நேற்று மாலை மியூசிக் அகாடெமியில் மீடியா ஒன் குளோபல் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் வழங்கிய ‘சிலப்பதிகாரம்’ நாட்டிய நாடக நிகழ்ச்சியைப் பார்த்தேன். பாதி இருக்கைகள்தான் நிரம்பியிருந்தன. அதிலும் பாதிப் பேர் இலவசமாக வந்து பார்த்து பாதியில் எழுந்து சென்ற பெரிய மனிதர்கள்.
முரளிதரன் என்பவரது திட்டமிடலில் உருவாக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சி. இவரே கோவலனாக வருகிறார். இவரது மனைவி (சித்ரா?) கோப்பெருந்தேவியாக வருகிறார். மற்றவர்கள் பெயரை நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை. மிக முக்கியமான பாத்திரங்களான மாதவி, கண்ணகி இருவருள், கண்ணகியாக வந்து நாட்டியமாடியவர் நிஜமாகவே மிக அருமையாகச் செய்தார். இவர்தான் நாட்டிய நாடகத்தின் உயிர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இணையான பாத்திரமான மாதவியாக வந்தவர் தனது நாட்டியத்தை அதன் உயரத்துக்குக் கொண்டுசெல்லவில்லையோ என்றுதான் தோன்றியது.
சரியாக 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்காதது வருத்தத்தை அளித்தது. நேரத்தின் முக்கியத்துவத்தை நம் மக்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்களோ. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் நீண்ட அறிமுகம். பின்னர் இளங்கோவின் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்தது நாட்டிய நாடகம். பொதுவாக இதுபோன்ற நாடகங்களின் ஓப்பனிங் பிரம்மாண்டமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும்... சரியாக இசை அமைக்கப்படவில்லை. ஆனால் உடனடியாக நாட்டியத்தில் பிடித்துவிட்டார்கள். அடுத்து சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விஜயர்களை ஜெயித்து, இமயத்திலிருந்து கல்லைத் தூக்கி எடுத்துவரச் செய்து கண்ணகிக்குக் கோயில் உருவாக்குவது. சுற்றியுள்ள மக்கள் ‘கண்ணகி யார், கண்ணகி யார்’ என்று கேட்க, கதை சொல்லி, மாநாய்கன், மாசாத்துவான், கண்ணகி, கோவலனை அறிமுகம் செய்கிறார்.
அடுத்த காட்சியில் நேராக கோவலன் - கண்ணகி திருமணம் தாண்டி இருவருக்கும் இடையிலான காதல் - மாசறு பொன்னே, வலம்புரி முத்தே. திருமணத்தைக் காட்டியிருந்தால் அதில் மாபெரும் சாத்தியங்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
தொடர்ந்த கடைவீதிக் காட்சியில் கண்ணகியை அழைத்துக்கொண்டு செல்லும் கோவலன், மாதவி மன்னர் அவையில் நாட்டியமாட இருப்பதை அறிகிறான். மன்னரவைக்குச் செல்கிறான். இந்தக் காட்சியில் மாதவியின் நடனம் அசத்தலாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இதுதான் மாதவிக்கான ஓப்பனிங் காட்சி. ஆனால் நடனம் அந்த அளவுக்கு உலுக்கி எடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து. சோழ அரசன் 1008 கழஞ்சு மதிப்புள்ள ஒரு மாலையையும் தலைக்கோல் என்ற பட்டத்தையும் மாதவிக்குக் கொடுக்கிறான்.
மாதவியின் தாய் அந்த மாலையை கூனியிடம் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி, அங்கே விற்கச் சொல்கிறாள். அந்த மாலையை வாங்கக்கூடியவன்தான் மாதவிக்கு வேண்டியவன் என்று தீர்மானிக்கிறாள். சிக்குகிறான் கோவலன்.
கோவலன் - மாதவி காட்சிகள் மிக நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. இந்திர விழாவில் இருவரும் பங்குகொள்வது, காதல் செய்வது, பாடுவது, ஆடுவது அனைத்துமே சிறப்பு. பானைகளின்மீது நடனம் செய்யும்போது மாதவியாக வந்தவர் கவனமாக அதிகம் முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை! ஆனால் கூட ஆடிய சிறுவயதுப் பெண்கள் சிறப்பாக ஆடினர் என்றே சொல்லவேண்டும். இந்தக் காட்சியில் கோவலன், மாதவி, பணிப்பெண்கள் அன்ன வடிவப் படகில் காவிரியில் வந்து இறங்குவது அழகாகச் செய்யப்பட்டிருந்தது.
அடுத்த காட்சியில் கோவலன், மாதவி ஊடல். இருவரும் மாறிமாறிப் பாட, கோவலன் கோபம் கொண்டு வெளியேறுகிறான். உடனேயே மாதவி மனம் வெறுத்து, புத்த மதம் சார்ந்த துறவி ஆவதுபோலக் காட்டியுள்ளனர். கதைப்படி அதற்கெல்லாம் நிறைய காலம் இருக்கிறது.
கண்ணகி வருத்தத்தில் இருக்க, அவளுடைய தோழி, சோமகுண்டம், சூரியகுண்டம் சென்று நீராடி, காமக்கடவுளை வழிபட்டால் கோவலன் மீண்டும் கிடைப்பான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோவலன் திரும்பிவருகிறான்.
அடுத்த காட்சியில் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை நோக்கிச் செல்கிறார்கள். மதுரையில் மாதரி என்பவளிடம் கண்ணகியை விட்டுவிட்டு, கோவலன் சிலம்பை எடுத்துக்கொண்டு கடைவீதி செல்கிறான். அவனை பாண்டிய மன்னனிடம் மாட்டிவிடுகிறான் பொற்கொல்லன். கோவலனின் கழுத்து வெட்டப்படுகிறது.
