பில் கேட்ஸ் என்று உலகெங்கும் அறியப்படும் கணினி மென்பொருள் விற்பன்னர். மைக்ரோசாஃப்ட் என்னும் மாபெரும் கணினி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியவர். தனது 52-வது வயதில், இன்றுடன் தனது தினசரி அலுவல்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். தன்னிடம் இருக்கும் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் காரணமாக நிறுவனத்தின் non-executive chairman-ஆகத் தொடர்ந்து இருப்பார்.
பில் கேட்ஸ்மீது பலருக்கு தீராக் காதலும் மிச்சம் உள்ளவர்களுக்கு கடும் வெறுப்பும் உண்டு. தசாவதாரம் படம் பார்த்தவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
பில் கேட்ஸ் கணினி மென்பொருள் எழுதுவதில் மாபெரும் மேதை என்று சொல்லமுடியாது. கணினி இயக்குதளங்கள், நிரல் மொழிகள், மென்பொருள் பேக்கேஜ்கள், கணினி உலகில் புதுச் சிந்தனைகள் என்று எதுவும் இவரிடமிருந்து வந்தது கிடையாது.
இவரது வெற்றியின் ரகசியம், விடாமுயற்சி, தளராமை, எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற வெறி. பிறரது உழைப்பையும் பிறரது சிந்தனைகளையும் தனதாக்கிக்கொண்டு அவற்றுக்கு விற்பனை முலாம் பூசி, வர்த்தக அளவில் பெரும் சாதனை புரிந்தவர்.
ஐ.பி.எம் நிறுவனம் செய்த சில தவறுகளால் பில் கேட்ஸுக்கு அடித்தது லக்கி பிரைஸ். தொடர்ந்து அவர் தவறுகள் செய்தபோதெல்லாம், பிறர் அந்தத் தவறுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளாததால் அவருக்கு இன்றுவரை அதிர்ஷ்டம் தொடர்ந்துள்ளது.
இன்று மைக்ரோசாஃப்ட் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல.
முதலாவதாக கூகிள் என்னும் அதிவேகமாக வளரும் இணையச் சேவை நிறுவனம். கணினி என்பது நிஜமாகவே வெறும் ஜன்னல்போலத்தான் என்பதை நிரூபித்துள்ள நிறுவனம். ஜன்னலுக்குப் பின்புலத்தில் கணினியின் இயக்குதளமோ, மென்பொருள்களே அவசியமே இல்லை, தடியான ஓர் இணையக் குழாய் போதும் என்கிறது கூகிள். அப்படியென்றால் மைக்ரோசாஃப்ட் ஒரு டம்மி. கூகிள் நினைப்பதுமட்டும் நடந்துவிட்டால் மைக்ரோசாஃப்ட் காலியாகிவிடும்.
இரண்டாவது இணையச் சேவை வழங்கிகள் துறையில் லினக்ஸ் பெற்றிருக்கும் பெரு வெற்றி. கூகிள் மேசைக்கணினிகளைத் தள்ளிக்கொண்டு போய்விடும் என்றால் மறுபக்கம் பல்வேறு இணையச் சேவைகளை வழங்குவதில் மைக்ரோசாஃப்டுக்குக் கடும் சவாலை அளிக்கிறது முற்றிலும் இலவசமான லினக்ஸ் இயக்குதளம். இந்தத் துறையில் மைக்ரோசாஃப்டுக்கு முன்னோடி யூனிக்ஸ் சேவை வழங்கிகளும் அதன் குழந்தையான லினக்ஸும். மைரோசாஃப்ட் அதற்குப் பின்னே சேவை வழங்கிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். ஆனால் செயல்திறனில் இவை லினக்ஸ் அருகே நெருங்கக்கூட முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும் தனது சந்தைப்படுத்தும் திறனால் மைக்ரோசாஃப்ட் இங்கேயும் நிறையப் பணம் பண்ணுகிறது. இது தொடருமா என்பது பெரும் சந்தேகமே.
மூன்றாவது, கணினி சம்பந்தப்பட்டதே அல்ல. இன்று கையடக்கமான செல்பேசிகள் கணினி செய்யும் பலவற்றைச் செய்யத் தொடங்கியுள்ளன. இங்கு விரைவில் நோக்கியா வசமாகப்போகும், ஓப்பன் சோர்ஸாகவும் ஆகப்போகும் சிம்பயான் இயக்குதளம் முன்னணியில் உள்ளது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இந்தவகை செல்பேசிகளில் மிகக் குறைவான அளவே உள்ளது. சந்தையில் சதவிகிதத்தை அதிகரிக்க மைக்ரோசாஃப்டால் முடியும் என்று தோன்றவில்லை.
