மாதாமாதம் முதல் சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தக்கர் பாபா வித்யாலயாவில் தமிழ் பாரம்பரியம் குழுமம் நடத்திவரும் பாரம்பரியம் தொடர்பான பேச்சுகளில் நேற்று நரசய்யா, ஆலவாய் என்ற புத்தகத்தைத் தான் எழுத முற்பட்டபோது செய்த ஆராய்ச்சிகள் பற்றிப் பேசினார்.
இந்தப் புத்தகம், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ. 275.
இந்தப் புத்தகத்திற்கான ஆராய்ச்சியை இரண்டு வருடங்களுக்கும் மேலாகச் செய்தத்தாகச் சொன்னார் நரசய்யா. தான் ஐராவதம் மகாதேவனிடம் கல்வெட்டுகளைப் படிக்கக் கற்றுக்கொண்டது, பல்வேறு மலைகள், கோயில்களுக்குச் சென்று அங்குள்ள கல்வெட்டுகளைப் படித்தது ஆகியவற்றை சுவைபட விளக்கினார். தனது காணொளிப் பேச்சின்போது பல சுவாரசியமான படங்களைக் காட்டிப் பேசினார். சமணர் படுகை (ஆனைமலை?) ஒன்றில் மகாவீரரின் பல சிற்பங்கள் அற்புதமாக இருந்தன.
முதலில் மதுரை என்ற பெயர் இலக்கியங்களில் எங்கெல்லாம் வந்துள்ளது என்பது பற்றிப் பேசினார். பின்னர் கல்வெட்டுகளில் மதுரை என்ற பெயர் அகப்பட்டுள்ளதா என்பது பற்றிப் பேசினார்.
சம்பந்தருடனான வாதத்தில் தோற்றபின் 8,000 சமணர்கள் கழிவில் ஏற்றப்பட்டனரா என்ற செய்தியை எடுத்துக்கொண்டு நரசய்யா சில நிமிடங்கள் பேசினார். பிந்தைய கால (1500-1600) நாயக்கர் ஓவியம் ஒன்றில் இது காட்சியாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தது அதற்கு 1,000 ஆண்டுகளுக்குமுன். ‘எண்ணாயிரம்’ என்பது ஓர் இடமாக இருக்கலாம் என்றும் சில சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று ஐராவதம் மகாதேவன் கருதுவதைச் சுட்டிக்காட்டினார்.
ஜேஷ்டாதேவி (மூதேவி) வழிபாடு பற்றி சில நிமிடங்கள் பேசினார். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர். பின்னர் 6-ம் நூற்றாண்டுக்குப்பின் மூதேவி வழிபாடு தமிழகத்தில் நடக்கவில்லை என்று தெரிகிறது. மதுரையில் ஒரு கோவிலில் இருந்த மூதேவி சிலையை அழகாகப் படம் பிடித்துக் கொண்டுவந்திருந்தார்.
எல்லிஸ் என்ற மெட்ராஸ் பிரெசிடென்சி கவர்னர் 1818-ல் சென்னையில் சில கிணறுகளை வெட்டி, ஏன் அதைச் செய்தேன் என்பதை திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் ஆசிரியப் பாவாக வடித்து வைத்திருந்தது இப்போது மதுரை மஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டு மோசமான நிலையில் இருந்ததாம். அதைச் சுத்தம் செய்து, எண்ணெய் தடவி, அழகான படமாக எடுத்ததைக் காண்பித்தார்.
மதுரையில் மதனகோபாலஸ்வாமி கோயில் வாசலில் இருந்த ஒரு மண்டபம் மொத்தமாக ஓர் அமெரிக்கப் பெண்மணியால் விலைக்கு வாங்கப்பட்டதையும் அந்த மண்டபம் இப்போது பென்சில்வேனியாவில் பல்கலைக் கழகம் ஒன்றில் இருப்பதையும் அது தொடர்பான தன் ஆராய்ச்சிகளையும் நரசய்யா விளக்கினார். அந்த மண்டபத்தை யார் விற்றது என்று தெரியவில்லை என்றும் இதுவரை அதை மட்டும் தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரையில் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாதாந்தரக் கூட்டத்துக்கு இந்த அளவு மக்கள் கூட்டம் வந்தது கிடையாது. குறைந்தது 70 பேர் நேற்று வந்திருந்தனர்.
