கோவிந்தா! கோவிந்தா!
நம்மூரில் மட்டும்தான் சினிமா எடுக்கும்போது நல்ல சினிமா ஒன்று எடுக்கவேண்டும் என்று யோசிக்கமாட்டார்கள் போல. என் மூஞ்சி எங்கப்பாத்தாலும் தெரியணும். கதை, வசனம், திரைக்கதை, டைரக்ஷன், பாட்டு எழுதறதும் நாந்தான், அத்தப் பாடறதும் நாந்தான்... லைட் பாயும் நாந்தான், கேட்டரிங்கும் நாந்தான். (பணம் மட்டும் இன்னோர்த்தன் போடுவான்.)
முதல் நாள் (அல்லது ரெண்டாவது நாள்) சத்யம்ல படம் பாக்க நண்பர் நாகராஜனுடன் - எப்படியோ டிக்கெட் வாங்கி வெச்சிருந்தார் மனுஷன் - போனேன். சிவாஜி படம்கூட இப்படி முத நாள் ஷோதான். காலைல அங்கயாவது பிரேக்ஃபாஸ்டுன்னு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல கொடுத்தாங்க. இப்ப மத்தியானம் போனதால யாரும் எதுவும் ஃப்ரீயா கொடுக்கல. ஃப்ரீயா கிடைச்சது தலைவலி மட்டும்தான்.
ப்ராஸ்தெடிக் மேக்-அப் மொத்தமாகப் பார்க்க சகிக்கவில்லை. இது இல்லை என்று யார் அழுதார்கள்? அதேபோல பத்து வேஷங்களும் தேவையாகவே தோன்றவில்லை. பஞ்சாவதாரம் அல்லது திரியாவதாரம்னு போட்டு கழுத்தறுப்பைக் குறைத்திருக்கக்கூடாதா? போதாக்குறைக்கு நேத்திக்கு கேடிவில சிட்டிசன் போட்டு மூடை மொத்தமா அவுட் பண்ணிட்டாங்க.
ராகவன் குருவியோட கம்பேர் பண்ணிருந்தார். இன்னமும் அந்த எழவை பாக்கலை. சத்யம் ஸ்டுடியோ-5ல கூவிக் கூவி கூப்பிட்டும் நேத்தி யாரும் போகலை. இன்னும் பத்து இருபது நாள்ள, தசாவதாரமும் ஸ்டுடியோ-5, சீசன்ஸ் அப்படின்னு ஏதாவது 40-50 சீட் இருக்கற ஸ்கிரீனாப் பாத்து போயிடும்.
இந்தப் படத்துல இது ஓட்டை, அது ஓட்டைன்னு லாஜிக் எல்லாம் பேசினா நொந்துடும்னு தோணுது.
11, 12-ம் நூற்றாண்டுல ஸ்ரீவைஷ்ணவர்களிடையே வடகலை, தென்கலை பிரிவுகள் ஆரம்பிக்கல. அதுக்கு பின்னால நேரம் இருக்கு. பிள்ளை லோகாசாரியார், தேசிகர், மணவாள மாமுனி எல்லாரும் வந்து அவங்கவங்க கொள்கை ரீதியா சண்டைபோட்டு, பின்னாடி நெத்தி ரியல் எஸ்டேட்டுல யூவா, ஒய்யான்னு குதியாட்டம் போடறதுக்கு முன்னாடி எந்த ஷேப்ல நாமம் போட்டாங்கன்னு யாருக்கும் தெரியாது. சரியான ரெகார்ட் இல்லை.
அந்த ஆரம்ப சீன் கப்ஸா தவிர, சுமாராத்தான் இருந்தது. பக்கத்துல நாகராஜன் இதுக்கு மட்டுமே கொடுத்த காசு போதும்னு சொல்லிகிட்டிருந்தாரு. அப்ப பேசாம அதோட திரும்பி வந்திருக்கலாம். அதுக்கப்புறம் டார்ச்சர், டார்ச்சர், டார்ச்சர். எப்படி ப்ராஸ்தெடிக் மாஸ்க் மூஞ்சில ஒட்டலையோ, அதேமாதிரி என்னால கதைல ஒட்டவே முடியலை.
இப்ப டிரெண்டே பல பேரை பயன்படுத்திட்டு கதை-திரைக்கதை-வசனம்ன்னு தன்னோட பேரைப் போடறதுதான் போல இருக்கு.
கதையை ஏற்கெனவே கட்டுடைச்சு சிலர் எழுத ஆரம்பிச்சிட்டாங்க. தலித் சாவறது, சுனாமியோட நோக்கமே சில ஆயிரத்தைக் கொன்னு, பல கோடியைக் காப்பாத்த + கடலோட போன கோவிந்தராஜரை மீட்க போன்றதையெல்லாம் அடுத்த சில நாள்கள் பலரும் பிரிச்சு மேய என் வாழ்த்துகள்.
கதை எங்க நடக்குதுன்னு ஒரே குழப்பம் எனக்கு. சிதம்பரத்துலேர்ந்து சிலையோட கமல்-2-வும் அசின்-2-வும் ஓட அவங்க பாண்டிச்சேரி பக்கம் போயிட்டு திரும்பி சிதம்பரம் பக்கம் வண்டியைத் திருப்பிகிட்டு வராங்கன்னு நினைக்கறேன். ஆனா அந்த டிரெய்னப் பாத்தா மெட்ராஸ் லோகல் எலெக்ட்ரிக் டிரெய்னாட்டம் இருக்கு. அது சிதம்பரம் வரைக்கும் போகுதா? சுனாமி தாக்குதல் சிதம்பரம் பக்கம் அதிகமாக இல்லையே? கடலூர்ல கொஞ்சம் இருந்தது. ஆனா இதெல்லாம் ஏன் என் தலைக்குள்ள ஓடிட்டே இருக்குன்னு புரியலை.
ஏதோ நாலு மேட்டர் உள்ள வரணும். ஒரு டிரெய்ன், ஒரு பஸ். 'சார் இங்க மோட்டார் பைக்ல ஒரு சேஸிங் இருந்தா நல்லாருக்கும்.' 'சரி செஞ்சுடுவோம்.' 'தோட்டா தரணி சாரை வெச்சு ஒரு சுனாமி சீன் போட்டா சூப்பரா இருக்கும்.' 'சரி, அப்படியே ஒரு சர்ச் இருந்தா அதுவும் சூப்பர்.' 'சரி, வேளாங்கண்ணி சர்ச் மாடலை எடுத்து அவரை செய்யச் சொல்லு.' 'அப்ப சரி, ஆனா அந்த கத்தோலிக்க சர்ச் மாடலை எடுத்து அதப்போய் சர்ச் ஆஃப் சவுத் இண்டியான்னு ஏன் எழுதிப் போட்டீங்க?' 'அதெல்லாம் கண்டுக்காதீங்க. சினிமான்னா இதையெல்லாமா பார்த்துகிட்டு.' 'அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.'
