Saturday, March 28, 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமணியன்

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம், வரும் திங்கள் கிழமை, 30 மார்ச் 2009 அன்று மாலை 6.00 மணிக்கு நடக்க உள்ளது.

மறக்காமல் உங்களது நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு வந்துவிடுங்கள்.

அ.கி.வெங்கட சுப்ரமணியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர். தமிழகர் அரசின் பல துறைகளில் செயலராக இருந்துள்ளார். ஓய்வுக்குப்பின், உந்துநர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். அதன் சார்பாக குடிமக்கள் முரசு என்ற தமிழ் மாத இதழை நடத்திவருகிறார். கிராமங்கள் பலவற்றில் மக்கள் மன்றங்கள் என்ற அமைப்புகளை ஏற்படுத்தி, கிராம மக்களுக்கு குடியாட்சி முறையின் அடிப்படைகளைத் தெரியப்படுத்தி, எப்படி அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடலாம் என்று தெளிவுறுத்தி வருகிறார்.

உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படவேண்டும் என்பது இவரது வாதம். மாநிலங்கள் போராடி தங்களுக்கான உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிடுகின்றன. ஆனால் தமக்குக் கீழுள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்தவிதமான உரிமைகளையும் மாநில அரசுகள் தருவதில்லை. முக்கியமாக தமிழக அரசு. இதில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரு அரசியல் கட்சிகளுமே ஒருமித்த கருத்துடையவை.

ஆனாலும், பஞ்சாயத்துத் தலைவர்களும் உறுப்பினர்களும் மனது வைத்தால் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெறப் போராடலாம், ஓரளவுக்கு வெற்றியும் பெறலாம். பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சிச் சார்பற்ற முறையில் போட்டியிடவேண்டும் என்பதும் இவர் கொள்கை.

தேர்தலில் வாக்களிப்பது இவருக்குப் பிடித்த மற்றொரு விஷயம். நகர்ப்புற மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை, ஆனால் ‘இந்த அரசியல் கட்சிகளே மோசமப்பா’ என்ற சினிகல் மனோபாவத்துட்ன புலம்புபவர்கள் என்று புள்ளிவிவரங்களுடன் அலசுகிறார் இவர். குறைந்தபட்சம் 49 ஓ பிரிவிலாவது வாக்குச்சாவடிக்குச் சென்று கையெழுத்திட்டு யாருக்கும் வாக்களிக்காமல் வாருங்கள் என்கிறார். [வெங்கட சுப்ரமணியன் பற்றி நான் எழுதிய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று]

பேசவாருங்கள் என்று நான் அழைத்ததும் அவர் தேர்தல் பற்றியும், 49 ஓ பற்றியும் பேசட்டுமா என்றுதான் கேட்டார். நான்தான் பேச்சைக் கேட்கவரும் அனைவரும் எப்படியும் தேர்தலில் வாக்களிக்கக்கூடியவர்களே என்றும், அதற்குப் பதில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசுங்கள் என்றும் சொன்னேன்.

தமிழர்களிடையே கட்சிகள் பற்றி பெரும் பயம் உள்ளது. ‘வூட்டுக்கு ஆட்டோ வந்திரும்பா’ என்று தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். கட்சிகளில் தில்லுமுல்லுகளை, பொறுக்கித்தனங்களை, நம்மைச் சிறுமைப்படுத்துகிற விஷயங்களைப் பற்றி பயமின்றிப் பேசுவோர் குறைவாக உள்ளனர்.

முன்னர்தான் நம்மிடம் தகவல்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் எல்லாம் தேவைப்பட்டது. இப்போது சிறு மாற்றம். சில தகவல்களையாவது நாம் கேட்டால் மத்திய, மாநில அரசுகள் தந்தாகவேண்டும். சென்ற வாரம் வேறு ஒரு (நேர்மையான) ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர் செய்த சிலவற்றை பொதுக்களத்துக்குக் கொண்டுவந்து புத்தகங்களாகப் பிரசுரிக்கலாம் என்று நினைத்திருப்பதாகச் சொன்னார்.

வெங்கடசுப்ரமணியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிகவும் திறம்படப் பயன்படுத்துபவர். அரசுச் செயலராக இருந்ததால் எந்தத் துறை என்ன செய்யும், என்ன செய்யாது என்று நன்கு அறிந்தவர். அவர் கல்வி, சேது சமுத்திரம் ஆகியவை தொடர்பாக த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்திக் கேட்ட சிலவற்றை கட்டுரைகளாகக் குடிமக்கள் அரசு பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் மன்றத்தையும்கூட இதுபோல் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்கள் பெற உதவி செய்துள்ளார்.

எனக்கும் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் சரியான வழிமுறை தெரியவில்லை. வெறும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்புவது பெரிய விஷயமில்லை. எந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் என்பது முக்கியம். வெங்கட சுப்ரமணியன் சொல்வதும் இதைத்தான். சிலர் ‘ஆயிரம் கேள்விகள் கேட்டுட்டேன் சார்’ என்று பெருமையாகச் சொல்கிறார்களாம். ஆயிரம் கேள்விகள் கேட்பதில் பெருமையில்லை. சரியான கேள்விகளைக் கேட்பதன்மூலம், சரியான தகவல்களைப் பெறுவதன்மூலம் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நம்மைத் தயார் செய்துகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை நடத்திக்கொள்ள இவை உதவுகின்றன.

