Tuesday, January 12, 2010

சென்னை சங்கமம் - திங்கள்

நேற்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் நாகேஸ்வர ராவ் பார்க் சங்கமம் நிகழ்ச்சியின் பார்வையாளனாக இருந்தேன். நான் உள்ளே நுழைந்தபோது பரதநாட்டியம். கலாக்ஷேத்ரா என்று நினைக்கிறேன். பல பாடல்களுக்குப் பிறகு கடைசியில் மீரா பஜனில் முடிந்தது. நல்ல அபிநயம். பார்வையாளர்கள் மைலாப்பூருக்கே உரித்தான மிக்ஸட் வகையினர்.

அடுத்ததாக கயிறு மேல் ஏறி யோகாசனங்கள் செய்யும் குழந்தைகள். மிக அற்புதமாகச் செய்துகாட்டினர்.

அடுத்து ஓவியா என்ற பெண் (மார்த்தாண்டத்தில் ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பதாகச் சொன்னாள்) ஒரு பாடலைப் பாடினாள். கூட்டத்தினருக்கு ஒரே உற்சாகம். நல்ல, வித்தியாசமான குரல். அதற்கு அடுத்து பறை மேள நாட்டியம். அந்தக் குழுவினர் தயாராக இல்லாததால் ஓவியாவுக்கு மற்றுமொரு பாட்டு பாட வாய்ப்பு. (அந்தப் பாட்டுக்குப் பிறகு, தனியாக ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓவியாவிடம் சென்று சில வார்த்தைகள் பேசினேன்.) இரண்டு பாடல்களின்போதும் கூட்டத்திலிருந்து விசில் சத்தமும் கைத்தட்டலும் ஏராளம்.


அடுத்து பறை நடனம். சுமார் 10 பேர் கையில் தப்பட்டைகள், (தப்பு என்று இதற்குப் பெயர்), பெரிய டிரம் ஒன்று, சில சிம்பால்கள் ஆகியவற்றுடன் அடித்துக்கொண்டே நடனமாடினர்.


நடன மாஸ்டர் நிறைய வித்தைகளைச் செய்தார். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்றுகொண்டே தப்படிப்பது; தப்பை கால் இடுக்கில் வைத்துக்கொண்டு குட்டிக்கரணம் போட்டு எழுந்து நின்று பிடித்து அடிப்பது; தலைமுடியில் ஒரு நீண்ட கயிறைக் கட்டி அதன் ஒரு முனையில் துணியைக் கட்டி, அதில் நெருப்பு பற்றவைத்து அதனை ஒரு வட்டமாக விசிறவைத்து, சுழன்றுகொண்டே தப்படிப்பது, நெருப்பு வளையம் ஒன்றை உடலில் மோதவிட்டுக்கொண்டே தப்படிப்பது, இப்படி, இப்படி எத்தனையோ வித்தைகள். (ஒரு சிறு ஒளித்துண்டை இதில் சேர்க்கிறேன்; ஆனால் கேமரா தரம் மோசம்.)


இடையில் ஒருவர் நெருப்பை விழுங்கினார். எரியவைத்த சூடத்தை வாயில் போட்டு சர்வசாதாரணமாக விழுங்கினார். நடுநடுவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் “அருமை, அருமை, அருமை, அருமை” என்று சொல்வதோடு கவிதை மாதிரி என்னத்தையோ படித்து கடுப்பேத்தினார். கயிற்றில் ஏறி ஆசன வித்தைகள் செய்துகாட்டிய குழுவின் ஆசான், அமைச்சர் பொன்முடிக்கு நிறைய பாராட்டுரைகளை வழங்கினார். மற்ற யாரும் அமைச்சர் பெருமக்களுக்கோ, முதல்வர், துணை முதல்வருக்கோ, கனிமொழிக்கோ பாராட்டுகளை அள்ளித் தெளிக்கவில்லை.

உணவு, நேற்று எல்லாவற்றையும் நோட்டம் விட்டு, கடைசியில் புலாவ் காம்போ மீல் சாப்பிட்டேன். கூடவே கேரள பாயசம் கொடுத்தார்கள். இன்று வித்தியாசமாக வேறு எதையாவது முயற்சி செய்யவேண்டும்.

நல்ல கூட்டம் இருந்தது. கொசுக்கள் அதற்கும் மேல். அதுதான் பயமாக உள்ளது.

சங்கமம் இந்த முறை சென்னையின் 17 இடங்களில் நடைபெறுகிறது. பொங்கல் சமயத்தில் ஊரையே திருவிழாக்கோலம் பூணவைப்பது பெரிய விஷயம். லாஜிஸ்டிக்ஸ் சாதாரணமல்ல. பல முக்கியமான, மறைந்துபோகும் நிலையில் உள்ள கலைகளை, திறமைகளை முன்னுக்குக் கொண்டுவரச் செய்வது பாராட்டத்தக்கது. இந்த நிகழ்ச்சி, கட்சி பேதம் இல்லாமல், ஆண்டாண்டு தொடர்ந்து நடக்க, இரு கட்சிகளும் ஒருசேரப் புகழும் அண்ணாவின் பெயரால் ஆசீர்வதிக்கிறேன்.

5 comments:

  1. //இந்த நிகழ்ச்சி, கட்சி பேதம் இல்லாமல், ஆண்டாண்டு தொடர்ந்து நடக்க, இரு கட்சிகளும் ஒருசேரப் புகழும் அண்ணாவின் பெயரால் ஆசீர்வதிக்கிறேன். //

    அடுத்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இந்த சங்கமம் நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களின் பின்னணி உங்களுக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.

    உழவர் சந்தை ஆரம்பித்த பின், ஆட்சி மாறியபோது கண்டுக்கொள்ளப்படாமல் இருந்ததைப் போல இதுவும் நடந்து விடக்கூடாது.

    அரசியல் பின்புலம் பார்க்காமல் யோசித்தால் இது ஒரு அருமையான நிகழ்ச்சி. தொடர்ந்து நடைபெறவேண்டும்.

    ReplyDelete
  2. //கூடவே கேரள பாயசம் கொடுத்தார்கள்//

    one of my fav...

    //கட்சி பேதம் இல்லாமல்,//

    no way for this point...

    ReplyDelete
  3. Observing you closely for around 2 years through your posts and few meetings. How do you get time to these many things? Why dont you share with us? To avoid appearing like flattering I stop here.
    Thanks.
    Selva.

    ReplyDelete
  4. Yes, events like this should continue, as it gives opportunity for the current generation to understand the traditional values that we carry.

    The entire evening that i spent on Chennai Sangamam was so energetic and joyful.

    Also, I was surprised to see all sorts of people attending the event which shows how much they are attracted.

    Regards
    Bala
    www.cogzidel.in

    ReplyDelete
  5. சங்கமம் உண்மையில் ஒரு வித்தியாசமான முயற்சிதான். நலிவடைந்த கலைஞர்களுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கும் அமைப்பாளர்களுக்கு நன்றியை சொல்ல வேண்டும்.

    கட்சி பேதமின்றி இவை, ஒரு வேளை வேறு பெயராக மாற்றபட்டாலும், தொடர வேண்டும் என்பது தான் என் அவாவும் கூட.

    ReplyDelete