Thursday, March 12, 2009

மொழி vs அறிவியல்/கணிதம்

கடந்த சில பத்தாண்டுகளாக நம் பள்ளிகளில் மொழி கற்றுக்கொடுப்பதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பொதுவாக மாணவர்களுக்கு இரு வகையான திறன்களை நாம் அளிக்க முற்படுகிறோம். இதில் முதலாவது மொழித்திறன். இன்று இரு மொழிகளைக் கற்பிப்பது முக்கியம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இரண்டாவது அறிவியல், கணிதம். அறிவியல் எனும்போது இயல்பியல், வேதியியல், உயிரியல் தாண்டி, சமூக அறிவியல், பொருளாதாரம், சூழலியல் போன்ற பலவும் அடங்கும். அறிவியல் என்பதன் வேர்ச்சொல்லான அறிவு என்பதாக இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். கணிதத்தை தனியான ஒரு திறனாகவே மதிப்பிடவேண்டும்.

மொழியறிவைப் பொருத்தமட்டில், சமீப காலங்களில் நடந்துள்ள சில மாற்றங்கள் மாணவர்களுக்குச் சரியான திறன்களைத் தருவதில்லை. அவை:

1. தாய்மொழியை உதாசீனப்படுத்துவது. விளைவாக, எந்த மொழியில் நல்ல சிந்தனை அறிவைப் பெற்றுள்ளார்களோ அந்த மொழியில் எழுதத் தெரியாமை. அந்த மொழியில் சரியான சொற்குவியல் இல்லாமை. ஓரளவு தாய்மொழியில் பேசத் தெரிந்தாலும், சிந்தனையைத் தெளிவாக வெளியிட முடியாத குழப்பமான நிலை.

2. ஆங்கிலம் மேலான காதலில் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தைச் சரிவரச் சொல்லித் தராத நிலையே பெரும்பாலான பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சரியான ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத நிலை, இன்றைய நம் மக்கள் சூழலைப் படம் பிடிக்காத ஏதோ ஓர் குப்பையைப் பற்றிச் சொல்லும் ஆங்கிலப் பாடப் புத்தகங்கள். 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் புத்தகங்கள், non-detail ஆகியவற்றை எடுத்துப் பாருங்கள். இன்னமும் எதோ ஓர் ஆங்கிலேயன் பூவையும் புண்ணாக்கையும் பார்த்து எழுதின அபத்தக் கவிதைகள், வேறு நாட்டவருடைய அனுபவங்கள் ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன.

என் பெண்ணின் 4-ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் (CBSE) ஏதோ அமெரிக்கத் தெருவில் நடக்கும் ஒரு காட்சி இரண்டு பக்கங்களுக்கு வருகிறது. பெயர்கள் முதற்கொண்டு அவர்கள் காப்பி அருந்தப் போகும் இடம் முதற்கொண்டு எல்லாமே அந்நியம். அவர்கள் பேசிக்கொள்வது அந்நியம். அந்த பாப் இசைப் பாடகியின் கைப்பையைத் திருடும் திருடன் அந்நியம். அந்தக் கைப்பையை மீட்டு பாடகியிடம் கொடுக்கும் பையன் அந்நியம்.

இன்னொரு பாடமாக, நாய் பற்றி ஒரு ஆங்கிலக் கவிஞர் எழுதிய பாடல். நம் தெருவில் காணும் நாய்க்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நம் திருவிழாக்கள், நம் சந்தோஷங்கள், நம் துக்கங்கள், நம் சடங்குகள், நம் நம்பிக்கைகள், நம் கோபங்கள் என்று எதையும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்த நம் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகங்கள் சொல்லித்தருவதில்லை.

முன்னராவது ஆங்கிலம் என்பது ஒரு வேற்று மொழி என்ற அளவில் படித்தோம். ஆனால் இன்றோ அதுதான் மீடியம் என்ற அளவில் அதன்மூலம்தான் அனைத்தையும் படிக்கவேண்டும் என்றாகிறது. ஆனால் சரியான சொற்குவியல், சரியான எண்ணங்கள், சரியான வாக்கியங்கள் என்று எதுவும் சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை.