இந்த வழிமுறைகளை தனது அனுபவத்தின் வாயிலாக நம்மோடு பகிர்ந்துகொள்ள வருகிறார் அ.கி.வெங்கட சுப்ரமணியன். மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: திங்கள், 30 மார்ச் 2009, மாலை 6.00 மணி, கிழக்கு மொட்டைமாடியில், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.

***

அ.கி.வெங்கட சுப்ரமணியன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இரு புத்தகங்களாக கிழக்கு வெளியிட்டுள்ளது.

1. கட்சி, ஆட்சி, மீட்சி
2. மக்களாகிய நாம்

7 comments:

  1. பத்ரி சார், பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பின்னூட்டம்...

    பாராவை வெற்றிவேல் ஷூட்டிங்கிற்கு தான் பேங்காக் அனுப்ப மறுத்து விட்டீர்கள். அவர் பதிவில் அது குறித்து ஒரே அழுவாச்சி.

    அட்லீஸ்ட் அவர் பதிவுக்கான பின்னூட்டங்களை பிரசுரிக்கவாவது டைம் கொடுங்கள். ரெண்டு நாட்களாக என்னுடைய ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலில் மாட்டி நிற்கிறது.

    24 மணி நேரமும் வேலை வாங்கி கொடுமைப் படுத்தாதீர்கள் சார். 'குழந்தைத் தொழிலாளர்' சட்டமெல்லாம் வேறு இருக்கிறது

    ReplyDelete
  2. Can you please make a pod cast of the speech? It will be helpful for the people who are outside Chennai?

    ReplyDelete
  3. பத்ரி ஏன் மொட்டை மாடி கூட்டத்தை இப்பொழுதெல்லாம் நடத்துவதில்லை?

    இது தொடரவே விரும்புகிறேன்.

    ReplyDelete
  4. I guess after long time. Again "Mottai Madi Kootam". Good intiative Badri.

    Thanx for the info. Positively I will attend today.

    ReplyDelete
  5. பத்ரி, நான் பெங்களூருவில் இருக்கிறேன். எனக்காக இந்த இரண்டு கேள்விகளை கேட்க முடியுமா?

    1. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சோனியாவிற்கு பிரதமராக சட்டப்பூர்வ தகுதி உண்டா என்று கேட்க முடியுமா?

    2. இணையத்தின் மூலமாக இச்சட்டத்தை பயன்படுத்தி கேள்வி கேட்க முடிந்தால் மேலும் பலர் பயன்படுத்துவார்களே?

    ReplyDelete
  6. செந்தில்குமார்Mon Nov 02, 07:39:00 AM GMT+5:30

    பத்ரி,

    சென்ற மாதம் தற்செயலாக இந்த கூட்டத்தின் ஒலிபதிவை கேட்க நேர்ந்தது. மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. பிறகு உங்கள் வலைப்பக்கத்தில் ஏறக்குறைய அனைத்து ஒலிபதிவுகளையும் கேட்டு விட்டேன், கிழக்கு பாட்காஸ்ட் பதிவுகள், நீங்கள் கல்லூரியில் ஆற்றிய உரை உட்பட. தொடர்ந்து நீங்கள் நடத்தும் மொட்டை மாடி கூட்டங்களையும், பிற சந்திப்புக்களையும் எங்களுக்குடன் சிரமம் பார்க்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பல இடங்களில் தரவேற்றம் செய்ய, வேறு ஃபார்மேட்டில் மாற்ற உதவிகள் தேவைப்பட்டால் கூறவும். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். நீங்களே நிறைய செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதிவு மிகவும் கவர்ந்தது. அ.கி.வெங்கட சுப்ரமணியன் இறந்த செய்தி மிகவும் வருந்ததக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி இன்னும் அறிந்து கொள்ளவும், சிலருக்கு அறிமுகப்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன். மக்களாகிய நாம் புத்தகம் பதிவு செயதுள்ளேன், தற்போது நான் US-ல் இருப்பதால் புத்தகம் வர காத்திருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் முயற்சி பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது, ஏற்படுத்தும் என நீங்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

    தமிழ் விக்கீபிடியா இன்னொரு நல்ல பதிவு, அதிலும் கண்டிப்பாக பங்களிக்க உள்ளேன். பா.ராகவன், ஞாநி, சிறுகதை பட்டறை, சமீபத்தில் கேட்ட இருள் பொருள் பற்றிய ஒலி பதிவு போன்றவை மிகவும் அருமை. இது போன்ற எழுத்து, இலக்கியம், சமூகம், அறிவியல் தொடர்ப்பான உரையாடல்களை கேட்கும் போது சென்னையில் வசிக்கவில்லை என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு. தங்களின் பதிவுகள் அதை சற்று குறைத்திருக்கிறது.

    மிக்க நன்றி. இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்.

    எனது முகவரி - msenthil.soliton@gmail.com

    ReplyDelete