இந்தியால உள்ளூர் மேட்டரை கவனிக்கற இண்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்குப் பேர் இண்டெலிஜென்ஸ் பீரோ (IB). வெளியூர் மேட்டர்ல குட்டைய குழப்பறதுதான் RAW வேலை. அதாவது, CIA, FBI மாதிரி. அதனாலதான நம்ம ஈழத்துத் தோழர்கள், ரா, ரான்னு ராவிக்கிட்டிருக்காங்க. ராவா, சிபிஐயான்னா ரான்னு போடுவோம், புதுசா இருக்கும்னு யார் ஐடியா கொடுத்தாங்க?
மத்தபடி, பிரான்ஸ் நாட்டு அறிஞன் வால்ட்டேர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது.
'Music, to-day, is only the art of executing difficult things, and that which is only difficult cannot please long.'
ஒருத்தர் கஷ்டமான சில வேலைகளைச் செய்திருக்கார்ங்கற காரணத்துக்காக, ஆஹா, ஒஹோன்னு கொண்டாடமுடியுமா?
நீ என்ன உலக நாயகனா?
ஆமாம்.
blah blah blah, நாம எல்லோருமே உலக நாயகர்கள்தான். ஏன்னா, blah blah blah.
---*---
நமக்கு முதல் தேவை பணிவு. நாம போகவேண்டிய தூரம் அதிகம். மனசெல்லாம் ஆசை இருக்கு, ஆனா திறமை, உழைப்பு இன்னமும் நிறைய வேண்டும்ங்கற பணிவு. அது போதும்.
அந்தேரியில் மூன்று தினங்கள்…
6 hours ago
பத்ரி நவுத்திட்டீங்க. இவ்ளோ விஷயம் தெரிஞ்ச உங்களை ஏன் கமல் பயன்படுத்திக்கறதில்லை. இத்தனைக்கும் கமல் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் உங்க ஆபிஸ் இருக்கு.
ReplyDeleteபத்ரி நவுத்திட்டீங்க. ஆமா, இவ்வளவு விஷயம் தெரிஞ்ச உங்களை ஏன் கமல் பயன்படுத்திக்கறதில்லை. இத்தனைக்கும் கமல் வீட்டில இருந்து எட்டிப்பார்த்தா உங்க ஆபீஸ் தெரியுமே.
ReplyDeleteஃப்ரீயா கிடைச்சது தலைவலி மட்டும்தான்
ReplyDeleteThe above sentence is not visible in IE6.0, but seen on Firefox (with garbled Tamil fonts - still not sure how to fix it).
Varalaaru (Godfather) was such a hype by K S Ravikumar, who put his entire life savings, after the producer (of Vetaiyadu) backed out. Luckly he saved his land in Kinathukadavu and a Kalyana Mandapam in Peelamedu.
Rgds
Vijay
உணர்ச்சிக்கு நெருக்கமான எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபத்ரி,
ReplyDelete:-)
உண்மைய சொன்னாவே இப்படிதான்.
ReplyDeleteபடம் எனக்கும் பிடிக்கலைதான்... இருந்தாலும், எனக்கு இவ்ளோ கோவமெல்லாம் வரலை :-)
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஒட்டுமொத்த விமர்சனத்தையும் இரண்டு பந்திகளில் சொல்லி இருக்கிறீர்கள்.
///..இது இல்லை என்று யார் அழுதார்கள்? அதேபோல பத்து வேஷங்களும் தேவையாகவே தோன்றவில்லை. பஞ்சாவதாரம் அல்லது திரியாவதாரம்னு போட்டு கழுத்தறுப்பைக் குறைத்திருக்கக்கூடாதா? போதாக்குறைக்கு நேத்திக்கு கேடிவில சிட்டிசன் போட்டு மூடை மொத்தமா அவுட் பண்ணிட்டாங்க./
/ஃப்ரீயா கிடைச்சது தலைவலி மட்டும்தான்..//
:) :) :)
நினைச்சேன் :-)
ReplyDeleteதியேட்டர்ல, ஆரம்பத்துல கொஞ்சம் உங்க ரியாக்ஷனை கவனிச்சேன்.
அதுக்கப்புறம், உங்க பக்கமே நான் திரும்பலையே! :-)
நாங்கள்லாம், டான்சேராவையே முதல் நாள் உட்கார்ந்து முழுசா பார்த்தவங்க.
(டான்சேரா - ரஞ்சித் நடித்த படம்.வாஸ்தவ் என்ற இந்தி படத்தின் ரீமேக்.இந்தியில் சூப்பர் ஹிட்.தமிழில் படு-படு மட்டமா எடுத்திருப்பாங்க.அதை உங்களுக்கு டி.வி.டி-லயாவது காட்டணும்.அப்பதான் என் மனசு ஆறும்)
அதனால் எனக்கு தசாவதாரம் தசாவரம்.
என்னோட பார்வை (எனக்கு அப்படி ஒண்ணு இருக்கா?) :-)
- ஒரு product என்று பார்த்தால், இது சரியில்லை.இதை ஒரு முழு சினிமா என்ற productஆக பார்த்து அதிருப்தி அடையாமல்.. ஆங்காங்கே தென்படும், கமல் என்ற egoistic சினிமா வெறியனின் சில outstanding, bugless moduleகளை ரசிக்கலாம்.
- கமலுக்கு பணிவு வர்றது அவசியமான்னு படுது.கமல் இன்னும் வெகு தூரம் போக வேண்டியிருக்குன்னு ஒத்துக்குறேன்.ஆனா கமல் போன தூரத்துக்கு நம்ம ஊருல இன்னும் யாரும் போகல.
- எந்த காரணத்துனால இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையோ, அந்த காரணத்துனாலதான் இந்த அளவுக்காவது வந்ததுன்னு நினைக்கிறேன்.அது - கமலோட கர்வம்.இதுக்கப்புறம் வரும் கமலின் படைப்புகள் இதைவிட சிறந்ததாக அமையட்டும்.
- ஷங்கருக்கு பணிவு நிறையவே இருக்கு.அதனால கமல்கிட்ட இருந்து ஷங்கர் நிறைய கத்துக்கலாம்.. நம்ம ஊரு பட்ஜெட் லிமிடேஷன்ல எந்த அளவுக்கு அவசியமான பிரமாண்டத்தைக் கொண்டு வரலாம் எனபதை.
