வளையல் கிரகணம் பார்க்கச் சென்றதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் தென் தமிழகத்தின் கடலோர நகரம். ஒரு தீவு. ஒரு நீண்ட தரைவழிப் பாலமும் இருப்புப்பாதை பாலமும் இருப்பதால் தமிழகத்தோடு ஒட்டியுள்ளது.
ஊரில் ஒரு பெருமை வாய்ந்த சிவன் கோவில். ராமநாதர். இலங்கையில் ராமாயண யுத்தம் முடிந்து, ராவணனை மாய்த்தபின் சீதையுடன் திரும்பிவரும் வழியில் ராமன் இங்கு நின்றானாம். ராவணன் ஒரு பிராமணன் என்பதால் பிராமணனைக் கொன்ற தோஷம் - பிரம்மஹத்தி தோஷம் - போக ராமன் சிவனை வழிபடவேண்டி இருந்ததாம். அனுமனை அனுப்பி ஒரு லிங்கத்தைக் கொண்டுவரச் சொன்னானாம் ராமன். ஆனால் அனுமன் வர நேரம் ஆகவே சீதை அங்குள்ள மண்ணைப் பிடித்து லிங்கமாக்கித் தர அதற்கு பூஜை செய்தானாம் ராமன்.
அதற்குள் தானும் ஒரு லிங்கத்தை எடுத்துவந்த அனுமனுக்கு ஒரே வருத்தம். வெறும் மண் லிங்கம்தானே என்ற அலட்சியத்தில் தன் வாலால் அதனைக் கட்டி இழுத்து அப்புறப்படுத்த எத்தனித்தானாம் அனுமன். ஆனால் அவனது வால்தான் அறுந்ததாம். அப்போதுதான் சீதை பிடித்த மண்ணின் பலம் அனுமனுக்குப் புரிந்ததால். இரண்டு லிங்கங்களும் கோயிலில் அடுத்தடுத்து காணப்படுகின்றன.
தலபுராணங்கள் கதை சொல்லும் அழகே தனி.
கோயிலில் பல வட நாட்டவர்களைப் பார்த்தேன். குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என்று வந்திருந்தார்கள். ஔரங்காபாத்திலிருந்து வந்த சிலரிடம் பேச்சு கொடுத்தேன். நேராக கன்யாகுமரி, அங்கிருந்து ராமேஸ்வரம், அங்கிருந்து திருப்பதி, அங்கிருந்து பூரி, அங்கிருந்து நேபாளில் பசுபதி நாத், அங்கிருந்து நேராக சொந்த ஊர் திரும்பிவிடுவார்களாம்.
இந்தியா என்ற வலுவான கட்டமைப்புக்கு எந்த அளவுக்கு இந்து மதத்தின் புனித யாத்திரைகள் காரணம் என்பதையும் நாம் அலசவேண்டும்.
கோயிலில் ஆங்காங்கு பலகைகள் வைத்து ஈரத்துணியுடன் உள்ளே வரவேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் நம் மக்கள் அதைக் கேட்பதாக இல்லை. 22 புனிதக் கிணறுகளிலிருந்து அள்ளி முகர்ந்து நீரில் தீர்த்தமாடி அதே ஈரத்துணியுடன்தான் கோயிலுக்குள் செல்கிறார்கள். உப்புக் காற்று சுமந்துவரும் ஈரப்பசையுடன் இந்த ஈரமும் சேர்ந்து தரையெல்லாம் சொத சொதவென்று உள்ளது.
நாயக்கர் காலத்துக் கோயில். சிற்ப வேலைப்பாடுகள் பிரமாதம் என்று சொல்லமுடியாது. பக்தியுடன் வருபவர்கள் சிற்பங்களைப் பார்ப்பதில்லை.
சமுத்திரத்துப் பக்கம் சென்றால் வரிசையாக மக்கள் தர்ப்பணம் செய்கிறார்கள். பலர் தாங்கள் அணிந்திருக்கும் துணிகளை அப்படியே ஒரு பிளாஸ்டிக் பைய்ல் போட்டு கடலில் எறிகிறார்கள். அது அப்படியே மீண்டும் கரைக்கு வந்து அந்த இடத்தை ‘கலீஜ்’ ஆக்குகிறது. கரையோரம் பல புதிய முகப்புகள் தர்ப்பணம் செய்ய ஏதுவாக உருவாகிக்கொண்டிருக்கின்றன.
***
தனுஷ்கோடி செல்ல முயன்று முகுந்தராயன் சத்திரம் வரை சென்றோம். அதற்குமேல் செல்லவேண்டுமானால் நிறைய நேரம் ஆகும். பாதை ஏதும் இல்லை. 1967-ல்(?) அடித்த புயலில் தனுஷ்கோடி அழிக்கப்பட்டது. அங்குள்ள ரயில்வே நிலையம், சில வீடுகள் என அனைத்தும் இன்றும் 40 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் உடைந்து நொறுங்கிய நிலையில் அப்படியே உள்ளனவாம். அதை மற்றொரு நாள் பார்க்கவேண்டும்.
