Saturday, August 07, 2010

உலகமயமாதல் - 2

நவீன கருத்தாக்கமான பணம், முதல், நிதிச் சந்தை ஆகியவை வருவதற்கு முந்தைய உலகம் எப்படி இருந்தது?

நில உடைமைச் சமுதாயமாக அது இருந்தது. மதிப்பு மிக்கது என்றால் அது நிலம் மட்டுமே. அதைத் தவிர அடுத்த மதிப்பு மனிதர்களின் திறமையில் இருந்தது. அது கைவினைஞர்களிடம் இருந்த பொருள்களை உருவாக்கும் திறமை, அல்லது ஆடல், பாடல், சிரிக்கவைப்பது போன்ற கேளிக்கைத் திறமைகள், அல்லது மந்திரம், தந்திரம், கடவுள் போன்றவை, அல்லது மருத்துவம் போன்றவை.

அதே நேரம், நாட்டின் ஆட்சிமுறை, மன்னர்கள் எனப்பட்ட ஏகபோக அதிகாரம் கொண்டவர்களிடம் இருந்தது. அவர்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆட்சி செய்வார்கள். அப்பனுக்குப் பிறகு பெரும்பாலும் முதல் மகன். சில இடங்களில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தாலும் நாட்டை ஆளும் உரிமை உண்டு (இங்கிலாந்து). அப்படி வம்சமே இல்லாமல் ராஜா மண்டையைப் போட்டாலும் மக்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பக்கத்து நாட்டு ராஜாவிடம் போய் எங்கள் நாட்டையும் ஆளுங்கள் என்று கேட்டுக்கொள்வார்கள். அல்லது தெருவில் போகும் யாருக்கோ யானையைக் கொண்டு மாலை அணிவித்து, அவனை ராஜா ஆக்கிவிடுவார்கள்.

நிலத்துக்கான உரிமைகூட எழுத்தில் எழுதிவைக்கப்பட்ட ஒன்றல்ல. அனைத்து நிலங்களும் மன்னனின் சொத்து. மன்னன் நினைத்தால் யாருடைய நிலத்தையும் பிடுங்கி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மன்னனுக்கு மேலாகச் சட்டம் ஒன்றும் கிடையாது. மன்னன் இயற்றுவதுதான் சட்டம்.

உலகின் வெவ்வேறு பகுதியில், இந்த நிலங்கள் பெருநிலப் பிரபுக்களிடம் இருந்திருக்கலாம். அல்லது வேளாளர்கள் கையில் இருந்திருக்கலாம். அவர்கள் நேரடியாக நிலத்தை உழுதிருக்கலாம். அல்லது வேலையாட்களை அல்லது அடிமைகளை வைத்து நிலத்தை உழுதிருக்கலாம். எது எப்படியோ, நில உடைமையாளர்கள் இருந்தனர். நிலத்தை உழும் வேலைக்காரர்கள் அல்லது அடிமைகள் இருந்தனர். கைவினைஞர்கள் இருந்தனர். சில சேவைத் தொழில்கள் இருந்தன. அவற்றைச் செய்வோர் இருந்தனர். அரசன் இருந்தான். அவன்கீழ் போர் வீரர்களும் தளபதிகளும் இருந்தனர்.

இவர்களுக்கிடையில் பொருள், சேவை பரிமாற்றம் இருந்தது. பணம் வழியாகவும் பரிமாற்றம் நடந்தது. அரசன் அடித்துத் தந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அரசனிடம் உரிமை பெற்று நாணயங்களை அச்சடித்து வெளியிடும் ஆசாமிகள் இருந்தனர். தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பான உலோகங்களும் பணத்துக்கு நிகராகக் கருதப்பட்டதும் உண்டு. முக்கியமாக நாடு விட்டு நாடு நடக்கும் வர்த்தகங்களுக்கு தங்கம்தான் தேவைப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியா வந்து பொருள்களை வாங்க முற்பட்டபோது, ஆரம்பத்தில் தங்கம் கொண்டே மிளகு, துணிமணிகளை வாங்கினர்.