அடுத்து “நான் கடவுள்”. டிக்கெட் ரெடி பண்ணுவோம். :-)
நாகராஜன், பத்ரிய கூட்டிகினு ' நான் கடவுள்' ஆ?... அவர் பிதாமகனையே போட்டுக் கிழிச்சு தோரணங்கட்டினவரு... எதுக்கு ரிஸ்க் எடுக்கிறீங்க? :-)
ReplyDeleteபத்ரி, டாப்கியரில் எகிறுது விமர்சனம். :)))) படம் வருவதற்கு ஒருவருடத்திற்கு முன்பு ஒரு சின்னப் பெண் சொன்னாள், "ஒரு கமலையே தாங்க முடியாது ரோதனை. இதுல பத்தா" என்று. அப்போதும் இப்படித்தான் சிரித்தேன். நான் படம் பார்த்துவிட்டு எழுதுகிறேன். :)
ReplyDeleteபத்ரி உங்களின் கருத்துக்கள் கமல் ரசிகர்களை கோபம் கொள்ள வைக்கலாம் ஆனால் உண்மை என்னவோ நீங்கள் சொன்னதுதான். அமெரிக்காவில் ஹெலிக்காப்டர் சூட்டிங், பாம் பிளாஸ்ட், சேஸிங் எல்லாம் நடந்தும் அமெரிக்க போலிஸ் ஆளையே காணும் அமெரிக்காவில் நடக்கும் தமிழ்படம் என்பதால் கடைசியாக போலிஸ் வருகிறது போல் தெரிகிறது.நிறைய திரைக்கதை குழப்பங்கள் அன்பேசிவம் மகாநதி விருமாண்டி படங்களில் உள்ள தெளிவான திரைக்கதை ஏன் இப்படி இந்த படத்தில் அமையாமல் போய்விட்டது எனப்புரியவில்லை. ஆங்கில பட தினுசில் ஒரு மாறுவேடப்போட்டி பார்த்த உணர்வுதான் இருந்தது,
ReplyDeleteகமலுக்கு என்னகஷ்டமோ இப்படி ஒரு நல்ல வாய்ப்பில் சரியாக செய்யாமல் விட்டுவிட்டார்.
பத்ரி,
ReplyDeleteஇந்த படத்தை ஏன் இவ்வளவு சீரியஸாக விமர்சிக்க வேண்டும் என்று புரியவில்லை. எனக்கும் படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் உங்கள் கோபம் எனக்குப் புரியவில்லை.
படப்பிடிப்பு தொடக்கத்தில் இருந்தே இது ஒரு முழு மசாலா படம் என்று பல இடங்களில் கமல் சொல்லியுள்ளார். பத்து வேடங்கள் எதுக்கு என்று ஒரு NDTV நிருபர் கேள்விக்கும் அது ஒரு Gimmickகாக என்றும் சொன்னார். இதை எல்லாம் விட்டுவிட்டு படம் முழுவதும் தன் மூஞ்சி தெரிவதர்க்காகத்தான் இப்படி பத்து வேடங்கள் போட்டார் என்று சதி லீலாவதி போன்ற படத்தில் நடித்த ஒருவரை கூறுவது overt generalization. ஹே ராம் வெளிவந்த போது வட இந்திய மீடியாக்கள் எல்லாம் படத்தை விமர்சனம் பண்ணாமல் ‘படம் முழுவதும் கமலே' என்ற குற்றச்சாட்டையே திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
கமலோ அவரது egoவோ விமர்சனத்துக்கு அப்பார்ப்பட்டது என்று நான் சொல்லவில்லை. தசாவதாரம் அவரின் ஒரு மிகச்சுமாரான படைப்பு என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் ‘பணிவு வேண்டும்..போகும் தூரம் தொலைவு..' போன்ற பொத்தாம்பொதுவான முடிவுகளை திரைப்படம் சார்ந்த துறைகளில் இருந்து வெளியில் இருக்கும் நாம் முன் வைக்க வேண்டாம் என்பது என் அன்புக்கோரிக்கை.
இது ஒரு 'survival game'. மகாநதி, குணா, அன்பே சிவம் போன்ற படங்களில் விழுந்த அடிகளைத் தாங்கிக் கொண்டு மீண்டும் அதே போன்ற படங்களை செய்வதற்கு ‘தசாவதாரம்' போன்ற attention-grabbing gimmicks தேவை. அடிகளின் போது மௌனம் காத்த நாம் இந்த மாதிரி சறுக்களின்போது மிகவும் 'critical' ஆக நடந்து கொள்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிவதில்லை.
பின்னூட்டங்களைப் படிக்கையில் சிரிப்பாக இருந்தது. வெளியில் இருந்து ஒருவனின் சரிவை விமர்சிப்பது தான் எவ்வளவு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது. பின்னால் தான் எத்தனை ஒளிவட்டங்கள்! இவர்கள் தான் நாளை ‘கிழக்கு பல்ப் புத்தகங்களாகப் போட்டு தமிழ் பதிப்பகத்துறையையே dilute செய்து விட்டது' என்று எவனோ எழுதினால் அதற்கும் ஆமாம் போடுவார்கள். ஆதவன் கதைகளையும் இபாவின் நாடகங்களையும் சிரமத்துடன் தொகுத்து வெளியிட்டதும் கிழக்கு தான் என்பது இவர்களுக்கு மறந்திருக்கும்.
பத்ரி,
ReplyDeleteஉங்கள் பதிவை நிறையப் பேர் படிப்பதால் இந்த கருத்தை இங்கே பதியலாம் என்று தோணியது. இந்த பின்னூட்டத்தின் நீளம் கருதியோ, அல்லது உங்கள் பதிவின் நோக்கம் திசை திருப்பப்படும் என்ற எண்ணமோ இருந்தால், இதை நீங்கள் நிராகரிக்கலாம்.
-------------
இப்படத்தின் தொழில்நுட்பம், பல்வேறு வேடங்கள், கமல்ஹாசன் என்னும் பெரிய நட்சத்திரம் போன்ற விசயங்களை தள்ளி திரைக்கதையை பார்த்தீர்களானால் நிறைய அடுக்குகள் புரிகிறது.
அடுக்கு 1:
----------
கடலினடியில் ஏற்படும் techtonic plates-களின் உரசலினால் சுனாமி ஏற்படுகிறது என்று அறிவியல் சொல்கிறது. ஒரு சிறு அழுத்தம் காலம் காலமாக கூடிக்கொண்டே வந்து ஒரு சமயத்தில் அந்த தகடுகளை நகர்த்த அது சுனாமியாக வெளிப்படுகிறது. இந்த மாதிரியான நிகழ்தலுக்கு பல நூற்றாண்டுகள் ஆகலாம்.
அந்த சிறு கல் - ஒரு சிலை.
2004-ல் நடந்த பேரழிவு சுனாமி அதைவிட மிகப்பெரிய பேரழிவை nullify ஆக்குகிறது.
chaos theory-ன் அடிப்படையில் இப்படி ஒரு கற்பனையை முன்வைக்கிறது. பட்டாம்பூச்சியின் சிறகசைவை முதல் சில காட்சிகளில் காட்டுகிறார்கள்.