ஆனால், ஆங்கிலத்தில் சிறு சிறு சொற்களை வைத்து, தமிழைவிட நன்றாக எழுதக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள் மாணவர்கள்.

பிரச்னை எங்கே? தமிழில் நன்கு சிந்திக்கமுடிகிறது. ஆனால் எழுதத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சிந்திப்பதிலேயே தகராறு. அதைத் தாண்டிவிட்டால் எழுதமுடிகிறது. ஆனால் எப்போது சிந்தித்து முடித்து எப்போது எழுதி முடிப்பது?

என் பெண்ணின் வகுப்பில், திடீரென ஒரு கதை எழுது என்று சொல்லியிருக்கிறார்கள் (ஆங்கிலத்தில்தான்). அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. என்ன சொல்லவேண்டும் என்று அவள் முயற்சி செய்துள்ளாள் என்று தெரிகிறது. ஆனால் வார்த்தைகளுக்கான தடுமாற்றம். இத்தனைக்கும் அதற்குத் தேவையான ஆங்கில வார்த்தைகள் சிக்கலானவை அல்ல. சரியான பாடப் புத்தகங்களும் non-detail-உம் இருந்திருந்தால் அவளால் அந்தக் கதையை நன்கு எழுதியிருக்கமுடியும். (அவளது வகுப்பில் பல ஆண் பிள்ளைகள் ஏ.கே.47, தீவிரவாதிகள், குண்டுவைத்தல் என்று கதைகளை எழுதியிருக்கும் கொடுமை வேறு! அதைப்பற்றி தனியாகப் பேசி அழவேண்டும்!)

அதே கதையை தமிழில் எழுதச் முயற்சித்தால் அங்கும் தகராறு. எழுத்துப் பிழைகள். Diglossia பிரச்னைகள்.

3. இதற்கிடையில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றைப் பயிற்றுவித்தலை வீடுகளிலும் பெற்றோர்கள் ஒழுங்காகச் செய்வதில்லை. அறிவியல், கணிதப் புத்தகத்தை அடித்துத் தட்டி தன் மகன்/மகள் எஞ்சினியர் (சாஃப்ட்வேர்!) ஆகவேண்டும் என்பதிலேயே பெற்றோர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

விளைவு? பட்டம் வாங்கியபிறகு வாய் திறந்து ரெண்டு வார்த்தை பேச வக்கற்றவர்களாக, பிழையின்றி ஒரு பத்தி எழுத திராணியற்றவர்களாக (ஆங்கிலம், தமிழ் எதிலுமே!), மொத்தத்தில் உருப்படாதவர்களாக இந்த மாணவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

சாஃப்ட் ஸ்கில், அது இது என்று பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் கண்ணீர் விடுகிறார்கள். மொழியை ஒழுங்காகப் பேச, எழுதக் கற்றுக்கொடுத்தால் போதும். அதுதான் சாஃப்ட் ஸ்கில்லில் முக்கியமானது. எதிராளி பேசுவதை சரியாகப் புரிந்துகொள்வது, அதற்கான பதிலை எளிமையான மொழியில் எதிராளி புரிந்துகொள்வது போலச் சொல்வது. இதையே எழுத்திலும் செய்வது. இவ்வளவுதான்.

வலைப்பதிவுகளையே பாருங்களேன்? எத்தனை பேர் திராபையாக எழுதுகிறார்கள்? என்ன எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாம் திண்டாடவேண்டியுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் மொழியறிவு இல்லாததே.

***

என் கணிப்பில், பள்ளிகள் உடனடியாக அறிவியல், கணிதத்தைவிட அதிகமாக ஆங்கிலம், தமிழ் சொல்லிக்கொடுப்பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அறிவியல் கற்பதில் பயனே இல்லை என்றாகிவிடும். கற்ற அறிவியலை திரும்பச் சொல்லித்தரக்கூட மொழி அறிவு இல்லாதவரால் முடியாது.

மொழி அறிவு இல்லாதவர்கள் எந்த நிறுவனத்திலும் தலைமைப் பதவியை அடையவே முடியாது. (அரசு நிறுவனங்கள் விதிவிலக்கு!)