நான்காவது, கேளிக்கை சம்பந்தப்பட்டது. ஆப்பிளின் ஐபாட், அடுத்து ஐஃபோன் ஆகியவை மக்கள் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மைக்ரோசாஃப்டிடமிருந்து இதைப்போன்ற ஒரு யோசனை வரவில்லை.
மற்றவர் செய்வதை உடனடியாகப் பார்த்து காப்பியடித்து வெற்றிபெறும் மைக்ரோசாஃப்ட், நான்கு பக்கமும் நெருக்கடி ஏற்படும்போது யாரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்புகிறது.
பில் கேட்ஸ் உருவாக்கி வைத்துள்ள கணினி சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பது எளிதான விஷயமல்ல. நான்கு பக்கத்திலிருந்தும் நான்கு படைகள் முற்றுகையிடுகின்றன. அதைத்தவிர ஃபேஸ்புக், மைஸ்பேஸ், கூகிளின் ஆர்க்குட், ட்விட்டர் என்று புதிய புதிய விஷ சர்ப்பங்கள் முளைத்து பயமுறுத்துகின்றன.
ஆனாலும் இதையெல்லாம் மீறி, இன்று மைக்ரோசாஃப்ட் தனது மென்பொருள்களையும் இயக்குதளங்களையும் விற்று பெரும் காசு பார்க்கிறது. இது எத்தனை நாள்களுக்குத் தாங்கும் என்று தெரியாவிட்டாலும்கூட, இன்றும் வருமானம், லாபம் ஆகியவற்றைப் பார்க்கும்போது மைக்ரோசாஃப்ட் அளவுக்குப் பெரிய நிறுவனம் இந்தத் துறையில் இல்லை.
ராஜ பரம்பரைகளில் ஒரு குறிப்பிட்ட ராஜாவின் பெயர் தனியாக நிற்கும். அவரது காலத்தில் மிகப்பெரும் உன்னத நிலையை அடைந்தபிறகு அந்த சாம்ராஜ்யம் அடுத்த சிலரது ஆட்சியில் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பிக்கும். ஒரு ராஜராஜனுக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யமும், நரசிம்மவர்மனுக்குப் பிறகு பல்லவ சாம்ராஜ்யமும்போல.
பில் கேட்ஸும் மைக்ரோசாஃப்ட் சாம்ராஜ்யமும்கூட அப்படித்தான் என்பது என் கருத்து.
[அட்டைப்படம்: சொக்கன் எழுதி கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகம் பில் கேட்ஸ் - சாஃப்ட்வேர் சுல்தான்]
Pac-Man வீடியோ கேம்
4 hours ago
பில் கேட்ஸ் என்றாலே
ReplyDeleteபலருக்கு ஒரு ஆவேசமான வெறுப்பு அவர்கள் எழுதும் போது வந்துவிடும். உள்ளதை உள்ள மாதிரியே எழுதியிருக்கிறீர்கள். நல்லது.
வாரக்கடைசி என்பதால், பில் பற்றி ஒரு துணுக்கு குறிப்பு !
70 களில் நான் வசிக்கும் இந்த அல்புகர்க்கி நகரில்தான் பில் முதலில் மைக்ரோஸாப்ட் க்கு அடித்தளம் போட்டார். பிறகு சில காரணங்களால் (உ)வாஷிங்டன் மாநிலத்திற்கே போய்விட்டார். அவப்போது இதை உள்ளூர் பெரியவர்கள் சிலர் சொல்லி மாய்ந்து போவார்கள். மேலிருக்கும்
படத்தின் கதையாலும் இருக்கலாம் என்பது ஒரு சிலரின் அனுமானம்!
