Tuesday, May 04, 2010

அனந்தசயனச் சிற்பத் தொகுதி

எத்தனையோ கோயில்களில் பள்ளிகொண்ட விஷ்ணுவைப் பார்க்கலாம். அவர் வெறும் தரையில் படுத்திருக்கலாம் அல்லது பெரும்பாலும் பாம்புப் படுக்கையில் படுத்திருக்கலாம். சாதாரணமாக வணங்குதலுக்குரிய சிற்பங்களில் காணக்கிடைக்காத ஒன்று இங்கே மஹிஷாசுரமர்தினி மண்டபத்தில் காணப்படும் அனந்தசயனத் தொகுதியில் உள்ளது.

இந்தக் கதையும் மார்க்கண்டேய புராணத்தின் தேவி மஹாத்மியத்தில் வருவதுதான். மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை விஷ்ணு அழிக்கும் கதை. தேவி பாகவதத்தில் சற்றே மாறுபட்ட வெர்ஷன். மகாபாரதத்திலும் இந்தக் கதை வருகிறது.

முதலில் தேவி மஹாத்மிய வெர்ஷனைப் பார்ப்போம். பிரளயத்துக்குப்பின் இந்த உலகை மீண்டும் படைத்து, பிரம்மாவை உருவாக்கி, சிருஷ்டிக்கான செயல்களில் அவரை இறங்கவைத்தபின் விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்கிறார். அப்போது விஷ்ணுவின் காது அழுக்கு உருண்டு திரண்டு, அதிலிருந்து மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் வருகின்றனர்.

அவர்கள் இருவரும் பிரம்மாவைக் கொல்லச் செல்கின்றனர். பிரம்மாவோ பயந்து விஷ்ணுவிடம் ஓடுகிறார். விஷ்ணு யோகநித்திரையில் இருப்பதைப் பார்த்து, மாயையாகிய மஹா சக்தியை வழிபட ஆரம்பிக்கிறார். விஷ்ணுவின் யோகநித்திரைக்குக் காரணமே மாயைதான். பிரம்மாவின் புகழுரையைக் கேட்ட மாயை விஷ்ணுவிடமிருந்து விலகிக்கொள்ள விஷ்ணு விழித்தெழுகிறார். மது, கைடபனுடன் போர் புரிகிறார்.

போர் 5,000 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் விஷ்ணுவால் அரக்கர்களை ஒன்றும் செய்யமுடிவதில்லை. அப்போது மாயை அந்த அரக்கர்களைத் தழுவ, அவர்கள் இருவரும் விஷ்ணுவிடம், ‘நீ எங்களிடம் வரம் கேள்’ என்கின்றனர். ‘நீங்கள் இருவரும் என் கையால் இறக்கவேண்டும்’ என்ற வரத்தை விஷ்ணு கேட்கிறார்.

வரம் கேட்டால் கொடுத்துவிட வேண்டும்! அதனால் உயிரே போனாலும் சரி. அரக்கர்கள் விஷ்ணு கேட்டதைக் கொடுக்க, அவர் தன் சுதர்சனச் சக்கரத்தால் அவர்களது தலையைக் கொய்கிறார். பிரம்மா தப்பிக்கிறார்.

தேவி பாகவதத்தில் இன்னும் கொஞ்சம் உப்பு, மிளகாய் சேர்த்துத் தயாரித்துள்ளார்கள். இங்கேயும் விஷ்ணுவின் காது அழுக்கில் உருவானவர்கள்தான் இந்த அரக்கர்கள். இங்கேயும் அவர்கள் பிரம்மாவைப் பொலி போடச் செல்ல, அவர் ஓடிவந்து தேவியை வணங்க, அவள் விஷ்ணுவை விழிக்கச் செய்ய, போர் நடக்கிறது. ஆனால் போரில் விஷ்ணுவால் ஜெயிக்க முடிவதில்லை. சோர்ந்து போகிறார். ஆனால் அரக்கர்களோ சோர்வதில்லை. எனவே விஷ்ணு, அரக்கர்களிடம் பேசிவிட்டு டைம் அவுட் வாங்குகிறார்.

அப்போதுதான் விஷ்ணுவுக்கு விவரம் புரிகிறது. அரக்கர்கள் இருவரும் தேவியிடம் வரம் வாங்கியவர்கள். அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போதுதான் தங்கள் உயிரை விடுவார்கள். உடனே விஷ்ணு, தேவியை வேண்ட, அவள் அரக்கர்கள்மீது தன் கடைக்கண் பார்வையை காமக் கணைகளாக வீசுகிறாள். அப்போது விஷ்ணு அரக்கர்களிடம் தான் அவர்களது சண்டையை மெச்சி, அவர்களுக்கு வரம் தர விரும்புவதாகச் சொல்கிறார். ஆனால் தற்பெருமை மிக்க அரக்கர்கள், ‘உன் வரம் எனக்கு வேண்டாம். நீ வரம் கேள், நாங்கள் தருகிறோம்’ என்கிறார்கள். உடனே விஷ்ணு அவர்களைக் கொலை செய்ய வரம் கேட்டு, பெற்று, அவர்களது கழுத்தை அறுக்கிறார்.

மகாபாரதக் கதையில் தேவியோ, மாயையோ வருவதில்லை. விஷ்ணு மது, கைடபர்களை அழிக்கிறார்.

***

மஹிஷாசுரமர்தினி மண்டபக் காட்சியை இப்போது பாருங்கள்.