அவ்வப்போது நாடுகளுக்கு இடையே போர்கள் நடைபெற்றன. நாடுகளை விஸ்தரிப்பதற்கான ஆசை. மதக் காரணங்கள். தனிப்பட்ட கோபம். பெண் எடுப்பதில், கொடுப்பதில் பிரச்னை. இப்படிப் பல. இந்தப் போர்களால் நாடுகளின் எல்லைகள் மாறின. எண்ணற்றோர் போரில் கொல்லப்பட்டனர். போர்களில் ஈடுபடாத பொதுமக்களும் கொல்லப்பட்டு, விரட்டப்பட்டனர். போர்கள் நடப்பதை பெரும்பாலும் பொதுமக்களால் தடுக்கமுடிந்ததில்லை. மன்னர்கள் முடிவு எடுத்தால் வீரர்கள் செயல்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். மன்னர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டதில்லை.

அரசனுக்குத்தான் முழுமையான அதிகாரம் என்றாலும்கூட ஐரோப்பாவில் மதம் முக்கியமான இடத்தைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. கிறிஸ்துவுக்குப்பின் கிறிஸ்தவ சர்ச் என்ற அமைப்பு வலுப்பட ஆரம்பித்து, அரசர்களுக்கும் மேலான நிலையை அடைந்திருந்தது. பல நாட்டு மன்னர்களும், போப்பின் அனுமதி பெற்றே பல காரியங்களைச் செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டது. இஸ்லாத்திலும் ஆரம்பக் கட்டத்தில் மதத்தலைமை, அரசாட்சி இரண்டும் ஒன்றாக இணைந்தே இருந்தன. சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டு வரை கலீபா எனப்பட்ட துருக்கி சுல்தான் கையில் இஸ்லாம் மீதான கட்டுப்பாடு கொஞ்சம் இருந்தது. உலகின் பிற பகுதிகளிலும் (இந்தியா சேர்த்து) அவ்வப்போது மதம் அரசன்மீது ஆட்சி செய்தது. சில நேரங்களில் அரசன் மதத்தைக் கட்டுப்படுத்தினான்.

அரசன், மதத்தலைவன், படைத்தளபதி, நில உடைமையாளன், பெரும் வர்த்தகன் ஆகியோருக்கு அடுத்ததாக சாதாரணப் பொதுமக்கள் வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் பணம், கடன், சொத்து என்பவையெல்லாம் எப்படி இருந்தன என்று பார்த்துவிட்டு, நவீன கருத்தாக்கத்துக்கு வருவோம்.

2 comments:

  1. it is not relevant for this topic. But I found this article in bbc website.

    http://www.bbc.co.uk/news/world-south-asia-10884125

    ReplyDelete
  2. ராமதுரை எழுதியது
    திரு. பத்ரி கூறியுள்ளது போல அன்று தங்கம் தான் எங்கும் எந்த நாட்டிலும் செல்லுபடியாகின்ற சர்வதேச செலாவணியாக இருந்தது.அக் கால கட்டத்தில் அதாவது சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை யாரும் (எந்த வியாபாரியும்0 எந்த நாட்டுக்கும் பாஸ்போர்ட் விசா இல்லாமல் செல்ல முடிந்தது. தங்கத்தை வீசி எறிந்து எந்தப் பொருளையும் வாங்கி தனது நாட்டுக்கு அல்லது வேறு நாட்டுக்கு எடுத்துச் சென்று விற்க முடிந்தது. சுருங்கச் சொன்னால் நாடுகளிடையே தடைச் சுவர்கள் இருக்கவில்லை.கைவினைஞர்களும்( மன்னர்கள் கொல்லாமல் இருந்தால் ) எந்த நாட்டுக்கும் செல்ல முடிந்தது. அதாவது உலகமயமாதல் அப்போது அறிந்தோ அறியாமலோ நடைமுறையில் இருந்தது. பின்னர் தான் நாடுகள் இடையே தடைச் சுவர்கள் எழுந்தன. இவற்றை முதலில் எழுப்ப ஆரம்பித்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியே. இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு “டாக்கா மஸ்லின்” வரக்கூடாதென்று தடை விதித்தனர். ஒரு சமயம் இந்தியாவிலிருந்து துத்தனாகம் இங்கிலாந்துக்கு வரக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இந்திய துத்தனாகம் த்ரத்தில் சிறந்ததாக விலை மலிவாக இருந்ததே காரணம். இப்போது அமெரிக்கா உட்பட மேலை நாட்டவர் இந்தியா “ அர்த்தமற்ற் “ தடைச் சுவர்களை எழுப்பியிருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
    ராமதுரை

    ReplyDelete