அடுக்கு 2:
----------
கோவிந்தராசப் பெருமாள் பண்ணிரெண்டாம் நூற்றாண்டில் கடலுக்கடியில் போய் உட்கார்ந்து கொள்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஒரு பெரும் உயிரியல் ஆயுதம் வெடிக்கும்பொழுது ஆழிப்பேரலையை உண்டாக்கி வெளிப்பட்டு உலகை இரட்சிக்கின்றார்.
அடுக்கு 3:
-----------
- ரங்கராஜன் - உலகை காப்பாற்ற வேதங்களை கடலுக்கடியில் கொண்டு மறைக்கும் மச்சமாக (மீனாக), இவர் ஒரு கல்லோடு கடலுக்கடியில் போகிறார்.
- கோவிந்த் - ஆமையை அச்சாக வைத்து பாற்கடலை கடைந்த்தால் வெளிவருகிறது ஆலகால விசம். இவரை அச்சாணியாக வைத்து நடக்கும் ஆராய்ச்சியில் ஆலகால விசத்தைப் போல் கொடிய விசம் உருவாகிறது
- வின்செண்ட் பூவராகன் - தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரம் பூமியை காப்பாற்றுகிறது. இந்த பூவராகன் மண்ணைக் காப்பாற்ற போராடுகிறார். செண்டிம்ண்ட் காட்சிகளுக்காக உயிர் துறக்கிறார். பின்னர் அக்ரஹாரத்து பாட்டி தன் மகன் ஆராவமுதனாக இனம் கண்டு சோகத்தை கரைக்கின்றார்.
- கபிபுல்லா கான் - மூன்றடி உயர வாமனர் தனக்காக மூன்றடி நிலம் கேட்டார். எட்டடி உயரமான இவரோ மசூதிக்காக தனது நிலத்தை கொடை செய்கிறார்.
- ஷிங்கேன் நரஹசி - இறுதியில் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார்.
- அவ்தார் சிங் - குரலை இழந்தாலும் உயிரை இழக்க சம்மதிக்கவில்லை. மனைவி மேல் உள்ள பாசம். மனைவியை காட்டுக்கு அனுப்பிய அவதார புருஷன் இராமனின் செய்கை தவறு என்பதால் இந்த அவ்தார் புருஷன் இந்த முடிவை மேற்கொள்கிறார் போல :-)
- பல்ராம் நாயுடு - தசாவதாரக் கதைகளில் பலராமருக்கு தனிக் கதை கிடையாது. அதே போல் இவரும் தனி கதை எதுவும் இல்லாமல் படத்தில் ஒரு துணைப் பாத்திரமாகவே வந்து போகிறார் (பூவராகவன், கபிபுல்லா, அவ்தார், நரஹசி எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது)
- கிருஷ்ணவேணி - பெயரில் கிருஷ்ணர் வருகிறார்.
Fletcher - உலகை அழிக்க வரும் கல்கியோ இவர்? உலகம் அழியவில்லை. அதனால் இந்த இறுதி அவதாரம் எடுக்கப்படவில்லை.
கற்பனைக்குதான் எல்லையே இல்லையே. :-))
\\இது ஒரு 'survival game'. மகாநதி, குணா, அன்பே சிவம் போன்ற படங்களில் விழுந்த அடிகளைத் தாங்கிக் கொண்டு மீண்டும் அதே போன்ற படங்களை செய்வதற்கு ‘தசாவதாரம்' போன்ற attention-grabbing gimmicks தேவை\\
ReplyDeleteஉண்மை
பின்னூட்டம் வெளியிட்டமைக்கு நன்றி.
ReplyDeleteவிடுபட்டுப் போனது - கண்ணில் பட்ட சத்ரியர்களை எல்லாம் போட்டு தள்ளின பரசுராமர் இங்கு விடுபட்டு போன மாதிரிதான் தெரிகிறது.
எல்லாம் சரியாக இருக்க எலிமெண்டரி ஸ்கூல் பாடபுத்தகமாக இருக்க வேண்டிய அவசியமில்லையே.
//இது ஒரு 'survival game'. மகாநதி, குணா, அன்பே சிவம் போன்ற படங்களில் விழுந்த அடிகளைத் தாங்கிக் கொண்டு மீண்டும் அதே போன்ற படங்களை செய்வதற்கு ‘தசாவதாரம்' போன்ற attention-grabbing gimmicks தேவை. அடிகளின் போது மௌனம் காத்த நாம் இந்த மாதிரி சறுக்களின்போது மிகவும் 'critical' ஆக நடந்து கொள்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிவதில்லை.
ReplyDelete//
அருமையா சொன்னீங்க baraka!
அன்பே சிவம் ,மகாநதி படங்கள் வெகுஜன மக்களால் நிராகரிக்கப்பட்ட போது இதே அறிவுஜீவிகள் அதை 2 வருடம் கழித்து டிவியில் ஓசியில் பார்த்து விட்டு ஆகா ஓகோ-ன்னு புகழ்ந்தது இன்னும் மறக்கவில்லை .
போதாத குறைக்கு இதே ஹரன் பிரசன்னா போன்றவர்கள் மகாநதி ,அன்பே சிவம் ஓடாததற்கும் கமலை கிண்டல் செய்திருப்பார்கள் .
ஜோ, கிண்டல் செய்திருப்பார்கள் என்கிற யூகங்களெல்லாம் வேண்டாம். மகாநதி கமலின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.
ReplyDeleteஆளாளுக்கு அன்பே சிவத்தைத் தலையில் வைத்துக்கொண்டாடுகிறீர்கள். அது ஒரு சாதாரணமான திரைப்படம்.
கமலின் தோல்வியின்போது மௌனம் காத்தார்களா? அது என்ன புதிய கதை? கமலின் தோல்வி ஒவ்வொன்றிலும் ஒரு சிறந்த படம் இருந்தது. மகாநதி, குணா, ஹேராம் (தமிழின் சிறந்த படம் ஹேராம் என்பதே என் தனிப்பட்ட எண்ணம்) என வரிசையாக ஒவ்வொரு தோல்வியிலும் ஒவ்வொரு நல்ல படம். பின்னர் ஒவ்வொரு வெற்றியிலும் குப்பைகள் வரத்தொடங்கிவிட்டன. அதைத்தான் பேசுகிறோம்.
இங்கே சிரிக்கிறார்கள் என்று பராகா ரொம்ப வருத்தப்படுகிறது. சிரிப்பது பத்ரியின் விமர்சனத்தின் பாணிக்காக.
அதனால் ஹரன்பிரசன்னா தாஜ்மகால் கட்டியிருப்பார், கல்லணை வெட்டியிருப்பார் என்றெல்லாம் பேசாமல், என்ன செய்தாரோ அதை மட்டும் சொல்லவும்.
நன்றி.
//இங்கே சிரிக்கிறார்கள் என்று பராகா ரொம்ப வருத்தப்படுகிறது//
ReplyDeleteவருத்தப்படுகிறார் என வாசிக்கவும். ஸாரி.
