Friday, April 02, 2010

அஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)

நவம்பர் 2009-ல் ஒரு நாள் பேரா. சுவாமிநாதன் வீடியோ புரொஜெக்டரை எடுத்துக்கொண்டு மைலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு எதிராக இருக்கும் ஒரு தெருவுக்கு வரச் சொன்னார். அஜந்தா ஓவியங்கள் பற்றி ஒரு பிரசெண்டேஷன் செய்ய இருப்பதாகச் சொன்னார். போன இடம் எஸ். ராஜத்தின் வீடு. ராஜத்துக்கு 92 வயது அப்போது என்று நினைக்கிறேன். (அடுத்த சில மாதங்களில் அவர் காலமானார்.) ராஜம் சிறந்த ஓவியர், இசைக் கலைஞர், சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ராஜம் அஜந்தா பாணியில் சில ஓவியங்களை வரைந்துள்ளார். கல்கி இதழில் ராஜத்தின் மறைவை ஒட்டி வெளியான அஞ்சலிக் கட்டுரையில் ராஜம் வரைந்த அஜந்தா பாணி ஓவியம் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அஜந்தா சென்று பார்த்தபின் ஆறு மாதங்களுக்கு கையில் தூரிகையைத் தொடவே முடியவில்லை என்றார் ராஜம்.

மைலாப்பூரில் பழைய மாடல் வீட்டில் சுவரில் ஓர் இடத்தைத் திரையாகக் கொண்டு புரொஜெக்டரை வைத்தேன். அங்கே உட்கார இடம் அதிகம் இல்லை என்றாலும் சுமார் 25 பேர் கிடைத்த இடத்தில் எல்லாம் உட்கார்ந்திருந்தனர். தரையில், மாடிப்படியில்... வீடியோ கேமராவை வைக்க இடமே கிடையாது. நான் என்னுடைய Flip கேமராவைக் கொண்டு சென்றிருந்தேன். மற்றொருவர் பெரிய வீடியோ கேமராவைக் கொண்டுவந்திருந்தார். ஆனால் அங்கே குழுமியிருந்த மக்கள், சுவரில் பிரசெண்டேஷன் படங்கள் நன்றாகத் தெரியவேண்டும் என்றால் விளக்கு கூடாது என்று சொல்லிவிட்டனர். அதனால் வீடியோவின் தரம் சுமார்தான். பேசுபவரின் முகம் தெரியாது.

இடை இடையே தெருவில் ஓடும் வண்டிகளின் சத்தம், நடுவில் குக்கர் விசில் சத்தம் எல்லாமே கேட்கும். வேறு வழியில்லை.

இவை எல்லாவற்றையும் மீறி, 1 மணி 45 நிமிடங்கள் அமைதியாகப் பார்த்தால், அஜந்தாவைப் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள உதவும். இத்துடன் ஜனவரி, பிப்ரவரி 2010 மாத தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளின் வீடியோக்களையும் சேர்த்துப் பாருங்கள்.


Watch Prof. Swaminathan on Ajanta Paintings @ S. Rajam's house (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof. Swaminathan on Ajanta Paintings @ S. Rajam's house (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

No comments:

Post a Comment