கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நிகழ்வுகள் பொதுவாக உலகையும், குறிப்பாக இந்தியாவையும் பயமுறுத்தும்விதத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றைத் தலைப்புச் செய்திகளாகப் படித்திருப்பீர்கள்.
1. உலகக் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்றம். இப்போது பேரலுக்கு $135 என்ற விலையைத் தாண்டிச் சென்றுள்ளது.
2. இந்தியாவில் பணவீக்கம். 5%-லிருந்து 6% ஆகி, அங்கிருந்து 7% நெருங்கும்போது எல்லோரும் கூச்சல்போட்டு, இதோ இறக்கிவிடுவோம் என்று சொல்ல, இப்போது பொறுமையாக 8%-ஐத் தாண்டியுள்ளது. இதற்கும் மேலே சொல்லியுள்ள பாயிண்ட் 1-க்கும் தொடர்பு உண்டு.
3. உலக உணவுப் பற்றாக்குறை. இந்தியாவில் உணவுப்பொருளின் விலைகளைக் குறைவாக வைக்க, இந்திய அரசு அரிசியை ஏற்றுமதி செய்யத் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே கோதுமையை வெளிநாடுகளிலிருந்து வாங்க முயற்சி செய்துள்ளோம். உலகம் முழுதிலும் பல நாடுகளில் உணவு ரேஷன் செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் உணவுப் பொருள்களை எத்தனால் அல்லது பயோ டீசல் என்ற எரிபொருளாக மாற்றும் வேலை நடந்துவருவதால்தான் இந்த உணவுப் பற்றாக்குறை என்ற வாதம் எழுந்துள்ளது. இதுவும் பாயிண்ட் 1-டன் தொடர்புடையது.
4. உலக கரன்சியில் டாலரின் மதிப்பு குறைதல். இதன் காரணமாக கச்சா எண்ணெயை டாலரில் விற்றுவரும் நாடுகள் விலைகளை ஏற்றுகின்றனர் என்று ஒரு வாதம். அமெரிக்காவின் தொடரும் வர்த்தகப் பற்றாக்குறை (Trade deficit) காரணமாகவும் டாலரின் மதிப்பில் நிறையவே சரிவு ஏற்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு (Recession) ஏற்படப்போகிறது என்பதற்கான அனைத்துக் காரணிகளும் தெளிவாகத் தெரிகின்றன. அதன் காரணமாக, அங்கும், அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் பிழைக்கும் நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பயம்.
6. அமெரிக்க சப்-பிரைம் கடன் (அதாவது கடன் பெற்று அதனைத் திருப்பிக் கட்டும் தகுதியில்லாதவர்களுக்கு வரைமுறையின்றி அள்ளிக் கொடுத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னை), அதனால் ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்டுள்ள அடி, பணம் திரும்பி வராததால் பல வங்கிகள் தங்களது பேலன்ஸ் ஷீட்டில் (இருப்பு நிலைக் குறிப்பு) அடிவாங்கியுள்ளது, இதனால் பெரும் நஷ்டத்தைக் காட்டியுள்ளது, சொத்துக்களாகத் தாங்கள் நினைத்துள்ள கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக (அ) சில வங்கிகள் திவாலாகலாம் அல்லது (ஆ) தங்களது வேலைகளைக் குறுக்கிக்கொள்ளலாம்.
7. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த (பாயிண்ட் 2), மத்திய ரிசர்வ் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தல், அல்லது கேஷ் ரிசர்வ் ரேஷியோவை அதிகரித்தல், இதன்மூலம் கடன் பெற்று தொழில் நடத்துவோர் நிலையில் திண்டாட்டம். இதனால் புது வேலைகள், புதுக் கட்டுமானங்கள் குறைதல். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தல். ஏற்கெனவே வேலையில் சேர்ந்துள்ள பலருக்குச் சம்பளம் குறைதல், அல்லது வேலை போதல். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பலருக்கும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும், இந்தியப் பணவீக்கமும், வீட்டுக் கடன் வட்டி விகிதம் அதிகரித்தலும் ஒன்றுசேர்ந்து தொல்லை கொடுக்கப்போகிறது.
