Monday, January 09, 2012

கடலூர் புயலும் காப்பீடும்

கடலூரைத் தாக்கிய புயல் கடுமையான சேதத்தை விளைவித்துள்ளது. எங்கள் கடலூர் விற்பனை அலுவலர் சரவணன், ஒரு மரம்கூடப் பிழைக்கவில்லை என்றார். வீசிய காற்றில் குடிசை வீடுகள் பிய்ந்துபோய்விட்டன. ஓடுகள் பறந்துவிட்டன. காங்கிரீட்டால் கட்டிய அபார்ட்மெண்ட்கள் பிழைத்துள்ளன. ஆனால் அங்கும் ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிட்டன என்றார்.

கடலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி (என்னோடு புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் வருபவர்), இது வரலாறு காணாத பொருள் நாசம் என்றார். ‘சுனாமி உயிரைக் கொண்டுபோனது. பொருள்களுக்கு அவ்வளவு நாசம் இல்லை. ஆனால் இந்தப் புயலோ அதிகம் உயிரை எடுக்கவில்லை என்றாலும் ஒட்டுமொத்த கடலூருக்கே அழிவைக் கொண்டுவந்துவிட்டது’ என்றார்.

முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர்மூலம் சென்று பத்திருபது நிமிடம் பார்வையிட்டுவிட்டுச் சென்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி சில மணி நேரங்கள் சுற்றிப் பார்த்திருக்கிறார். கிட்டத்தட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் - மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பாஜக என்று ஒருவர் விடாமல் சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டனர்.

மின்சாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு டிரான்ஸ்ஃபார்மர் பிழைக்கவில்லை. ஏகப்பட்ட பொருள் செலவில் தமிழ்நாடு மின்சார வாரியம் இதனைச் சீர் செய்யவேண்டும். தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் தாம் இன்ஷூர் செய்யப்பட்டிருப்பதாகவும் ஓரிரு வாரங்களில் நிலைமையைச் சரியாக்கி உற்பத்தியை ஆரம்பித்துவிடுவோம் என்றும் தகவல் சொல்லியிருக்கின்றன. சிறு தொழில்களின் நிலைமைதான் கவலைக்கிடம். அதேபோல தினக்கூலிகளின் நிலைமையும் கவலைக்கிடம். மாதச் சம்பளக்காரர்களுக்கு, முக்கியமாக அரசு ஊழியர்களுக்கு, எப்படியோ சம்பளம் வந்துவிடும்.

ஆனால், ஏற்கெனவே அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் நிலைமை என்ன ஆகியுள்ளது என்று தெளிவாகப் புரியவில்லை.

***

பெரும்பாலானோர் வீடுகளுக்குக் காப்பீடு எடுப்பதே இல்லை. வீடுகளுக்கான காப்பீட்டுக்கு ஆகும் பிரீமியம் தொகை மிக மிகக் குறைவே.

விவசாயிகளுக்கும் காப்பீடு பற்றி எந்தப் புரிதலும் இல்லை. மாதச் சம்பள மத்திய வர்க்கத்துக்கே இது புரியவில்லை என்றால் subsistence விவசாயிகளுக்குப் புரிந்தும் செலுத்தக் காசு இருக்காது.

புயல் அடிக்கும்போது மரங்களை உங்களால் காக்கவே முடியாது. சுழன்று வீசும் புயல் காற்று மணிக்கு 140 கிலோமீட்டர் வரை வீசும். நாகப்பட்டினத்தில் நான் இதுபோன்ற ஒரு புயலையும் இதைவிடச் சிறிய இரண்டு புயல்களையும் நேரில் பார்த்திருக்கிறேன். பொதுவாக செங்கல், காரை, சிமெண்ட் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. மரங்கள் இந்தச் சுவரின்மீது விழும்போது இவை உடையலாம். உடைந்துள்ளன. மண் சுவர்கள் மழையில் கரைந்து விழுவதும் உண்டு. மிக மிகப் பாதுகாப்பானவை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களே.

விவசாயச் சேதத்தைத் தடுக்கவே முடியாது. காப்பீடு ஒன்றே வழி.

உயிர்ச் சேதம் குறைவுதான் என்றாலும் இன்னுமேகூடக் குறைத்திருக்க முடியும்.