மைக்ரோசாஃப்ட்டையும் பில் கேட்ஸையும் பற்றி தக்குணியூண்டு அளவுக்காவது நல்ல படியாக பேச விஷயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteதன்னுடைய சக்தி தனக்கே தெரியாத QDOS-ஐ வாங்கி அதை புத்திசாலித்தனமாக மாற்றி வியாபாரம் செய்த புத்திசாலித்தனத்தையும் தன்னம்பிக்கையையும் நிச்சயம் பாராட்டவே வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இன்றைய நிலையில் கம்ப்யூட்டர் கால்குலேட்டர் ரேஞ்சுக்கு எல்லாராலும் பயன்படுத்தப்படுவதற்கு மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரை commodotise செய்த வேகம் உண்மையிலேயே அபாரமானது. பில் கேட்ஸ் இல்லையென்றால் இந்த நிலையை உலகம் அடைந்திருக்க முடியாது என்றில்லை. பில் கேட்ஸும் மைக்ரோசாஃப்டும் இல்லாவிட்டாலும் ஒரு வேளை இந்த அளவிற்கு வந்திருக்கலாம் – ஆனால் மைக்ரோசாஃப்ட் இருந்தது அந்த காரியத்தை செய்தது.
மற்றொன்று, கம்ப்யூட்டர் என்பது ஆராய்ச்சிக்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப் பட்ட காலத்தில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் மற்றும் enterpriseகளுக்குத் தேவையான சின்ன சின்ன அப்ளிக்கேஷன்களுக்கான மார்க்கெட் உருவாகுவதற்கும் மைக்ரோசாஃப்ட்டும் விண்டோஸும் காரணம் என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்ளவே விரும்புவீர்கள். மைக்ரோசாஃப்ட்டின் ரோல் இந்த கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரியில் என்னவென்றால் கம்ப்யூட்டர் பற்றிய பல tabooக்களையும் உடைத்து அதை பரவலாக எடுத்துச் சென்றது தான். நீங்கள் சொல்வது உண்மைதான் – மைக்ரோசாஃப்ட் பெரிசாக எதையும் invent செய்யவில்லை. ஆனால் பல பெரிய விஷயங்களை டெஸ்க்டாப் நிலைக்கு எளிமைப்படுத்தியது. இவை தான் மைக்ரோசாஃப்ட்டின் சாதனை.
மைக்ரோசாஃப்ட் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை பற்றிய உங்கள் கருத்துகளோடு நான் உடன்படவே விரும்புவேன். எல்லா சேவைகளையும் கூகிள் இணையத்தின் வழியாகவே அளிக்க விரும்புகிறது – SAASஆக. அந்த நோக்குடன் கூகிள் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தப்படும் நிரலிகளை வலையேற்றத் துவங்கியிருக்கிறது (கூகிள் டாக்ஸ் நன்றாக இருந்தாலும், அவை டெஸ்க்டாப் அப்ளிக்கேஷன்கள் அளவுக்கு வர இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்). இதற்குத் தேவை இன்னொரு communication revolution – 15mbps என்பது சதாரண bandwidth ஆக மாறும் போது தான் இந்த சேவை முழு அளவில் வெற்றியடைய முடியும். அதுவும் கூடிய சீக்கிரமே வரும் என்று நம்புவோம். மைக்ரோசாஃப்ட்டின் முக்கியமான தலைவலி இது ஒன்று தான். ஏனென்றால் மைக்ரோசாஃப்ட் அதிகமாக காசு பண்ணும் ஏரியாவிற்கு நேரிடையான போட்டியை ஏற்படுத்தும் விஷயம் இது. கூகிளுக்கு இந்த ஏரியா வசதியாக இருக்க காரணம் இணையத்தில் கூகிளுக்கு இருக்கும் ஆதிக்கம். இணைய தொழில் நுட்பத்தில் கூகிள் நிச்சயம் மைக்ரோசாஃப்ட்டை விட பல மடங்கு முன்னோடி. இணையம் தான் எதிர்காலம் என்பதை மைக்ரோசாஃப்ட்டும் உணர்ந்தே இருக்கிறது.
