவதில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.
எப்படி இந்தியா ஒரு வல்லரசாக முடியும்?
அந்தேரியில் மூன்று தினங்கள்…
7 hours ago
எதிர்க்கட்சிகளாக இருந்துகொண்டு, அருண் ஜெட்லியும் மோடியும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். சிதம்பரம் சொல்வதில்தான் உண்மை இருக்கிறது. இரண்டு மாதங்கள் ஐ பி எல் கிரிக்கெட்டை தள்ளி வைத்தால் இந்திய வல்லரசின் மானம் குறைந்துவிடும் என்று நான் நம்பவில்லை. ஐ பி எல் தன்னை அரசை விட உயர்ந்த அமைப்பாக கருதுகிறது. அதனால்தான் பாதுகாப்பு பிரச்சினையைவிட சிதம்பரம் சொன்னதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ReplyDeleteIPL .. Plz Get Out..
ReplyDeleteஇதிலும் அரசியலை புகுத்தி ஆதாயம் பார்கிறார்கள் நம் தலைவர்கள். இப்பொழுது பாதுகாப்பு நிலைமை சரியாக இல்லை. இரு நிகழ்ச்சிகளையும் ஒருங்கே நடத்துவது என்பது மிகவும் கஷ்டம். நீங்கள் சொல்வது போல் இப்பொழுது பணத்தை வாங்கிக் கொண்டு பாதுகாப்பை ஏற்படுத்தி தரமுடியாது. நாம் நம் காவலர்கள் மற்றும் ராணுவத்தினரின் நலனையும் யோசிக்க வேண்டும். ஏற்கனவே தேர்தலுக்கான பாதுகாப்பில் அவர்கள் மும்முரமாக இருப்பார்கள் கூட ஐபிஎல் பாதுகாப்பு பணிகள் வேறு சேர்ந்தால் அவர்கள் மிகுந்த அழுத்ததிற்கு ஆளாக்கப்படுவார்கள்
ReplyDelete//// இப்பொழுது பாதுகாப்பு நிலைமை சரியாக இல்லை.////
ReplyDeleteஎப்போதுதான் பாதுகாப்பு நிலைமை சரியாக இருந்துள்ளது?