பொருள் சேதத்தைக் குறைக்கலாம். அல்லது சொந்தவீடு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் காப்பீடு எடுத்து, அதனால் சேதத்தைப் பெருமளவு சரிக்கட்டலாம். வாடகை வீடுகளில் வசிப்போர் பேரிடரின்போது பொருள்களை இழப்பதற்குக் காப்பீடு உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

எனவே புயல் பகுதிகளில் வசிப்போர் ஒருமுறை காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி, சேதத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். வங்காள விரிகுடாவில் ஒவ்வோர் ஆண்டும் பல புயல்கள் உருவாகின்றன. சிலதான் கரையைக் கடக்கின்றன என்றாலும், எது, எப்போது கடக்கும் என்று முன்கூட்டியே சொல்லமுடியாது.

வருமுன் காப்போம்.

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. க‌ட்டுரையின் வார்த்தைக‌ள் மிக‌ உண்மை !

    நெய்வெலியில் ம‌ட்டும் ஒரு ல‌ட்ச‌ம் ம‌ர‌ங்க‌ள் சாய்ந்துள்ள‌ன. பாண்டியில் இருப‌த்து ஐந்துக்கும் மேற்ப‌ட்ட‌ ட‌வ‌ர்க‌ள் சாய்ந்துள்ள‌ன‌.

    இனி சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முந்திரி சிச‌னும்; ப‌லா ப‌ழ‌ சீஸ‌னும் கிடையாது என்றுதான் தோன்றுகிற‌து.

    முந்திரி காடுக‌ளில் வேலை செய்யும் தொழிலாளிக‌ள் சில பல‌ வ‌ருட‌ங்க‌ளாவ‌து வெளியில் வேலை தேடியே ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாயம் உள்ள‌து.

    க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம் ஒரு பிர‌ம்மாண்ட‌ விற‌குக‌ள் விற்கும் க‌டைக்குள் நுழையும் மோச‌மான‌ அனுப‌த்தினை த‌ருகிற‌து.

    இறையே இவ‌ர்க‌ளுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ வேண்டும்.

    கூலிக‌ளின் வாழ்வாத‌ர‌ம் முற்றிலும் முட‌ங்கியுள்ள‌து.

    ReplyDelete
  3. அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நியாயமா என்பது பற்றியும் பதிவு எழுதுங்கள்.

    ReplyDelete
  4. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கும் (நகைநட்டு, டீவீ, fridge, car, etc.) காப்பீடு உண்டு. எனக்குத்தெரிந்து new india & oriental இன்ஷ்யூரன்சிலும் இருப்பதாக அறிகிறேன். New Indiaவில் ஒரு சிறப்பு, என் சைக்கிளுக்கு மட்டும் தனியாகவும் காப்பீடு தருகிறார்கள்.

    ReplyDelete
  5. //புயல் அடிக்கும்போது மரங்களை உங்களால் காக்கவே முடியாது//


    ரமங்கள் அடர்த்தியாக இருந்தால் புயலுக்கு தாங்காது. புயல் வருவதற்கு முன்னால் ஆங்கங்கு சில கிளைகளை வெட்டி விட்டால், காற்று மரங்களுக்கு ஊடே சென்று விடும். மரங்களுக்கு பாதிப்பு குறையும். ( இது நான் அமெரிக்காவில் கண்டது).

    ReplyDelete
  6. கடலூரில் கோழிப்பண்ணை வைத்திருக்கும்{!!!!!!}நண்பர் காத்தமுத்துவிடம் பேசினேன்....புயலால் பாதிப்பா என கேட்டதற்கு ஒன்றுமில்லை என சொன்னார்....பினனர் தான் புரிந்தது அவ்ர் கோழிப்பண்ணையில் மீதம் ஒன்றுமில்லை என....அத்தனையும் காற்றில் பறந்துவிட்டதாம்....இத்தைக்கும் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 2 லட்சம் அடங்கிய பணப்பையை போலீசில் சென்று கொடுத்த நல்ல மனதுக்காரர்....இத்தனைக்கும் அவர் மிக சாமான்யர்

    ReplyDelete
  7. நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பார்களே அது இதுதானா?
    அட போங்கையா......

    ReplyDelete