Anantasayana Panel, Mahishasuramardini Mandapam, Mamallapuram

மஹிஷாசுரமர்தினி தொகுப்புடன் ஒப்பிடும்போது மிகச் சில பாத்திரங்களே இங்கு உள்ளனர். பாற்கடல். ஆதிசேஷன் படுக்கையாக உள்ளது. ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷனைக் காண்பிக்கும்போது ஐந்து தலையை மட்டும் காட்டுவது வழக்கம். இங்கே ஐந்து தலைகளும் மிக அழகாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. புடைப்புச் சிற்பம் என்றாலுமேகூட ஆழத்தைக் காண்பிக்க, மூன்று தலைகள் செங்குத்தாக மேலே செல்லும்; மூன்று தலைகள் கிடைமட்டமாக இருக்கும். சேர்த்துப் பார்க்கும்போது ஆழம் வந்துவிடுகிறது அல்லவா? ஆதிசேஷன் சுருட்டிக்கொண்டிருப்பது பொதுவாக நாம் எப்போதும் பார்க்கும் வகையில் அல்ல. ஒரு கார்க்ஸ்க்ரூ மாதிரி சுருட்டிக்கொண்டுள்ளது.

விஷ்ணுவின் வலக்கை ஆயாசமாக நன்கு நீண்டுள்ளது. இடக்கை குத்திட்டு முழங்கைக்கு மேல்பகுதி எழும்பியுள்ளது. கழுத்தில் ஒரேயொரு எளிமையான மாலை. அந்த மாலையும் அழகாக புவி ஈர்ப்புக்குத் தோதாக கீழ் நோக்கிப் படர்ந்து விழுந்துள்ள அழகைப் பாருங்கள். தலையில் கிரீடம். எப்போதுமே விஷ்ணுவைக் காண்பிக்கும்போது தலையில் கிரீடம் இருக்கவேண்டும் என்பது சில்ப மரபு. அதனால்தான் தூங்கும்போதும் கிரீடம்!

கால்பக்கம் மதுவும் கைடபனும். ஒருவன் நன்கு திரும்பிக்கொண்டு முதுகில் கைவைத்து நிற்கிறான். மற்றொருவன் தாக்கத் தயாராக கையில் ஒரு கழியை வைத்துள்ளான். அவனும் பாதி திரும்பி, முகத்தை ஒரு கோணத்தில் வைத்துள்ளான். விஷ்ணு இன்னும் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவரது காலடியில் லக்ஷ்மி அவரை எழுப்பும் விதமாகத் துதிக்கிறாள். இந்தத் தொகுதியில் பிரம்மா கண்ணிலேயே படுவதில்லை. ஆனால் மேலே இருவர், கீழே இருவர் என்று நான்கு பேர் உள்ளனர்.

அவர்கள் ஆயுத புருஷர்கள் எனப்படுகிறார்கள். கீழே இருப்பது விஷ்ணுவின் ஆயுதங்களான சக்கரம், சங்கு ஆகியவற்றின் வடிவங்கள். மேலே இருப்பது கதை, வாள் ஆகியவற்றின் வடிவங்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேறு சில வானவர்களாக இருக்கலாம். மேலே உள்ளவர்கள் பறந்து செல்வதுபோலக் காண்பிக்கப்படுகிறார்கள். கால்களை அவர்கள் வைத்திருக்கும் விதத்திலிருந்து இதனை நாம் உணர்ந்துகொள்ளலாம். இங்கு மட்டுமல்ல, மாமல்லபுரச் சிற்பத்தொகுதிகள் பலவற்றிலுமே இதுதான் கன்வென்ஷன்.

விஷ்ணு நித்திரையில் இருக்க, தாக்கவரும் மது, கைடபர்களை ஆதிசேஷன், தானே ஒரு வழி பண்ணிவிட முடிவு செய்து, ஹூம் என்று விஷக் காற்றாக மூச்சுவிடுவதாகவும், அந்தக் காற்றின் வெப்பம் தாளாமல் அரக்கர்கள் உடலைத் திருப்பிக்கொண்டு, முதுகில் கைவைத்திருப்பதாகவும் ஒரு வர்ணனையாளர் சொல்கிறார்.

எதிரே இருக்கும் மஹிஷாசுரமர்தினி சிற்பத்தில் காணப்படும் களேபரங்களுக்கு மாற்றாக, இங்கே ஒருவித அமைதி தெரிகிறது, ஆனால் அதே சமயம் ஆக்‌ஷனும் உள்ளது.

(தொடரும்)

3 comments:

  1. ஒரு சிற்பத்தில்
    ஒரு நாவலுக்குரிய
    விஷயம் இருக்கிறதா?

    ReplyDelete
  2. சிற்பங்கள் என்னவோ சுமார்தான். உங்கள் பீடிகைதான் உப்புமிளகாய்.

    ReplyDelete
  3. புதுக்கோட்டை அருகே திருமெய்யம் என்ற ஊரில் இருக்கிறது சத்யநாராயணப்பெருமாள் கோவில்.
    மூலவர் சந்நிதி மலையிலேயே குடையப்பட்டது.

    அங்கு தேவியை தாக்க வரும் இவ்விரு அசுரர்களை அதிசேஷனே விஷம் கக்கி விரட்டுவாத இருக்கும் சிற்பம். விஷக்காற்று ஜுவாலை எல்லாம் மலைச்சுவற்றில் செதுக்கப்படிருக்கும். பெருமாள் ஆதிசேஷனை சாந்தப்படுத்தும் விதமாக தட்டிக் கொடுக்கும்படி இருக்கும் வலக்கை (என்று உடனிருந்த பக்தர் விளக்கம் சொன்னார்).

    ReplyDelete