17 comments:

  1. //பள்ளிகள் உடனடியாக அறிவியல், கணிதத்தைவிட அதிகமாக ஆங்கிலம், தமிழ் சொல்லிக்கொடுப்பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அறிவியல் கற்பதில் பயனே இல்லை என்றாகிவிடும். கற்ற அறிவியலை திரும்பச் சொல்லித்தரக்கூட மொழி அறிவு இல்லாதவரால் முடியாது.

    மொழி அறிவு இல்லாதவர்கள் எந்த நிறுவனத்திலும் தலைமைப் பதவியை அடையவே முடியாது.//

    உண்மை.

    **

    ஒரு வேண்டுகோள்: கிழக்கு தொடர்பான இடுகைகளை nhm தளத்தில் ஒரு தனி வலைப்பதிவாக இடலாமே? நன்றி.

    ReplyDelete
  2. 'என் பெண்ணின் 4-ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் (CBSE) ஏதோ அமெரிக்கத் தெருவில் நடக்கும் ஒரு காட்சி இரண்டு பக்கங்களுக்கு வருகிறது. பெயர்கள் முதற்கொண்டு அவர்கள் காப்பி அருந்தப் போகும் இடம் முதற்கொண்டு எல்லாமே அந்நியம். அவர்கள் பேசிக்கொள்வது அந்நியம். அந்த பாப் இசைப் பாடகியின் கைப்பையைத் திருடும் திருடன் அந்நியம். அந்தக் கைப்பையை மீட்டு பாடகியிடம் கொடுக்கும் பையன் அந்நியம்.

    இன்னொரு பாடமாக, நாய் பற்றி ஒரு ஆங்கிலக் கவிஞர் எழுதிய பாடல். நம் தெருவில் காணும் நாய்க்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'.

    இதற்கு யார் காரணம்.CBSE பாட நூல்களை
    வெளியிடுவது, தயாரிப்பது யார். கொஞ்சம்
    யோசித்தால் இன்றைய சிறுவர்/சிறுமியரில்
    சிலருக்கு இவை அன்னியமாக இருக்காது.
    டிஸ்னியும்,அனிமல் பிளானட்,ஜெட்டிக்ஸ்
    இத்தியாதி பார்பவர்களுக்கு தஞ்சாவூரும்,
    பாட்னாவும், ஏன் மாமல்லபுரமும் அன்னியமாகத் தோன்றலாம்.தலைமுறை
    இடைவெளி என்பது வயதில் மட்டும் இல்லை.
    இந்த மாத தீராநதியில் பேராசிரியர்
    நீலகண்டன் கொடுத்திருக்கும் பேட்டியை
    படியுங்கள்.

    ReplyDelete
  3. Badri, Ariviyal site is not working since 2 days. It is coming as blank white page with no errors. I tried in all browsers - IE, Chrome, and Firefox! Any problem with the site??

    ReplyDelete
  4. ஐயோ சாமி இத நினைத்து பார்த்தாலே தல சுத்துது
    மொழி பிரச்சனை ஒரு பூதாகாரே விசயமாய் மாறிக்கொண்டு வருகிறது..சார் எனக்கு இது புரியலன்னு மாணவன் சொன்னா அவனுக்கு அர்த்தம் புரியலையா, இல்ல அந்த ப்ரின்சிப்பலே புரியலையா ன்னு ஆசிரியர் கண்டுபிடிக்கவே வகுப்பு நேரங்கள் முடிந்து விடுகின்றன..ஆசிரியரை திட்டி என்ன ஆகப்போகுது பாவம் அவர்களும் இப்படிதானே படித்து முடித்திருப்பார்கள்.

    ReplyDelete
  5. //ஆங்கிலம் மேலான காதலில் தவறில்லை.//

    சரியாகச் சொல்வதானால், இக்காதல் பெரும்பாலும் பொருந்தாக் காமமாகப் பரிணமித்திருக்கிறது என்பதே உண்மை.

    ReplyDelete
  6. மொழி அறிவு இல்லாதவர்கள் எந்த நிறுவனத்திலும் தலைமைப் பதவியை அடையவே முடியாது.

