Wednesday, June 21, 2006

சுப்ரமண்ய ராஜு கதைகள்

வெகு நாள்களாக அச்சில் இல்லாதிருந்த சுப்ரமண்ய ராஜு கதைகள் முழுத்தொகுப்பு இப்பொழுது கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

சுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம் (6.6.1948 - 10.12.1987), எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர்.

அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தா ளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.

'காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று' என்று சுஜாதா சொன்னதை எண்ணிப் பார்க்கலாம்.

'இன்று நிஜம்' என்கிற ஒரு தொகுப்புதான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம். புத்தகமாகவே ஆகாமல் வேறு எத்தனையோ பல கதைகள் பத்திரிகைத் தாள்களுக்குள் பல வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.

அவருடைய கதைகளின் இந்த முழுத்தொகுப்பு, ராஜுவுக்குச் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல. எதிர்வரும் தலைமுறைக்கு ஒரு தலைசிறந்த எழுத்தாளரை மறு அறிமுகப்படுத்தும் ஓர் எளிய முயற்சியும் கூட.

பாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜு (இயற்பெயர் விஸ்வநாதன்), சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.

விலை: ரூ.200
ISBN எண்: 81-8368-134-4

புத்தகத்தை இணையம் வழியாக வாங்க: வித்லோகா

சென்னையில் என்றால் நேரில் வந்து வாங்க:

வித்லோகா
புது எண் 238/பழைய எண் 197
ரபியா கட்டடம்
பீமசேனா கார்டன் தெரு
ராயப்பேட்டா ஹை ரோட் (மேம்பாலம் அருகில் உள்ள நோக்கியா ஷோரூம் பக்கத்தில்)
மைலாப்பூர்
சென்னை 600 004

தொலைபேசி எண்: 044-42312803/05

தமிழகம் முழுவதும் அனைத்துப் புத்தகக் கடைகளிலும் இந்த வாரம் முதல் கிடைக்கும்.

10 comments:

  1. முன் கதைச்சுருக்கத்தில் பாலகுமாரன் சொல்லியிருப்பாரே(போட்டுத்தாக்கியிருப்பாரே) அவரா இவர்????

    ReplyDelete
  2. பாலகுமாரன், மாலன், சுப்ரமண்ய ராஜு ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் போட்டுத்தாக்கியிருப்பார்கள் என்று நினைக்கமுடியவில்லை.

    ReplyDelete
  3. போட்டுத்தாக்கி இருக்கிறார். நினைவில் இருந்து எழுதுகிறேன்.

    பாலகுமாரன், தி.ஜானகிராமன் பள்ளியில் இருந்து வந்தவர். தி.ஜாவின் பாதிப்பு , பாலகுமாரனுக்கு பலமாக உண்டு. ராஜுவுக்கு, இதைப் பற்றிய விமர்சனம் இருந்திருக்கிறது. ஆனால், உண்மையில், பாலகுமாரன் அளவுக்கு, ராஜுவுக்கு, தமிழ் வாசிப்பில் ஆழம் கிடையாது. ஒரு எழுத்தாளனாக முடியாதோ என்ற வெறுத்துப் போயிருந்த சூழ்நிலையில், ராஜுவின் அட்வைஸ், பாலுவை வெறுப்பேற்றியது. நட்பில் தற்காலிகமான விரிசல் ஏற்பட்டது. அப்போதுதான், பாலுவுக்கு, சாவியில் மெர்குரிப்பூக்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது, ' ஒழுங்கா இல்லைன்னா, பாதியிலேயே நிறுத்திடுவேன்' என்கிற சாவியின் மிரட்டலுடன். இதை அவரே சொல்கிறார். பின்னர், மெர்குரிப்பூக்கள் தொடர் வெற்றி பெற்று, அந்த வருடம், ராஜா.சர் அண்ணாமலை செட்டியார் விருது கிடைத்தது. அந்த விழாவில், ராஜு பேசும் போது, ' எல்லாவற்றையும் இதிலேயே எழுதிவிட்டானோ, இனி எழுத அவனிடம் ஒன்றுமே இல்லையோ என்று தோன்றுகிறது' என்று மேடையில் விமர்சனம் செய்தார். அப்போது, ராஜுவுடனான நட்பை முற்றிலுமாகத் துண்டித்து விட்டேன் என்று பாலகுமாரன் சொல்கிறார்.

