Wednesday, June 21, 2006

இலங்கை நிலவரம் - Update

இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருணாநிதி (திமுக), டி.சுதர்சனம் (காங்), ச.ராமதாஸ் (பாமக), டி.கே.ரங்கராஜன் (கம். மா), தா.பாண்டியன் (இந்திய கம்.), கே.எம். காதர் மொகிதீன் (மு.லீக்). தீர்மானத்தின் சுருக்கம்:
இலங்கை அரசும் போராளிகளும் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தியா - இலங்கை வாழ் மக்களின் மனதைப் பாதிக்கும் அளவுக்கு இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும் அந்த மீனவர்களுக்கு உயிர், உடைமை, உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கப்படவும் இந்திய, இலங்கை அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்தத் தீர்மானம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதல்வர் கருணாநிதி மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மன்மோகன் சிங் தம் சார்பில் கருணாநிதியுடன் பேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பலாம் என்று தெரிய வருகிறது.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து சொல்லாத அஇஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் "இலங்கையில் ராணுவமும் விடுதலைப் புலிகளும் நடத்திவரும் தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவதும் தமிழக மக்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் இலங்கையில் அமைதி நிலை திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா நாளை (ஜூன் 22) இந்திய அரசுடன் பேச வருகிறார்.

3 comments:

  1. முதல்வரை பாராட்டுகிறேன்...

    ReplyDelete
  2. நம்பிக்கை எற்படுத்தும் நிகழ்வுகள் .
    நன்றி பத்ரி.

    ReplyDelete
  3. முயற்சி எடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete