Monday, January 11, 2010

புத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2

சென்னை புத்தகக் காட்சிக்கான ஆங்கில விக்கிபீடியா பதிவில் இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் காட்சி என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
The Chennai Book Fair is the biggest book fairs in the country with almost all major publishers of India participating in it. Some of the regular participants include Oxford University Press, Cambridge University Press, Pustak Mahal, Higginbotham's, Orient Longman, Macmillan Publishers, Tata McGraw-Hill, S. Chand and Co., Sura Publishing House, India Book House, British Council, The Hindu and Asian Educational Services.
ஆனால் உண்மை அதுவல்ல. ஆண்டாண்டு நடக்கும் கொல்கத்தா புத்தகக் காட்சி, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லியில் நடக்கும் உலகப் புத்தகக் காட்சி ஆகியவையே இந்தியாவில் மிகப்பெரியவை என்று அடித்துச் சொல்லலாம். சென்னை நிச்சயம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆனால் சென்னையால் முதல் இடத்தை அடைய முடியும்! சந்தேகமே இல்லை.

அதற்குமுன் சில பிரச்னைகளை அலசலாம்.

இந்த ஆண்டு (இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் சரி!) சென்னையில் நடந்து முடிந்துள்ள புத்தகக் காட்சியில் யார் இருந்தார்கள் என்று பார்ப்பதைவிட யார் இல்லை என்று பார்ப்போம்.

பெங்குவின் இல்லை.

ஹார்ப்பர் காலின்ஸ் இல்லை.

ராண்டம் ஹவுஸ் இல்லை.

பியர்சன் இல்லை.

மெக்ரா ஹில் இல்லை.

இன்னும் பல முக்கியமான ஆங்கிலப் பதிப்பாளர்கள் ஒன்று இல்லை, அல்லது துக்கினியூண்டு ஸ்டால் எடுத்திருந்தனர். ஒரு காலத்தில் ஆங்கிலப் பதிப்பாளர்கள் மட்டுமே இருந்த நிலை போய், இன்று ஆங்கிலப் பதிப்பாளர்கள் சென்னை புத்தகக் காட்சியில் சிரத்தையே காண்பிப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்குத்தான் இழப்பு.

ஏன் இந்த நிலை? முதலில் பபாஸியில் ஆங்கில எதிர்ப்பு மனோபாவம் நிலவுகிறது என்றே சொல்வேன். தமிழ் விரும்பிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பல விஷயங்களும் அதே நேரம் பபாஸியில் நடக்கிறது. உதாரணமாக, பபாஸி கூட்டம் நடைபெறும்போது தமிழில் பேசவேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் பேசவேண்டுமா என்பதில் ஒரு கூச்சல் குழப்பம் இருக்கும். ஆண்டிறுதி அறிக்கையில் முக்கியமாக கணக்கு வழக்குகளைக் கொடுக்கும் இடத்தில் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டும்தான் இருக்கும். (கடந்த ஆண்டு அப்படித்தான் இருந்தது.)

பபாஸியில் எழுத்துபூர்வமான அறிக்கைகள் அனைத்தும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சம அளவில் இருக்கவேண்டும். எதுவும் ஆங்கிலத்தில் மட்டுமோ, தமிழில் மட்டுமோ இருக்கக்கூடாது. இதனைச் சரி செய்வது எளிது. அலுவலர்கள் மனம் வைத்தால் எளிதாகச் செய்துவிடலாம். எனவே இதனை நான் பெரிதுபடுத்திப் பேசப்போவதில்லை.

ஆனால் உள்ளூர ஒரு தேவையற்ற discrimination நிலவுவதைப் பற்றி நான் பேசியே ஆகவேண்டும். ஆங்கில உறுப்பினர்களுக்கு ஸ்டால் எடுக்க இரண்டு மடங்குக் கட்டணம்! இது சரியல்ல, முறையும் அல்ல. ஏன் இத்தனை நாள்கள் ஆங்கில உறுப்பினர்கள் இதனை விட்டுவைத்துள்ளனர் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு கட்டத்தில் தமிழ் பதிப்பாளர்கள் மிகவும் குறைவாக இருந்தபோது அவர்களை அதிகம் உள்ளே கொண்டுவரவேண்டும் என்பதற்காக தமிழ் பதிப்பாளர்களுக்கு அரை விலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ மொத்தம் கடை போடுபவர்களில் 75% தமிழ் பதிப்பாளர்கள். இனியும் ஆங்கிலப் பதிப்பாளர்களுக்கு இரட்டை கட்டணம் என்றால் அது நியாயமற்றதாகவே தோன்றுகிறது. இந்த discrimination நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டும். இதனை நான் ஒரு தீர்மானமாக அடுத்த ஆண்டுக்குள் பபாஸி கூட்டத்தில் கொண்டுவர உள்ளேன்.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் டெல்லியிலோ, கொல்கத்தாவிலோ, பெங்களூருவிலோ புத்தகக் காட்சி நடக்கும்போது பெங்குவின் அரங்குக்குச் சென்றுவாருங்கள். என்னைப் போன்ற பதிப்பாளர்களுக்கு பெங்குவின்தான் ஆதர்சம். அவர்களைப் பார்த்தே என்ன செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தரத்துக்கு என்றாவது ஒருநாள் தமிழில் புத்தகங்கள் கொண்டுவரக்கூடும் என்று நம்புகிறேன். ஆனால் அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சென்னை வாசகர்களுக்கு வாய்ப்பே கிடையாது.

அவர்கள் ஏன் சென்னைக்கு வரமாட்டார்கள் என்று பார்ப்போம். கொல்கத்தாவில் அவர்கள் எடுக்கும் இடம் 3000 சதுர அடிக்குக் குறையாது. டெல்லியில் நிச்சயம் 2000 சதுர அடிக்குக் குறையாமல் இருப்பார்கள். பெங்களூருவிலும் கிட்டத்தட்ட அப்படியே. சென்னையில் அவர்களுக்கு பபாஸி 400 சதுர அடிக்கு மேல் தரமாட்டார்கள்! கேட்டாலும் கிடைக்காது!

சதுர அடி அதிகம் இருந்தால் பணத்தை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் என்ற எண்ணமோ என்னவோ! இது பணம் சார்ந்ததே இல்லை. பெங்குவினிடம் இருக்கும் புத்தகங்களை வரிசைப்படுத்தி அழகாக அடுக்கிவைக்கவே இந்த அளவு இடம் தேவைப்படும். அந்த ரேஞ்சைப் பார்த்தால்தான் உங்களுக்கு இது புரிய வரும். புத்தகம் என்றால் என்ன, எதையெல்லாம் அற்புதமான புத்தகமாக ஆக்கலாம் என்று புரிந்துகொள்ள அவர்களை நாம்தான் கெஞ்சிக் கூத்தாடி சென்னைக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும். கிணற்றுத் தவளைகள் போல நம் ஊருக்கு நாமே ராஜா என்று நினைத்து நாம் உட்கார்ந்திருந்தால் இதனால் பதிப்பாளர்களுக்கும் பயன் இல்லை, வாசகர்களுக்கும் பயன் இல்லை.

மற்றொன்று, இந்த ஆங்கிலப் பதிப்பாளர்கள் சென்னை வந்தால்தான் தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் அவர்களுடன் நெருங்கிப் பழகமுடியும். இதனால் தமிழாக்கல் உரிமை போன்ற பலவற்றை சாதாரண தமிழ்ப் பதிப்பாளரும் பெறமுடியும். இன்று தமிழாக்கல் உரிமையை அதிகம் பெறும் நிறுவனங்கள் என்று பார்த்தால் கண்ணதாசன், அடையாளம், கிழக்கு, விகடன், காலச்சுவடு ஆகியவற்றைத்தான் குறிப்பிட்டுச் சொல்லலாம். பாரதி புத்தகாலயம், அலைகள், என்.சி.பி.எச் போன்ற இடதுசாரி பதிப்பகங்கள் உள்ளூர இருக்கும் இடதுசாரித் தொடர்புகளால் இடதுசாரி ஆங்கிலப் புத்தகங்களின் மொழிமாற்றல் உரிமையைப் பெறக்கூடும். மற்றவர்கள் ஏதோ, இங்கொன்றும் அங்கொன்றுமாக, தெரிந்த நபர்களைத் தொடர்புகொண்டு பெற்றால்தான் உண்டு.

ஏற்கெனவே அரங்குகள் அதிகம், இதில் மேலும் பதிப்பாளர்களை அழைத்துக்கொண்டு வந்தால் உள்ளவர்களுக்கு வருமானம் போய்விடுமே என்று நினைக்கவே கூடாது. இப்போதே ஒரு சிலர் நல்ல வருமானம் பெற, பலர் காலியான கடைகளுக்கு முன் தொய்ந்த முகத்துடன்தான் உட்கார்ந்திருந்தனர். அதற்கான காரணம் அதிகமாகும் கடைகள் அல்ல என்பது வெளிப்படை.

கூட்டத்தை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு வேறு சில திட்டமிடுதல்கள் தேவை. இவற்றை அடுத்து பேசுகிறேன்.

(தொடரும்)

7 comments:

  1. பத்ரி,

    இரண்டு வருடங்களுக்கு உன்பு நான் ஸ்டால் ஒன்றை எடுக்க நினைத்த போதுதான் எனக்கும் இந்த ஆங்கில, தமிழ் புத்தக ஸ்டால் விலை வித்தியாசங்கள் தெரியும். அதனை நண்பர்கள் பலரிடம் கேட்டபோது, அது ஆரம்ப முதலே அப்படித்தான் என்று குருவின் மறைவுக்கு பின் பூனை வளர்த்த சிஷ்யர்கள் கதையை சொன்னார்கள்.

