Saturday, January 21, 2012

புதுக்கோட்டை பயணம் - 1

முன் தயாரிப்பு

தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு பாரம்பரியப் பகுதிக்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து, அங்குள்ள சின்னங்களை, அவற்றின் வரலாறை, கலையைப் படிப்பது, புரிந்துகொள்ள முயற்சிப்பது எங்கள் வழக்கம்.

2010-ல் மாமல்லபுரத்தில் மூன்று நாள்கள் தங்கினோம். 2011-ல் எல்லோரா, அஜந்தாவுக்கு ஒரு வாரம். இப்போது 2012 ஜனவரியில் புதுக்கோட்டைக்குச் செல்கிறோம். இதற்கென கடந்த இரண்டு மாதங்களாக, படிப்பது, கூடுவது, பகிர்வது நடந்துவருகிறது. சுமார் 30 பேர் செல்கிறோம்.

கடந்த இருமுறையும் செய்த பயணங்கள் பற்றி என் பதிவில் நான் விரிவாக எதுவும் எழுதவில்லை. இம்முறை நிகழ்வின்போதே தொடர் பதிவுகளாக எழுதிவிட முடிவு செய்துள்ளேன். தொடக்கத்தில் சில அறிமுகப் பதிவுகளும்.

இந்த புதுக்கோட்டைப் பயணத்தின்போது நாங்கள் செல்லவிருக்கும் இடங்கள்:

1. நார்த்தாமலை, கடம்பர் மலை, ஆளுருட்டி மலை, சுற்றியுள்ள இடங்கள்
2. சித்தன்னவாசல் (அறிவர்கோவில், ஏழடிப்பட்டம்), பனங்குடி
3. குடுமியான்மலை
4. கொடும்பாளூர் (மூவர் கோவில், ஐவர் கோவில், முசுகுந்தேசுவரர் கோவில்)
5. விசலூர், செட்டிப்பட்டி
6. குன்றாண்டார் கோவில், மலையடிப்பட்டி, காளியாப்பட்டி
7. திருமயம், மலையக்கோவில், கண்ணனூர்
8. ஆவுடையார்கோவில், திருப்புன்னைவாயில், திருக்கட்டளை
9. புதுக்கோட்டை நகரம்

சமண, இந்துக் கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், சமணர் படுக்கைகள், முதுமக்கள் தாழிகளைக் கொண்ட பெருங்கற்கால (மெகாலித்திக்) புதைகுழிகள்.

***

இப்பகுதிகளுக்கு சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தொடர்ச்சியான ஒரு வரலாறு உள்ளது. பல்லவ, சோழ அரசர்களுக்குக்கீழ் இருந்த இருக்குவேளிர்களும் முத்தரையர்களும் ஆட்சி செய்த பகுதி. பாண்டியர்களின் கட்டுப்பாடும் இருந்துள்ளது. பல்லவக் கலையின் தொடர்பு இருக்கும் அதே நேரம், அதிலிருந்து சற்று விலகி, முற்காலச் சோழர் கலைக்கான முன்மாதிரியாகவும் உள்ளது. (பிற்கால) சோழ சாம்ராஜியம், பாண்டிய, ஹொய்சாள அரசுகளுக்குப்பிறகு, மாலிக் காஃபூரின் தாக்குதல் இப்பகுதியிலும் இருந்தது. அதன்பின் விஜயநகர, நாயக்க, மராத்தா கட்டுப்பாடு. பின் தொண்டைமான்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகள் போலன்றி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வளமையாக இருந்த பகுதி இது. ஏனெனில் புதுக்கோட்டை சமஸ்தானம் தனியான ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் ஆட்சியுடன் நட்பு கொண்ட ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஒரே ராஜ குடும்பம் (தொண்டைமான்கள்) சுமார் 270 வருடம் தொடர்ந்து ஆட்சி நடத்தியது. அதன்பின் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. இந்த மன்னர்களுக்கு நல்ல திவான்கள் கிடைத்த காரணத்தால் ஆட்சிமுறை நல்லபடியாக நடந்துள்ளது.

அடுத்த சில பகுதிகளில் பல விஷயங்களை விரிவாகப் பார்க்கலாம்.

6 comments:

  1. ஆவுடையார் கோவிலின் அழகை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.சிற்பக்கலையின் உச்சம் இக்கோவில். சிவபெருமான், பார்வதி சிலைகளில் கை ரேகைகள், தலைமுடி சீவியிருக்கும் பாங்கு, பார்வதி தேவி கையில் வைத்திருக்கும் பனை ஓலைக் கூடையில் உள்ள முடிச்சுகள், ஒரே கல்லால் ஆன கொடுங்கு, வீரபத்திரர் சிலை என அற்புதங்கள் நிறைந்திருக்கும் தலம் அது.அக்காலத்தில் சிற்பிகள் சிற்பம் வடிக்கும் பொழுது "ஆவுடையார் கோவில் கொடுங்கைத் தவிர" என ஓலை எழுதிக் கொடுத்துவிட்டு தான் சிற்பம் செய்ய ஒப்புக்கொள்வார்களாம்..
    மிகக் சிறந்த கோவில் அது..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. மலையக் கோவில் செல்லும் வழியில் “தேவர் மலை” என்ற ஒரு சிறு மலை உள்ளது. அங்கே பழங்கால - பூஜைகள் ஏதுமற்ற சிறு கோயில் உள்ளது. பெருமிழலைக் குறும்பநாயனாரின் சமாதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மலைக்கு மேலே சரிபாதி உடைந்த தீர்த்தங்கரர் ஒருவரது சிலை உள்ளது.

    அதுபோல ”தேனிமலை” என்பதும் முக்கியமானது. பிரான் மலைக்குச் செல்வது கடினம். (அது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்ததுதான் என நினைக்கிறேன்) இன்னும் பல முக்கியமான வரலாற்றோடு தொடர்புடைய பல இடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. ”பெருமா நாடு” ஆலயமும் அப்படித்தான்.

    ReplyDelete
  3. எங்கள் ஊருக்கு நீங்கள் வருவது கண்டு மகிழ்ச்சி :)

    நீங்களும் குழுவினரும் எடுக்கும் ஒளிப்படங்கள், ஒளிப்பதிவுகளை விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றினால் பலருக்கும் பயன்படும்.

    http://ta.wikipedia.org/wiki/Contest

    நன்றி.

    ReplyDelete
  4. புதுக்கோட்டை பிருந்தாவனத்தில் (ஒரு மெய்ன் சிக்னல்) ராதா கபே டிஃபனை மிஸ் செய்ய வேண்டாம். மிக அருமையான சைவ உணவகம்..

    கலைப்பற்றிய பதிவில் சாப்பாட்டுக்குறிப்பு சொல்வதை மன்னிச்சூ..:)

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  6. Eagerly waiting for detailed posts.

    I am ready for a virtual tour.

    ReplyDelete