இப்போது மைக்ரோசாஃப்டின் உடனடி தேவை இணைய சந்தையிலும் ஒரு பெரும்பாண்மை. அதனால் தான் Yahooவை விட்டேனா பார் என்று துரத்துகிறது. இதன் மூலம் மைக்ரோசாஃப்ட்டால் கூகிளுக்கு சரியான போட்டியை அளிக்க முடியும். இணையத்தில் மைக்ரோசாஃப்ட் ஒரு dying brand. என் கணிப்புப்படி by hook or crook மைக்ரோசாஃப்ட் yahooவை வாங்கிவிடும், அல்லது யாஹுவைக் கட்டுப்படுத்தும் அளவிற்காகவது ஒரு பெரும்பாண்மை பங்கு வாங்கிவிடும். அதன் பின் யாஹுவின் தற்போதைய சேவைகளை (search, internet marketing, groups, etc etc) அடிப்படையாகக் கொண்டு தனது டெக்ஸ்டாப் அப்ளிகேஷன்களை வலையேற்றும். அதையும் தாண்டி internet marketing, online search, social networking என்று தனது எல்லையை விரிவுபடுத்தும். இப்படி inorganic growth strategy இல்லையென்றால் இது போன்ற ஒரு platform-ஐ உருவாக்குவதற்குள் கூகிள் எங்கேயோ போய் விடும். மைக்ரோசாஃப்ட் தயாராவதற்குள் கூகிள் பிடிக்க முடியாத தூரத்திற்கு செல்லாமல் இருந்தால் “சபாஷ், சரியான போட்டி”-ஐ பார்க்கலாம்
இந்த மாதிரி ஒரு நிலைக்கு open source community களால் இணையத்தையும், சேவைகளையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதே எனது தாழ்மையான கருத்து. அவை பல நல்ல டெக்னாலஜிகளின் பிறப்பிடமாகவும், ஏழை பங்காளர்களாகவும் (நானும் open office ஐ தான் பயன்படுத்துகிறேன்) தான் பெரும்பான்மை இருக்கும். அதன் சேவைகளைக் கொண்டு மார்கெட்டை ஆதிக்கம் செலுத்த தற்போது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. சிம்பயன் தற்போது இலவசமாகக் கிடைக்கும் இயங்குதளம் இல்லை – ராயல்டி அடிப்படையில் காசு வசுலிக்கிறது (மைக்ரோசாஃப்ட் போலவே). நோக்கியா இதை royalty free ஆக மாற்றிவிட்டால் மைக்ரோசாஃப்ட்டிற்கு திண்டாட்டம் ஆகிவிடும். ஆனால் எந்த சிக்கலையையும் திறமையாக எதிர்கொள்ள மைக்ரோசாஃப்ட்டிடம் பண பலம் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் காலியாகாது.
பீட் சாம்ப்ராஸிடம் உங்களின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்டார்களாம். அதற்கு அவர் சொன்ன பதில் – “என் எதிராளி தவறு செய்யும் போது அதை என் சாதகாமாக்கிக் கொள்வதில் நான் தவறுவதில்லை”. ஒருவர் ஏற்படுத்திக் கொடுக்கும் படிக்கு மேலே ஏறி நின்று அடுத்த சாமர்த்தியசாலி இன்னொரு படி கட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய பாவமாக எனக்குத் தோன்றவில்லை. ஏன் கூகிள் கூட நன்றாக வளர்ந்து விட்ட டெஸ்க்டாப் சந்தையைத் தானே தனது அடுத்த குறியாக வைத்திருக்கிறது !
For such his esteem, we have little followers in India. The Indian MD CEO Ravi Venkatesan is getting sucked into his noble deeds in Isha foundation at Coimbatore, to cleanse his sins of bribing crores to those DPE division and misc expenses in the audit. For this reason, Neelam Dhawan moved out once, the HP EDS deal came through to head Indian Operations.
ReplyDeleteRgds
Vijay
வெகு சுலபமாக, கேட்ஸின் வெற்றிக்கு, அதிர்ஷ்டத்தை காரணம் கூறி விட்டீர்கள். வெற்றிக்கு அவரது முற்போக்கு எண்ணமே பெரும் பங்கு வகிக்கிறது.
ReplyDeleteகணிணி தொழில் நுட்ப வட்டாரத்தில், யுனிக்ஸ் ஒரு "மேல்" தர சம்பந்தட்டப்பட்டதாக இருந்தது. சந்தரசேகரன் சொல்வது போல, யார் வேண்டுமானாலும் பங்கேற்க வழி செய்தார். இல்லையென்றால், யுனிக்ஸ் குரு என்று சொல்லிக்கொண்டு, க்ரெப், ஃபைன்ட் உபயாகிக்கும் விதத்தை ஏதோ, ராக்கெட் அறிவியல் போல் நினைத்து, பெருமிதமாக எண்ணும் சிலரே இந்த இத்துறையில் இருந்திருப்பர். கேட்ஸே, டிஜிடல் டிவைடை உடைக்க முதல் வழி செய்தார். He set the standard for 3rd party applications when other competitors did not even recognize that such "people" exist.
Apple has taken 3 decades to open its doors to others. IBM went open source route only when it could not compete against Microsoft. And you call Gates/MSFT's success as "luck".
Luck is how a loser calls the winner's vision.