இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் செல்பேசிகள் பலவற்றுள்ளும் இருப்பது சிம்பயான் என்ற இயக்குதளம்.
இந்த நிறுவனத்தை பல செல்பேசி தயாரிப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். நோக்கியா (47.9%), சோனி எரிக்சன் (13.1%), எரிக்சன் (15.6%), பானாசானிக் (10.5%), சீமென்ஸ் (8.4%), சாம்சுங் (4.5%) ஆகியோர் இதன் உரிமையாளர்கள். நோக்கியா இப்போது, பிறரது பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தை முழுமையாகக் தனது கைக்குள் கொண்டுவந்து, சிம்பயானை தளையறு, திறமூல இயக்குதளமாக மாற்ற எண்ணியுள்ளது. அதைத் தொடர்ந்து சிம்பயான் அறக்கட்டளை என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தி, செல்பேசிகளுக்கு திறமூல முறையில் இயக்குதள மற்றும் மென்பொருள் உருவாக்குதலை வேகப்படுத்த எண்ணுகிறது.
***
இன்று கணினியில் பிறமொழி மென்பொருள்களைத் தயாரிக்கும் வேகத்தில் செல்பேசிகளில் செய்யமுடியாது. கணினியில் எழுத்துரு தொழில்நுட்பம் எளிமையானதாக உள்ளது. ஒருசில தரக்கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியுள்ளது. எழுத்துக் குறியீட்டிலும் யூனிகோட் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே இவற்றைக் கொண்டு தமிழில் கணினியில் எழுத மென்பொருள் ஒன்றை உருவாக்குவது எளிதாக உள்ளது.
இதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் தமிழில் எழுதி, அவற்றைப் படிக்கிறோம். வலைப்பதிவுகள் என்ற பிரும்மாண்டமான விஷயம் உருவாகியுள்ளது.
ஆனால் தமிழில் சாதாரண குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதற்கு தடவ வேண்டியிருக்கிறது. ஏதோ சில செல்பேசிகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது. எழுத்துருக்களை மாற்ற, யூனிகோட் தமிழ் வேலை செய்ய என்று எளிதான, வரிசைக்கிரமமான செயல்பாட்டு வழிமுறைகள் ஏதும் இருப்பதில்லை.
சிம்பயான் ஃபோன்களில் எழுத்துரு GDR என்ற வடிவில் உள்ளது. புதிய ஃபோன்கள் சிலவற்றில் TTF எழுத்துருக்கள் வேலை செய்கின்றன. அதாவது TTF எழுத்துருக்களாக சிம்பயானுக்கு யூனிகோட் complex rendering புரியுமா என்று தெரியவில்லை. நான் கேள்விப்பட்டவரையில், பலர் லதா எழுத்துருவைத் தங்கள் செல்பேசியில் சேர்த்தபோது, 'கோ' என்ற எழுத்து க+'ஓ மார்க்கர்' என்றுதான் வந்ததாகச் சொன்னார்கள். பலரது விண்டோஸ் இயக்குதளத்தில், ஃபயர்ஃபாக்ஸில் இப்போதும் இப்படித்தான் தெரியும். இதனைச் சரியாகக் காண்பிப்பதற்குத்தான் complex rendering என்று பெயர்.
கணினியைப் பொருத்தமட்டில், முதல் தேவை, தமிழைப் படிப்பதாகவும், அடுத்த தேவை தமிழில் எழுதுவதாகவும் இருந்தது. அதனால்தான் ஆயிரக்கணக்கான எழுத்துருக்களும் டயனமிக் ஃபாண்ட் எனப்படும் இயங்கு எழுத்துருக்களும் உருவாயின. இன்று யூனிகோட் என்னும் ஒரேயொரு உலகளாவிய தரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். செல்பேசியிலும் ஆளுக்கொரு எழுத்துக் குறியீட்டை நோக்கிச் செல்லாமல், யூனிகோடையே பயன்படுத்துவது நலம். ஆனால் இடப் பிரச்னைகள் இல்லாமல் இல்லை.
ஒரு கட்டத்தில் கணினி இடைமுகம் தமிழில் வேண்டும் என்று ஏகப்பட்ட வேலைகள் நடைபெற்றன. மைக்ரோசாஃப்ட் இன்றும் இந்த வேலையில் இறங்கியுள்ளது. லினக்ஸ் ஆர்வலர்கள் பலரும் தமிழ் இடைமுகத்தில் வேலைசெய்துவருகின்றனர். ஆனால் அவை பெரிய பிரச்னைகளாக எனக்குத் தோன்றவில்லை. செய்யவேண்டியது அவசியமே, ஆனால் அதனையும்விட அவசியமான சில விஷயங்கள் உள்ளன.