அடுத்த மாதம், சிலப்பதிகாரம் தொடர்பானது. சிலப்பதிகார வழித்தடத்தில் சென்று இன்றும் கண்களில் தென்படும் சுவையான இடங்களை சிலப்பதிகார நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திப் பேச உள்ளார் சிவக்குமார் என்னும் குறும்பட இயக்குனர். (இரா.நடராசனின் ஆயிஷா கதையை குறும்படமாக எடுத்தவர்.) நாள்: 1 ஆகஸ்ட் 2009, சனிக்கிழமை. பலர் நேரத்தை 5.00 என்பதிலிருந்து 5.30-க்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். அது தொடர்பான தகவலை ஜூலை கடைசி வாரத்தில் தருகிறேன்.
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
5 hours ago
//எல்லிஸ் என்ற மெட்ராஸ் பிரெசிடென்சி கவர்னர் 1818-ல் சென்னையில் சில கிணறுகளை வெட்டி, ஏன் அதைச் செய்தேன் என்பதை திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் ஆசிரியப் பாவாக வடித்து வைத்திருந்தது இப்போது மதுரை மஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டு மோசமான நிலையில் இருந்ததாம். அதைச் சுத்தம் செய்து, எண்ணெய் தடவி, அழகான படமாக எடுத்ததைக் காண்பித்தார்.//
ReplyDeleteகல்வெட்டின் வாசகம் பின்வருமாறு:
சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குட கடலளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டாரகாரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய்
“இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு”
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்த வரு
-----றாச் செல்லா நின்ற
இங்கிலிசு வரு -----ம் ஆண்டில்
பிரபவாதி வருக்கு மேற் செல்லா நின்ற
பஹுதான்ய வரு த்தில் வார திதி
நக்ஷத்திர யோக கரணம் பார்த்து
சுப திநத்தி லிதனோ டிருபத்தேழு
துரவு கண்டு புண்ணியாஹவாசநம்
பண்ணுவித்தேன்
1818
-இக்கல்வெட்டின் வாசகம் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள, ’தாமஸ் டிரவுட்மன்’ எழுதியதன் மொழிபெயர்ப்பான ‘திராவிடச் சான்று’ என்ற புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
- ஜி. சாமிநாதன்
ஆய்வாளர்
தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (www.sishri.org)
சென்னை.
கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நரசய்யா ஏன் ஆங்கிலத்தில் பேசினார் என்பது புரியவில்லை. அனைவருக்கும் தமிழ் தெரியும், மேலும் புத்தகமும் தமிழ்ப்புத்தகம் என்னும்போது அவர் தமிழிலேயே பேசியிருக்கலாம். மேலும் அவரது பேச்சு மிகச்சீக்கிரம் முடிந்துவிட்டது போலவும் தோன்றியது.
ReplyDelete5.30 என்பதும் சரியான நேரமல்ல. 6.00 மணிக்கு வைக்கலாம்.
Will it be possible to post the audio recording of this meeting?
ReplyDeleteThanks.
Ravi
'மதுரையில் மதனகோபாலஸ்வாமி கோயில் வாசலில் இருந்த ஒரு மண்டபம் மொத்தமாக ஓர் அமெரிக்கப் பெண்மணியால் விலைக்கு வாங்கப்பட்டதையும் அந்த மண்டபம் இப்போது பென்சில்வேனியாவில் பல்கலைக் கழகம் ஒன்றில் இருப்பதையும் அது தொடர்பான தன் ஆராய்ச்சிகளையும் நரசய்யா விளக்கினார். '
ReplyDeleteI think that Mantap is in a muesum in Philadelphia.
//மதுரையில் மதனகோபாலஸ்வாமி கோயில் வாசலில் இருந்த ஒரு மண்டபம் மொத்தமாக ஓர் அமெரிக்கப் பெண்மணியால் விலைக்கு வாங்கப்பட்டதையும் அந்த மண்டபம் இப்போது பென்சில்வேனியாவில் பல்கலைக் கழகம் ஒன்றில்//
ReplyDeletehttp://www.philamuseum.org/collections/permanent/40202.html?mulR=24081|1