முகுந்தராயர் சத்திரத்தில் கடற்கரை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் உள்ளது. ஆனால் சுற்றிமுற்றி கடை கண்ணி என்று எதும் இல்லை.
***
ராமேஸ்வரத்தில் நிறைய மடங்கள் உள்ளன. சத்திரங்கள் உள்ளன. இந்தியாவின் அனைத்துப் பகுதியில் இருந்தும் மக்கள் வருகின்றனர். பாஷயைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அனைவராலும் தங்கள் வேலைகளைச் செவ்வனே செய்து, கடன்களை நிறைவேற்றி, அடுத்த புனிதத் தலத்தை நோக்கிச் செல்லமுடிகிறது.
ராமேஸ்வரத்தைப் பார்க்கும்போது அங்கே தமிழகத்தைவிட இந்தியாவே கண்ணில் படுகிறது.
***
சற்று தள்ளி மண்டபம் முகாம் உள்ளது. இலங்கை அகதிகள் இங்குதான் உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தில் உள்ளனராம். அதில் 70,000 பேர் முகாமிலும், மீதம் 30,000 பேர் சொந்தக் காசில் வெளியில் இருப்பதாகவும் தகவல். முகாமுக்கு வெளியே உறுதியான காவல். உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியாருக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை.
இந்த மக்கள் அனைவருக்கும் இரட்டைக் குடியுரிமை (இந்திய கிரீன்கார்ட்?) மாதிரி ஏதேனும் கொடுத்து நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கி எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று ஏனோ அரசுகள் சொல்லமாட்டேன் என்கின்றன.
***
ராமேஸ்வரத்தின் மீனவர்கள் பற்றி ஒரு தோழர் சில நாள்களுக்கு முன் பேசிக்கொண்டிருந்தார். சுனாமிக்குப் பிறகு ராமேஸ்வரம் பக்கத்தில் இருந்த மண் திட்டுகள் பலவும் இலங்கைப் பகுதிக்குச் சென்றுவிட்டனவாம். (அதாவது மணல் அரிக்கப்பட்டு இலங்கைக் கரைக்குச் சென்றுவிட்டது.) எனவே நண்டு, சில வகை மீன்கள் ஆகியவை ராமேஸ்வரம் கரையோரம் கிடைப்பதில்லையாம். இதனால் ராமேஸ்வர மீனவர்கள் வேறு வழியின்றி இலங்கைப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுதான் ஆகவேண்டும் என்றார்.
மீன் வளம், மீனவர் வாழ்வு ஆகியவை குறித்த புரிதல் எனக்குத் துளியும் இல்லை. ஆனால் இங்கு பல பிரச்னைகள் உள்ளன என்பது மட்டும் புரிகிறது. யாராவது இவை பற்றித் தெளிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
5 hours ago
//யாராவது இவை பற்றித் தெளிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.//
ReplyDelete”தெளிவாக எழுதினால் நன்றாக இருக்கும். விரிவாக எழுதினால் புத்தகமாக வெளியிடப்படும்” - என்பதுதானே இதன் உட்பொருள்?
ரெங்கதுரை: ரொம்பச் சரி! தெளிவாக எழுதினால் பதிவு. விரிவாக எழுதினால் புத்தகம்! எழுத யாராவது தயாரா?
ReplyDeleteDear Badri
ReplyDeleteI know one Mr Divakar from kanyakumari he will be very useful
Also i have spoken to him regarding your need and he has agreed to share his experience contact details are cell no +91 93675 10043 and E mail Id is cape@india.com
அடடா... இவ்வளது தூரம் போய் தனுஷ்கோடிக்கு போகாமல் வந்து விட்டீர்களே, இராமேஸ்வரத்திலிருந்து ஒன்றும் அதிக தொலைவும் இல்லையே. ஒரு ஜீப் வாடகைக்கு எடுத்தால் அழகாகப் போய் வந்திருக்கலாமே! முப்புறமும் நீல நிறக் கடல்... மேலே ஆகாயம்... செல்லும் வெண்மையான மணல் வழி என்று இயற்கையோடு ஒன்றிணையும் மகத்தான வாய்ப்பை அடுத்த முறை மிஸ் செய்து விடாதீர்கள்.
ReplyDeleteநான் முன்பு அங்கு சென்றிருந்தபோது ஏதேதோ விவரிக்க முடியாத கலவையான உணர்வுகள் ஏற்பட்டன. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
very nice article thanks for giving information...
ReplyDeleteBy
jeevaa, Bangalore
1967-ல்(?) அடித்த புயலில் தனுஷ்கோடி அழிக்கப்பட்டது in 1964
ReplyDelete