SMS எனப்படும் குறுஞ்செய்திகளைப் தமிழில் படிப்பது உபயோகமானது. பதிலுக்கு தமிழிலேயே அனுப்பத் தெரியாவிட்டாலும்கூட. அடுத்து GPRS இணைப்பு உள்ளவர்கள், WAP/WEB பக்கங்களைத் தமிழிலேயே பார்வையிடவேண்டியது. மூன்றாவதாக, தமிழில் குறுஞ்செய்தியைத் தட்டித் தடவியாவது அடிக்கும் வசதி. அதாவது தனியான ஒரு செயலியாக இல்லாமல், இப்போது மெசேஜ் அடிக்கும் அதே வசதியிலேயே Abc, ABC, abc, 123, Abc+Dictionary போல, அஆஇ என்ற ஆப்ஷன் வருமாறு செய்யவேண்டும். அதில் ஆரம்பகாலத்தில் எந்த பட்டனை அழுத்தினால் எந்த எழுத்து வரவேண்டும் என்று ஆளுக்கொரு ஐடியா இருக்கும். ஏற்கெனவே முரசு அஞ்சல் மொபைலில் ஒரு மெத்தட் உள்ளது. சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வேறு சில முன்மொழிபுகளும் உள்ளன. இதில் ஏதோ ஒன்றை விரைவாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
***
நோக்கியா சிம்பயானை வாங்கி திறமூலமாகச் செய்தால் மேலே சொன்ன பலவற்றை வேகமாகச் செய்யலாம். ஆனால் திறமூல வடிவில் சிம்பயான் வருவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். அதுவரை பொறுத்திருக்காமல், நாமே சில திட்டங்களைச் செயல்படுத்தியாகவேண்டும்.
கவளம்
9 hours ago
//அதாவது TTF எழுத்துருக்களாக சிம்பயானுக்கு யூனிகோட் complex rendering புரியுமா என்று தெரியவில்லை//
ReplyDeleteபத்ரி! ஜப்பானிய செல்ஃபோன்களில் 100% ஜப்பானிய மொழிதான் இருக்கிறது. அந்த கருவிகளில் சிம்பயான்தான் என்றால் இது எவ்வாறு சாத்தியப்பட்டுள்ளது? அல்லது அது சிம்பயானே கிடையாதா?
அன்புடன்
வெங்கட்ரமணன்
டோகோமோ செல்பேசிகளில் என்ன ஓ.எஸ் என்று தெரியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழிதான் வேண்டும் என்றால் அதனைக் கொண்டுவருவது கடினமல்ல. ஓ.எஸ் உருவாக்கும்போதே அந்த மொழி எழுத்துருக்கள், மெனு, அதனை எழுதத் தேவையான கருவிகள் என எல்லாவற்றையும் பொதித்துக் கொடுத்துவிடலாம். அந்த ஜப்பானிய ஃபாண்ட் யூனிகோடாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
ReplyDeleteஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளை உள்ளடக்கித்தான் செல்பேசிகள் விற்பனையாகின்றன. அதே அளவு அல்லது அவற்றைவிடப் பெரிய சந்தையான இந்தியாவிலோ பல மொழிகள் இருப்பதுதான் பிரச்னையே.
ஆங்கிலமல்லாத பிற மொழிக்கு என்று சிறப்பாக செல்பேசிகள் உருவாக்கப்படாத நிலையில், எதைவேண்டுமானாலும் பயனர் எளிதாக உள்செலுத்தக்கூடியதான கணினி போன்ற செல்பேசியைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
அதற்கு சிம்பயான் திறமூல இயக்குதளமாக மாறுவது உபயோகமானது.
//ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழிதான் வேண்டும் என்றால் அதனைக் கொண்டுவருவது கடினமல்ல//
ReplyDeleteஅதில் ஆங்கிலமும் உள்ளது பத்ரி! ஆனால் நீங்கள் சொல்வது போல் இதில் என்ன ஓ.எஸ். என்று எனக்கும் தெரியவில்லை.
அன்புடன்
வெங்கட்ரமணன்!
//அதாவது தனியான ஒரு செயலியாக இல்லாமல், இப்போது மெசேஜ் அடிக்கும் அதே வசதியிலேயே Abc, ABC, abc, 123, Abc+Dictionary போல, அஆஇ என்ற ஆப்ஷன் வருமாறு செய்யவேண்டும்.//
ReplyDeleteநோக்கியா 6030 மாடலில் நீங்கள் சொல்வதுபோல தமிழில் தட்டச்சு செய்யலாம். அ ஆ இ என்ற ஆப்ஷன் வரும். ஹிந்திக்கு அகராதி உண்டு. தமிழுக்கு அகராதி இல்லை. இதன் மூலம் எல்லா ஒருங்குறித் தளங்களையும் வாசிக்கமுடிகிறது. என்ன பிரச்சினை என்றால், 6030ல் அதிக வசதிகள், அதாவது கேமரா, ப்ளூ டூத் போன்றவை இல்லை.
"GPRS இணைப்பு உள்ளவர்கள், WAP/WEB பக்கங்களைத் தமிழிலேயே பார்வையிடவேண்டியது"
ReplyDeleteNokia 2630-ல் தமிழில் காண இயல்வதாக காசி அவரின் வலைப்பூவில் தெரிவித்திருந்தார்.
அன்புடன்
இஸ்மாயில் கனி
செல்பேசியில் தமிழ் கொண்டுவருவதும், ஒருங்குரி எழுத்துக்கள் அதில் இயக்க சாத்தியப்படுத்துவதும் இணைய தமிழின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இருக்குமென கருதுகிறேன்.
ReplyDeleteபத்ரி இது போன்ற பதிவுகள் நீங்கள் நிறைய எழுத வேண்டுமென்பது எனது விருப்பம்.
- சென்னைத்தமிழன்