நேற்று சென்னை உயர்நீதி மன்றம் பெரியார் எழுத்துகளை பெரியார் திராவிடக் கழகம் புத்தகங்களாகக் கொண்டுவருவது பற்றி ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. முழுத்தீர்ப்பையும் நான் இன்னமும் படிக்கவில்லை; தினமணி, தி ஹிந்து செய்திக் குறிப்புகளை மட்டுமே படித்துள்ளேன்.
ஆனாலும் knee-jerk எதிர்வினை ஒன்றை ஆற்றவேண்டும் என்ற ஆவலால் அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.
பெரியாரின் எழுத்துகள் பரவலாக அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த பற்று உண்டு என்பதை முதற்கண் disclaimer ஆகச் சொல்லிக்கொள்கிறேன். ராமச்சந்திர குஹாவுடன் சில மாதங்களுக்குமுன் பேசும்போது, அவர், பெரியார் எழுத்துகள் ஏன் ஆங்கிலத்தில் தரமாகக் கிடைக்கவில்லை என்று கேட்டார். பெரியார் எழுத்துகள்மீதான காப்புரிமைப் பிரச்னையையும் நீதிமன்ற வழக்கு பற்றியும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
அதே நேரம், நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பு சரியல்ல என்று நினைக்கிறேன். சுருக்கமாக, நீதிபதி சொல்வது இதைத்தான்: பெரியார் எழுத்தின்மீது உள்ளது அறிவுசார் சொத்துரிமை. (அது அசையும், அசையாச் சொத்துகள்போல அல்லாத வேறு ஏதோ தனிப்பட்ட உரிமை போல நீதிபதி குறிப்பிடுகிறார்.) பெரியார் தன் எழுத்துகள்மீதான காப்புரிமையை வெளிப்படையாக, எழுத்துபூர்வமாக யாருடைய பெயருக்கும் மாற்றித்தரவில்லை. எனவே வீரமணியோ பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கமோ அந்த எழுத்துகளுக்கு உரிமை கோரமுடியாது. வீரமணியால், தன்னிடம் அந்தக் காப்புரிமை உள்ளது என்று நிரூபிக்க முடியவில்லை. எனவே அந்த எழுத்து அனைவருக்கும் சொந்தம்; எனவே யார் வேண்டுமானாலும் அதைப் பதிப்பிக்கலாம்.
ஆனால், காப்புரிமை யார் பெயருக்கும் தனியாக மாற்றித்தரப்படவில்லை என்றால், அது சம்பந்தப்பட்ட நபரின் வாரிசுகளுக்குப் போய்ச்சேரும். என் சொத்துகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது குறிப்பிட்ட அறக்கட்டளைக்குப் போய்ச்சேரும் என்று ஒருவர் உயில் எழுதிவைத்தால், அசையும், அசையாச் சொத்துக்களோடு, அறிவுசார் சொத்தும் அதில் அடங்கும், என்பது என் கருத்து.
எனவே பெரியார் எழுத்து எல்லோருக்கும் சொந்தம் என்று நீதிபதி சொன்னது ஏற்கமுடியாதது என்றே கருதுகிறேன். பெரியார் வாழும் காலத்தே அவர் உருவாக்கிய அறக்கட்டளை (பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கம்) ஒன்றுக்கு அவர் அனைத்துச் சொத்துகளையும் எழுதிக்கொடுத்துவிட்டார் என்றால், தனியாக அறிவுசார் சொத்துக்களை எழுதிக்கொடுக்கவேண்டும் என்று அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். பெரியார் இறந்து 60 ஆண்டுகள் கழித்து, அவரது எழுத்துகளை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம்.
இந்தப் பிரச்னை நீதிமன்றங்களுக்கானதல்ல என்பது என் கருத்து. இது நிர்வாகத்துக்குட்பட்டது. பெரியார் திராவிடக் கழகத்தினர் என்ன செய்தனர் என்பது பற்றி முழுமையாக எனக்குத் தெரியாது. காப்புரிமைச் சட்டம் 1957-ல் முக்கியமான ஒரு பிரிவு உள்ளது:
31. Compulsory licence in works withheld from public.-(1) If at any time during the term of copyright in any Indian work which has been published or performed in public, a complaint is made to the Copyright Board that the owner of copyright in the work- (a) has refused to republish or allow the republication of the work or has refused to allow the performance in public of the work, and by reason of such refusal the work is withheld from the public;
...
the Copyright Board, after giving to the owner of the copyright in the work a
reasonable opportunity of being heard and after holding such inquiry as it may deem necessary, may, if it is satisfied that the grounds for such refusal are not reasonable, direct the Registrar of Copyrights to grant to the complainant a license to republish the work, perform the work in public or communicate the work to the public by [broadcast], as the case may be, subject to payment to the owner of the copyright of such compensation and subject to such other terms and conditions as the Copyright Board may determine; and thereupon the Registrar of Copyrights shall grant the license to the complainant in accordance with the directions of the Copyright Board, on payment of such fee as may be prescribed.
(2) Where two or more persons have made a complaint under sub-section (1), the licence shall be granted to the complainant who in the opinion of the Copyright Board would best serve the interests of the general public.
இதன்படி, பெரியார் திராவிடக் கழகம், நேராக காப்புரிமை ஆணையத்திடம் சென்று முறையிட்டிருக்கலாம். அவர்கள் விரும்பிய குடியரசு இதழின் எழுத்துகள், இதுவரை வீரமணியால் பதிப்பிக்கப்படவே இல்லை என்கிறார்கள் பெ.தி.க. அது உண்மையானால், நீதிமன்றமே செல்லாமல், மேலே சொன்ன ஷரத்தின்படி, காப்புரிமை ஆணையத்திடம் அனுமதி பெற்று அந்தக் கட்டுரைகளை பெ.தி.க புத்தகமாகக் கொண்டுவரலாம். அதை காப்புரிமை ஆணையம் மறுத்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்லலாம். ஆனால் பெரியாரின் பிற எழுத்துகளை
இதை பெ.தி.க முயன்றார்களா என்பதைத் தெரிந்துகொள்ளாமல்தான் இதனை எழுதுகிறேன் என்பதையும் குறிப்பிட்டுவிடுகிறேன்.
நான் முன்னமே சொன்னதுபோல, இது ஓர் அவசரப் பதிவு மட்டுமே. இந்தப் பிரச்னையின் பல அம்சங்களையும் தெரிந்துகொண்டு, விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
தி ஹிந்து
தினமணி
[காப்புரிமைச் சட்டத்தில் சில பகுதிகளை முழுமையாகக் கொடுக்க விட்டுவிட்டேன். இப்போது அவற்றைச் சேர்த்துள்ளேன்.]
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
No comments:
Post a Comment