    முற்றிலும் உண்மை!

    "வாயுள்ள பிள்ளை பிளைத்துக்கொள்ளும்" என்பது மொழிவளத்தைக் குறிப்பதாகத்தான் உணர்கிறேன்!

    கிழக்கும் அதன்மூலம் உங்கள் குழுவும் இன்னும் பல உச்சத்தைத் தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //மொழியை ஒழுங்காகப் பேச, எழுதக் கற்றுக்கொடுத்தால் போதும். அதுதான் சாஃப்ட் ஸ்கில்லில் முக்கியமானது. //

    நச்

    ReplyDelete
  8. //முன்னராவது ஆங்கிலம் என்பது ஒரு வேற்று மொழி என்ற அளவில் படித்தோம். ஆனால் இன்றோ அதுதான் மீடியம் என்ற அளவில் அதன்மூலம்தான் அனைத்தையும் படிக்கவேண்டும் என்றாகிறது. //

    இத யாராவது ஊத வேண்டிய இடத்தில் ஊதினால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  9. மிகவும் சரியாகச் சொன்னீர்கள்; நன்றி

    ReplyDelete
  10. //வலைப்பதிவுகளையே பாருங்களேன்? எத்தனை பேர் திராபையாக எழுதுகிறார்கள்? என்ன எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாம் திண்டாடவேண்டியுள்ளது.//

    இன்னும் கொஞ்சம் மொழியறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். (ஆனால் இந்தப்பதிவில் கொஞ்சம் பரவாயில்லை.)

    ReplyDelete
  11. //3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் புத்தகங்கள், non-detail ஆகியவற்றை எடுத்துப் பாருங்கள். இன்னமும் எதோ ஓர் ஆங்கிலேயன் பூவையும் புண்ணாக்கையும் பார்த்து எழுதின அபத்தக் கவிதைகள், வேறு நாட்டவருடைய அனுபவங்கள் ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன. //

    முற்றிலும் உண்மை.

    இது நமது ஆங்கில மொழிப்பாடத்திற்கு பொருந்தும்.

    ஆனால் தமிழ் மொழி, பாடங்களில் நன்றாகவே இருக்கிறது.

    Nursery rhymes க்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அழகான குழந்தைப்பாடல்கள்.

    ஆங்கில இலக்கணத்தை விட அருமையாக விளக்கப்படும் தமிழ் இலக்கணம்.

    உயிர்
    மெய்
    உயிர்மெய்
    ஆய்தம்
    ஆகாரக்குறுக்கம்
    ஐகாரக்குறுக்கம்
    ஔகாரகுறுக்கம்
    ஆய்தக்குறுக்கம்
    மகரக்குறுக்கம்
    உயிரெளபெடை
    குற்றியலுகரம்
    குற்றியலிகரம்
    ஒற்றெளபடை

    என்று பள்ளிகளில் அருமையாக விளக்கமாகத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.



    //பிரச்னை எங்கே? தமிழில் நன்கு சிந்திக்கமுடிகிறது. ஆனால் எழுதத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சிந்திப்பதிலேயே தகராறு. அதைத் தாண்டிவிட்டால் எழுதமுடிகிறது. ஆனால் எப்போது சிந்தித்து முடித்து எப்போது எழுதி முடிப்பது?//


    ஆங்கில மொழி நமது தாய் மொழி இல்லை. நாம் சிந்திப்பது பேசுவது எல்லாம் தமிழ்.அதனால் ஆங்கில மொழியறிவு வேண்டுமானால் சுமாராக இருக்கலாம். ஆனால் நம் (தாய்) மொழி அறிவு மற்றெந்த மொழிக்காரனுக்கும் குறைந்தது அல்ல.


    நம் காலங்களில் 3 ஆம் வகுப்பிற்கு பிறகு தான் ஆங்கிலமே.

    தற்பொழுது Pre-KG ல் இருந்தே ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

    காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்.

    நன்றி.

