Monday, May 03, 2010

மஹிஷாசுரமர்தினி

மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவி மஹாத்மியத்தில் ஒரு கதை வருகிறது. மஹிஷாசுரன் என்ற அரக்கன், தலை எருதாகவும் உடல் மனித உடலாகவும் கொண்டவன். கடுந்தவம் புரிந்த இந்த அரக்கன், ஏகப்பட்ட வரங்களை வாங்கிக்கொண்டு தேவர்களை இம்சிக்கத் தொடங்கினான். இவனை இந்திரனாலோ வேறு எந்தத் தேவனாலோ, சிவனாலோ, விஷ்ணுவாலோ தனியாகச் சண்டைபோட்டு வெல்ல முடியாது.

எனவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தனர். தங்களது அம்சங்களை, தங்களது ஒட்டுமொத்த சக்தியை ஒன்றுதிரட்டி ஓர் உருவாக்கினார். உதித்தாள் துர்கை. சிவனின் அம்சம் அவளது முகம். யமனின் அம்சம் அவளது தலைமயிர். விஷ்ணுவின் அம்சம் அவளது கைகள். சந்திரனின் அம்சம் அவளது மார்பகங்கள். இந்திரனின் அம்சம் அவளது வயிறு. வருணனின் அம்சம் அவளது தொடைகளும் கால்களும். பூமியின் அம்சம் அவளது இடை. பிரம்மாவின் அம்சம் அவளது பாதங்கள். சூரியன், அவளது கால்விரல்கள். வசுக்கள், அவளது கைவிரல்கள். குபேரன் அவளது மூக்கு. பிரஜாபதி, அவளது பற்கள். அக்னி, அவளது மூன்று கண்கள். வாயு, அவளது காதுகள்.

இந்திரன் முதலான தேவர்கள், மும்மூர்த்திகள் தங்களது ஆயுதங்களையும் அவளுக்கு அளித்தனர். சிவன் திரிசூலத்தை அளித்தார். விஷ்ணு சக்கரத்தை. வருணன் சங்கை. அக்னி குத்தீட்டியை. மருதன் வில்லையும் நிறைய அம்புகளையும். இந்திரன் மின்னலையும் தன் யானை ஐராவதம் மூலமாக ஒரு மணியையும். யமன், ஒரு தடிக்கழியை. வருணன் சுருக்குக்கயிறை. பிரம்மா அக்‌ஷர மாலையையும் கமண்டலத்தையும் கொடுத்தார். சூரியன் அவளது உடலிலிருந்து வெளிப்படும் கிரணங்களை அளித்தான். காலம் அவளுக்கு வாளையும் கேடயத்தையும் கொடுத்தது.

பாற்கடல் அவளுக்கு கழுத்தில் நவரத்தின மாலை, அழியாத உடைகள், தலைக்குக் கிரீடம், காதுக்குக் குண்டலங்கள், கைக்கு வளையல்கள், அர்த்தசந்திர ஹாரம், வங்கி, சிலம்பு, விரல்களுக்கு மோதிரங்கள் ஆகியவற்றை அளித்தது. விஸ்வகர்மா ஜொலிக்கும் கோடரியையும் தகர்க்கமுடியாத கவசத்தையும் கொடுத்தார். கடல்கள் தாமரை மலர்களால் ஆன மாலையையும், கையில் பிடித்துக்கொள்ள ஒரு தாமரை மலரையும், மார்பில் அணிய ஒரு மாலையையும் கொடுத்தன. அவளது வாகனம் சிங்கம் - இமயமலை கொடுத்தது.

குபேரன் மது நிரம்பிய குவளையைக் கொடுத்தான். ஆதிசேஷன் ரத்தின மாலை கொடுத்தான்.

தேவி, அவளது கணங்களுடன் போருக்குப் புறப்பட்டாள். மறுபக்கம் மஹிஷாசுரன் அவனது அரக்கப் படைகளுடன்.