    ஆரம்பத்தில் வேண்டும் என்றால் தமிழ் பதிப்பகத்தாரை ஊக்குவிக்க இப்படி செய்து இருக்கலாம், இப்போது என்ன தேவை? ஆங்கில புத்தகங்களை வாங்க இந்த புத்தக கண்காட்சி சிறந்த இடம் இல்லை என்று என்னுடைய நண்பர்கள் பலரும் வருவதே இல்லை. இதனையும் யோசித்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. என்ன ஆங்கிலப்புத்தகம் வாங்கவேண்டும் என்று திட்டமிட்டு வரும் வாசகர்களுக்கு பெங்குவின், ஹார்பர் காலின்ஸ் மற்றும் இதர ஆங்கில பதிப்பங்கள் இல்லையென்றால் ஒன்றும் பாதிப்பு இல்லை(excluding window shoppers)என்றே நினைக்கிறேன்...Flipkartல் அனைத்து ஆங்கிலப்புத்தகங்களுக்கும் 25 -35% வரை தள்ளுபடிகிடைக்கிறது. புத்தகக்கண்காட்சியில் 10% தானே?. ஆனால்,நீங்கள் சொல்வதுபோல் பதிப்பாளர்கள் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. ஒருவேளை இதுபோன்ற ஆங்கிலப்பதிப்பகத்தில் போய் 500/1000 ரூபாய் செலவு செய்பவர்கள் மற்ற தமிழ்ப்புத்தகங்களை வாங்காமல் போய்விடுவார்கள் என்ற எண்ணம் இருக்கலாமோ?

    ReplyDelete
  3. பபாஸி பபாஸி’ன்றீங்களே. அப்படீன்னா இன்னா பாஸ்?

    ReplyDelete
  4. பபாஸி என்றால் BAPASI - Booksellers And Publishers Association of South India.

    ReplyDelete
  5. கோபாலன் ராமசுப்பு: எல்லாவற்றையும் இணையத்திலேயே வாங்கிவிடும் அளவுக்கு இந்தியாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 10% கூட இல்லையே? ஃப்லிப்கார்ட், இந்தியாபிளாஸா (இங்கு எனக்கு 25% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது!) என்று நானும் நீங்களும் இன்னும் சிலரும் செய்யலாம். பெரும்பாலான மக்கள் இன்னமும் கடைக்குப் போய்தான் புத்தகங்களை வாங்குகிறார்கள்.

    ReplyDelete
  6. Hi,

    I agree with ur views.Sometimes, books which i wanted will not be available in india but www.landmarkonthenet.com (Landmark's eshopping) wud order for me from USA with 30 days of delivery time.Their customer care is good but i cant expect such 'A TREATMENT' from tamil publishers..They always think 'Ignorance is bliss' and ter reply is also not humble...
    Also tru Harper Collins,Princeton and many good Foreign publishers we can get to know very good 'real knol books' but in tamil its very very rare....
    In this book fair , i was searching for tamil writer Neela Padmanabhan's book...they told me some books which i read 2 years bfore itself.....Publishers were interested in 'catering' not in neelapadmanabhan works....

    Even i didnt find people buying books of 'Prof. Karthikesu Sivathambi's books'..I bought a one..It was a very good book....

    If harper collins and many more publishers come to book fair , people can get to know many 'very real good books of various topics'...Many books i found in book fair can be read it in Wikipedia itself ...English Books and English Publishers are must for this kinda of book fare...

    ReplyDelete
  7. பத்ரி,

    ஆங்கில புத்தகங்கள் வகை வாரியாக கிடைக்காமல் போவது மட்டும் தான் சென்னை புத்தக கண்காட்சியை கொல்கத்தா மற்றும் டெல்லி கண்காட்சி அளவிற்கு உயர்த்தவில்லை என்று கணிக்கலாம். தமிழிற்கு உண்டான மரியாதையை எவ்விதமும் போக்காமல், நீங்கள் கூறியபடி இரண்டு புத்தக கண்காட்சிகள் நடத்தினாலும் தகும்.

    கூடவே, அரங்கில் காற்று வசதியை மேம்படுத்த ஏன் யாரும் எத்தனிப்பதில்லை என்று புரியமாட்டேன்கிறது. வருபவர்களை விட்டு தள்ளுங்கள், ஒரே ஸ்டாலில் தேமேவேன்று நின்று வேலை செய்யும் உறுப்பினர்கள் எப்படி தான் அந்த மைக்ரோவேவ் ஓவன் போன்ற இடத்தில் கஷ்டபடுகிறார்களோ....

    கூடவே, புத்தக கண்காட்சியில் தங்கள் ப்ராடிகி காமிக் மற்றும் மதி கார்டூன் கலெக்ஷன்களை கண்டேன். நல்லதொரு முயற்சி, மேம்மேலும் அதை மெருகூட்டி தமிழில் ஒரு ரெகுலர் காமிக்ஸ் நிறுவனம் என்றும் நீங்கள் பெயர் எடுக்க வேண்டும்.

    இதை பற்றிய என் பதிவு இங்கே: சென்னை புத்தக கண்காட்சியில் காமிக்ஸ்

    ReplyDelete