    ஆனால், அது நட்பில் அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன தகராறுகளே என்று தோன்றுகிறது. ராஜுவின் மறைவை ஒட்டி, பாலகுமாரன் குமுதத்தில் எழுதிய 'அட்டாக்' என்ற நடைச்சித்திரமே சான்று. உள்ளத்தில் இல்லை என்ற பட்சத்தில், அந்த எழுத்தில் அத்தனை ஆழம் இருந்திருக்காது. பாலகுமாரனின் ஆக்கங்களில், மிகச் சிறந்தது இது.

    ராஜுவின் படைப்புக்கள் மீள்பிரசுரமாக வருவது, வரவேற்க வேண்டிய முயற்சி. இதே போல சம்பத் என்று ஒருத்தர் இருக்கிறார். அவரையும் கண்டுகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. பாலகுமாரன் படித்ததிலிருந்து ஏங்கிக்கொண்டிருக்கிறேன். இவரின் கதைகள் கிடைக்காதா என்று. நல்லதொரு முயற்சி. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  5. Badri,

    Romba thanks for sharing this info.

    Regards,
    Magesh

    ReplyDelete
  6. Acharyama Irunthathu.."pottu thakiyirupare" statement and explanation from Prakash. I vaguely remember that "Irumbu Kuthiraigal"(my personal favourite of Balakumaran works) was dedicated to Subramania Raju.

    ReplyDelete
  7. Good news. thanks.

    சுப்ரமண்ய ராஜுவைக் கதாநாயகனாக் கொண்டே பாலகுமாரன் 'இரும்பு குதிரைகள்' எழுதியுள்ளார். அந்த அளவிற்கு அவர் சு.ராஜுவின் நட்பைப் போற்றியவர். கமல் கூட மைக்கேல் மதனகாமராஜனில் - ராஜன் காரெக்டருக்கு சு.ராஜு பெயரையே உபயோகித்திருப்பார்.

    பாலகுமாரனின் 'காதலாகிக் கனிந்து' - குமுதம் பக்தித் தொடரிலிருந்து....
    >>>>>>>>>>>>
    ஒரு வேலையை முழுமையாய் யோசிப்பது என்பது என்னுடைய வழக்கமாக இருந்தது. அதாவது, ‘இரும்புக் குதிரைகள்’ என்ற நாவலை நான் மனதில் உருவாக்க ஆரம்பித்தேன்.

    ஒரு களம் எடுத்துக்கொண்டு அந்தக் களத்தை முழுவதுமாக உபயோகப்படுத்தி ஒரு கதை சொல்லல் என்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன்.

    டிராக்டர் கம்பெனியில் இருப்பதால் லாரி போக்குவரத்துப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருந்தது. லாரி சொந்தக்காரர்களோடும், டிரைவர்களோடும் எனக்கு தொடர்பிருந்தது.

    அந்த டிரைவரின் சொந்த ஊர் பீகார். அந்த லாரியின் சொந்தக்காரர் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். சரக்கு கொண்டுவந்தது கல்கத்தாவிலுள்ள டயர் கம்பெனி. கொண்டுவந்து கொடுத்தது சென்னையின் ஓரத்தில் இருக்கின்ற டிராக்டர் கம்பெனி. நடுவே பல மாநிலங்களைத் தாண்டி, பல ஊர்களின் தண்ணீர் குடித்து, பல இடங்களில் படுத்துத் தூங்கி இங்கு வந்திருக்கிறான். இடையறாது... இடையறாது... பயணப்படுதலே அவன் வாழ்க்கை.