    ReplyDelete
  12. இவ்விஷயத்தில் தமிழ் காவலர்கள், தீவிரத் தமிழ் மொழி ரசிகர்கள், வெறியர்கள், எல்லோரும் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேடையில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், சமயலில் தமிழ், படுக்கையில் தமிழ், கக்கூசில் தமிழ் என்று முழங்கிவிட்டு தம் பிள்ளைகளை இங்கிலீசு மீடியத்தில் சேர்த்து டாடி, மம்மி என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். தாய்மொழி அறிவு இல்லாமல் போனதற்கு இப்படிப் பட்ட அரவேக்காட்டு அறிவுசீவிகள் தான் முழுமுதற்க் காரணம்.

    ReplyDelete
  13. இதன் மூல காரணம் நம் மக்களிடையே ஊறிவிட்ட தாழ்வுமனப்பான்மை. ஆங்கிலத்தில் பேசினால்தான் உயர்வு தமிழ் அல்லது பிற மொழிகளில் பேசினால் மட்டம் என்ற ஒரு மாயை உள்ளது. , தேவையான நேரத்தில் ஆங்கிலம் உபயோகப்படுத்துவதில் தவறில்லை, ஆனால் வெள்ளையன் மோகம் இன்னும் நம்மிடம் குறையவில்லை. இதனினும் கொடியது சிபிஎஸ்சியில் குழந்தைகளை சேர்க்கும் சிலர் தங்கள பிள்ளைகளை தமிழ் இரண்டாம் மொழியாக படிக்க விடுவதில்லை , காரணம் கேட்டால் தமிழ் தான் வீட்டில் பேசுகிறோமே, ஏன் மெனக்கட்டு அதை படிக்க வேண்டும், இந்தி படித்தால் கூட ஒரு மொழி ஆயிற்றே என்று விளக்கம் கூறுவர், இதனால் தமிழ் எழுத படிக்க தெரியாத சில தமிழர்கள் உருவாக்கப்படுகின்றனர். இன்னமொரு கொடுமையும் நடந்து வருகிறது, பொது ஜன பத்திரகைகளான ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் சில பகுதிகளில் எழுத்து மொழி தமிழ் உபயோகப்படுத்த‌படாமல் பேச்சு மொழி தமிழ் உபயோகப்படுத்ப்படுகிறது. பேச்சுவழக்கு,எ ழுத்துவழக்கு என்ற இரு வடிவங்களை கொண்ட சில மொழிகளில் தமிழும் ஒன்றாகும், அதனை மாற்றி அதன் அழகை கெடுக்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  14. பத்ரி பதிவு அருமை ... பின்னூட்டங்கள் அதைவிட அருமை.

    பெற்றோர்கள் என்ன பண்ண வேண்டும் என்று கூறினால் புண்ணியமாய் போகும்.

    ReplyDelete
  15. /* வலைப்பதிவுகளையே பாருங்களேன்? எத்தனை பேர் திராபையாக எழுதுகிறார்கள்? */

    ’திராபை’ அப்படின்னா என்ன பத்ரி? தமிழ்ச் சொல்தானா? இல்லை ‘தமிழ் ஸ்பஷ்ட்மா உச்சரிப்பேன்’ மாதிரியா?

    ReplyDelete
  16. //
    ’திராபை’ அப்படின்னா என்ன பத்ரி? தமிழ்ச் சொல்தானா? இல்லை ‘தமிழ் ஸ்பஷ்ட்மா உச்சரிப்பேன்’ மாதிரியா?
    //

    திராபை யை ரப்பீஸ் என்று தூய தமிழில் மொழிபெயர்ப்பதைவிட திராபை என்றே ஸ்பஷ்டமாக உச்சரித்துவிட்டுப் போகலாம்.

    ReplyDelete
  17. >என் கணிப்பில், பள்ளிகள் உடனடியாக அறிவியல், கணிதத்தைவிட அதிகமாக ஆங்கிலம், தமிழ் சொல்லிக்கொடுப்பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அறிவியல் கற்பதில் பயனே இல்லை என்றாகிவிடும். கற்ற அறிவியலை திரும்பச் சொல்லித்தரக்கூட மொழி அறிவு இல்லாதவரால் முடியாது>>


    இன்னொரு தடவை சொல்லுங்கள். உரக்கச் சொல்லுங்கள். சொல்வோம்

    ReplyDelete