தசாவதாரம் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்பது புரிகிறது :-)
ReplyDeleteகமல்ஹாசன் என்ன செய்தாலும் ரஜினி ரசிகர்கள் திருப்திபட்டு விட மாட்டார்கள்.
தசாவதாரம் ஒரு மூணேகால் மணி நேர “சும்மா டைம்பாஸ் மச்சி!”
ஈரானிய, கொரிய மொழி படங்களை புரியாமலேயே பார்த்து ஆஹா, ஓஹோ என்பவர்களுக்கு தசாவதாரத்தை பார்த்தால் கேவலமாக தானிருக்கும்.
தசாவதாரத்தை இந்தியப் படங்களோடு ஒப்பிட்டு தரமாக இருக்கிறதா என்று சொல்லுவது தான் நியாயமாக இருக்கும்!
சிவாஜியும் நிறைய டுபாக்கூர்தான் என்றாலும் நிச்சயம் தசாவதாரத்தைவிட சுவாரசியமாக இருந்தது! இரண்டாவது முறை குடும்பத்தோடு சென்று பார்த்தேன். இன்னொரு முறை பார்ப்பதற்கும் தயங்கமாட்டேன் (சிட்டியில் எங்காவது ஓடுகிறதா என்ன?)
ReplyDeleteஆனால் தசாவதாரம் இன்னொரு முறை பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்!
இந்த ஆண்டு வந்த படங்களில் அஞ்சாதே, சந்தோஷ் சுப்ரமணியம் ரெண்டும்தான் தேறியுள்ளது - என்பது என் + பாக்ஸ் ஆஃபீஸ் கருத்து.
எனது கேள்விகள் தனிப்பட்ட நபர்களை நோக்கி அல்ல. பத்ரியின் விமர்சனம் எழுப்பும் கேள்விகளைத் தொடர்ந்தே எனது பின்னூட்டத்தை அளித்தேன்.
ReplyDeleteதமிழ்ச் சூழலில் விமர்சனத்தளம் ஒற்றைப்படையாக அடர்த்தி இல்லாமல் இருக்கிறது. என்னைப் பொருத்த வரையில் ஒரு விமர்சனத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது ‘empathy'. விமர்சனம் எவ்வளவு காட்டமாகவும் இருக்கலாம்.ஆனால் ஒரு progressiveஆன விமர்சனம் ஒரு பிரச்சனையின் பல அடுக்குகளை விமர்சித்து விமர்சித்து மேலே செல்லும்.
தசாவதாரத்தயே எடுத்தும் கொள்வோம். படம் மோசம் தான்.
screenplay இன்னும் கொஞ்சம் tightஆக இருந்திருக்க வேண்டும். பத்து கதாபாத்திரங்களின் pacingஇல் தவறுகள். கியாஸ் தியரியிலிருந்து psuedo-scienceஆக திரிபுகள். மூச்சிக்கு முன்னூறு தடவை ‘பெருமாள் பெருமாள்' என்று சொல்லி எரிச்சல்படுத்தும் அசின் கதாப்பாத்திரம். மற்றும் பல.
பத்து கதாபத்திரங்கள் எதற்கு? அதானால் தானே எல்லா பிரச்சனைகளும்? கமல் முயற்சித்தது இதுவே - Audience identityயை reverse செய்து audienceயையும் படத்தின் கதாபத்திரங்களோடு participate செய்ய வைப்பது.இது Anti-Cinema. அதனால் தான் இதை ஒருவகை gimmick என்று கமல் முதலில் இருந்து கூறி வருகிறார். அந்த gimmickஇன் executionஇல் பல குளறுபடிகள். அதனால் தான் படம் மோசம். அந்த gimmickகே மோசம் என்று கூறுவது அதன் அவசியத்தை புரிந்து கொள்ள முயறச்சிக்காமல் நாம் வைக்கும் ஒரு வகை totalitarian விமர்சனம்.
“நீ என்ன உலக நாயகனா?
ஆமாம்.
blah blah blah, நாம எல்லோருமே உலக நாயகர்கள்தான். ஏன்னா, blah blah blah.”
இது பத்ரியை எரிச்சல் படுத்தியிருக்கலாம். இந்த வசனத்தை இப்படத்தில் வைத்து மகிழ்வுருவதற்கு கமல் என்ன அத்தனை பெரிய egomaniacஆ என்று கொஞ்சம் யோசித்தால் அந்த வசனம் படத்தில் வந்ததர்க்கான காரணம் புரியும். நம் கோபமும் குறையும்.
கமலைச் சுற்றி ஜால்ராக்கள் இருக்கலாம். தன்னைச் சுற்றியே தன்னை மய்யப்படுத்தியே யோசிப்பவராகவும் அவர் இருக்கலாம். அது பத்ரியை பாதித்து இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி விமர்சனம் எவ்வகையிலும் progressiveஆக இருக்க வாய்ப்புகள் குறைவு. மேலும் பல ஜால்ராக்கள் அவரை சூழக்கூடும். மேலும் மேலும தனித்து் போய்க்கொண்டு இருப்பார்.
பாராகாவின் கருத்துக்கு நான் முழுவதும் உடன்படுகிறேன். பத்ரியின் விமர்சனம் முழுக்க onesided ஆக இருக்கிறது. மவனே இந்தப் படத்தை கிழித்து தொங்கப் போட்டுடணும்டா' என்கிற முன்முடிவோடு படம் பார்த்தால் இப்படித்தான் விமர்சனம் வரும். குறைகளைப் பத்தி பத்தியாக எழுதும் நீங்கள் நிறைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும். நிறைகளே இல்லை என்பதுதான் உங்கள் பதிலாக இருக்குமானால் சாரி, உங்கள் பார்வையில்தான் ஏதோ கோளாறு.
ReplyDeleteபாராகாவின் பின்னூட்டம் சரியாக இருந்தது. நாகராஜனுடையதும் அப்படியே. பத்ரியின் விமர்சனம் முழுக்க onesided ஆக இருந்தது. ‘மவனே, இந்தப் படத்தை நார் நாரா கிழிச்சு தொங்க விடணும்டா' என்ற முன்முடிவோடே பத்ரி படம் பார்த்திருப்பார் போல. அது அவரது விமர்சனத்தில் அப்பட்டமாக தெரிகிறது, கமலின் மேக்கப்பை போல. கிரிட்டிகல் என்ற பெயரில் குறைகளைப் பட்டியலிட்ட அதே சமயம் நிறைகளையும் சொல்லியிருக்கலாம். நிறைகளே இல்லை என்பதுதான் உங்களது பதிலாக இருக்குமானால் சாரி, உங்களது பார்வையில்தான் ஏதோ கோளாறு
ReplyDeleteஎன்னது நாகராஜன் டிக்கெட் 'வாங்கிட்டு'வந்தாரா? ஜி போஸ்ட்டிலே ரெண்டு டிக்கெட் கொடுத்த மேட்டரை போடவேயில்லையே?!