8. பங்குச்சந்தை செண்டிமெண்ட்: ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சரிவு உலகெங்கும் ஏற்படும்போது, பங்குச்சந்தையில் பணம் போட யாரும் முன்வரமாட்டார்கள். பொதுமக்கள் கையில் மேலதிகப் பணம் ஏதும் இருக்கவும் இருக்காது. இதனால் சந்தையின் குறியீட்டு எண் சரியும். விற்பவர் நிறைய, வாங்குபவர் குறைவு என்னும் கரடிச் சந்தையாக இருக்கும். இதனால் புது நிறுவனங்கள் ஐ.பி.ஓ என்னும் பொதுமக்களுக்குப் பங்குகள் வழங்கி முதலீட்டைப் பெறுவதை நிறுத்திவைப்பார்கள். இதுவும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். ஏற்கெனவே பங்குச்சந்தை உச்சத்தில் இருந்தபோது பணம் போட்டிருந்த பலரும் குரங்கு பட்சண ஜாடிக்குள் கையை விட்டதுபோல், கையை வெளியே எடுக்கவும் முடியாமல், பட்சணத்தை விடவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார்கள்.
9. மக்களது நுகரும் எண்ணங்கள் மாற்றமடையும். வீடு வாங்குதல், கார் வாங்குதல், ஊர் சுற்றுதல் (விமானப் பயணச்சீட்டின் விலை அதிகமாகும்), எல்லாமே குறையும். பொருளாதாரம் சுருங்கும் அல்லது வளர்ச்சி குறையும். செலவாகச் செய்யாமல் பணமாகப் பெட்டிக்குள், வங்கிக்குள் வைத்திருப்போம் என்ற மக்கள் மனநிலை அதிகமாகும்.
10. இந்தப் பிரச்னைகள் எல்லாம் மத்திய தர, பணக்காரர்களை மட்டும்தான் பாதிக்கும் என்பதில்லை. படு ஏழைகளாக இருப்பவர்கள் நிலை மேலும் படு மோசமாக இருக்கும்.
இந்தப் பிரச்னைகள் எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இவற்றைப் பற்றிய புரிதல் அவசியம். ஏன் இப்படி ஏற்படுகிறது? பதில்: பொருளாதார உயர்வும் தாழ்வும் மாறி மாறி காலச் சக்கரம் போல வந்துகொண்டே இருக்கும் நிகழ்வுகள். பொருளாதார வீழ்ச்சி இதற்கு முன்னும் வந்துள்ளது; இனியும் வரும். சில வருடங்கள் கழித்து தேக்கம் மறைந்து வளர்ச்சி வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் எங்கே ஆரம்பிக்கிறது, எதனால் ஆரம்பிக்கிறது என்பது வேண்டுமானால் மாறலாம். எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதும் மாறும். இத்தகையை பொருளாதார மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட வயதினரையும், சமூகப் பொருளாதாரப் பின்னணியினரையும் மட்டுமே நேரடியாகப் பாதிப்பதால் அனைவரும் இதனைப் பற்றி அதிகம் அறிவதில்லை. மேலும் கடந்த உலகப் பொருளாதாரச் சரிவு நடந்தபோது இணையம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. எனவே இதைப்பற்றிய விவாதங்கள் இணைய உலகில் வெகுவாக இல்லை.
அடுத்த சில பதிவுகளில் மேலே சொன்ன சில விவரங்களைக் குறிப்பாகப் பார்த்து, அவற்றை எப்படி எதிர்கொள்வது; நாடுகள் என்ன செய்யவேண்டும்; மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி விவாதிப்போம்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
17 hours ago
Does it surprise you that noone is ready to debate on these ? Does it mean that we all like to browse through sites for entertainment and debates are only entertaining if it relates to our culture or Dravidian beliefs or Brahminism.
ReplyDeletemani
இதுல டிபேட்டு பண்ண என்ன இருக்குதுங்க? நேத்திக்கி பெட்ரோல் விலையேத்தம் எல்லாத்தையும் ஆரம்பிச்சு வெச்சிருச்சுங்களே... இனிமே என்ன? கச்சேரிதான்..
ReplyDeleteAnon, that's a fair point. let alone debates..i think there are very few people here who actually write about these in the Tamil blogosphere... but there are lots of bloggers from mumbai like yazad, gaurav and others like ravikiran who regularly writes about econ. there is also a vibrant community which participates in the discussion..
ReplyDeleteCAN ANYONE TELL ME THE CORRECT TAMIL WORD FOR 'DERIVATIVES'? PLEASE?
ReplyDelete