அரக்கர்கள் தங்கள் ஆயுதங்களுடன் தேவிமீது பாய்கின்றனர். அவளோ அம்புகளைச் சரமாரியாக எய்துகொண்டே, தன் வாளினால் அரக்கர்களை சீவித் தள்ளுகிறாள். எதிர்கொண்டு மோதும் சிக்சுரன், சமரன், உதாக்ரன், கராளன், உத்தாதன், பாஸ்கலன், உக்ராஸ்யன், உக்ரவீர்யன், மஹாஹானு, பிதாலன், துர்தரன், துர்முதன் என அனைவரும் கொல்லப்படுகின்றனர். மஹிஷாசுரன் கோபம்கொண்டு தேவியைத் தாக்கவருகிறான். தன் கையிலிருந்த சுருக்குக் கயிறை அவன்மீது வீசி அவனை அவள் இறுக்கக் கட்ட, அவன் தன் எருது வடிவிலிருந்து வெளியேறி, கையில் கத்தியுடன் அவள்மீது பாய்கிறான். தேவி அவன்மீது அம்பை எய்து வெட்டுகிறாள். அவன் ஒரு யானையாக மாறுகிறான். யானை, அவளது சிங்க வாகனத்தை முட்டுகிறது. தேவி தன் வாளால் அந்த யானையின் தும்பிக்கையை அறுக்கிறாள். அவன் மீண்டும் எருது வடிவுக்கு மாறுகிறான்.

தேவி தன் கையிலிருக்கும் மதுக் கோப்பையால் மதுவைக் குடித்துவிட்டு கண்கள் ரத்தச் சிவப்பாகுமாறு சிரித்தாள். அவன்மீது பாய்ந்து குதித்து, அவனைக் கீழே தள்ளி, தன் ஈட்டியால் அவனைக் குத்தினாள். தன் வாளால் அவன் தலையை அறுத்துத் தள்ளினாள்.

கந்தர்வர்கள் பாட, அப்சரஸ்கள் ஆட, தேவர்களும் முனிவர்களும் அகமகிழ்ந்தனர்.

மஹிஷாசுரமர்தினி மண்டபத்தில் காணப்படும் தொகுதியில், தேவி சிங்க வாகனத்தில் வீற்றிருக்கிறாள். அவளது கணங்கள் அவளைச் சுற்றிச் சூழ்ந்துள்ளார்கள். அவளுடன் ஒரு பெண் போராளி உருவிய கத்தியோடு நிற்கிறாள். ஒரு அரக்கன் தலைகுப்புற விழுகிறான். அவனது மொட்டை மண்டை மட்டும்தான் காணக் கிடைக்கிறது. கீழே ஓர் அரக்கனுடைய அறுந்த தலை கிடக்கிறது. தேவியின் ஒரு கையில் வில், ஒரு கை தூணியிலிருந்து அம்பை உருவுகிறது. ஒரு கையில் வாள், ஒரு கையில் கேடயம். மஹிஷாசுரனின் வாள் இடுப்பில் உள்ளது. கையில் ஒரு தடிக்கழி. அதனை அவன் வாகாகக் கையில் பிடித்துக்கொண்டு, எதிர்ப்பைக் காட்டும் வகையில் உறுதியோடு நிற்கிறான். தேவியின் தலையிலும் மஹிஷனின் தலையிலும் குடைகள் இருக்கின்றன. இருவருக்கும் இடையேயான போரில் இன்னமும் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆனால் அரக்கர் படைகள் பின்வாங்கி ஓடும் நிலையிலும், தேவியின் கணங்கள் ஆக்ரோஷமாக முன் செல்லும் நிலையிலும் காணப்படுகின்றன.

Mahishasuramardini Panel, Mahishasuramardini Mandapam, Mamallapuram

பெர்ஸ்பெக்டிவ் வியூ, வானிஷிங் பாயிண்ட், பேலன்ஸ் என்றெல்லாம் ஓவியக்கலை தெரிந்தவர்கள் இந்தத் தொகுதியை நுட்பரீதியாக அலசலாம். அந்த அளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனால் அப்படியே ஒருகணம் நின்று பார்க்கும்போது தேவி மஹாத்மியம் உங்கள் கண்களில் ஓடும் என்பதை மட்டும் சொல்லமுடியும். எருதின் தலையை மனித உடலுடன் இணைத்து உயிரூட்டம் கொடுக்கமுடியும், அதுவும் கருங்கல்லில் என்பதை பல்லவச் சிற்பிகள் காண்பித்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் தேவியைவிட நம்மை ஈர்ப்பது, நம் நினைவைவிட்டு அகலாமல் இருப்பது வில்லனான மஹிஷனின் உருவம்தான்.

Mahishasura in close-up. Mahishasuramardini Mandapam, Mamallapuram

அடுத்தது, அதிரணசண்ட மண்டபத்தின் முன் இருக்கும் சிறு கல்லில் உருவாக்கப்பட்டுள்ள மினி-மஹிஷாசுரமர்தினி தொகுதி. இங்கே மஹிஷனின் ஆட்டம் முடிந்துவிட்டது. அவன் தலைமீதுள்ள குடை வீழ்ந்துவிட்டது. தலையில் கிரீடம் இல்லை. தேவியின் தலைமீது இன்னமும் குடை உள்ளது. மஹிஷன் பின்வாங்கி ஓடுகிறான். குட்டிச் சிங்க வடிவில் உள்ள ஒரு கணம், பாய்ந்து அவன் கையைக் கடிக்கிறது. எருது முகத்தில் களைப்பும் பயமும் தெரிகின்றன. புஸ் புஸ் என்று மூச்சுவிட்டு, நாக்கு வெளியே தள்ளியிருக்கிறது. சிங்க வாகனம் கால்களை உயத்தித் தாக்கத் தயாராக உள்ளது. தேவியும் கீழே இறங்குகிறாள். மஹிஷன்மீது பாய்ந்து, அவனைக் கீழே தள்ளி கழுத்தை வெட்டவேண்டியதுதான் பாக்கி. தேவி இறங்க வசதியாக அவள் காலடி எடுத்துவைக்க ஓர் ஆசனம் வைக்கப்பட்டுள்ளது.

Minor Mahishasuramardini Panel, Athiranachanda Mandapam, Mamallapuram

மாமல்லையில் துர்கை பல இடங்களில் காணப்படுகிறாள். வராக மண்டபத்தில், ஆதிவராக மண்டபத்தில், திரௌபதி ரதத்தில், திரிமூர்த்தி மண்டப சுவற்றில், கடற்கரைக் கோயில் பிரகாரத்தில் சிங்கவடிவிலான ஒரு கோயிலில், இன்னும் பல இடங்களில். கீழே திரிமூர்த்தி மண்டப சுவற்றில் அறுக்கப்பட்ட மஹிஷனின் தலைமீது நிற்கும் துர்கையைக் காணலாம். இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் தமிழகக் கோயில்களில் பலவற்றிலும் நாம் காணும் மஹிஷன் தலைமீது நிற்கும் துர்கையைப் பார்க்கிறோம். இதுதான் அவை அனைத்துக்கும் ஆதி வடிவமாக இருக்கவேண்டும்.

Durga as Mahishasuramardini, Trimurti Mandapam, Mamallapuram

(தொடரும்)

5 comments:

  1. தேவியின் வர்ணனை அருமை! சிற்பங்களை இன்னும் ஒரு முறை உங்கள் எழுத்துக்களை படித்து விட்டு சென்று பார்க்க வேண்டும் போல இருக்கிறது!

    ReplyDelete
  2. ராமதுரை கூறியது
    கண் முன்னே காட்சியைக் கொண்டு நிறுத்திய தங்களுடைய பூர்வாங்க விளக்க உரை இல்லாவிடில் அச் சிற்பத்தின் பிரும்மாண்டம் புலப்பட்டிராது.டிவியில் கிரிக்கெட் போட்டியில் replay காட்டும் போது ஒரு பிரேமை மட்டும் freeze செய்து காட்டுவர்.அது ஒரு பிளேயர் அந்தரத்தில் இருந்தபடி ஒரு கையால் கேட்ச் பிடிக்கிற காட்சியாக இருக்கும். அது போல மகிஷாசுரனுடனான் போரில் ஒரு காட்சியை இவ்வித்ம் freeze செய்து காட்டும் உத்தி இச் சிற்பத்தில்( பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே) கையாளப்பட்டு அது கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள்து.இதை வடித்த மாபெரும் சிற்பியின் கற்பனை தான் என்ன? கைவண்ணம் தான் என்ன? .இச் சிற்பத்தின் பெரும் சிறப்பை படத்துடன் விளக்கிய தங்களுக்கு என் நன்றிகள்.தாங்கள் ஏற்கெனவே மாமல்லபுரம் பற்றி எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
    இந்தியாவின் மாபெரும் கலாசாரப் பெருமைகள் நினைவுச் சின்னங்களில் சமாதிகளில் இல்லை. தென்னிந்திய சிற்பங்களில் தான் உள்ளன.
    ராமதுரை

    ReplyDelete
  3. ஒரு அற்புதத்தைப் பற்றி உங்கள் வர்ணனை அருமை. நன்றி, பத்ரி!

    ReplyDelete
  4. ***
    அழியாத உடைகள்
    ***

    means ? :)-

    ReplyDelete
  5. அழியாத உடைகள் = அழிவே இல்லாத உடைகள். தேயாது, கிழியாது, நையாது. புதுப் பொலிவுடனேயே எப்போதும் இருக்கும், அழிவற்ற உடைகள்.

    ReplyDelete