துர்நிமித்தங்கள் நடப்பது கண்டு மாதரியும் பிற ஆய்ச்சியர்களும் குரவைக் கூத்து ஆடுகிறார்கள். கூத்து முடியும்போது ஒருத்தி ஓடிவந்து கோவலன் கொலை ஆன செய்தியைக் கூறுகிறாள். இந்த இடத்தில் கண்ணகியின் நடிப்பு டாப் கிளாஸ்.
அழுகிறாள், விழுகிறாள், இடை இடையே சிரிக்கிறாள். காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் என்று சூரியனைக் கேட்கிறாள். சூரியன், இல்லை இல்லை என்று சொல்ல, கண்ணகியின் முகத்தில் தெறிக்கும் கோபம், சோகம், அழுகை அனைத்தும் சேர்ந்து நாட்டிய நாடகத்தின் உச்சமே இந்தக் காட்சியாகத்தான் இருந்தது. மன்னவனே ஆனாலும் அவனைக் கேட்காமல் விடேன் என்று பொங்கிப் புறப்படுகிறாள் கண்ணகி.
அரண்மனைக்குள் நுழைந்து அரசனை சூடாக நான்கு கேள்விகள் கேட்டுவிட்டு மாணிக்கப் பரல்கள் கொண்ட தன் சிலம்பை அவள் போட்டுடைக்க அரசன் அதிர்ந்துபோய் உண்மை தெரிந்து மாண்டுபோக, மதுரை எரிகிறது. இந்தக் காட்சியும் மிகச் சிறப்பாக மேடையில் கொண்டுவரப்பட்டது என்றுதான் சொல்வேன்.
கண்ணகி கையில் ஒரு சிலம்புடன் செல்லும்போது அவள் காலிலும் ஒரு சிலம்பு இருந்தது. கழட்டிப்போட மறந்துவிட்டார்கள். என் அருகில் இருந்தவர் என்னைப் பிடித்து வாட்டி எடுத்துவிட்டார். அதெப்படி சார், ஒரு சிலம்பை கோவலன்கிட்ட கொடுத்துட்டாங்க, இன்னொண்ணு கைல இருக்கு, அப்ப எப்படி கால்ல ஒண்ணு இருக்கும்? ஆமாங்க, அவங்க செஞ்சது தப்புதான்! என்று நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.
மற்றபடி குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் கடைசி இரண்டு காட்சிகளுக்காகவே மனத்தைக் கொள்ளை கொண்டது. இசை சுமார் ரகம்தான். பின்னணிப் பாடகி ஜானகி இரண்டு பாடல்களைப் பாட வந்திருந்தார். அவருக்கு ஆகும் வயதில் குரல் போய்விட்டது. அவர் பாடாமல் இருப்பதே நலம். நாட்டியம் பொதுவாக நன்றாக இருந்தது. முக்கியப் பாத்திரங்கள் அளவுக்கு, கூட ஆடிய அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்தனர். எல்லாமே நாட்டியம் கற்றுக்கொண்டுவரும் 12-20 வயதுப் பெண்கள் என்று நினைக்கிறேன்.
பெரும்பாலும் இளங்கோவின் வரிகளை மட்டுமே கொண்டிருந்தாலும் ஆங்காங்கே இரண்டு மூன்று இடங்களில் சொந்த வரிகளைப் புகுத்தியிருந்தனர். அதன் காரணம் புரிகிறது. மாதவியின் ஆரம்ப நாட்டியத்துக்கு பாடல் வரிகள் தேவைதான். ஆனால் அந்தப் பாடல்கள் சுமார் ரகம்தான்.
***
இன்று முடிந்தால் சென்று பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள். ரூ. 500, ரூ. 300, ரூ. 200 டிக்கெட்டுகள்.
***
துளசி பதிவு: சிலப்பதி’ஹாரம்’
எதற்குரியது நம் வாழ்க்கை?
8 hours ago
உலுக்கு எடுக்கவில்லை
ReplyDelete?
வெங்கட்: எழுத்துப்பிழை.
ReplyDeleteஉலுக்கு எடுக்கவில்லை - Sir, what was the right phrase, You had intended?
ReplyDeleteஎதையும் விட்டுவைக்கிற உத்தேசம் இல்லையா?
ReplyDeleteலிங்கியதுக்கு நன்றி பத்ரி.
ReplyDelete"ஆமாங்க, அவங்க செஞ்சது தப்புதான்! என்று நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்" - :D
ReplyDeleteஇங்கேயெல்லாம் போறதுக்கு எப்படி ஸார் உங்களுக்கு டைம் கிடைக்குது..?
ReplyDeleteபத்ரி சார்,
ReplyDeleteஎனக்கும் நீங்க குறிப்பிட்டிருக்கிற மாதவியின் அறிமுக நாட்டியக் காட்சி பற்றி நிறைய ஆதர்சங்கள் உண்டு.
ஒருக்கால் நான் டைரக்டராக இருந்தால் சுத்ததன்யாசி, ஹிந்தோளம், ஜெயந்தஸ்ரீ, தர்மவதி, பிருந்தாவனசாரங்கான்னு ஜனரஞ்சக ராகங்களைப் போட்டு ராகமாலிகை பண்ணி அந்தக் காட்சியை ஒரு கை பார்த்திருப்பேன்!
சிருங்கார ரசத்தை நாட்டியத்தை விட இசையில் நன்றாகக் காட்ட முடியும்!
உங்க இடுகையில் இருக்கிற சுவாரஸ்யம் அந்த நாட்டிய நாடகத்தில் இருந்தால் நிச்சயம் பார்க்கலாம்.
http://kgjawarlal.wordpress.com