ReplyDelete****
லக்கியாரே... சம்பந்தமேயில்லாமல் ரஜினி ரசிகர்களை இங்கே இழுக்க வேண்டாம். கமல் ரசிகர்கள் (இருக்காங்களா?) சிவாஜியின் போது கிளப்பி விட்ட புரளிகளை திரும்ப பார்க்கலாமா?
***
நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை. எந்த முட்டா பயலாவது (வார்த்தை பிரயோகம் நன்றி : லக்கியார்), படம் ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து தள்ளி இந்தப் படத்தை பார்த்தால் உன்னுடைய ஜென்ம சாபல்யம் அடைந்து விடுவாய் என்று சொன்னாலும் பார்ப்பதாக இல்லை.
என்னுடைய டேஸ்ட் என்னவென்று எனக்குத் தெரியும். அதை விட்டு விட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் (முக்கியமாக நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்கள்) முட்டாள்கள் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு நான் மட்டும் கை தட்டி ரசிக்கும்படி நடிக்கத் தோன்றவில்லை.
***
உலகத் தரமாம், யாருக்கு வேணும்? அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்.. சரி வேண்டாம், சிங்கப்பூரில் லீ க்வான் யூ இருந்தார்.. உலகத் தரத்தில் நாட்டை கொண்டு சென்றார். உங்கள் தலைவரிடமும் லீ க்வான் யூ மாதிரி உலகத் தரத்தில் தமிழ் நாட்டை கொண்டு செல்லுங்களேன் என்று சொல்லுங்களேன். அல்லது லீ க்வான் யூ தான் சூப்பர் மத்தவனெல்லாம் முட்டா பயலுங்க என்று பகிரங்கமாக சொல்லுங்களேன்.
***
நாங்க எல்லாம் உள்ளூர் டீயை ரசிச்சு குடிக்கிறவங்கப்பா.. எங்களுக்கு இதுவே தேவாமிர்தம். உலக டீ தர்றோம் என்று எந்த கண்றாவியையோ கலந்து கொடுத்து வயிற்றைக் கலக்கி வா*தி, பே* ஆகிடற மேட்டரெல்லாம் வேண்டாம்.
ஜோ மாதிரியான நண்பர்கள் கமலஹாசனைப் பற்றியோ அவரது படத்தைப் பற்றியோ, அதையும் வேலை மெனெக்கெட்டு பார்க்கிற ஓரிரண்டு பேர்களைப் பார்த்து துள்ளி எழுவார்கள். ஆனால் வெகுஜன விருப்பங்களை ஒதுக்கித் தள்ளி சிவாஜி போன்ற படங்களை கண்டபடிக்கும் விமரிசிப்பார்கள்.
***
ம்.. பத்ரி சார்.. நல்ல வேளை, நீங்க ரொம்ப ஸ்டெடி. குருவி பாத்துட்டு நம்ம முதல்வர் கதி என்னாச்சு தெரியுமில்ல? அதுக்கப்புறம் தான் அவரு போதும்டா சாமின்னு இந்தப் படத்தை அரை மணி நேரம் மட்டும் பாத்துட்டு தப்பிச்சிட்டாரு.
மாயவரத்தான்: அந்த ஜிபோஸ்ட் டிக்கெட்டைக் கொண்டு நாகராஜன் ரெண்டாவது தடவையா அந்தப் படத்தைப் பார்த்துட்டார். இன்னும் எட்டு பாக்கி இருக்கு!
ReplyDeleteஇன்னும் எட்டு பாக்கி இருக்கா? இப்படி போட்டுக் கொடுத்திட்டீங்களே பத்ரி சார். இன்னும் ஏழெட்டு நாளைக்கு நாகராஜன் பக்கத்திலே ஒருத்தரும் வர மாட்டாங்களே. யார்கிட்டயாவது அந்த டிக்கெட்டை தள்ளி விட்டுடுவாரோன்னு தெரிச்சு போய் ஓடிடுவாங்க. (நாகராஜன் சார், ஏழெட்டு நாளிலே டிக்கெட்டை தள்ளி விட்டாதான் உண்டு பாத்துக்குங்க!)
ReplyDeleteம்ஹூம். தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க மாயவரத்தானே. நாகராஜன் இன்னும் 8 தடவை அந்தப் படத்தைப் பாக்கப் போகிறார்.
ReplyDeleteஎன்னை வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே? :-)
ReplyDeleteஔவ்வ்வ்..... :-(
பத்ரி கலக்கீட்டீங்க. நாகராஜன் ஒரு தெய்வப்பிறவி. இந்த படத்தை 10 தடவை பார்த்தால் சும்மாவா
ReplyDeleteஅன்புள்ள பத்ரி,
ReplyDeleteவிமர்சனம் கண்டு கொஞ்சம் வருத்தம் அடைந்தேன். கமல்ஹாசனும் முழு யூனிட்டும் இந்தப் படத்துக்கு உழைத்த உழைப்பு எனக்கு அணுஅணுவாகத் தெரியும். தமிழிலும் தெலுங்கிலும் பெருவெற்றி அடைந்து கொண்டிருக்கிறது தசா. கர்மயோகியாக அடுத்த படமான மர்மயோகிக்கான வேலைகள் சுறுசுறுப்பாகத் தொடங்கப் பட்டிருக்கின்றன.
இரா.முருகனின் பின்னூட்டம் எனக்கு சிரிப்பை தான் வரவழைத்தது.
ReplyDelete"வேன் எல்லாம் வெச்சு கடத்திட்டு வந்திருக்கோமுங்க. கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க" என்று (கவுண்டமணி) செந்தில் ஜோக் நியாபகம் இருக்கிறதா?
2011ம் ஆண்டின் சூப்பர் ஆக்டர், உலக மகாநாயகன் ரித்திஷ் கூட தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்.
கஷ்டப்பட்டு நடித்ததால் விமரிசனம் செய்யக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா முருகன் சார்.
அது சரி, முருகன் சார் எப்போ கமலுக்கு பி.ஆர்.ஓ.வாக ஆனார்?!
பதிவுக்கு சம்பந்தம் இருக்கான்னு தெரியல. ஆனாலும் என்னுடைய நண்பரின் மகனின் விமரிசனம்.
ReplyDelete"குருவி படம் தான் சூப்பரு தெரியுமில்ல? எண்பத்தஞ்சு வயது தாத்தாவே எங்காளு படத்தை முழுசா ஒக்காந்து பாத்தாரு. ஆனா இந்தப்படத்தை அரை மணி நேரத்துக்கு மேல பாக்க முடியாம தல தெறிக்க ஓடிட்டாரு தெரியுமில்ல?!"