    எனக்கு ஹிந்தி தெரியாது. ஒரு மொழி பெயர்ப்பாளர் உதவியோடு அவனிடம் அரட்டையடிக்க... அவன் வாழ்க்கை மிக சுவாரசியமானது என்பது தெரிந்துபோனது. காசு... காசு... என்று பறக்கின்ற ஒரு லாரி சொந்தக்கார மார்வாடியையும் நான் நன்கு அறிந்தவன். அவர் பக்திப்பழமாக இருப்பார். உன்னுடைய வேண்டுதல் என்ன என்று அவரிடம் விசாரித்தபோது, ‘மகாலட்சுமி என்னைவிட்டு நீங்காது இருக்கவேண்டும். இதைத் தவிர வேண்டுவதற்கு ஒரு மனிதனுக்கு என்ன இருக்கிறது’ என்று அவர் பதில் சொன்னார்.

    ஆரோக்கியம் முக்கியமில்லையா என்று நான் அவரிடம் கேட்டபோது, ‘ஆரோக்கியம் சீர்குலைந்தால், காசு இருந்தால் சரிசெய்து கொள்ளமுடியும். ஆரோக்கியம் இருந்து காசு இல்லையெனில் அந்த வாழ்க்கை எதற்குப் புண்ணியம்’ என்று அவர் பதிலுக்குக் கேட்டார். எல்லாமுமே காசினால்தான் இயங்குகின்றது என்று அவர் தெளிவாகக் கருதினார்.

    என்னுடைய நண்பர் சுப்ரமணியராஜு, ஆணுறைகள் செய்யும் ஒரு கம்பெனியில் கணக்கராக வேலை பார்த்தார். அவரின் அலுவலகப் போராட்டங்கள் எனக்கு அத்துப்படியானவை.

    கரிச்சான்குஞ்சு என்ற தமிழாசிரியர் மிகப் பிரபலமான எழுத்தாளர். தமிழ் இலக்கியமும், வடமொழி இலக்கியமும் நன்கு அறிந்தவர். சரளமாய் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர். வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அறிந்தவர். சென்னைக்குக் குடிபுகுந்து விடவேண்டும் என்ற நிர்ப்பந்தமும், ஆசையும் அவரிடம் இருந்தன.

    <<>>>>>>>>>>>>>>>>
    இரும்புக்குதிரை நாவலின் கதாநாயகன் பெயர் விஸ்வநாதன். திருமணமானவன். வாழ்க்கை அவனை யதார்த்தத்திற்கு இழுத்தாலும், அவன் இலக்கியக் கனவுகளில் மூழ்கிப்போகிறவன். சின்னச் சின்ன விஷயங்களுக்கு பரவசமாகி அவைகளை கவிதையாய் எழுதத் துடிப்பவன். கவிதைகள்தான், தான் யார் என்பதை உலகத்திற்கு அடையாளம் காட்டும் என்று நினைப்பவன். உலகம் அவன் கவிதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாய் அவனை இன்னும் வெப்ப யதார்த்தத்திற்கு இழுத்தது.

    அவனுடைய வேலைக்கான ஒரு பொருள், லாரியில் வந்துகொண்டிருக்கிறது. அந்த லாரி எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. நேற்று வரவேண்டிய லாரி இன்றுவரை வரவில்லை. லாரியின் சரக்கு வரவில்லையென்றால் அந்தக் கம்பெனியில் வேலை தடைபடும்.
    >>>>>>>>>>>>>>>>>>


    - அலெக்ஸ்

    ReplyDelete
  8. சரியாக நினைவில்லை... எண்பதுகளின் ஈற்றில் மாலன் தமிழ் இந்தியா டுடே ஆசிரியராக இருந்தபோது ராஜு பற்றி எழுதியதாக நினைவு. ஆற்றிலே ஆட்டம்போட்ட நட்பு என்று நினைவுகூர்ந்தது ஞாபகம் இருக்கிறது. முடிந்தால் மாலனிடம் கேட்டுப் பார்க்கவும். அது நல்ல கட்டுரையாக இருந்த நினைவு...

    ReplyDelete
    Replies
    1. ஐயா ,
      சுப்ரமண்ய ராஜு பற்றி மாலன் எழுதிய கட்டுரையை "ஒத்திசைவு" தளத்தில் படித்தேன் அதன் சுட்டி கீழே :
      http://maalan.co.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81/

      Delete