//ஜோ மாதிரியான நண்பர்கள் கமலஹாசனைப் பற்றியோ அவரது படத்தைப் பற்றியோ, அதையும் வேலை மெனெக்கெட்டு பார்க்கிற ஓரிரண்டு பேர்களைப் பார்த்து துள்ளி எழுவார்கள். ஆனால் வெகுஜன விருப்பங்களை ஒதுக்கித் தள்ளி சிவாஜி போன்ற படங்களை கண்டபடிக்கும் விமரிசிப்பார்கள்.//
ReplyDeleteநண்பர் மாயவரத்தான் என்னுடைய 'சிவாஜி' விமர்சனத்தை படித்துப் பார்த்து விட்டு முடிவு செய்யவும்
தசாவதாரம் ஒன்றும் மகாநதி போன்ற அற்புதமான படம் என்ரு யாரும் இங்கு சொல்லவரவில்லை.
ஆனால் அத்தைய படங்கள் வரும் போது வெகுஜன மக்களால் நிராகரிக்கப்படும் போது ,உங்களைப் போன்றோர் வணிகரீதியாக கமலஹாசனை எவ்வளவு வாரி சந்தோஷப்பட்டீர்ல்கள் ..இப்போது பழிக்கு பழி.. தசாவதாரத்தின் வசூல் நிலவரம் உங்களுக்கு வயித்தெரிச்சலை உண்டு பண்ணினால் நான் என்ன பண்ண?
மலேசியாவில் இரண்டு நாள் வசூல் அமெரிக்க டாலர் $601,037.
http://www.boxofficemojo.com/intl/malaysia/?yr=2008&wk=24&p=.htm
மாயவரத்தான்,
ReplyDeleteஜெலுசில் மாத்திரை பலன் தரும்.
நண்பர் மாயவரத்தானுக்காக என் 'சிவாஜி' விமர்சனம்
ReplyDeletehttp://cdjm.blogspot.com/2007/06/blog-post.html
ஆக, மர்ம்யோகியில் டிஸ்கஷ்னில் பங்கு பெறுவது இரா.முருகன் என்பது உறுதியாகிவிட்டது.இதை இட்லிவடை பெயர் சொல்லாமல் எழுதியிருந்தார்.இரா.முருகன்ஜி எல்லாப் படங்களும் கடும் உழைப்பில்தான் உருவாகின்றன.
ReplyDeleteஅதற்காக எல்லாவற்றையும்
கொண்டாட முடியுமா. குத்துப்
பாட்டிற்கும் கடும் உழைப்பு தேவை.
குண்டடி பட்டால் கான்சர் குணமாகிற
‘மாஜிகல் ரியலிசம்' உங்களுக்கு
பிடித்திருக்கலாம்.சிலருக்குப்
பிடிப்பதில்லை. திரைக்கதையில்
ஏகப்பட்ட ஒட்டைகள்.பத்ரி சில
குறைகளை பட்டியலிட்டுள்ளார்.
உலகத் தரத்தில் படமெடுக்கிறவர்கள்
டெக்னாலாஜி ஜில்லாங்கடி வேலைகளை செய்வதால் திரைக்கதை
கோளாறுகள் காணாமல் போய்விடும்
என்று நம்பினார்களா.பெரிய கான்வாஸில் பெரிய அளவில் செயல்படும் போது குறைகள் வரும்,
அதற்காக இப்படியா. எப்படியோ
மர்மயோகியிலாவது லாஜிக் இல்லாத
மாஜிக்களை குறைத்தால் நல்லது.
பிரகாஷ்”படம் எனக்கும் பிடிக்கலைதான்... இருந்தாலும், எனக்கு இவ்ளோ கோவமெல்லாம் வரலை :-)”
ReplyDeletepost-marriage effect :)
நாகராஜன், பத்ரிய கூட்டிகினு ' நான் கடவுள்' ஆ?...
ReplyDeletewhy not ask jeyamohan to join you in this :)
”ம்ஹூம். தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க மாயவரத்தானே. நாகராஜன் இன்னும் 8 தடவை அந்தப் படத்தைப் பாக்கப் போகிறார்.”
ReplyDelete10 தடவை தசாவதாராம் பார்க்கிறாரா.
இதற்கெல்லாம் இன்ஷுரன்ஸ் இருக்கிறதா :)
படத்தை இரண்டாவது தரம் பார்த்தேன். சூப்பர்!!! இன்னும் பத்து தடவை பார்க்க திட்டமிட்டிருக்கிறேன்! டிக்கெட் தான் கிடைக்கவில்லை. நாகராஜன் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்.
ReplyDelete/////லக்கியாரே... சம்பந்தமேயில்லாமல் ரஜினி ரசிகர்களை இங்கே இழுக்க வேண்டாம். கமல் ரசிகர்கள் (இருக்காங்களா?) சிவாஜியின் போது கிளப்பி விட்ட புரளிகளை திரும்ப பார்க்கலாமா?/////
சிவாஜி படத்தை சிறந்த படமாக தான் நான் வலையில் எழுதி இருந்தேன். எவனோ எழுதியதற்கு உங்களுக்கு எங்கெல்லாமோ எரிந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது மாயூ!
//நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.//
மாயூ! நீங்கள் தசாவதாரம் பார்ப்பதை யாருமே விரும்பவில்லை :-)
பத்ரி
ReplyDeleteஏகமான எதிர்பார்ப்புகளோடு, முன்முடிவுகளோடு போய் உட்கார்ந்து பார்த்து எக்கச்சமாக ஏமாந்துவிட்டு அந்தக் காண்டில் உட்கார்ந்து விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஹே ராம், மஹாநதி, குணா, சலங்கை ஒலி வரிசையில் தசாவும் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்தீர்களோ? 'தசாவதாரம்' என்று படத்தின் பெயரை முடிவுசெய்துவிட்டுக் கதையைப் பின்னும்போது 'பத்து வேடம் போடலைன்னு யார் அழுதா?' என்று கேட்டால் என்னத்தைச் சொல்ல? "நவராத்திரிக்குப் பதிலாக 'திரி'யை மட்டும் வைத்துக்கொண்டு சிவாஜி மூன்று வேடங்களில் நடித்திருக்கலாமே" என்று சொல்வதைப் போல இருக்கிறது. இருக்கிற வசதிகளை வைத்து, ப்ராஸ்தடிக் மாஸ்க்கை வைத்துச் சமாளிக்காமல் பத்து வேடத்திற்கும் ஒரு வண்டு போன்ற மச்சத்தை முகத்தில் ஆங்காங்கே இடம் மாற்றி வைத்துச் செய்திருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? புரியவில்லை.
படத்தில் ஒரு நிறை கூட உங்களின் கண்ணுக்குத் தட்டுப்படாமலிருப்பதைப் பார்த்தால் நீங்கள்தான் ப்ராஸ்தடிக் மாஸ்க் போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
அவர் நல்ல படம் கொடுத்தால் தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போடச் செய்கிறோம். இப்போது தசா மாதிரியான அட்டகாசமாக வசூல் மழையைப் பொழியும்படி ஒரு பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்தால் அவரைப் போட்டுச் சாத்தியெடுக்கத் தலைப்படுகிறோம்.
ஆனால் ஒன்று. இணையத்தில் காணக்கிடைக்கும் 'மகா கமல் வெறுப்பு' விமர்சனங்களைப் பார்க்கும்போது உங்களது எவ்வளவோ மேல்.
மர்மயோகி முடிச்சுட்டு மருதநாயகம் பண்ணப்போறேன்னு சொல்லிருக்காரு. இன்னும் எம்புட்டு பேரு கோர்ட்டு கேஸுன்னு கெளம்பப் போறாய்ங்களோ!
கமலுக்கு வேண்டியதுதான். என்னமோ போங்க.
தமிழ் சினிமாக்களில் ஜியாக்ரபி என்பது என்றுமே இருந்தது இல்லை. கமல் படங்கள் ஒன்றும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
ReplyDeleteகமல் பிரமாண்டத்தின் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு உருப்படியாகப் படங்களைத் தருவது நல்லது. பிரமாண்டமாகப் படம் எடுப்பதற்கு மணிரத்னமும் ஷங்கரும் இருக்கிறார்கள். ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் எளிமையாகப் படம் எடுத்தாலே போதுமானது. மக்களுக்குப் படம் பிடித்திருந்தால் வசூலைக் குவிக்கப் போகிறார்கள்.
ReplyDeleteராஜபார்வையையும், நெஞ்சத்தைக் கிள்ளாதேயையும், அழியாத கோலங்களையும், பதினாறு வயதிலேயையும், அவள் அப்படித்தானையும் மறுபடியும் தமிழ் சினிமா எப்போது தரப் போகிறது?
கமல் த்ரூfஓ, கோதார், ஷாப்ரோல், ரோமர், ரே, ரித்விக் போல் ஆழமான, பொருள் பொதிந்த படைப்புகளை எப்போது தரப் போகிறார்?
மேக்கப், கம்ப்யூட்டர் கிராபிக்சைப் பெரிதாகப் பேசுவதை எல்லோரும் நிறுத்தினால் நல்லது. நல்ல திரைப்படத்திற்கு முக்கியமான தேவை கதை.
இவ்வளவு நாள் தன்னை நாத்திகனாகக் காட்டிக்கொண்டுவிட்டு இப்போது கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் நல்லதுதான் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது. யார் எப்படிப் பாராட்டினாலும் தசாவதாரத்தின் கதை உலகம் சுற்றும் வாலிபனை சாமர்த்தியமாகத் தழுவியதுதான் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
தமிழ் சினிமாக்காரர்கள் கதை பண்ணுவதை விட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் கதைகளுடன் திரிந்துகொண்டிருக்கும் கதாசிரியர்களைப் பயன்படுத்திக்கொள்வதே நல்லது.
Any of you read Angels and Demons? Please do, then you'll not be so churned up by this movie:)
ReplyDeleteகமலை ஒரு விஷயத்திற்காகப் பாராட்டலாம். வரலாற்றுக் கருப்பொருள்களை மையமாக வைத்துப் படம் எடுப்பதற்காக. வேறு யார் தமிழில் வரலாற்றுப் படங்கள் எடுக்கிறார்கள்? முன்பு ஹே ராம். இப்போது தசாவதாரம் (சைவ-வைணவ மோதல்).
ReplyDeleteஏற்கனவே எழுதப்பட்டு லட்சோப லட்சம் வாசகர்களால் படிக்கப்பட்டுவிட்ட ஒரு கதை காத்திருக்கிறது கமல் புகுந்து விளையாடுவதற்காக. எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் அது உலகம் முழுவதும் பார்க்கப்படும், பேசப்படும் படமாக அமையும்.
இக்கதையைப் படம் எடுப்பதை ஒரு சவாலாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். கமல் முயற்சித்துப் பார்க்கலாமே.
அமரர் சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்!"
நண்பர்களே,
ReplyDeleteதசாவதாரம் படத்தை பற்றி எனது சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஒரு கமல் ரசிகன். ரஜினி ரசிகனும் கூட. தசாவதாரம் பற்றிய தகவல்களை இரண்டாண்டுகளாக ஊடகங்களில் படித்து, படித்து மிகவும் எதிர்பார்போடு இருந்தேன். ஆனால்..... படத்தை பார்த்துவிட்டு மிகவும் வருத்தமடைந்தேன்...பத்ரி சொன்னது போல் தலைவலி தன் வந்தது. ஏன் பத்து பாத்திரங்கள் என்று புரியவில்லை. முஸ்லிம் ஆகா வரும் கமல், ஜப்பான் கமல் எதற்கு எண்டு புரியவில்லை..அசின் எரிச்சல்!!! ..கிளாஸ் ஆனா படங்களை எடுக்கும் கமல் மாஸ் ஆகா வேண்டும் என்று அசைபட்டரோ என்று தெரியவில்லை.
கமல் தனது உழைப்பை நல்ல கதையுள்ள திரைப்படங்களை எடுப்பதில் காட்டலாம். இந்த படத்தில் நல்ல அம்சங்களாக ஒளிப்பதிவு, ஆர்ட், கமலின் நடிப்பு ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் திரைக்கதை சரியில்லாத காரணத்தினால் இவை எல்லாம் மனதில் நிற்கவில்லை என்பதே உண்மை.
இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை மதன் திரைபார்வயிலும், ஹசினியின் பேசும் பட நிகழ்ச்சியிலும் கண்டு களித்தேன். புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.... மற்ற படங்களை எல்லாம் காட்டமாக விமர்சிக்கும் மதன் இந்த படத்தில் குறைகளை பார்த்து பார்த்து தேட வேண்டியிருக்கிறது என்கின்றார். கமலின் படம் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு தலை பட்சமாக விமர்சனம் செய்கின்றனர். ஆனாலும் படம் நல்ல வசூலை தந்திருப்பதாக சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சியே...இது கமலுக்கு ஊக்கத்தை கொடுக்கும். ஆனால், மறுபடியும் இதே போன்று படம் எடுக்காமல் இருக்க கமலை வேண்டுகிறேன்.
பத்ரிக்கு...
இந்த படத்தை மட்டும் வைத்து கமலின் திறமையையோ, உழைப்பையோ எடை போடுவது தவறு...அவர் என்றென்றும் உலக நாயகன் தன்...உலக நாயகன் தான்...அதில் சந்தேகமே இல்லை...
( ரஜினி கூடத்தான் 'பாபா' என்றொரு படத்தை எடுத்தார்...நன்றாக இல்லை...அதனால் அவர் சூப்பர் ஸ்டார் என்றில்லை என்று ஆகிவிடுமா?)
dont criticise others try to change urself
ReplyDelete